Thursday, June 4, 2020

ஆறாவது ஸர்க்கம் – விரத அனுஷ்டானம்


புரோகிதர் (அதாவது வசிஷ்டர்) சென்றபின் (ஸ்ரீ)ராமர் ஸ்நானம் செய்து ஒருநிலையான மனத்துடன் விசாலமான கண்களுடைய (தன்) பத்தினியுடன் (ஸ்ரீமன்) நாராயணரை தொழுதார். அப்பொழுது ஹவிஸ் (ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒர் உணவு பொருளே யாகம்/ஹோமத்தில் உள்ள அக்னியில் இடப்படுகிறது) இருக்கும் பாத்திரத்தை சிரத்திலெடுத்துவந்து மகத்தான தேவருக்கு (அதாவது ஸ்ரீமன் நாராயணருக்கு) ஜொலிக்கும் அனலனில் (அதாவது அக்னியில்) விதிப்படி நெய்யுடன் (கலந்து) அளித்தார். நரர்களில் சிறந்தவரின் பிள்ளை வைதேஹியோடு (அதாவது தேவி சீதாவோடு) கூட அந்த ஹவுஸினுடைய மீதத்தை புசித்து, அதன்மேல் தன் நலத்தை விரும்பி, (ஸ்ரீமன்) நாராயண தேவரை தியானித்து, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடையவராய், மௌனமாய் இருந்து, (ஸ்ரீ) விஷ்ணுவினுடைய அற்புதமான சன்னிதியில் நன்றாய் பரப்பப்பட்ட தர்ப்பைபுல் படுக்கையில் உறங்கினார். அவர் (அதாவது ஸ்ரீராமர்) இரவில் ஒரு யாமம் பொழுதிருக்கும் நேரத்திலேயே துயிலெழுந்து, வசிப்பிடத்திற்கு விதிப்படி அலங்காரங்கள் எல்லாவற்றையும் செய்தார். அப்பொழுது ஸூத, மாகத, வந்தியர் (எனும் பரம்பரை பாராயணக்காரர்களின்) சுகமான சொற்களை கேட்டு, பூர்வ சந்தியா(தேவதையை) வழிபாட்டு, கவனம் சிதறாத மனதுடன் (காயத்ரி) ஜபத்தை செய்தார்.

 

வெண்ணிற பட்டாடை அணிந்தவராய் இருந்த அவர் சிரம் தாழ்த்தி நமஸ்காரம் செய்துகொண்டே மதுசூதனனை (ஸ்தோத்திரங்களால்) மகிழச்செய்தார். அதன்பின், த்விஜர்களை (வாழ்த்து)வசனம் சொல்லச்சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர்களின் புண்ணிய கால கோஷமானது கம்பீரமாய், மதுரமாய் தூரியம் (எனும் வாத்தியத்தின்) கோஷத்தோடு கலந்ததாய் அயோத்யாயெங்கும் நிறைந்து ஒலித்தது. அயோத்யாவாசிகளான மக்கள் எல்லாமும் இவ்விதமாய் வைதேஹியாருடன் கூட ராகவர் உபவாசத்தை முடித்தவராய் கேட்டறிந்து, அதனால் களிப்புற்று விளங்கிற்று. (ஸ்ரீ)ராமரது அபிஷேகத்தை கேட்ட பட்டணத்து ஜனங்கள் எல்லோரும் இரவு (முடிந்த) விடியற்காலையை கண்டு அந்த பட்டணத்தை அலங்கரித்தனர். அப்பொழுது கொடிகளும், பதாகைகளும், வெளுத்தமேகங்களையுடைய (மலைச்)சிகரங்களையொத்த தேவாலயங்களிலும், நாலுசந்திகளிலும், வீதிகளிலும், (கோயில் வளாகங்களில் இருக்கும்) பெரு மரங்களிலும், கோட்டைமதில் மேல் இருக்கும் நாற்கால் மண்டபங்களிலும், வணிகர்களுடைய பலவிதமான பண்டங்கள் நிறைந்த கடைகளிலும், செல்வம் நிறைந்த இல்லத்தார்களுடைய வீடுகளிலும், அனைத்து சபா(மண்டபங்களிலும்), காணப்படக்கூடிய (எல்லா) மரங்களிலும் நன்றாய் நாட்டப்பட்டன.

 

(ஸ்ரீ)ராமரது அபிஷேகம் சமீபித்த அளவில், ஜனங்களின் வீடுகளிலும், நாலு சந்துகளிலும், வீட்டுவாயில்களிலும், கூட்டங்கூட்டமாய் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களும் பரஸ்பரம் (ஸ்ரீ)ராமரது பாட்டாபிஷேகம் பற்றியதாய் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கூட்டங்கூட்டமாய் இருக்கும் நடர்கள், நர்த்தகர்களுடையவும், பாடகர்கள் பாடிடும் மனதிற்கும்-செவிக்கும் சுகமான பாட்டுகளை கேட்டார்கள். பட்டணத்தில் (ஸ்ரீ)ராமரின் அபிஷேகத்திற்காக ராஜமார்க்கம் நறுமலர் தூவப்பெற்றதாய், தூபங்களின் வாசனையால் எங்கும் மணக்கின்றதாய் மிக்க அழகாய் செய்யப்பட்டது.

 

அவ்வண்ணமே வீதிகளெங்கும் இரவு வந்துவிடுமோ என்ற சந்தேகத்தால், பிரகாசத்தை (உண்டாக்கும்) பொருட்டு, மரங்கள் போன்றமைந்த தீபங்களை அமைத்தார்கள். அந்நகரத்தார்கள் நகரத்திற்கு மேற்கண்டவாறு அலங்காரத்தை செய்துமுடித்துவிட்டு, (ஸ்ரீ)ராமரது யுவராஜ்ய அபிஷேகத்தை எதிர்பாத்திருந்தனர். நாற்சந்திகளிலும், சபைகளிலும் கூட்டங்கூட்டமாக கூடியிருந்த எல்லோரும் அப்பொழுது ஜனாதிபதியைப்பற்றி பரஸ்பரம் (பின்வருமாறு) பேசிக்கொண்டிருந்தவர்களாய் புகழ்ந்து கொண்டாடினார்கள், ‘எவர் வயதாய்விட்டதாக தன்னை அறிந்து, அரசாளுகையில் (ஸ்ரீ)ராமரை அபிஷேகம் செய்யப்போகிறாரோ அந்த இந்த இக்ஷ்வாகு குல நந்தரான ராஜா (தசரதர்) மகாத்மா அன்றோ! மொத்த உலகை கண்டவருமான (ஸ்ரீ)ராமர் வேந்தராக்கி வெகுகாலம் நம்மை காப்பவராய் விளங்கப்போகிறார் அதனால் (நாம்) எல்லோரும் அனுக்கிரகிக்கப் பெற்றவர்களாகின்றோம். ராகவர் மனதில் கர்வமில்லாதவர், வித்துவான், தர்மாத்மா, சகோதரர்களிடம் பாசம் கொண்டவர், சகோதரர்களிடம் எவ்வண்ணமோ அவ்வண்ணமே நம்மிடத்திலும் அன்புடையவர். எவரது ஆசீர்வாதத்தால் நாம் (ஸ்ரீ)ராமரை பட்டாபிஷிக்தராக காணப்போகிறோமோ; அந்த பாவமற்ற தர்மாத்மாவாகிய தசரத ராஜாவாகிய வெகுகாலம் ஜீவித்திருக்க வேண்டும்.

 

கிராமவாசிகளான ஜனங்களும் (அந்த) விருத்தாந்தத்தை கேள்விப்பட்டவர்களாய் எல்லா திக்குகளிலுமிருந்து வந்துசேர்ந்தார்கள். மேற்கண்டவண்ணமாய் பட்டணத்துஜனங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அப்பொழுது காதுகொடுத்தார்கள்.  (ஸ்ரீ)ராமரது ஆனந்தகரமாயுள்ள பட்டாபிஷேகத்தை கண்டிட திக்குகளிலிருந்து பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த நாட்டுப்புற ஜனங்கள் பட்டணத்தை இப்பொழுது இடைவெளியின்றி செய்துவிட்டார்கள். நகர்கின்ற அந்த ஜனக்கூட்டங்களால் ஏற்பட்ட அந்த கோஷமானது பருவகாலங்களில் பொங்குகின்ற சமுத்திரத்தினுடைய ஒலி போலவே முழங்கிற்று. அப்பொழுது கண்டுகளிக்க வந்துசேர்ந்த கிராமத்தார்களால் இந்திரனது பட்டணம் (அதாவது அமராவதி) போன்றதாகிய அந்த பட்டணம் ஒலியுடன் கூடியதாய், எங்கும் நிறைந்ததாய், கடல் வாழ் உயிரினங்கள் கொண்ட கடல் நீரானது எவ்வண்ணமோ அவ்வண்ணமே விளங்கிற்று.

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் ஆறாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment