Wednesday, July 1, 2020

பதினோராவது ஸர்க்கம் – இரண்டுவரங்களை கேட்பது


கைகேயி மன்மதபாணங்களால் தாக்குண்டவரும், காமவேகத்தால் வசப்பட்டிருப்பவருமான அந்த பூமியை பரிபாலிப்பவரிடம் கடுமையான வார்த்தையை சொன்னாள், ‘தேவரே! தாக்கப்பட்டவள் இல்லை. ஒருவராலும் அவமதிப்படைந்தவளும் இல்லை. எனக்கு ஓர் விருப்பம் உள்ளது. உம்மாலேயே செய்யவேண்டியதாகிய அதை இச்சிக்கிறேன். தாம் (அதனை) செய்திட இச்சைகொள்வதானால், (‘கேட்டதை அளிக்கிறேன்என்கிற) பிரதிக்ஞையை அங்கீகரிக்கக்கடவீர். அதன்மேல், எனது அபிப்பிராயம் எதுவோ அதை சொல்வேன்.

 

மகாதேஜஸ்வியும், காமம் கொண்டவருமான அவர் (அதாவது தசரதர்) சிறிது புன்னகைகொண்டு, கரத்தால் கைகேயியின் தலைமுடியை தடவிக்கொடுத்து, தூய்மையான புன்னைகையுடன் அவளிடம் மொழிந்தார், ‘கர்வங்கொண்டவளே! எனக்கு உன்னினும் பிரியமானவள் இல்லையென்பதையும், மானுடப்புலியான (ஸ்ரீ)ராமனினும் (மேம்பட்ட) பிற மனிதனும் இல்லையென்பதையும் அறிவாய். எவராலும் வெல்லமுடியாதவனும், மகாத்மாவானவனும், முக்கியனும், (எனது) ஜீவனுக்கு ஆதாரமானவனுமாகிய அந்த ராகவனின்மேல் உனக்கு உறுதியளிக்கிறேன். மனதில் இச்சைக்கொண்டிருப்பது எதோ அதை சொல்வாயாக. எவனை (ஓர்) முகூர்த்தமெனும் காணாவிடில் நான் நிச்சயமாய் உயிர் வைத்திரேனோ அந்த (ஸ்ரீ)ராமன்மீது கைகேயி! உன்னுடைய வார்த்தையை செய்கிறேன் (என்று) உறுதியளிக்கிறேன். என்னினும் அல்லது குழந்தைகளினும், பிறர்களினும் எவனை மானுடக்காளையாய் விரும்புகிறேனோ அந்த (ஸ்ரீ)ராமன்மேல் கைகேயி! உன்னுடைய வார்த்தையை செய்கிறேன் (என்று) உறுதியளிக்கிறேன். மங்கலமானவளே! எனது இதயத்தை ஸ்பரிசத்தால் எழுப்புவாயாக. இதை நன்கு கவனித்து கைகேயி! மனதிலிருப்பது எதுவோ அதை சொல்வாயாக. என் மீது (உனக்குள்ள செல்வாக்கு) பலத்தை அறிந்த நீ என்னிடத்தில் ஐயப்படலாகாது. உனது பிரீதியை (நான்) செய்கிறேன். நற்செயல்கள் மேல் உனக்கு உறுதியளிக்கிறேன்.

 

தனது வளத்திலேயே மனதை வைத்திருந்த அந்த தேவி (மனதிற்கு) வந்த (அந்த) அபிப்பிராயத்தை மகிழ்வுடனும், நடுநிலையற்றும், துர்வசனமாகிய (அந்த) வார்த்தையை அவரிடம் கூறினாள். அந்த (தசரதரின்) வாக்கியத்தாலே களிப்புற்ற அவள் தனது அபிப்பிராயத்திற்கு இணங்கிவிட்ட அவரிடம் மகாகோரமான மரணத்திற்கு இணையான (வார்த்தையை) மொழிந்தாள், ‘உறுதியளித்திருக்கிறீர். அதன் பயனாய் எனக்கு எந்த வரத்தை அளிக்கின்றீரோ, (அதை) அந்த இந்திரன் முன்னிட்ட முப்பத்துமூன்று தேவர்களும், சந்திரனும்-ஆதித்யனும், ஆகாயமும், கிரகங்களும், இரவும்-பகலும், திசைகளும், ஜகமும், கந்தர்வர்களும், ராட்சசர்களோடு கூடிய இந்த பூமியும் கேட்கட்டும். வீடுகளில் இரவில் திரிகின்ற பூதங்களும், இல்ல தேவதைகளும், மற்றுமுள்ள பூதங்கள் எவைகளோ அவைகளும், உம்முடைய சொல்லை அறிந்திருக்கக்கடவர்கள். சத்தியசந்தரும், மகாதேஜஸ்வியும், தர்மமறிந்தவரும், நல் சமநிலை கொண்டவருமான இவர் எனக்கு வரத்தை அளிக்கின்றார். அதை எனக்காக தேவதைகள் கேட்கக்கடவர்கள்.

 

(அந்த) தேவி காமத்தால் மோகிக்கப்பட்டவராயும், வரம் தருபவராயும் (இருந்த அந்த) மகாவில்லாளியான (அவரை) (தன்) பிடியில் கொண்டுவந்து, இவ்விதம் வாக்குக்கொடுத்தவராய், அதன்மேல் மிகவும் (முக்கிய வார்த்தையை) இவ்விதம் கூறினாள், ‘ராஜா! தேவ-அசுரர்களிடையே (நடந்த) அந்த யுத்தத்தில் முன்பு நடந்ததை நினைத்துப் பாரும். அங்கு, எதிரி கிட்டத்தட்ட உம்முடைய ஜீவனையே நிலைகுலையைச் செய்தான். தேவரே! அப்பொழுது என்னாலேயே தாம் ரட்சிக்கப்பட்டீர்.  கண் இமையாதவளாய் பாடுபட்ட எனக்கு அப்பொழுதே இரண்டு வரங்களை தந்தருளினீர். உலகை பரிபாலிப்பவரும், சத்தியத்திற்கு உண்மையாய் இருப்பவருமாகிய தேவரே! கொடுக்கப்பட்டவைகளும் உமதருகே சேர்ப்பிக்கப்பட்டவைகளுமான அந்த இரு வரங்களையே நான் இப்பொழுது துரத்துகிறேன். ஆகையால் தர்மப்படி வாக்களித்துவிட்டு, எனது வரத்தை கொடாமல் போவீர் என்றால் இப்பொழுதே உம்மால் அவமதிக்கப்பட்டவளாய் உயிரை விட்டுவிடுவேன்.

 

கைகேயியின் வார்த்தைகளால் அப்பொழுது ராஜா தன்வசத்தில் செய்யப்பட்டவராய், (ஓர்) மான் தனது அழிவின்பொருட்டு வலையில் எவ்வண்ணமோ அவ்வண்ணமே வீழ்ந்தார். அதன்மேல் காமத்தால் மோகிக்கப்பட்டவராய், வரமளிப்பவரான (அவரிடம்) இவ்விதம் சொன்னாள், ‘பூமிபாலரே! தேவரே! அப்பொழுது உம்மால் எனக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் எந்த இரண்டோ அவ்விரண்டை மாத்திரமே இப்பொழுது நான் கேட்கிறேன். எனது வார்த்தைக்கு செவிமெடுப்பீராக. ராகவனுக்கு அபிஷேக பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் என் பரதன் அபிஷேகிக்கப்பட்டு பட்டாபிஷேகம் செய்விக்கப்படட்டும். தேவரே! அப்பொழுது தேவ-அசுர யுத்தத்தில் என்னிடம் பிரீதியால் உம்மால் இரண்டாவது வரமாக எது கொடுக்கப்பட்டதோ அதற்கு காலம் இதோ வந்துவிட்டது. (ஸ்ரீ)ராமன் ஒன்பது-ஐந்து கூடிய (பதினான்கு) வருடங்கள் கந்தல் உடையோடு, கிருஷ்ணாஜினம் (எனும் மான்தோல்) மற்றும் சடை தரித்த தபஸ்வியாக தண்டகாரண்யத்தில் வாசம் செய்பவனாக இருக்கட்டும். கொடுக்கப்பட்ட வரத்தைத்தான் இப்பொழுது கேட்கிறேன். இப்பொழுதே ராகவனை வனத்திற்கு செல்பவனாக பார்க்கவேண்டும். இதுதான் எனக்கு மேலான விருப்பமாகும். பரதனின் யுவராஜ்ய (பட்டாபிஷேகத்தை) இடையூறற்றதாய் அடையட்டும். ராஜராஜராகிய தாம் சத்தியத்திற்கு உண்மையே இரும். குலத்தையும், குணத்தையும், பிறப்பையும் ரட்சித்துக்கொள்ளும். மானுடர்க்கு பரலோக வாசத்தில் சத்தியம் தவறாமை மிகுந்த நலம் (பயப்பதாக) தபோதனர்கள் (அதாவது மகரிஷிகள்) கூறுகின்றார்கள்.’”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் பதினோராவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment