Tuesday, June 23, 2020

எட்டாவது ஸர்க்கம் – கைகேயியை பேதப்படுத்துவது


“அப்பொழுது இதில் மந்தரா கோபமும், துக்கமும் அடைந்தவளாகி அதிக வெறுப்புக்கொண்டு, அந்த ஆபரணத்தையும் வீசியிருந்துவிட்டு, இவளிடம் இவ்விதமான வாக்கியத்தை சொன்னாள், ‘முட்டாளே, தாம் சோகக்கடலின் மத்தியில் இருப்பதை அறியாதிருக்கின்றீர். இதென்ன சம்பந்தமில்லாத விஷயத்தில் சந்தோஷம் அடைந்திருக்கின்றீர். தேவி! இப்பொழுது மகத்தான பேராபத்து வந்திருக்கையில், துக்கப்படவேண்டிய விஷயத்தில் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறீர். இதனால் துக்கத்தால் தாக்கப்பட்டிருக்கையிலும் தம்மை மனதில் பரிகாசிக்கிறேன். தன்னறிவு தப்பாதிருக்கின்ற எவள் தான் சக்களத்தியின் புத்திரனுக்கும், மரணத்திற்கு நிகரனுமான எதிரிக்கு நேரிடும் செழிப்பிற்கு மகிழ்வாள்? தமது துர்மதித்துவத்தால் புலம்புகிறேன். பயமென்பது ஒருவனுக்கு எவனிடத்தில் பயமோ அவனிடத்திலிருந்துதான் உண்டாகிறது. ராஜ்யத்தில் சம உரிமையுள்ள பரதனிடத்தில் தான் (ஸ்ரீ)ராமனுக்கு பயம். அதை எண்ணி நான் துயரம் கொள்கிறேன். பெரும் வில்லாளியான லக்ஷ்மணன் காகுத்ஸ்தனுக்கு (ஸ்ரீ ராமருக்கு) முழுமனதுடன் நடக்கிறான். லக்ஷ்மணன் (ஸ்ரீ)ராமனிடம் எப்படியோ அப்படிதான் பரதனுக்கு ஷத்ருக்னன். அழகிய பெண்ணே, பரதனுக்கும் இளையவர்களாகிய அவ்விருவர்களுக்கும் (அதாவது லக்ஷ்மணன் மற்றும் ஷத்ருக்னனுக்கும்), நேர் அடுத்தவனுக்குத்தான் உரியதென்னும் விதியினாலேயே ராஜ்ய வம்சமதில் தொலைநிலையில் இருக்கின்றனர். தமது புத்திரன் (விஷயத்தில்) கற்றறிந்தவனும், அரசியலில் நிபுணனும் சரியான காலத்தில் (விஷயங்களை) செய்து முடிக்கிறவனுமாகிய (ஸ்ரீ)ராமனுடைய பயத்தின் சிந்தனையால் நடுக்கம் கொள்கிறேன். எவளுடைய புத்திரன் நாளை பூச (நட்சத்திரத்தில்) உத்தம த்விஜர்களால் மகத்தான யுவராஜ்ய பட்டாபிஷேகத்தை அடையப்போகிறானோ (அந்த) கௌசல்யா அன்றோ நல் பாக்கியசாலியானவள். எதிரிகளை அழித்து, பிரீதி பெற்றவளாய், புகழ்பெற்றவளாய், மிகுந்த மேன்மைபெற்றவளாய் விளங்கும் அந்த கௌசல்யாவிற்கு தாம் தாசிபோல் கையைக்கூப்பிக்கொண்டு பணிவிடை  செய்யப்போகிறீர். தாம் இப்படியாய் எங்களோடுகூட அவளுக்கு வேலைக்காரியாக ஆகப்போகிறீர். தமது புத்திரனும் (ஸ்ரீ)ராமனுக்கு வேலைக்காரனாக நடக்கப்போகிறான். (ஸ்ரீ)ராமனது உயர்ந்த பெண்டிர் (அதாவது மனைவிகள்) மகிழ்வுற்றவர்களாய் விளங்கப்போகிறார்கள். தமது மருமகள்கள் தான் பரதனின் தேய்மானத்தால் மகிழ்வற்றவர்களாய் ஆகப்போகிறார்கள்.’

 

“மிகவும் இனிமையற்றதாய் பேசிய அந்த மந்தராவை கண்டு, அப்பொழுது கைகேயி தேவியார் (ஸ்ரீ)ராமரது குணங்களையே புகழ்ந்தார், ‘(ஸ்ரீ)ராமன் தர்மமறிந்தவன். குருமார்களிடம் பயிற்சிப்பெற்றவன். செய் நன்றி உள்ளவன். பரிசுத்தன். சத்தியத்தையே பேசுபவன். ராஜாவிற்கு (அதாவது தசரதருக்கு) மூத்த குமாரன். அதனால் யுவராஜ்ய பட்டத்திற்கு தகுந்தவன். உடன்பிறந்தவர்களையும், அடியார்களையும் தந்தையைப்போல் நெடுங்காலம் பாதுகாப்பான். கூனியே, (ஸ்ரீ)ராமனது பட்டாபிஷேகத்தை கேட்டு, ஏன் தவிக்கின்றாய்? நூறு வருடங்களுக்கு அப்பால் (ஸ்ரீ)ராமனுக்கு பின் தலைமுறை தலைமுறையாய் வந்த ராஜ்யத்தை நரர்களுள் காளையனான பரதனும் நிச்சயமாய் அடைவான். மந்தரே! இப்பொழுது நடைபெறப்போகிறதும், (யாவராலும்) விரும்பப்படுவதும், (நமக்கு) அமையப்பெற்றதுமாகிய, மகிழ்ச்சிகர விழாவாகவும் இருக்கையில் அந்த நீ மட்டும் எதற்காக பரிதவிக்கின்றாய்? பரதன் எனக்கு பிரியமானவன் தான். அப்படியிருந்தும் அந்த ராகவன் (அதாவது ஸ்ரீராமர்) அவனிலும் மேம்பட்டவன், ஏனென்றால் கௌசல்யாவை விட அதிகமாகவே எனக்கு பணிவிடை செய்கிறான். ராகவன் உடன்பிறந்தவர்களிடத்தில் ஆத்மாவைப்போலவே பிரியம் வைத்திருக்கிறான். ஆதலால் ராஜ்யமானது (ஸ்ரீ)ராமனுடையதாயினும் அது பரதனுடையதாய் விளங்கும்.’

 

“மந்தரா கைகேயியின் வார்த்தைகளை கேட்டு, இன்னும் அதிக துக்கம் கொண்டவளாய் உஷ்ணமாக பெரு மூச்செறிந்து, கைகேயியிடம் இவ்விதம் சொன்னாள், ‘தாம் பெரும் ஆபத்து (மற்றும்) சோகத்தால் துக்க கடலில் முழுகிக்கிடப்பதை உபயோகத்தை காணும் மூடத்தனத்தால் உணராதிருக்கிறீர். கைகேயி! ராகவன் ராஜாவாக ஆகப்போகிறான். அதற்குமேல், ராகவனுடைய மகன் எவனோ அவன்தான். பரதன் ராஜவம்சத்திலிருந்து விலக்கப்பட்டவனாவான். அழகிய பெண்ணே! அரசருடைய குமாரர்கள் எல்லோரும் ராஜ்யத்தில் நிற்பதில்லை. ஏனென்றால், எல்லோரும் ஸ்தாபிக்கப்பட்டால் மிக்க சட்டக்கேடு நேரிடும். சிதைவற்ற அங்கங்களை கொண்ட கைகேயி! ஆகையால்தான் மன்னர்கள், இதரர்களுக்கு குணங்களிருந்தாலும், மூத்தவனையே ராஜ்ய விவகாரத்தில் ஸ்தாபிக்கின்றனர். அன்புடையவளே! தமது புத்திரனாகிய இவரும் நாதனின்றி ராஜ வம்சத்தையும், சுகத்தையும் முழுமையாய் இழந்தவராக ஆகிவிடுவார். நான் தமது நலத்தை உத்தேசித்தே வந்தேன். அந்த தாம் என்னை இதில் (சரியாய்) அறியவில்லை. அப்படியிருக்கிறவர் எவரோ அந்த தாம் எனக்கு சக்களத்தியின் செழிப்பிற்கு வெகுமதியை அளிக்க நினைக்கின்றீர். (ஸ்ரீ)ராமனோ ராஜ்யத்தை அடைந்த பிறகு, தொல்லையில்லாமல் இருக்கும்பொருட்டு பரதனை மட்டும் வேறு தேசத்திற்கோ, வேறு உலகத்திற்கோ நிச்சயம் அனுப்பிவிடப்போகிறான். பரதனோ சிறுவன். தம்மாலே மாமன் வீட்டிற்கு போயிருக்கிறார். அசையாப்பொருட்களிலும் கூட எதிரில் இருந்தால்தான் நட்பு உண்டாகிறது. (ஸ்ரீ)ராமனுக்கு லக்ஷ்மணன் எப்படியோ அப்படியே பரதனுக்கு ஷத்ருக்னன்தான் அனுசரித்து நடப்பவன். இவனும் பராதனையே பின்பற்றிப்போயிருக்கின்றான். வெட்டுவதாய் உத்தேசிக்கப்பட்ட ஒரு மரம் (முள் நிறைந்த) இஷீகா புற்கள் பக்கத்தில் இருந்ததால்  பெரும் பயத்திலிருந்து வனத்தில் (மரம் வெட்டி) ஜீவிப்பவர்களிடமிருந்து விடுவிக்கப்பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அன்றோ! சௌமித்ரன் (அதாவது லக்ஷ்மணன்) (ஸ்ரீ)ராமனையும், ராகவன் லக்ஷ்மணனையும் பாதுகாக்கின்றனர். அவ்விருவர்களுடைய சகோதரத்தன்மையானது அஷ்வினி தேவர்கள் போன்றதென உலகங்கமெங்கும் புகழ்பெற்றதே. ஆகையால் (ஸ்ரீ)ராமன் லக்ஷ்மணனிடத்தில் பாவத்தை சிறிதளவேனும் செய்யப்போகிறதில்லை. பரதனிடத்திலோ (ஸ்ரீ)ராமன் பாவம் செய்தே தீருவான். ஐயமில்லை. ஆகையால் தம்முடைய குமாரன் மன்னரது மாளிகையிலிருந்து காட்டிற்கே போய்விடட்டும். இதை நான் விரும்புகிறேன். தமக்கு மிகவும் நலமானதாய் (இது) இருக்கிறது. இது இப்படியிருந்தபோதிலும் பரதனே முன்னோர்களுடைய ராஜ்யத்தை தர்மத்தின்படி அடைகிறான் என்கிற நிலையில் தமக்கும், (தமது) சொந்தங்களுக்கும் ஸ்ரேயஸை உண்டாக்கும். தமது குமாரர் சுகங்களுக்கு பழக்கப்பட்டவர். வளங்களை அதிகரித்திடும் (ஸ்ரீ)ராமனுக்கு இயற்கையான எதிரியாய், ஏழ்மையில் அவர் அருகில் எவ்விதம் உயிர்வாழ்வார்? காட்டில் தலைமை யானையை துரத்திடும் சிங்கம் எவ்வண்ணமோ அவ்வண்ணமே (ஸ்ரீ)ராமனால் மூடப்படும் பரதனை பாதுகாக்க (தாமே) தகுந்தவராகிறீர். இதற்குமுன் தமது சக்களத்தியாகிய (ஸ்ரீ)ராமனின் தாயார் தமது சௌபாக்கியத்தாலே செருக்கால் தம்மால் அவமானம் அடைந்திருக்கிறாள். பழிக்குப்பழி வாங்குதலை ஏன் செய்யாதிருப்பாள்? அழகிய பெண்ணே, (ஸ்ரீ)ராமன் எப்பொழுது ஆதிக்கமுள்ள ரத்தின சுரங்கத்தையும் (அதாவது சமுத்திரங்களையும்), மலைகளையும், நகரங்களையும் முன்னிட்ட பூமியை அடைகிறானோ அப்பொழுதே பரதனோடு கூடவே பரிதாபகரமாய் அசுபங்களையும், அவமானத்தையும் அடைவீர்கள். (ஸ்ரீ)ராமன் பூமியை அடைகிறான் என்கிற நிலையில் பரதன் நிச்சயமாய் அழிந்து போனவராகவே ஆகுவார். ஆகையால் புத்திரனுக்கு ராஜ்யத்தையும், மற்றவனுக்கு நாடுகடத்தலையும் இப்பொழுதே எண்ணுவீராக.’”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் எட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

Sunday, June 21, 2020

ஏழாவது ஸர்க்கம் – மந்தரையின் துக்கம்


“பிறந்ததிலிருந்தே கைகேயியுடன் வசிப்பவளும், வீட்டின் பெண் வேலையாளான மந்தரா எதேர்ச்சையாய் சந்திரனையொத்த மாளிகையின் மேல்தளத்திற்கு ஏறினாள். அந்த மாளிகையிலிருந்து அயோத்யாவை பூ குவியல்களால் பரப்பப்பட்டிருப்பதாயும், ராஜபாதைகளிளெல்லாம் நீர் தெளிக்கப்பட்டிருப்பதாயும், ரம்மியமாய் (விளங்குவதாயும்) கண்டாள்.

 

“மந்தரா அயோத்யாவை சிறந்த பதாகைகளாலும், கொடிகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்டதாயும், (வீதிகள்) நீர் தெளிக்கப்பெற்றதாயும், தலைக்கு குளித்த ஜனங்களாலும், மிகுந்த மகிழ்ச்சியுடையவர்களாய், சந்தனப்பூச்சுடையவர்களான பட்டணத்து ஜனங்களால் நிறைந்திருக்கிறதாயும், மாலைகளையும், கொழுக்கட்டைகளையும் கையிலேந்திய உத்தம த்விஜர்களால் (எங்கும்) பிரம்மகோஷம் கோஷிக்கப்பெற்று விளங்குகிறதாயும், சத்தத்தால் நிரம்பியதாயும், வெண்மைநிற கோயில் வாயில்களும், அனைத்து (இசை) வாத்தியங்களின் சத்தத்தால் நிரம்பியதாயும், சந்தோஷம் கொண்ட மக்களால் நிரம்பியதாயும், சந்தோஷம் கொண்ட யானைகளோடும்-குதிரைகளோடும் விளங்குவதாயும், முக்காரமிட்டுக் கொண்டிருக்கும் பசுக்களாலும்-எருதுகளாலும் விளங்கிக்கொண்டிருக்கிறதாயும், உயிரந்த கொடிகளின் வரிசைகளால் விளங்குவதாயும் கண்டு மிகுந்த வியப்புடன் இருந்தாள்.

 

“அந்த மந்தரா சந்தோஷத்தால் மலர்ந்த நயனங்களை உடையவளாய், வெண்பட்டாடை உடுத்தியவளாய் அருகே நின்றிருந்த வளர்ப்பு அன்னையை கண்டு வினவினாள், ‘(ஸ்ரீ)ராமனின் தாய் செல்வத்தின் மீது மிகவும் ஈர்க்கப்பட்டவளாய் இருந்தும் உத்தம ஆனந்தத்துடன் விளங்குகின்றவளாய் ஜனங்களுக்கு தனத்தை தந்துகொண்டிருக்கிறாளே. ஏன்? ஜனங்களின் சந்தோஷம் அளவுக்கடந்ததாய் இருக்கிறது, இது ஏன்? வேந்தர் (அதாவது தசரதர்) களிப்புற்றவராய் எதைத்தான் செய்ய உத்தேசிக்கின்றார்? எனக்கு சொல்.’

 

“மிகுந்த மகிழ்வுடன் பொங்கிக்கொண்டிருந்த வளர்ப்பு அன்னை கூனிக்கு ராகவருக்கு அளிக்கப்படப்போகும் பெரும் கௌரவத்தைப்பற்றி இவளுக்கு சந்தோஷத்துடனேயே அதன்பின் சொன்னாள், ‘தசரத ராஜா, நாளை பூச (நட்சத்திரத்தில்) குரோதத்தை வென்றவரும், பாவமற்றவரும், ராகவருமான (ஸ்ரீ)ராமரை யுவராஜ்யராய் அபிஷேகம் செய்யப்போகிறார்.’

 

“கூனி வளர்ப்பு அன்னையின் வார்த்தையை கேட்டதுமே கடுங்சினங்கொண்டவளாகி கைலாசத்தின் சிகரம் போன்ற மேல்தளத்திலிருந்து விரைவாய் கீழிறங்கினாள். பாவத்தையே கவனித்திடும் அந்த மந்தரா கோபத்தால் தகிக்கப்பட்டவளாகி சயனித்திருந்த கைகேயியை அணுகி, இவ்விதமான சொல்லை சொன்னாள், ‘மூடையே, தமக்கு பயம் நிகழவிருக்கிறது. கொடுந்துயரம் தம்மை பீடிக்கப்போவதை எப்படி அறியாதிருக்கிறீர்? எப்படி உறங்குகிறீர்? எழுந்திரும். (கணவனால்) அதிகம் விரும்பப்பட்டவளாய் (நினைக்கிறீர்), (ஆனால் உண்மையில்) தள்ளிவைக்கப்பட்டிருக்கிறீர். உமது சௌபாக்கியத்தை (சொல்லி) பெருமை கொள்வீர். (ஆனால்), தமது சௌபாக்கியமானது நதியின் பெருக்கானது கோடைகாலத்தில் எவ்வண்ணமோ அவ்வண்ணமே நிலையற்றதாய் விளங்குகிறதே.’

 

“பாவ தர்ஷினியானவளும், சினங்கொண்டிருந்தவளுமாகிய கூனியின் இவ்விதமாய் கடுமையாய் சொல்லிய சொல்லால் கைகேயி மிகுந்த துயரமடைந்தாள். கைகேயி கூனியிடம் கேட்டாள், ‘மந்தரே, உன்னை முகம் வாடினவளாய், மிகத் துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறவளாய் அறிகிறேன். நலம் தானே? இல்லையா என்ன?’

 

“குரோதம் கொண்டிருந்தவளும், பேசுவதில் சாமர்த்தியமுள்ளவளுமான மந்தரா கைகேயினுடைய மதுரமான சொற்கள் கொண்ட வார்த்தையை கேட்டு, இவ்விதமான வாக்கியத்தை உரைத்தாள். அந்த கூனி அவளுடைய நலவிரும்பியாகவும், துக்கமூட்டுகிறவளாகவும், (கைகேயிக்கும்) ராகவருக்கும் பிளவை விளைவிக்கின்றவளாகவும் (முன்னிலும்) அதிகமாய் தூக்கிகின்றவளாய் ஆகி, (பின்வருமாறு) உரைத்தாள், ‘தசரத ராஜா, (ஸ்ரீ)ராமனை இளவரசாய் அபிஷேகம் செய்யப்போகிறார். தேவி! மகத்தான, அட்சயமான தமது விநாசம் நடக்கப்போகிறது. பயமெனும் ஆழ் துளையில் மூழ்கினவளாய், துக்கம் (மற்றும்) சோகத்தில் இணைப்புற்றவளாய் அனலனால் (அதாவது நெருப்பால்) தகிக்கப்பட்டவள் போலாகிவிட்ட நான் தமக்காகவே இங்கு வந்தேன். கைகேயி! தமக்கு துக்கமென்றால் எமக்கும் (அது) பெரும் துக்கமாய் விளங்கும். தமது செழிப்பு எமக்கும் செழிப்பாய் விளங்கும். (இதில்) சந்தேகமில்லை. தேவி! தாம் நராதிபதி குலத்தில் (அதாவது ராஜகுலத்தில்) பிறந்தீர். வேந்தருக்கு மனையாட்டியானீர். ராஜதர்மத்தின் உக்கிரத்தை எப்படியோ அறியாதிருக்கின்றீர்? (தமது) கணவர் (புறத்தே) தர்மமுரைக்கின்றவர், (அகத்தே) வஞ்சனை கொண்டிருக்கின்றவர். (வாயினால்) இனியமொழி மொழிக்கின்றவர், (செயலால்) கொடியவரே! சுத்தமான சுபாவமுடையவளே! (தாம்) அவரால் இவ்வண்ணமாய் வஞ்சிக்கப்பட்டதை அறியாதிருக்கின்றீர். தமது கணவர் உம்மை அணுகி உம்மிடம் உபயோகமற்ற நல்வார்த்தைகளை பேசுகிறார், இப்பொழுது கௌசல்யாவை செல்வத்தோடு சேர்த்து வைக்கப்போகிறார். துஷ்டாத்மாவான அவர் தமது சொந்தத்தாருடன் பரதனை அனுப்பிவிட்டு, இடையூறில்லாத ராஜ்யத்தில் (ஸ்ரீ)ராமனை காலையில் ஸ்தாபிக்கப்போகிறார். சிறுப்பிள்ளாய், அன்னையைப் போன்று (தாம்) அவரின் நலத்தை விரும்புகிறீர். (ஆனால் அவர்), கணவனென்ற பெயரில் (ஓர்) எதிரி ஆவார். (தமது) அங்கத்தில் அணைத்துக்கொள்ளப்பட்ட விஷமுள்ள பாம்பு போன்றவராவார். கவனிக்காத சர்ப்பமாகட்டும், எதிரியாகட்டும் எவ்வாறு செய்யுமோ; அவ்வாறே தசரத ராஜாவால் இப்பொழுது புத்திரபாக்கியமுடைய தாம் செய்துவிடப்பட்டீர். எப்பொழுதும் சுகமான எண்ணமுடைய சிறுப்பிள்ளாய், ராஜ்யத்தில் (ஸ்ரீ)ராமனை ஸ்தாபிக்கப்போகிற பாவியால் பொய்மொழிகளை இனிதுரைப்பதனாலேயே சொந்தங்களோடு கூடவே கேடு அடைந்துவிடுகிறீர். அற்புதமான அழகுடைய கைகேயி! தாம் சரியானகாலத்தில் தமது நன்மையை விரைவாய் செய்துகொண்டு, தம்மையும், புத்திரனையும், என்னையும் காத்திடும்.’

 

“மந்தரையின் வார்த்தைகளை படுத்துக்கொண்டிருந்தவண்ணமே கேட்ட அவள் சந்தோஷத்தால் உள்ளம் பூரித்தவளாய், இலையுதிர் காலத்திய சந்திரலேகா போல் (அதாவது பிறைச்சந்திரன் போல்) சுபமான முகமுடையவள் (அதாவது கைகேயி) எழுந்தாள். பெண்களில் சிறந்தவளாகிய அந்த கைகேயி இதில் ஆச்சர்யமுடையவளாகி அதீத மகிழ்வுற்றவளாய் ஓர் ஆபரணத்தை கூனிக்கு தந்தாள். இதன்மேல், கைகேயி மந்தராவைக் கண்டு இவ்விதம் சொன்னாள், 'மந்தரா, எனக்கு மிக்க பிரியமானதையே இப்பொழுது சென்னாய். எனக்கு இந்த பிரியத்தை சொன்ன உனக்கு இன்னும் என்னவேண்டுமென்றாலும் செய்வேன். ராஜா (ஸ்ரீ)ராமனை அரசாளுவதில் பட்டாபிஷேகம் செய்யப்போகிறார். அதனால் சந்தோஷமுடையவளாய் இருக்கிறேன். ஏனென்றால் நான் (ஸ்ரீ)ராமனோ, பரதனோ பேதத்தை காணவில்லை. எனக்கு மிகுந்த பிரியமானது. இதைக்காட்டிலும் சிறந்த வார்த்தை ஏதொன்றும் உன்னால் இனிமேல் சொல்ல முடியாது. நீ அப்படிப்பட்டதாகிய அதை சொல்லிவிட்டனை. ஆகையால், பிரியத்திற்கு தகுதியானவளே, பிரியமானதை சொன்ன (உனக்கு) வேறு வரத்தை கேள். நான் தருகிறேன்.’”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் ஏழாவது ஸர்க்கம் முற்றிற்று ||


Thursday, June 4, 2020

ஆறாவது ஸர்க்கம் – விரத அனுஷ்டானம்


“புரோகிதர் (அதாவது வசிஷ்டர்) சென்றபின் (ஸ்ரீ)ராமர் ஸ்நானம் செய்து ஒருநிலையான மனத்துடன் விசாலமான கண்களுடைய (தன்) பத்தினியுடன் (ஸ்ரீமன்) நாராயணரை தொழுதார். அப்பொழுது ஹவிஸ் (ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒர் உணவு பொருளே யாகம்/ஹோமத்தில் உள்ள அக்னியில் இடப்படுகிறது) இருக்கும் பாத்திரத்தை சிரத்திலெடுத்துவந்து மகத்தான தேவருக்கு (அதாவது ஸ்ரீமன் நாராயணருக்கு) ஜொலிக்கும் அனலனில் (அதாவது அக்னியில்) விதிப்படி நெய்யுடன் (கலந்து) அளித்தார். நரர்களில் சிறந்தவரின் பிள்ளை வைதேஹியோடு (அதாவது தேவி சீதாவோடு) கூட அந்த ஹவுஸினுடைய மீதத்தை புசித்து, அதன்மேல் தன் நலத்தை விரும்பி, (ஸ்ரீமன்) நாராயண தேவரை தியானித்து, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடையவராய், மௌனமாய் இருந்து, (ஸ்ரீ) விஷ்ணுவினுடைய அற்புதமான சன்னிதியில் நன்றாய் பரப்பப்பட்ட தர்ப்பைபுல் படுக்கையில் உறங்கினார். அவர் (அதாவது ஸ்ரீராமர்) இரவில் ஒரு யாமம் பொழுதிருக்கும் நேரத்திலேயே துயிலெழுந்து, வசிப்பிடத்திற்கு விதிப்படி அலங்காரங்கள் எல்லாவற்றையும் செய்தார். அப்பொழுது ஸூத, மாகத, வந்தியர் (எனும் பரம்பரை பாராயணக்காரர்களின்) சுகமான சொற்களை கேட்டு, பூர்வ சந்தியா(தேவதையை) வழிபாட்டு, கவனம் சிதறாத மனதுடன் (காயத்ரி) ஜபத்தை செய்தார்.

 

“வெண்ணிற பட்டாடை அணிந்தவராய் இருந்த அவர் சிரம் தாழ்த்தி நமஸ்காரம் செய்துகொண்டே மதுசூதனனை (ஸ்தோத்திரங்களால்) மகிழச்செய்தார். அதன்பின், த்விஜர்களை (வாழ்த்து)வசனம் சொல்லச்சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர்களின் புண்ணிய கால கோஷமானது கம்பீரமாய், மதுரமாய் தூரியம் (எனும் வாத்தியத்தின்) கோஷத்தோடு கலந்ததாய் அயோத்யாயெங்கும் நிறைந்து ஒலித்தது. அயோத்யாவாசிகளான மக்கள் எல்லாமும் இவ்விதமாய் வைதேஹியாருடன் கூட ராகவர் உபவாசத்தை முடித்தவராய் கேட்டறிந்து, அதனால் களிப்புற்று விளங்கிற்று. (ஸ்ரீ)ராமரது அபிஷேகத்தை கேட்ட பட்டணத்து ஜனங்கள் எல்லோரும் இரவு (முடிந்த) விடியற்காலையை கண்டு அந்த பட்டணத்தை அலங்கரித்தனர். அப்பொழுது கொடிகளும், பதாகைகளும், வெளுத்தமேகங்களையுடைய (மலைச்)சிகரங்களையொத்த தேவாலயங்களிலும், நாலுசந்திகளிலும், வீதிகளிலும், (கோயில் வளாகங்களில் இருக்கும்) பெரு மரங்களிலும், கோட்டைமதில் மேல் இருக்கும் நாற்கால் மண்டபங்களிலும், வணிகர்களுடைய பலவிதமான பண்டங்கள் நிறைந்த கடைகளிலும், செல்வம் நிறைந்த இல்லத்தார்களுடைய வீடுகளிலும், அனைத்து சபா(மண்டபங்களிலும்), காணப்படக்கூடிய (எல்லா) மரங்களிலும் நன்றாய் நாட்டப்பட்டன.

 

“(ஸ்ரீ)ராமரது அபிஷேகம் சமீபித்த அளவில், ஜனங்களின் வீடுகளிலும், நாலு சந்துகளிலும், வீட்டுவாயில்களிலும், கூட்டங்கூட்டமாய் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களும் பரஸ்பரம் (ஸ்ரீ)ராமரது பாட்டாபிஷேகம் பற்றியதாய் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கூட்டங்கூட்டமாய் இருக்கும் நடர்கள், நர்த்தகர்களுடையவும், பாடகர்கள் பாடிடும் மனதிற்கும்-செவிக்கும் சுகமான பாட்டுகளை கேட்டார்கள். பட்டணத்தில் (ஸ்ரீ)ராமரின் அபிஷேகத்திற்காக ராஜமார்க்கம் நறுமலர் தூவப்பெற்றதாய், தூபங்களின் வாசனையால் எங்கும் மணக்கின்றதாய் மிக்க அழகாய் செய்யப்பட்டது.

 

“அவ்வண்ணமே வீதிகளெங்கும் இரவு வந்துவிடுமோ என்ற சந்தேகத்தால், பிரகாசத்தை (உண்டாக்கும்) பொருட்டு, மரங்கள் போன்றமைந்த தீபங்களை அமைத்தார்கள். அந்நகரத்தார்கள் நகரத்திற்கு மேற்கண்டவாறு அலங்காரத்தை செய்துமுடித்துவிட்டு, (ஸ்ரீ)ராமரது யுவராஜ்ய அபிஷேகத்தை எதிர்பாத்திருந்தனர். நாற்சந்திகளிலும், சபைகளிலும் கூட்டங்கூட்டமாக கூடியிருந்த எல்லோரும் அப்பொழுது ஜனாதிபதியைப்பற்றி பரஸ்பரம் (பின்வருமாறு) பேசிக்கொண்டிருந்தவர்களாய் புகழ்ந்து கொண்டாடினார்கள், ‘எவர் வயதாய்விட்டதாக தன்னை அறிந்து, அரசாளுகையில் (ஸ்ரீ)ராமரை அபிஷேகம் செய்யப்போகிறாரோ அந்த இந்த இக்ஷ்வாகு குல நந்தரான ராஜா (தசரதர்) மகாத்மா அன்றோ! மொத்த உலகை கண்டவருமான (ஸ்ரீ)ராமர் வேந்தராக்கி வெகுகாலம் நம்மை காப்பவராய் விளங்கப்போகிறார் அதனால் (நாம்) எல்லோரும் அனுக்கிரகிக்கப் பெற்றவர்களாகின்றோம். ராகவர் மனதில் கர்வமில்லாதவர், வித்துவான், தர்மாத்மா, சகோதரர்களிடம் பாசம் கொண்டவர், சகோதரர்களிடம் எவ்வண்ணமோ அவ்வண்ணமே நம்மிடத்திலும் அன்புடையவர். எவரது ஆசீர்வாதத்தால் நாம் (ஸ்ரீ)ராமரை பட்டாபிஷிக்தராக காணப்போகிறோமோ; அந்த பாவமற்ற தர்மாத்மாவாகிய தசரத ராஜாவாகிய வெகுகாலம் ஜீவித்திருக்க வேண்டும்.’

 

“கிராமவாசிகளான ஜனங்களும் (அந்த) விருத்தாந்தத்தை கேள்விப்பட்டவர்களாய் எல்லா திக்குகளிலுமிருந்து வந்துசேர்ந்தார்கள். மேற்கண்டவண்ணமாய் பட்டணத்துஜனங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அப்பொழுது காதுகொடுத்தார்கள்.  (ஸ்ரீ)ராமரது ஆனந்தகரமாயுள்ள பட்டாபிஷேகத்தை கண்டிட திக்குகளிலிருந்து பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த நாட்டுப்புற ஜனங்கள் பட்டணத்தை இப்பொழுது இடைவெளியின்றி செய்துவிட்டார்கள். நகர்கின்ற அந்த ஜனக்கூட்டங்களால் ஏற்பட்ட அந்த கோஷமானது பருவகாலங்களில் பொங்குகின்ற சமுத்திரத்தினுடைய ஒலி போலவே முழங்கிற்று. அப்பொழுது கண்டுகளிக்க வந்துசேர்ந்த கிராமத்தார்களால் இந்திரனது பட்டணம் (அதாவது அமராவதி) போன்றதாகிய அந்த பட்டணம் ஒலியுடன் கூடியதாய், எங்கும் நிறைந்ததாய், கடல் வாழ் உயிரினங்கள் கொண்ட கடல் நீரானது எவ்வண்ணமோ அவ்வண்ணமே விளங்கிற்று.”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் ஆறாவது ஸர்க்கம் முற்றிற்று ||