Monday, June 29, 2020

பத்தாவது ஸர்க்கம் – கைகேயியை சமாதானம் செய்வது


பாவியான கூனியால் தேவி (கைகேயி) மிகவும் (விபரீதமாய்) தூண்டிவிடப்பட்டாளே, அப்போதிலிருந்தே அவள் நஞ்சு தடவிய அம்பினால் அடியுண்ட கின்னரி போல் (கின்னரிகள் என்பவர்கள் தேவலோக இசை கலைஞர்கள், தலையிலிருந்து-இடுப்பு வரை மனித உருவும், இடுப்பிலிருந்து-கால் வரை பறவை உருவொடும் இருப்பர் என்ற சுட்டிக்காட்டப்படுகிறது) பூமியில் கிடந்தாள். அழகியும், சாமர்த்தியசாலியுமான அவள் செய்யவேண்டியதை மனதிற்குள்ளேயே நிச்சயித்து, ‘யாவும் நன்கேஎன்று மந்தரைக்கு மெல்ல சொன்னாள். அழகியான அவள், மந்தரையின் வாக்கியத்தில் மோகித்தவளாய், நிச்சயம் செய்துவிட்டு, மேலும் மனத்தளர்வுற்றவளாய் நாககன்னிகை போல் உஷ்ணமாக பெரு மூச்செறிந்து, ஆத்மசுகத்திற்கான மார்கத்தை முகூர்த்தநேரம் (அதாவது சிறிதுநேரம்) சிந்தித்தாள்.

 

அன்புவைத்தவளும், (தனது) வளத்திலேயே விருப்பமுடையவளான அந்த மந்தரா, அந்த திருநிச்சயத்தை செவியுற்று, (எடுத்த காரியம்) சித்தி பெற்றது போல் மிகவும் மகிழ்ந்தவளாய் ஆனாள். அந்த தேவியும், திருநிச்சயத்தை நன்றாய் செய்துகொண்டு, கோபம் கொண்ட அபலையாகி, புருவங்களை முகத்தில் நெறுத்தி வைத்து, (வெறும்) பூமியில் படுத்துக்கிடந்தாள். கைகேயியால் களைந்தெறியப்பட்ட அந்த பலவகையான மாலைகளும், திவ்யமான ஆபரணங்களும் அப்பொழுது பூமியை அடைந்திருந்தன. அவளால் களைந்தெறியப்பட்ட அந்த மாலைகளும், ஆபரணங்களும் ஆகாயத்தை நட்சத்திரங்கள் எவ்வண்ணமோ அவ்வண்ணமே தரையை ஒளிபெறச்செய்தன. கோபமனையில் (அதாவது கோபமாக இருக்கும்போது வசிக்கும் இல்லத்தில்) அழுக்கடைந்த ஆடையுடுத்தியவளாய், தலைமுடியை ஒரேமுடியாய் திடமாய் கட்டிக்கொண்டு, விழுந்துகிடந்தவளான அவள் மாண்ட கின்னரியை போல் விளங்கினாள்.

 

மகாராஜாவோ ராகவரது பட்டாபிஷேகத்தை ஆணையிட்டுவிட்டு, சபையிலிருந்து விடைபெற்று, அரண்மனைக்குள் பிரவேசித்தார். கட்டுப்பாட்டாளர் (அதாவது மன்னர்) (ஸ்ரீ)ராமரது அபிஷேகம் இப்பொழுதுதான் பிரசித்தியானது என்று எண்ணியவராய், (தனது) பிரியத்திற்கு பாத்திரமானவளுக்கு (அந்த) பிரிய (செய்தியை) அறிவிக்க அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். பெரும் புகழ்பெற்ற அவர், கிளிகளும்-மயில்களும் நிறையப்பெற்றதும், க்ரௌஞ்ச (பறவைகள் மற்றும்) அன்னப்பறவைகளின் சத்தங்கள் நிறையப்பெற்றதும், அநேகவித வாத்திய முழக்கங்களை உடையதும், கூனிகளும்-குள்ளிகளும் நிறைந்துள்ளதும், சம்பகம் (மற்றும்) அசோக (மரங்களால்) ஒளிர்வதும், கொடிவகைகள் (நிறைந்த) வீடுகளாலும், சித்திரங்கள் (நிறைந்த) வீடுகளாலும், தந்தங்களினாலும்-வெள்ளியினாலும்-தங்கத்தினாலும் இயற்றப்பட்ட யாகவேள்வி பீடங்களால் நிறைந்ததும், எப்பொழுதும் பூக்களாலும்-பழங்களாலும்-மரங்களாலும்-கிணறுகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், தந்தத்தினாலும்-வெள்ளியினாலும்-தங்கத்தினாலும் (செய்யப்பட்ட) சிறந்த ஆசனங்களால் நிறைந்ததும், விதவிதமான அன்னங்களாலும் பானங்களாலும், விதவிதமான உணவுப்பொருட்களாலும் வழங்கப்பட்டதும், தேவலோகத்திற்கு நிகராய், சிறந்ததாய் விளங்கும் கைகேயியின் வீட்டில் வெண்மேகங்களையுடைய ராகுவுடன் கூடின ஆகாயத்தில் நிஷாகரன் (அதாவது சந்திரன்) போலிருந்த (மாளிகைக்குள்) பிரவேசித்தார்.

 

மகாராஜா அந்த செல்வத்தோடுகூடின தனது அந்தப்புரத்தில் பிரவேசித்து, உத்தம படுக்கையில் பிரியமான மனைவியான கைகேயியை காணவில்லை. காமபலம் நிறைந்திருந்த மானுடர்க்கு அதிபதி அன்பிற்குரிய மனைவியை காணாதவராய் துன்புற்றார். அவர் காமத்தின் பொருளால் வினவினார். ஏனெனில் ராஜா, ஒருமுறை கூட மாளிகையுள் சூனியமாய் புகுந்ததில்லை. இதற்குமுன்னர் அவருடைய தேவி அந்த வேளையில் இல்லாமல் இருந்ததில்லை. மாளிகைக்கு வந்த ராஜா கைகேயியை அப்பொழுது சுயநலத்தில் விருப்பமுள்ளவளாயும், அறிவற்றவளாயும் அறியாமல் முன்போலவே விசாரித்தார். வாயில்காப்பவள் அச்சம் கொண்டவளாய் கரங்களை கூப்பியவளாகி இதில் இவ்வாறு சொன்னாள், ‘தேவரே! தேவி வெகு கோபங்கொண்டவராய் கோபமனையுள் ஓடினார்.

 

ராஜா வாயில்காப்பவளுடைய சொல்லை கேட்டு, மீண்டும் இன்னுமதிகமாய் மிகவும் மனம் கலங்கியவராய் நிலையற்ற, அமைதியற்ற இந்திரியங்களை பெற்றவராய் தளர்வுற்றார். அந்த ஜகத்தின் பதி அவ்விடத்தில் பூமியில் வீழ்ந்து படுத்திருந்தவளும், அத்தகைய சரியில்லா நிலையில் இருந்தவளுமாகிய அவளை இவ்வாறு கண்டு துக்கத்தால் பரிதவித்தார். அவர் இளம்பருவமுடையவளும், உயிரினும் மேலானவளுமாகிய மனைவியை வெறும்தரையில் கண்டார். வேர் களைந்து எறியப்பட்ட பூங்கொடியைப்போல் இருக்கிறவளும், வீழ்ந்த தேவதையைப்போல் இருக்கிறவளும், துன்புறும் கின்னரியை போலிருக்கிறவளும், கீழே விழுந்த அப்சரஸ் போலிருக்கிறவளும், தள்ளிவைக்கப்பட்ட பெண்மணியை போலிருக்கிறவளும், சிறைபிடிக்கப்பட்ட பெண்மானை போலிருக்கிறவளும், வனத்தில் வேடனால் நஞ்சு பூசிய அம்பினால் காயப்பட்ட பெண்யானையைப் போலிருக்கிறவளும், பாவ சங்கல்பம் (எடுத்துவிட்டவளாகிய) அவளை காட்டில் பெரும் யானையானது எவ்வண்ணமோ அவ்வண்ணமே, பாவமற்ற கிழவர் சிநேகத்தால் தொட்டார்.

 

காமத்தால் பீடிக்கப்பட்ட அவர், தாமரையிதழ் போல் கண்களையுடைய பெண்ணை இருகரங்களினாலும் தடவிக்கொடுத்து, பயங்கொண்ட மனமுடையவராய் இவ்விதம் பேசினார், ‘தேவி! உன்னிடத்தில் பற்றியிருக்கிற உனது குரோதத்தை நான் அறியேன். எவரேனும் உன்னை சபித்தார்களா? அல்லது உன்னை எவரேனும் அவமதித்தார்களா? மங்கலமானவளே! புழுதியில் (நீ) படுத்தியிருப்பதன் காரணத்தால் என்னை துக்கிக்க வைக்கிறது. நான் களிப்புற்றிருக்கையில் நீ பூதம் பிடித்த சிந்தையுடையவள் போலாகி என்னுடைய சித்தத்தை காயப்படுத்துபவளாய் ஏன் பூமியில் படுத்தாய்? என்னிடத்தில் எல்லாவிதத்திலும் மனமுவந்தவர்களும், சாமர்த்தியசாலிகளுமான வைத்தியர்கள் இருக்கின்றார்கள். அழகியே! வியாதியை இப்பொழுது இன்னதென்று சொல்லு. உன்னை சுகமற்றவளாய் செய்வார்கள். எவனாவது அபராதம் செய்தானா அல்லது எவனுக்காவது அபராதம் விளைவிக்கவேண்டுமோ அல்லது இப்பொழுது எவன் பிரியத்தையோ அல்லது எவன் மகத்தான தீமையையோ அடையவேண்டும்? நீ அழாதே. தேகத்தை வறண்டு போகச் செய்யாதே. கொலைசெய்யப்படத்தகாத எவன் தான் கொல்லப்படவேண்டும்? கொல்லப்படவேண்டிய எவன் தான் விடப்படவேண்டும்? நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உன் வசப்படி நடப்பவர்களே! தரித்திரன் செல்வனாகவும் அல்லது செல்வந்தன் எவன் வரியவனாக ஆகவேண்டும்? நான் ஜீவித்திருக்க வேண்டிய (காரணத்தாலுங்கூட) உனது அபிப்பிராயம் எதை நான் மறுக்க போகிறேன்? மனதில் (நீ) இச்சிப்பது எதோ அதை சொல்லிவிடு. என் விஷயத்தில் (உனது செல்வாக்கு) பலம் அறிந்தும் என்னிடத்தில் ஐயப்படுவது தகுந்ததில்லை. உனது பிரீதியை (நான்) செய்கிறேன். மேலும், உனக்கு நற்செயலை வாக்களிக்கிறேன். எதுவரையில் (சூர்ய)சக்கிரம் சுழல்கிறதோ அதுவரையிலுள்ள கீழத்தேசங்கள், சிந்துதேசங்கள், சௌவீரதேசங்கள், சௌராஷ்ட்ரதேசங்கள், தென்தேசங்கள், வங்கம்-அங்கம்-மகதம் (என்ற தேசங்கள்), மத்ஸ்யதேசங்கள், காசிதேசங்கள், கோஸலதேசங்கள் எல்லாமும் எனது (ஆளுகைக்கு உட்பட்ட) பூமி. கைகேயி! அதில் பல திரவியங்களும், தனதான்யங்களும், ஆடுமாடுகளும் இருக்கின்றன. நீ மனதில் இச்சைகொண்டிருப்பது அதில் எது எது அடையப்பட வேண்டும்? அச்சப்படுபவளே! எதனால் உனக்கு பயம் உண்டாகியிருக்கிறதோ அதை நீ எனக்கு சொல்லு. ரஷ்மிவான் (அதாவது சூர்யன்) பனியை எவ்வண்ணமோ அவ்வண்ணமே அதை உனக்கு நான் அகற்றுகிறேன். பேரழகியே! எழுந்திரு; எழுந்திரு. கைகேயி! உனக்கு ஆயாசம் ஏன்?’

 

அந்த பிரியமற்றதை சொல்வதையே விரும்பம் கொண்டிருந்தவளுக்கு, இவ்வாறு (தசரதர்) சொல்லியதற்கு (செவிசாத்தியவளுமாகிய) அவள் ஆறுதல் அடைந்தவளாய், கணவரை இன்னும் அதிகமாய் துன்புறச் செய்ய ஆரம்பித்தாள்.

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் பத்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment