Tuesday, June 23, 2020

எட்டாவது ஸர்க்கம் – கைகேயியை பேதப்படுத்துவது


அப்பொழுது இதில் மந்தரா கோபமும், துக்கமும் அடைந்தவளாகி அதிக வெறுப்புக்கொண்டு, அந்த ஆபரணத்தையும் வீசியிருந்துவிட்டு, இவளிடம் இவ்விதமான வாக்கியத்தை சொன்னாள்,முட்டாளே, தாம் சோகக்கடலின் மத்தியில் இருப்பதை அறியாதிருக்கின்றீர். இதென்ன சம்பந்தமில்லாத விஷயத்தில் சந்தோஷம் அடைந்திருக்கின்றீர். தேவி! இப்பொழுது மகத்தான பேராபத்து வந்திருக்கையில், துக்கப்படவேண்டிய விஷயத்தில் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறீர். இதனால் துக்கத்தால் தாக்கப்பட்டிருக்கையிலும் தம்மை மனதில் பரிகாசிக்கிறேன். தன்னறிவு தப்பாதிருக்கின்ற எவள் தான் சக்களத்தியின் புத்திரனுக்கும், மரணத்திற்கு நிகரனுமான எதிரிக்கு நேரிடும் செழிப்பிற்கு மகிழ்வாள்? தமது துர்மதித்துவத்தால் புலம்புகிறேன். பயமென்பது ஒருவனுக்கு எவனிடத்தில் பயமோ அவனிடத்திலிருந்துதான் உண்டாகிறது. ராஜ்யத்தில் சம உரிமையுள்ள பரதனிடத்தில் தான் (ஸ்ரீ)ராமனுக்கு பயம். அதை எண்ணி நான் துயரம் கொள்கிறேன். பெரும் வில்லாளியான லக்ஷ்மணன் காகுத்ஸ்தனுக்கு (ஸ்ரீ ராமருக்கு) முழுமனதுடன் நடக்கிறான். லக்ஷ்மணன் (ஸ்ரீ)ராமனிடம் எப்படியோ அப்படிதான் பரதனுக்கு ஷத்ருக்னன். அழகிய பெண்ணே, பரதனுக்கும் இளையவர்களாகிய அவ்விருவர்களுக்கும் (அதாவது லக்ஷ்மணன் மற்றும் ஷத்ருக்னனுக்கும்), நேர் அடுத்தவனுக்குத்தான் உரியதென்னும் விதியினாலேயே ராஜ்ய வம்சமதில் தொலைநிலையில் இருக்கின்றனர். தமது புத்திரன் (விஷயத்தில்) கற்றறிந்தவனும், அரசியலில் நிபுணனும் சரியான காலத்தில் (விஷயங்களை) செய்து முடிக்கிறவனுமாகிய (ஸ்ரீ)ராமனுடைய பயத்தின் சிந்தனையால் நடுக்கம் கொள்கிறேன். எவளுடைய புத்திரன் நாளை பூச (நட்சத்திரத்தில்) உத்தம த்விஜர்களால் மகத்தான யுவராஜ்ய பட்டாபிஷேகத்தை அடையப்போகிறானோ (அந்த) கௌசல்யா அன்றோ நல் பாக்கியசாலியானவள். எதிரிகளை அழித்து, பிரீதி பெற்றவளாய், புகழ்பெற்றவளாய், மிகுந்த மேன்மைபெற்றவளாய் விளங்கும் அந்த கௌசல்யாவிற்கு தாம் தாசிபோல் கையைக்கூப்பிக்கொண்டு பணிவிடை  செய்யப்போகிறீர். தாம் இப்படியாய் எங்களோடுகூட அவளுக்கு வேலைக்காரியாக ஆகப்போகிறீர். தமது புத்திரனும் (ஸ்ரீ)ராமனுக்கு வேலைக்காரனாக நடக்கப்போகிறான். (ஸ்ரீ)ராமனது உயர்ந்த பெண்டிர் (அதாவது மனைவிகள்) மகிழ்வுற்றவர்களாய் விளங்கப்போகிறார்கள். தமது மருமகள்கள் தான் பரதனின் தேய்மானத்தால் மகிழ்வற்றவர்களாய் ஆகப்போகிறார்கள்.

 

மிகவும் இனிமையற்றதாய் பேசிய அந்த மந்தராவை கண்டு, அப்பொழுது கைகேயி தேவியார் (ஸ்ரீ)ராமரது குணங்களையே புகழ்ந்தார், ‘(ஸ்ரீ)ராமன் தர்மமறிந்தவன். குருமார்களிடம் பயிற்சிப்பெற்றவன். செய் நன்றி உள்ளவன். பரிசுத்தன். சத்தியத்தையே பேசுபவன். ராஜாவிற்கு (அதாவது தசரதருக்கு) மூத்த குமாரன். அதனால் யுவராஜ்ய பட்டத்திற்கு தகுந்தவன். உடன்பிறந்தவர்களையும், அடியார்களையும் தந்தையைப்போல் நெடுங்காலம் பாதுகாப்பான். கூனியே, (ஸ்ரீ)ராமனது பட்டாபிஷேகத்தை கேட்டு, ஏன் தவிக்கின்றாய்? நூறு வருடங்களுக்கு அப்பால் (ஸ்ரீ)ராமனுக்கு பின் தலைமுறை தலைமுறையாய் வந்த ராஜ்யத்தை நரர்களுள் காளையனான பரதனும் நிச்சயமாய் அடைவான். மந்தரே! இப்பொழுது நடைபெறப்போகிறதும், (யாவராலும்) விரும்பப்படுவதும், (நமக்கு) அமையப்பெற்றதுமாகிய, மகிழ்ச்சிகர விழாவாகவும் இருக்கையில் அந்த நீ மட்டும் எதற்காக பரிதவிக்கின்றாய்? பரதன் எனக்கு பிரியமானவன் தான். அப்படியிருந்தும் அந்த ராகவன் (அதாவது ஸ்ரீராமர்) அவனிலும் மேம்பட்டவன், ஏனென்றால் கௌசல்யாவை விட அதிகமாகவே எனக்கு பணிவிடை செய்கிறான். ராகவன் உடன்பிறந்தவர்களிடத்தில் ஆத்மாவைப்போலவே பிரியம் வைத்திருக்கிறான். ஆதலால் ராஜ்யமானது (ஸ்ரீ)ராமனுடையதாயினும் அது பரதனுடையதாய் விளங்கும்.

 

மந்தரா கைகேயியின் வார்த்தைகளை கேட்டு, இன்னும் அதிக துக்கம் கொண்டவளாய் உஷ்ணமாக பெரு மூச்செறிந்து, கைகேயியிடம் இவ்விதம் சொன்னாள், ‘தாம் பெரும் ஆபத்து (மற்றும்) சோகத்தால் துக்க கடலில் முழுகிக்கிடப்பதை உபயோகத்தை காணும் மூடத்தனத்தால் உணராதிருக்கிறீர். கைகேயி! ராகவன் ராஜாவாக ஆகப்போகிறான். அதற்குமேல், ராகவனுடைய மகன் எவனோ அவன்தான். பரதன் ராஜவம்சத்திலிருந்து விலக்கப்பட்டவனாவான். அழகிய பெண்ணே! அரசருடைய குமாரர்கள் எல்லோரும் ராஜ்யத்தில் நிற்பதில்லை. ஏனென்றால், எல்லோரும் ஸ்தாபிக்கப்பட்டால் மிக்க சட்டக்கேடு நேரிடும். சிதைவற்ற அங்கங்களை கொண்ட கைகேயி! ஆகையால்தான் மன்னர்கள், இதரர்களுக்கு குணங்களிருந்தாலும், மூத்தவனையே ராஜ்ய விவகாரத்தில் ஸ்தாபிக்கின்றனர். அன்புடையவளே! தமது புத்திரனாகிய இவரும் நாதனின்றி ராஜ வம்சத்தையும், சுகத்தையும் முழுமையாய் இழந்தவராக ஆகிவிடுவார். நான் தமது நலத்தை உத்தேசித்தே வந்தேன். அந்த தாம் என்னை இதில் (சரியாய்) அறியவில்லை. அப்படியிருக்கிறவர் எவரோ அந்த தாம் எனக்கு சக்களத்தியின் செழிப்பிற்கு வெகுமதியை அளிக்க நினைக்கின்றீர். (ஸ்ரீ)ராமனோ ராஜ்யத்தை அடைந்த பிறகு, தொல்லையில்லாமல் இருக்கும்பொருட்டு பரதனை மட்டும் வேறு தேசத்திற்கோ, வேறு உலகத்திற்கோ நிச்சயம் அனுப்பிவிடப்போகிறான். பரதனோ சிறுவன். தம்மாலே மாமன் வீட்டிற்கு போயிருக்கிறார். அசையாப்பொருட்களிலும் கூட எதிரில் இருந்தால்தான் நட்பு உண்டாகிறது. (ஸ்ரீ)ராமனுக்கு லக்ஷ்மணன் எப்படியோ அப்படியே பரதனுக்கு ஷத்ருக்னன்தான் அனுசரித்து நடப்பவன். இவனும் பராதனையே பின்பற்றிப்போயிருக்கின்றான். வெட்டுவதாய் உத்தேசிக்கப்பட்ட ஒரு மரம் (முள் நிறைந்த) இஷீகா புற்கள் பக்கத்தில் இருந்ததால்  பெரும் பயத்திலிருந்து வனத்தில் (மரம் வெட்டி) ஜீவிப்பவர்களிடமிருந்து விடுவிக்கப்பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அன்றோ! சௌமித்ரன் (அதாவது லக்ஷ்மணன்) (ஸ்ரீ)ராமனையும், ராகவன் லக்ஷ்மணனையும் பாதுகாக்கின்றனர். அவ்விருவர்களுடைய சகோதரத்தன்மையானது அஷ்வினி தேவர்கள் போன்றதென உலகங்கமெங்கும் புகழ்பெற்றதே. ஆகையால் (ஸ்ரீ)ராமன் லக்ஷ்மணனிடத்தில் பாவத்தை சிறிதளவேனும் செய்யப்போகிறதில்லை. பரதனிடத்திலோ (ஸ்ரீ)ராமன் பாவம் செய்தே தீருவான். ஐயமில்லை. ஆகையால் தம்முடைய குமாரன் மன்னரது மாளிகையிலிருந்து காட்டிற்கே போய்விடட்டும். இதை நான் விரும்புகிறேன். தமக்கு மிகவும் நலமானதாய் (இது) இருக்கிறது. இது இப்படியிருந்தபோதிலும் பரதனே முன்னோர்களுடைய ராஜ்யத்தை தர்மத்தின்படி அடைகிறான் என்கிற நிலையில் தமக்கும், (தமது) சொந்தங்களுக்கும் ஸ்ரேயஸை உண்டாக்கும். தமது குமாரர் சுகங்களுக்கு பழக்கப்பட்டவர். வளங்களை அதிகரித்திடும் (ஸ்ரீ)ராமனுக்கு இயற்கையான எதிரியாய், ஏழ்மையில் அவர் அருகில் எவ்விதம் உயிர்வாழ்வார்? காட்டில் தலைமை யானையை துரத்திடும் சிங்கம் எவ்வண்ணமோ அவ்வண்ணமே (ஸ்ரீ)ராமனால் மூடப்படும் பரதனை பாதுகாக்க (தாமே) தகுந்தவராகிறீர். இதற்குமுன் தமது சக்களத்தியாகிய (ஸ்ரீ)ராமனின் தாயார் தமது சௌபாக்கியத்தாலே செருக்கால் தம்மால் அவமானம் அடைந்திருக்கிறாள். பழிக்குப்பழி வாங்குதலை ஏன் செய்யாதிருப்பாள்? அழகிய பெண்ணே, (ஸ்ரீ)ராமன் எப்பொழுது ஆதிக்கமுள்ள ரத்தின சுரங்கத்தையும் (அதாவது சமுத்திரங்களையும்), மலைகளையும், நகரங்களையும் முன்னிட்ட பூமியை அடைகிறானோ அப்பொழுதே பரதனோடு கூடவே பரிதாபகரமாய் அசுபங்களையும், அவமானத்தையும் அடைவீர்கள். (ஸ்ரீ)ராமன் பூமியை அடைகிறான் என்கிற நிலையில் பரதன் நிச்சயமாய் அழிந்து போனவராகவே ஆகுவார். ஆகையால் புத்திரனுக்கு ராஜ்யத்தையும், மற்றவனுக்கு நாடுகடத்தலையும் இப்பொழுதே எண்ணுவீராக.’”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் எட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment