Monday, June 1, 2020

ஐந்தாவது ஸர்க்கம் – வசிஷ்டர் செய்யவேண்டிய விரதத்தை உபதேசிப்பது


மன்னர் நாளை நடக்கப்போகிற அபிஷேக விஷயத்தில் (ஸ்ரீ)ராமருக்கு (சொல்லவேண்டியவைகளை சொல்லி) அனுப்பியபின், புரோகிதரான வசிஷ்டரை வரவழைத்து இவ்விதம் கூறினார்,தபோதனரே! விரதம் மேற்கொண்டிருக்கும் மருமகளுடன் (அதாவது தேவி சீதாவுடன்) கூடிய காகுத்ஸதனிடம் (அதாவது ஸ்ரீராமரிடம்) இப்பொழுதே சென்று செல்வம், புகழ், ராஜ்யம் (இவைகளை) அடைந்திட உபவாசம் இருக்கச்செய்யும்.

 

வேதமறிந்தவர்களுள் சிறந்தவராகிய அந்த வசிஷ்ட பகவான் ராஜாவிடம் அப்படியே செய்கிறேன்என்று சொல்லிவிட்டு, (ஸ்ரீ)ராமருடைய மாளிகைக்கு தாமே சென்றார். மந்திரங்களில் கரைக்கண்டவரும், மந்திரங்களை அறிந்தவரும், திடமான நல்விரதங்களை உடையவருமான அந்த முனிவர்களுள் உத்தமர் (அதாவது வசிஷ்டர்) தயாராயிருந்த, பிராமணர்களுக்கு உரியதான சிறந்த ரதத்தின் மீதேறி, மூன்று கட்டுகளையும் ரதத்தினால் கடந்து, (ஸ்ரீ)ராமரை உபவாசமிருக்கச் செய்ய வெண்மேகம்போல் காந்தியுடன் விளங்கும் (ஸ்ரீ)ராமபவனத்திற்குள் நுழைந்தார். அந்த (ஸ்ரீ)ராமர் விரைவாக மரியாதை செய்ய, துரிதமாய் இருப்பிடத்திலிருந்து கௌரவத்திற்குரியவரான எழுந்தருளியிருக்கும் அந்த ரிஷியிடம் சென்றார். அவ்விடத்திலிருந்து துரிதமாய் நடந்த அவர் முனிவர்களில் ஈசரது ரதத்தின் அருகாமையை அடைந்து, ரதத்திலிருந்து தானே கைபிடித்து இறக்கினார். அந்த புரோகிதர் (ஸ்ரீராமர்) பணிவுடன் இருப்பதைக்கண்டு பிரியமான இந்த (ஸ்ரீ)ராமரிடம் ஆசீர்வாதங்களை அருளி, அகமகிழ்ந்து இவ்விதமான வார்த்தைகளை கூறினார், ‘(ஸ்ரீ)ராமா, தந்தையான தசரத மன்னர், நஹுஷன் (மற்றும்) யயாதி எவ்வண்ணமோ அவ்வண்ணமே பிரியத்தால் (நாளை) காலையில் உன்னை இளவரசாய் அபிஷேகம் செய்யப்போகிறார் என்கிறபடியால் உன் தந்தையார் இப்பொழுது மகிழ்ந்தவராய் (விளங்குகிறார்). யுவராஜ்யத்தை அடையப்போகும் நீ (தேவி) சீதாவுடன் கூட உபவாசத்தை செய்யக்கடவாய்.

 

அந்த முனிவர் இவ்விதம் சொல்லிவிட்டு அப்பொழுது (ஸ்ரீ)ராமரை வைதேஹியாருடன் (அதாவது தேவி சீதையுடன்) இருப்பவராய், மந்திரங்கள் மூலம் உபவாச விரதத்தை (அனுசரிப்பவராய்) செய்தார். ராஜாவின் குருவாகிய அவர் (அதாவது வசிஷ்டர்) (ஸ்ரீ)ராமரால் முறைப்படி அர்ச்சிக்கப்பட்டார். அதன்மேல் காகுத்ஸ்தரிடம் (அதாவது ஸ்ரீராமரிடம்) விடைபெற்றுக்கொண்டு (ஸ்ரீ)ராமரது மாளிகையினின்று கிளம்பினார். (ஸ்ரீ)ராமரும் அங்கு அனைத்து விதங்களிலும் சுகமாய் அமர்ந்திருந்த நண்பர்களுடன் பிரியமாய் பேசியும், வாழ்த்தப்பெற்றும் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அதன்மேல் (மாளிகைக்குள்) புகுந்தார். அப்பொழுது (ஸ்ரீ)ராமரது மாளிகையானது சந்தோஷம் கொண்ட பெண்கள் (மற்றும்) ஆண்களால் நிரம்பியதாய், மயக்கத்திலுள்ள பறவை கூட்டங்கள் கொண்டதும், மலர்ந்த தாமரைகள் உடையதுமான ஏரியைப் போல் ஒளிர்ந்தது.

 

அந்த வசிஷ்டர் ராஜ்பவனம் போலிருக்கிற அந்த (ஸ்ரீ)ராமரின் மாளிகையிலிருந்து வெளிவந்து, வழியெங்கும் ஜனங்களால் நிறைந்திருப்பதை கண்டார். அயோத்யாவின் ராஜமார்க்கத்தின் எல்லா பக்கங்களிலும் குதூகலமுடைய ஜனங்களால் கூட்டங்கூட்டமாய் நிரம்பினவைகளாய் நெருக்கமுற்றவைகளாய் விளங்கின. அப்பொழுது ராஜமார்கத்தில், ஜனக்கூட்டத்தின் உராய்வாலும், மகிழ்ச்சியாலும் உண்டான சப்தமானது, கடலினுடைய சப்தம் போல் விளங்கிற்று. அப்பொழுது அந்த அயோத்யா நகரத்தின் வீதிகளெங்கும் சுத்தமாய் விளக்கி, நீர் தெளிக்கப்பட்டதாயும், தோரணங்கள் கட்டப்பட்டதாயும், வீடுகளில் உயர்ந்த கொடிகள் கொண்டதாயும் விளங்கிற்று. அப்பொழுது அயோத்யாவாசிகளாயிருந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட சகல ஜனங்கள் (ஸ்ரீ)ராமரின் அபிஷேகத்தையே (காண) ஏங்கி ரவியின் (அதாவது சூர்யனின்) உதயத்தை விரும்பினர்.

 

ஜனங்களுக்கு ஆனந்தத்தை பெருகச்செய்கிறதும், பிரஜைகளெல்லாம் அலங்காரம் பூண்டு விளங்குகிறதுமான அந்த அயோத்யாவின் மகா உற்சவத்தை கண்டிட ஜனங்கள் உற்சாகம் கொண்டவர்களாய் விளங்கினார்கள். புரோகிதர் இப்படியாய் ஜனங்கள் அடர்ந்த அந்த ராஜமார்கத்தில் அந்த ஜனக்கூட்டத்தை இவ்விதம் மெல்ல விலக்கிக்கொண்டு ராஜாவின் மாளிகைக்கு வந்தார். அவர் வெண்மேகத்திற்கு ஒப்பான சிகரமுள்ள மாளிகையில் ஏறி, ஷக்ரனுடன் (அதாவது தேவேந்திரனுடன்) ப்ருஹஸ்பதி (அதாவது தேவகுரு) எவ்வண்ணமோ அவ்வண்ணமே நரேந்திரை (அதாவது தசரதரை) சந்தித்தார். மன்னர் வந்திருந்த அவரை கண்டதுமே ராஜ ஆசனத்தை விட்டெழுந்து (விஷயம் என்னாயிற்று என்று) கேட்டார். அவர் அதற்கு அது செய்தாகிவிட்டதுஎன்று தெரிவித்தார். அவருக்கு சமானராகிய புரோகிதரை கூட உட்கார்ந்திருந்த சபையோர்களெல்லோரும் அதனால் பூஜித்தவர்களாய் ஆசனங்களிலிருந்து எழுந்து நின்றார்கள். ராஜா குருவிடமிருந்து விடைபெற்ற பின், அந்த மானுடக்கூட்டத்திலிருந்து கிளம்பி, சிங்கம் மலைக்குகைக்குள் எவ்வண்ணமோ அவ்வண்ணமே அந்தப்புரத்தினுள் புகுந்தார். வேந்தர் அழகாயிருக்கிறதும், மகேந்திரனது மாளிகையை போலிருக்கிறதும், உயர்ந்த உடை மற்றும் வடிவங்கள் (கொண்ட) பெண்களால் நிறைந்ததுமான அந்த மாளிகையில் ஷஷீ (அதாவது சந்திரன்) நட்சத்திரக்கூட்டங்களால் நிறைந்துள்ள ஆகாயத்தில் எவ்வண்ணமோ அவ்வண்ணமே பிரகாசிக்கச்செய்து கொண்டு விளங்கினார்.

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment