Saturday, June 27, 2020

ஒன்பதாவது ஸர்க்கம் – (ஸ்ரீ)ராமரை நாடுகடத்த ஆலோசிப்பதும், கைகேயி குரோத வீட்டினுள் பிரவேசிப்பதும்


இவ்வாறு இதில் சொல்லக் கேட்ட கைகேயியும், குரோதத்தால் ஜொலிக்கும் முகமுடையவளாய், உஷ்ணமான பெரு மூச்சுவிட்டு, மந்தராவிடம் இவ்விதம் கூறினாள், ‘இப்பொழுதே நான் விரைவாய் (ஸ்ரீ)ராமனை இங்கிருந்து வனத்திற்கு அனுப்பிவிடுகிறேன். சீக்கிரத்தில் பரதனை யுவராஜ்யனாய் அபிஷேகம் (செய்து) வைக்கிறேன். மந்தரே! இப்பொழுது (ஸ்ரீ)ராமன் எவ்வகையில், எந்த உபாயத்தால் இல்லாமல் போவான். அதன்மேல் பரதன் ராஜ்யத்தை அடையவேண்டும். இதனை ஆலோசித்திரு.

 

இப்படியாய் அந்த தேவியால் சொல்லப்பட்டவளும், (ஸ்ரீ)ராமரது நன்மைக்கு இடையூறாய் இருக்கிறவளும், பாவ தர்ஷினியுமான மந்தரா கைகேயியிடம் இவ்விதம் சொன்னாள், ‘கைகேயி! மிக்க மகிழ்ச்சி! தமது புத்திரனாகிய பரதன் மட்டுமே ராஜ்யத்தை அடைவது எப்படியோ அதைச் சொல்கிறேன். எனக்கு செவிகொடுக்கப்படட்டும். கைகேயி! தாம் தமக்கான பிரியத்தை என்னிடமிருந்து கேட்க இச்சை கொள்கிறீர்கள். அதனை மறந்துவிட்டீரா? அல்லது நினைவிருந்தும் மறைக்கிறீரா என்ன? விலாசினி (அதாவது சுந்தரியே), எதுவாயினும் தமது விருப்பம். சொல்லியிருப்பதையே என்னிடம் கேட்கவேண்டுமென்றால் நான் சொல்கிறேன். கேளுங்கள். கேட்டதும் ஆராயப்படட்டும்.

 

கைகேயி, அந்த மந்தராவின் இந்த வார்த்தையை கேட்டதுமே, நன்கு விரிக்கப்பட்டிருந்த படுக்கையிலிருந்து கொஞ்சம் எழுந்திருந்து, இவ்விதம் சொன்னாள், ‘மந்தரே!  (ஸ்ரீ)ராமன் எவ்வகையில், எந்த உபாயத்தால் இல்லாமற் போவான்? பரதன் ராஜ்யத்தை அடையவேண்டும். உபாயத்தை நீ எனக்கு சொல்லக்கடவாய்.

 

இதில் இவ்வாறு கைகேயியாலே சொல்லப்பட்டவளும், பாவதர்ஷினியும், (ஸ்ரீ)ராமரது வளத்தில் இடையூறு செய்கிறவளும், கூனியுமான மந்தரா (பின்வரும்) வார்த்தையை சொன்னாள், ‘தமது பதி (அதாவது தசரதர்) தேவாசுர யுத்தத்தில் ராஜரிஷிகளோடு கூட தேவராஜனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) சகாயம் செய்கிறவராகி தம்மை (அதாவது கைகேயியை) உடன் அழைத்துச் சென்றார். கைகேயி! தென் திசையில் தண்டகாரண்யத்தில் திமித்வஜன் (என்ற அசுரன்) எங்கிருந்தானோ அந்த வைஜயந்தம் என்று பெயர்பெற்ற பட்டணத்திற்கு போய்ச் சேர்ந்தார். ஷம்பரன் என்ற பெயர்கொண்டவனும், நூற்றுக்கணக்கான மாயைகளில் (நிபுணனும்), தேவகணங்களால் வெல்லமுடியாதவனுமாகிய அந்த மகா அசுரன் ஷக்ரனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) போரை தந்தான். ராக்ஷஸர்கள் அந்த பெரும் போரில் இரவில் விரைவாய், அலட்சியம் செய்தவர்களாய், அம்புகளால் வீழ்த்தப்பட்டும்-உறங்கிக்கொண்டும் இருந்த மனிதர்களை கொன்றனர். அப்பொழுது பெரும் கரம் கொண்டவரான தசரத ராஜா அஸ்திரங்களைக்கொண்டு மகத்தான யுத்தம் புரிந்தார். அங்கு அசுரர்களை துண்டுதுண்டாய் வெட்டி வீழ்த்தினார். தேவி! அங்கே அம்புகளால் தாக்கப்பட்டவரும், மூர்ச்சையடைந்தவருமாகிய தமது பதி தம்மால் போர்களத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டுபோகப்பட்டு தம்மாலே ரட்சிக்கப்பட்டார். பார்க்க சுபமாய் இருப்பவளே! சந்தோஷப்படுத்தப்பட்டவராகிய அவரால் தமக்கு இரண்டு வரங்கள் அளிக்கப்பட்டன. தேவி! அந்த பதி (அதாவது தசரதர்) தம்மால் எப்பொழுது இச்சைகொள்கிறேனோ அப்பொழுது வரங்களை பெற்றுக்கொள்கிறேன்என்று கூறப்பட்டார் (அன்றோ!). அப்பொழுது அப்படியே ஆகட்டும்என்று அந்த மகாத்மாவால் சொல்லப்பட்டது.

 

தேவி!  நான் (இதை) அறியாதவளாய் இருந்தேன். தம்மாலே இதற்குமுன் இது சொல்லப்பட்டது. தம்மிடமுள்ள சிநேகத்தால் உரைக்கப்பட்ட இது எனது மனதில் தங்கியிருக்கிறது. தாம் (ஸ்ரீ)ராமனுக்கு பதினான்கு வருடங்கள் (வனத்திற்கு) அனுப்புதல், மேலும் பரதனுக்கு பட்டாபிஷேகம் என்ற இந்த இரண்டு வரங்களையும் யாசியுங்கள். கணவரை வற்புறுத்தி (ஸ்ரீ)ராமனது பட்டாபிஷேகத்திற்கான பொருட்களை நிறுத்திட வேண்டும். (ஸ்ரீ)ராமன் பதினான்கு வருடங்கள் வனத்திற்கு அனுப்பட்டால், (தமது) புத்திரன் பிரஜைகளின் உணர்வுடன் நடந்து, சிநேகமுடையவனாய், அசைக்கமுடியாதவனாய் ஆகிவிடுவான்.

 

அஷ்வபதியின் மகளே, இப்பொழுதே தாம் குரோதம் வரும் சமயங்களில் உறையும் அறைக்குள் சென்று, பிணக்கு உடையாள் போலாகி, அழுக்கு ஆடைகளை அணிந்தவளாய், விரிப்பு ஏதுமில்லாத வெறும் பூமியில் படுத்துக்கொண்டு விடும். அவரை கண்டதும் தரையில் சோகத்தால் பீடிக்கப்பட்டவளாயும், அழுதுகொண்டும் இருங்கள். அவரை முகமெடுத்துப் பார்க்கவேண்டாம், பேசவும் வேண்டாம். தாம் எப்பொழுதும் கணவரது அன்பிற்கு பாத்திரமானவர். அந்த மகாராஜா தமக்கென்றால் தீயிலும் குதித்துவிடுவார். இதில் எனக்கு ஐயமில்லை. ராஜாவிற்கோ கோபத்திலிருக்கும் தம்மை காணவும் சகியார். கோபம்வர நடக்கவும் மாட்டார். தமது பிரியத்தைப்பெற பிராணனையும் விட்டுவிடுவார். மந்தமான சுபாவம் உடையவளே! தமது சௌபாக்கிய பலத்தை அறிந்துகொள்ளும். வேந்தரால் தமது வாக்கினை தட்ட இயலாது. தசரத ராஜா விதவிதமான மணிகளையும், முத்துக்களையும், ஸ்வர்ணங்களையும், ரத்தினங்களையும் கொடுப்பார். அவைகள்மேல் மனதை வைத்திடாதீர். மகாபாக்கியமுடையவளே! தசரதருக்கு தேவாசுர யுத்தத்தில் எந்த இரண்டு வரங்களை கொடுத்தாரோ அவ்விரண்டையும் நினைப்பூட்டுக. உமது வளம் முறியடிக்கப்படாமல் (இருப்பதில் கவனம் கொள்க). ராகவர் (அதாவது தசரதர்) தாமே (தரையிலிருந்து) தூக்கி, தமக்கு வரத்தினை அளிப்பார். இது எப்பொழுதோ அப்பொழுது தாம் மகாராஜரை இதில் நிலைநிறுத்தி வரத்தை இவ்விதம் கேட்பீராக, ‘(ஸ்ரீ)ராமனை பதினான்கு வருடங்கள் வனத்திற்கு அனுப்பிவையும். பரதன் உலகில் மன்னர்களில் காளையரான ராஜாவாய் நியமிக்கப்படட்டும்.

 

(ஸ்ரீ)ராமன் பதினான்கு வருடங்கள் வனத்திற்கு சென்றுவிடுவானாகில், தமது புதல்வன் திடமானவனாய் மேலும் வேரூன்றியவனாயும், மீதமிருக்கும் (காலத்திற்கு) நிலைத்திருப்பான். அழகிய தேவி! அவரை (ஸ்ரீ)ராமனது (வனவாச) அனுப்புதலையே வரமாக யாசிப்பீர். இவ்விதமாய் தமது புத்திரனுக்கு எல்லாவித வளங்களும் சித்திக்கின்றன. இவ்வாறு அனுப்பப்பெற்ற (ஸ்ரீ)ராமனும் (மக்களின்) அன்பிழந்தவனாய் ஆகிவிடுவான். தமது பரதனும் பகையொழிந்த ராஜாவாய் விளங்குவான். எந்த காலத்திற்குள் (ஸ்ரீ)ராமன் வனத்திலிருந்து திரும்பிவருகிறானோ அந்த காலத்திற்குள்ளே தமது அறிவார்ந்த புத்திரன் நண்பர்களுடன் கூடி வேரூன்றியவனாக, மக்களை (தன் பக்கம்) இழுத்துக்கொண்டவனாகவும் ஆகிவிடுவான். தமக்கு இதில் சரியான காலமிது என்று எண்ணுகிறேன். பீதி ஒழித்து, (உமது) வலியுறுத்தல் மூலம் ராஜாவை (ஸ்ரீ)ராம அபிஷேக சங்கல்பத்தில் தங்கள் பக்கம் கொணர வேண்டும்.

 

(இதனை) புரிந்துகொண்ட அந்த கைகேயியோ மிகவும் நல்ல இயல்பு கொண்டவளாவாள். அப்பொழுது கூனியின் வாக்கியத்தால் சிறுமிபோல் ஆகி, அவளால் தீமையை நன்மைபோல் கற்பிக்கப்பெற்றவளும், மிகுந்த ஆச்சர்யத்தை அடைந்து விட்டவளுமாகிய அந்த கைகேயி தவறான பாதையில் நுழைந்துவிட்டவளாகி, மகிழ்ந்தவளாய் மந்தராவிடம் இவ்விதம் சொன்னாள், ‘கூனியே, உலகத்திலுள்ள கூனிகளில் அறிவார்ந்த முறையில் தீர்மானிப்பதில் உத்தமமானவளாய் விளங்குகிறாய். சிறந்தவற்றை சொல்வதில் (நீ) சிறந்தவள் (என்று நான் இதுவரையில்) அறிந்திலேன். நான் இதில் ராஜாவின் நோக்கத்தை கண்டுகொள்ளாதிருந்தேன். கூனியே! எனது வளத்தில் நீ மட்டும்தான் எப்பொழுதும் நோக்கமுள்ளவள். (எனது) நலம் விரும்பி. கூனிகள் மிகக்கொடிய மோசமான உடல் அமைப்பு உடையவர்களெனவும், வக்கிரமானவர்கள் எனவும் இருக்கிறார்கள். தென்றால் வளைந்திடும் தாமரையைப் போல் நீ பிரியமானவளாக விளங்குகிறாய். உனது மார்பு தோள்வரையிலும் உயர்ந்து விளங்குகிறது. அதன் கீழே, அழகிய தொப்புளுடைய வயிறும் வெட்க்கம்கொண்டது போன்றதாகி இளைத்து இருக்கிறது. மந்தரே! இடுப்பு பரிபூரணமாயும், பெரிய கொங்கைகளைக் கொண்டும், மாசற்ற நிலவிற்கு சமமான முகமுடனும் நீ ஒளிர்கின்றாய். மெல்லிய ஒட்டியாணத்தால் பிரகாசிக்கின்ற உனது இடுப்பு சப்தம் எழுப்புகிறது. தொடைகளிரண்டும் நன்றாய் உருண்டு திரண்டிருக்கின்றன. கால்கள் இரண்டும் நீண்டிருக்கின்றன. மந்தரே! என் முன்னே நீண்ட தொடைகளுடன் வெண்பட்டாடை அணிந்தவளாய் நடந்திடும் நீ ராஜ அன்னப்பறவை போல் விளங்குகிறாய். அசுரர்களுக்கு அதிபதியான ஷம்பரனிடத்தில் எந்த மாயைகள் ஆயிரக்கணக்காய் இருந்தனவோ, அவைகள் அனைத்தும் இன்னும் இதர ஆயிரங்களும் உன்னிடத்தில் இருக்கின்றன. உனது மதியும், க்ஷத்ரிய வித்யைகளும், மாயைகளும் உனது இந்த கூனில் வசிக்கின்றன. அதனால்தான் இது தேரின் கோணம் போன்றதாய் நீண்டதாய் இருக்கிறது. கூனியே! ராகவன் காட்டிற்கு போய்விட்ட பின்னர், பரதன் பட்டாபிஷேகம் பெற்ற பின்னர் உனது இதில் பொன்னாற் செய்த மாலையை சூட்டுகிறேன். மந்தரே! காரியம் கைகூடினவளாகி, சந்தோஷமடைந்தவளாகிய (நான்) நன்கு சுத்தீகரிக்கப்பட்ட, நல்ல ஜாதி ஸ்வர்ணத்தை உனது கூனில் பூசுவேன். கூனியே! உனது முகத்தில் சுபமாய் பொன்னால் செய்யப்பட்டதுமான திலகத்தையும், சுபமான பல்வேறு ஆபரணங்களையும் அணிவிப்பேன். சுபமான ஆடைகளை உடுத்தி, தேவதையை போல் உலாவப்போகிறாய். சந்திரனுக்கு சவால்விடும் முகத்துடன் ஒப்பற்றவளாய், வெறுப்பவர்களுக்கு மத்தியில் (அவர்களை) வருத்துபவளாய் முக்கியமான கதியை அடைவாய்.  எனக்கு நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கூனியான உனக்கும் அனைத்து ஆபரணங்களைத் தரித்துக்கொண்டவர்களான கூனிகள் எப்பொழுதும் (உனது) பாதத்தில் பணிவிடை செய்திருப்பார்கள்.

 

இவ்வாறு புகழப்பட்ட அவள் சுத்தமான படுக்கையில், வேள்விமேடையில் ஒளிரும் அக்னியை போல் படுத்துக்கொண்டிருந்த கைகேயியிடம் இவ்விதம் சொன்னாள், ‘மங்கலமானவளே, வெள்ளம் சென்றபிறகு அணைபோடுவது பிரயோஜனமில்லை. எழுந்திரும். மங்கலமானதை செய்திடும். ராஜாவிடம் (உமது செல்வாக்கை) காண்பியும்.

 

அப்பொழுது அப்படியான உற்சாகப்படுத்தப்பட்டவளும், சௌபாக்கியத்தின் போதையால் கர்வம் கொண்டவளும், விசாலமான கண்களையுடையவளும், சிறந்த அங்கங்களையுடையவளுமான தேவி கைகேயி கூனியின் வாக்கியத்திற்கு வசப்பட்டவளாய், கோபவீட்டினை (அதாவது கோபமிருக்கும் பொழுது தங்கிடும் இல்லத்தை) மந்தரையுடன் கூட அடைந்து, அநேக நூறாயிரக்கணக்கான முத்துமாலைகளையும், மிகவும் விலையுயர்ந்தனவும், சுபமானவைகளுமான ஆபரங்களையெல்லாம் கழற்றியெறிந்து அவ்விடத்தில் (வெறும்) தரையில் பொற்பதுமை போன்றவளாய் படுத்துக்கொண்டு, மந்தரையிடம் இவ்விதம் சொன்னாள், ‘ராகவன் வனத்தை பெற்றுவிட்டானாகில் பரதன் புவியை அடைவான். இதில்லை என்றால் கூனியே! இங்கேயே என்னை இறந்தவளாக வேந்தருக்கு தெரிவிப்பாய். எனக்கு தங்கத்தால் எந்த பயனும் இல்லை. ரத்தினங்களாலும் இல்லை. உணவுப்பண்டங்களாலும் இல்லை. (ஸ்ரீ)ராமன் பட்டாபிஷேகப்படுகிறான் என்றால் இதுதான் என்னுடைய உயிருக்கு முடிவு.

 

பின்னர், கூனி வேந்தரின் மனைவியும், பரதரின் தாயுமான அவளிடம், (ஸ்ரீ)ராமருக்கு தீமையை அமைப்பதுமான, மிகவும் தீவிரமான வார்த்தைகளால் (அவளுக்கு) நன்மைபயக்கும் மொழியை மீண்டும் கூறினாள், ‘மங்கலமானவளே! ராகவன் இந்த ராஜ்யத்தை அடைந்தவனாகில் தமது புதல்வனோடு கூடியவராய் நிச்சயமாய் தவிப்பீர். ஆதலால் எந்த வழியால் தமது புதல்வராகிய பரதன் அபிஷேகம் பெறுவாரோ அவ்வண்ணமே அதை முயற்சியும்.

 

மஹிஷீ (அதாவது மகாராணி), இதில் அவ்வாறாய் கூனியால் அம்புகளையொத்த சொற்களால் துளைக்கப்பட்டவளாய் மீண்டும் மீண்டும் தைக்கப்பட்டவளாய் மீண்டும் மிகவும் ஆச்சரியப்பட்டவளாய் இதயத்தில் இருகைகளையும் வைத்துக்கொண்டு, கோபத்திலிருக்கும் கூனியிடம் மீண்டும் கூறினாள், ‘கூனியே! ராகவன் நெடுங்காலம் வனத்திற்கு சென்றுவிட்டானென்றால் பரதன் விருப்பங்கள் நிறைவேறியவனாக விளங்குவான். இல்லாவிடில், என்னை இங்கிருந்து யமனுடைய உலகத்திற்கு சென்றவளாய் பார்த்து, (நீ) தெரிவிக்கப்போகின்றாய். ராகவன் இங்கிருந்து காட்டிற்கு போகாத பட்சத்தில் நான் யாதொன்றையும் விரும்பேன். படுக்கைகளையும் விரும்பேன். பூமாலைகளையும் அணியேன். சந்தனத்தையும் பூசேன். மைதீட்டல், பானம், உணவு எதையும் கொள்ளேன். இவ்வுலகில் ஜீவித்திருப்பதையும் விரும்பேன்.

 

இந்த மிகக்கொடிய சொல்லை சொல்லிவிட்டு (அந்த) அழகி அதற்குமேல் அனைத்து ஆபரணங்களையும் கழற்றியெறிந்துவிட்டு, (விண்ணிலிருந்து) வீழ்ந்த கின்னரியைப்போல் (கின்னரிகள் என்பவர்கள் தேவலோக இசை கலைஞர்கள், தலையிலிருந்து-இடுப்பு வரை மனித உருவும், இடுப்பிலிருந்து-கால் வரை பறவை உருவொடும் இருப்பர் என்ற சுட்டிக்காட்டப்படுகிறது), விரிப்பால் மூடப்படாத (வெறும்)தரையில் அப்பொழுது படுத்துவிட்டாள். அந்த நரேந்திரரின் பத்தினி அவ்வாறு மனச்சோர்வுடையவளாய், மிகுந்த கோப இருளினால் மூடப்பட்ட முகமுடையவளாய், உத்தமமான மாலைகளையும், அணிகளையும் கழற்றி எறிந்தவளாய், ஒளியற்ற நட்சத்திரங்களுடைய இருள் சூழ்ந்த ஆகாயம்போல் விளங்கினாள்.

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் ஒன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment