“பிறந்ததிலிருந்தே
கைகேயியுடன் வசிப்பவளும், வீட்டின் பெண் வேலையாளான மந்தரா
எதேர்ச்சையாய் சந்திரனையொத்த மாளிகையின் மேல்தளத்திற்கு ஏறினாள். அந்த மாளிகையிலிருந்து
அயோத்யாவை பூ குவியல்களால் பரப்பப்பட்டிருப்பதாயும், ராஜபாதைகளிளெல்லாம்
நீர் தெளிக்கப்பட்டிருப்பதாயும், ரம்மியமாய் (விளங்குவதாயும்)
கண்டாள்.
“மந்தரா அயோத்யாவை சிறந்த பதாகைகளாலும், கொடிகளாலும்
நன்கு அலங்கரிக்கப்பட்டதாயும், (வீதிகள்)
நீர் தெளிக்கப்பெற்றதாயும், தலைக்கு குளித்த ஜனங்களாலும், மிகுந்த
மகிழ்ச்சியுடையவர்களாய், சந்தனப்பூச்சுடையவர்களான பட்டணத்து
ஜனங்களால் நிறைந்திருக்கிறதாயும், மாலைகளையும், கொழுக்கட்டைகளையும்
கையிலேந்திய உத்தம த்விஜர்களால் (எங்கும்) பிரம்மகோஷம்
கோஷிக்கப்பெற்று விளங்குகிறதாயும், சத்தத்தால்
நிரம்பியதாயும், வெண்மைநிற கோயில் வாயில்களும், அனைத்து (இசை)
வாத்தியங்களின் சத்தத்தால் நிரம்பியதாயும், சந்தோஷம்
கொண்ட மக்களால் நிரம்பியதாயும், சந்தோஷம்
கொண்ட யானைகளோடும்-குதிரைகளோடும் விளங்குவதாயும், முக்காரமிட்டுக்
கொண்டிருக்கும் பசுக்களாலும்-எருதுகளாலும் விளங்கிக்கொண்டிருக்கிறதாயும், உயிரந்த
கொடிகளின் வரிசைகளால் விளங்குவதாயும் கண்டு மிகுந்த வியப்புடன் இருந்தாள்.
“அந்த மந்தரா சந்தோஷத்தால் மலர்ந்த
நயனங்களை உடையவளாய், வெண்பட்டாடை உடுத்தியவளாய் அருகே
நின்றிருந்த வளர்ப்பு அன்னையை கண்டு வினவினாள், ‘(ஸ்ரீ)ராமனின்
தாய் செல்வத்தின் மீது மிகவும் ஈர்க்கப்பட்டவளாய் இருந்தும் உத்தம ஆனந்தத்துடன்
விளங்குகின்றவளாய் ஜனங்களுக்கு தனத்தை தந்துகொண்டிருக்கிறாளே. ஏன்? ஜனங்களின்
சந்தோஷம் அளவுக்கடந்ததாய் இருக்கிறது, இது ஏன்? வேந்தர் (அதாவது
தசரதர்) களிப்புற்றவராய் எதைத்தான் செய்ய உத்தேசிக்கின்றார்? எனக்கு சொல்.’
“மிகுந்த
மகிழ்வுடன் பொங்கிக்கொண்டிருந்த வளர்ப்பு அன்னை கூனிக்கு ராகவருக்கு
அளிக்கப்படப்போகும் பெரும் கௌரவத்தைப்பற்றி இவளுக்கு சந்தோஷத்துடனேயே அதன்பின்
சொன்னாள், ‘தசரத ராஜா, நாளை பூச (நட்சத்திரத்தில்)
குரோதத்தை வென்றவரும், பாவமற்றவரும், ராகவருமான (ஸ்ரீ)ராமரை
யுவராஜ்யராய் அபிஷேகம் செய்யப்போகிறார்.’
“கூனி வளர்ப்பு
அன்னையின் வார்த்தையை கேட்டதுமே கடுங்சினங்கொண்டவளாகி கைலாசத்தின் சிகரம் போன்ற
மேல்தளத்திலிருந்து விரைவாய் கீழிறங்கினாள். பாவத்தையே கவனித்திடும் அந்த மந்தரா
கோபத்தால் தகிக்கப்பட்டவளாகி சயனித்திருந்த கைகேயியை அணுகி, இவ்விதமான
சொல்லை சொன்னாள், ‘மூடையே, தமக்கு பயம்
நிகழவிருக்கிறது. கொடுந்துயரம் தம்மை பீடிக்கப்போவதை எப்படி அறியாதிருக்கிறீர்? எப்படி
உறங்குகிறீர்? எழுந்திரும். (கணவனால்)
அதிகம் விரும்பப்பட்டவளாய் (நினைக்கிறீர்), (ஆனால்
உண்மையில்) தள்ளிவைக்கப்பட்டிருக்கிறீர். உமது சௌபாக்கியத்தை (சொல்லி)
பெருமை கொள்வீர். (ஆனால்), தமது சௌபாக்கியமானது நதியின் பெருக்கானது
கோடைகாலத்தில் எவ்வண்ணமோ அவ்வண்ணமே நிலையற்றதாய் விளங்குகிறதே.’
“பாவ
தர்ஷினியானவளும், சினங்கொண்டிருந்தவளுமாகிய கூனியின்
இவ்விதமாய் கடுமையாய் சொல்லிய சொல்லால் கைகேயி மிகுந்த துயரமடைந்தாள். கைகேயி
கூனியிடம் கேட்டாள், ‘மந்தரே, உன்னை முகம் வாடினவளாய், மிகத்
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறவளாய் அறிகிறேன். நலம் தானே? இல்லையா என்ன?’
“குரோதம்
கொண்டிருந்தவளும், பேசுவதில் சாமர்த்தியமுள்ளவளுமான
மந்தரா கைகேயினுடைய மதுரமான சொற்கள் கொண்ட வார்த்தையை கேட்டு, இவ்விதமான
வாக்கியத்தை உரைத்தாள். அந்த கூனி அவளுடைய நலவிரும்பியாகவும், துக்கமூட்டுகிறவளாகவும், (கைகேயிக்கும்)
ராகவருக்கும் பிளவை விளைவிக்கின்றவளாகவும் (முன்னிலும்) அதிகமாய்
தூக்கிகின்றவளாய் ஆகி, (பின்வருமாறு) உரைத்தாள், ‘தசரத ராஜா, (ஸ்ரீ)ராமனை
இளவரசாய் அபிஷேகம் செய்யப்போகிறார். தேவி! மகத்தான, அட்சயமான தமது
விநாசம் நடக்கப்போகிறது. பயமெனும் ஆழ் துளையில் மூழ்கினவளாய், துக்கம் (மற்றும்)
சோகத்தில் இணைப்புற்றவளாய் அனலனால் (அதாவது நெருப்பால்) தகிக்கப்பட்டவள்
போலாகிவிட்ட நான் தமக்காகவே இங்கு வந்தேன். கைகேயி! தமக்கு துக்கமென்றால் எமக்கும்
(அது) பெரும் துக்கமாய் விளங்கும். தமது செழிப்பு எமக்கும் செழிப்பாய்
விளங்கும். (இதில்) சந்தேகமில்லை. தேவி! தாம் நராதிபதி குலத்தில் (அதாவது
ராஜகுலத்தில்) பிறந்தீர். வேந்தருக்கு மனையாட்டியானீர். ராஜதர்மத்தின்
உக்கிரத்தை எப்படியோ அறியாதிருக்கின்றீர்? (தமது)
கணவர் (புறத்தே) தர்மமுரைக்கின்றவர், (அகத்தே)
வஞ்சனை கொண்டிருக்கின்றவர். (வாயினால்) இனியமொழி மொழிக்கின்றவர், (செயலால்)
கொடியவரே! சுத்தமான சுபாவமுடையவளே! (தாம்) அவரால் இவ்வண்ணமாய்
வஞ்சிக்கப்பட்டதை அறியாதிருக்கின்றீர். தமது கணவர் உம்மை அணுகி உம்மிடம் உபயோகமற்ற
நல்வார்த்தைகளை பேசுகிறார், இப்பொழுது கௌசல்யாவை செல்வத்தோடு
சேர்த்து வைக்கப்போகிறார். துஷ்டாத்மாவான அவர் தமது சொந்தத்தாருடன் பரதனை
அனுப்பிவிட்டு, இடையூறில்லாத ராஜ்யத்தில்
(ஸ்ரீ)ராமனை காலையில் ஸ்தாபிக்கப்போகிறார். சிறுப்பிள்ளாய், அன்னையைப்
போன்று (தாம்) அவரின் நலத்தை விரும்புகிறீர். (ஆனால் அவர்), கணவனென்ற
பெயரில் (ஓர்) எதிரி ஆவார். (தமது) அங்கத்தில்
அணைத்துக்கொள்ளப்பட்ட விஷமுள்ள பாம்பு போன்றவராவார். கவனிக்காத சர்ப்பமாகட்டும், எதிரியாகட்டும்
எவ்வாறு செய்யுமோ; அவ்வாறே தசரத ராஜாவால் இப்பொழுது
புத்திரபாக்கியமுடைய தாம் செய்துவிடப்பட்டீர். எப்பொழுதும் சுகமான எண்ணமுடைய
சிறுப்பிள்ளாய், ராஜ்யத்தில் (ஸ்ரீ)ராமனை
ஸ்தாபிக்கப்போகிற பாவியால் பொய்மொழிகளை இனிதுரைப்பதனாலேயே சொந்தங்களோடு கூடவே கேடு
அடைந்துவிடுகிறீர். அற்புதமான அழகுடைய கைகேயி! தாம் சரியானகாலத்தில் தமது நன்மையை
விரைவாய் செய்துகொண்டு, தம்மையும், புத்திரனையும், என்னையும்
காத்திடும்.’
“மந்தரையின்
வார்த்தைகளை படுத்துக்கொண்டிருந்தவண்ணமே கேட்ட அவள் சந்தோஷத்தால் உள்ளம்
பூரித்தவளாய், இலையுதிர்
காலத்திய சந்திரலேகா போல் (அதாவது பிறைச்சந்திரன் போல்)
சுபமான முகமுடையவள் (அதாவது கைகேயி) எழுந்தாள். பெண்களில் சிறந்தவளாகிய
அந்த கைகேயி இதில் ஆச்சர்யமுடையவளாகி அதீத மகிழ்வுற்றவளாய் ஓர் ஆபரணத்தை கூனிக்கு
தந்தாள். இதன்மேல், கைகேயி மந்தராவைக் கண்டு இவ்விதம்
சொன்னாள், 'மந்தரா, எனக்கு மிக்க
பிரியமானதையே இப்பொழுது சென்னாய். எனக்கு இந்த பிரியத்தை சொன்ன உனக்கு இன்னும்
என்னவேண்டுமென்றாலும் செய்வேன். ராஜா (ஸ்ரீ)ராமனை
அரசாளுவதில் பட்டாபிஷேகம் செய்யப்போகிறார். அதனால் சந்தோஷமுடையவளாய் இருக்கிறேன்.
ஏனென்றால் நான் (ஸ்ரீ)ராமனோ, பரதனோ பேதத்தை
காணவில்லை. எனக்கு மிகுந்த பிரியமானது. இதைக்காட்டிலும் சிறந்த வார்த்தை ஏதொன்றும்
உன்னால் இனிமேல் சொல்ல முடியாது. நீ அப்படிப்பட்டதாகிய அதை சொல்லிவிட்டனை. ஆகையால், பிரியத்திற்கு
தகுதியானவளே, பிரியமானதை
சொன்ன (உனக்கு) வேறு வரத்தை கேள். நான் தருகிறேன்.’”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா
காண்டத்தின் ஏழாவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment