“ராஜா
அவர்களுடைய ஒன்றிணைந்த குவிந்த கரங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு
எல்லாவிதத்திலும் பிரியமான, நன்மையான வார்த்தையை கூறினார், ‘என் பிரிய
மூத்த புத்திரனை இளவரசனாக வேண்டுமென நீங்கள் இச்சிக்கிறீர்கள். அதிலிருந்து என்
அதிர்ஷ்டம் அளவிடமுடியாதது (என அறியமுடிகிறது). ஓ! மிகுந்த
மகிழ்ச்சியுடவனாய் ஆனேன்.’
“ராஜா இவ்விதமாய் அந்த பிராமணர்களை
மீண்டும் அர்ச்சித்து, அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கும்
பொழுதே வசிஷ்டர் மற்றும் வாமதேவரிடம் இவ்விதம் கூறினார், ‘இந்த சித்திரை
மாதத்தில் வனங்கள் பூக்களால் (பூத்துக்குலுங்குவதாய்)
விளங்குகிறது. ஸ்ரீமானானது, புண்ணியமானது. (ஸ்ரீ)ராமனது
இளவரசு (பட்டாபிஷேகத்திற்காக) எல்லாமும் சேகரிக்கப்படட்டும்.’
“ராஜாவின் (இந்த)
வாக்கியம் முடிந்திடும்போது ஜனகோஷம் பெரிதாய் உண்டாயிற்று. அந்த ஜனகோஷமானது
படிப்படியாக அடங்கிய பின்னர் நராதிபதியான ராஜா முனிவர்களுள் புலியான வசிஷ்டரிடம்
மேலும் (இவ்)வார்த்தையை சொன்னார், ‘பகவானே, (ஸ்ரீ)ராமனுடைய
அபிஷேகத்திற்கு உபகாரணங்களோடு கூடிய கர்மங்கள் எப்படியாகுமோ அப்படி, எல்லாவற்றையும்
இப்பொழுதே ஆணையிட தகுந்தவராகிறீர்.’
“பூமிபாலருடைய அதற்கு (அதாவது அந்த
வார்த்தையை) கேட்ட உத்தம த்விஜராகிய வசிஷ்டர், ராஜாவின்
முன்னிலையில் கைகூப்பிக்கொண்டு நின்றிருந்த அதிகாரிகளிடம் ஆணையிட்டார், ‘பொன்
முதலியவைகளும், ரத்தினங்களையும், நிவேதனங்களையும், அனைத்து
மருத்துவ (மூலிகைகளும்), வெண்ணிற
மாலையையும், பொரிகளையும், தேன்-நெய்
இவைகளையும், புதிய
வஸ்திரங்களையும், (கொடி) பதாகைகளையும், இரண்டு
சாமரங்களையும், வெண்குடையையும், அக்னிபோல்
பிரகாசிக்கும் நூறு பொன்னிற கும்பங்களையும், முழுமையான புலித்தோல்
(ஒன்றையும்), பொன்
கொம்புகளையுடைய (ஓர்) காளையையும், இன்னும் வேறு
வேண்டியது எதுவோ அது எல்லாவற்றையும் காலை வேந்தரது வேள்விச்சாலையில்
சேர்ப்பியுங்கள். தனித்தனியாய் ரதங்களையும், அனைத்து
ஆயுதங்களையும், சதுரங்கபலத்தையும்.
சுபமான லட்சணங்களுள்ள யானையையும் சேர்ப்பிக்கப்படட்டும். எல்லா
அந்தப்புரத்தினுடையதும், நகரத்தினுடையதுமான வாயில்கள்
தூபங்களாலும், அழகிய
மணத்தைத்தரும் சந்தன (பசைகளாலும்), மலர்
மாலைகளாலும் அர்ச்சிக்கப்படட்டும். த்விஜர்களில் நூறாயிர முக்கிய த்விஜர்களுக்கு
சிறந்ததானதும், வழுவழுப்பானதுமான
தயிர், பால் கலந்த
அன்னமும், நெய்யும், தயிரும், பொரிகளும், ஏராளமான
தட்சிணைகளும் ‘முழுமையாய்
போதும்’ (என்கிறதாய்)
எது ஆகுமோ அப்படியே அர்ப்பணிப்பு செய்து நாளை காலையில் கொடுக்கப்படட்டும். நாளை
சூர்யன் உதயமானவுடன் ஸ்வஸ்திவாசனம் நடக்கப்போகிறது. பிராமணர்கள் அழைக்கப்படட்டும்.
ஆசனங்களும் சேகரிப்படட்டும். பதாகைள் கட்டப்படட்டும். ராஜமார்கத்தில் நீர்
தெளிக்கப்படட்டும். எல்லா நாட்டியர்களும், விலைமாதர்களும்
தம்மை அலங்கரித்துக்கொண்டவர்களாய் ராஜமாளிகையின் இரண்டாவது கட்டில் வந்து
இருக்கட்டும். கோயில்களிலும், முச்சந்திகளிலும்
அன்னங்களையும், உணவு
பதார்த்தங்களையும், தட்சிணைகளையும், மாலைகளையும்
யோக்கியமானவர்கள் தனித்தனியாய் சேகரிப்பெற்றவர்களாய் இருக்கவேண்டும். போர்வீரர்கள்
எல்லோரும் நீண்ட வாட்களை கொண்டவர்களாயும், கவசங்களை
அணிந்தவர்களாயும், தூய்மையான உடுப்புகளை
தரித்தவர்களாயும் நன்கு உருவாக்கப்பட்ட மகாராஜாவின் முற்றத்தில் பிரவேசிக்கட்டும்.’
“அந்த அந்தணர்களிருவரும் (அதாவது
வசிஷ்டரும், வாமதேவரும்)
கவனமாய் இவ்வாறு ஆணையிட்டுவிட்டு, அப்பொழுது ஆன
காரியங்களை மன்னருக்கு தெரிவித்துவிட்டு, மீதம் எதுவோ
அதையும் செய்துமுடித்தார்கள். அன்பர்களும், களிப்புற்றவர்களுமாகிய
த்விஜர்களில் காளையர்கள் ஜகத்பதியை திரும்பவும் வந்தடைந்து ‘சொன்ன
சொற்படியெல்லாம் செய்துமுடிக்கப்பட்டது’ என்று
சொன்னார்கள். அதன்மேல் பிரகாசமான, ஒழுக்கமான
ஆத்மாவாகிய ராஜா ஸுமந்த்ரரிடம் இந்த வார்த்தையை சொல்லினார், ‘(ஸ்ரீ)ராமன்
உம்மால் சீக்கிரமாய் அழைத்து வரப்படட்டும்.’
“அந்த
ஸுமந்த்ரர் ராஜாவின் சாசனத்தால் ‘அவ்வாறே’ என்று
பதிலுரைத்துவிட்டு, ரதர்களில் சிறந்தவரான (ஸ்ரீ)ராமரை
ரதத்தில் (ஏற்றிக்கொண்டு) அங்கு திரும்பினார். வாசவனிடம் (அதாவது
தேவேந்திரனிடம்) தேவர்கள் எவ்வண்ணமோ அவ்வண்ணமே அந்த தசரத மன்னரிடம் அப்பொழுது
அங்கு வீற்றிருந்த கிழக்கு-வடக்கு பிரதேசவாசிகளும், மேற்குப்பிரதேசவாசிகளும், தெற்குப்பிரதேசவாசிகளுமான
பூமிபாலர்கள் (அதாவது அரசர்கள்), ம்லேச்சர்களும், ஆரியர்களும், வனங்களிலும்-மலைகளிலும்
வசிக்கிறவர்களும், பிறர்களும் எவர்களோ அவர்கள் எல்லோருமே
அப்பொழுது கலந்து கொண்டனர். அந்த ராஜரிஷி மருதர்களுக்கு வாசவன் (அதாவது
தேவேந்திரன்) எவ்வண்ணமோ அவ்வண்ணமே அவர்களுக்கு மத்தியில் திருமாளிகையிலிருந்த
வண்ணமே மைந்தன் ரதத்தில் வந்துகொண்டிருப்பதை கண்டார். நராதிபதி (அதாவது
தசரதர்) வந்துகொண்டிருக்கும் (ஸ்ரீ)ராமர் கந்தர்வராஜன் போலிருப்பதையும், உலகில்
புகழ்பெற்ற வீரம் (பெற்றிருப்பதையும்), மகத்தான வலிமை
(கொண்டிருப்பதையும்), நீண்ட கைகள் (பெற்று
விளங்குவதையும்), மதங்கொண்ட
யானையை நிகர்த்த நடையைப்(பெற்றிருப்பதையும்), தரிசிப்பதற்கு
மிகவும் பிரியமாய் (இருப்பதையும்), நிலவைப்போன்ற
அழகிய முகமுடையதையும், உருவத்தால்-பெருந்தன்மையால்-குணங்களால்
மானுடர்களுடைய பார்வை (மற்றும்) சிந்தனையை
அபகரித்ததையும் கண்டவராய், வறண்ட கொடையால் தகிக்கும் பிரஜைகள், மேகங்களால்
மகிழ்வது போலவே (ஸ்ரீராமரின் தரிசனத்தால் உள்ளம்) நிறைவு பெறாதவராய்
இருந்தார்.
“ஸுமந்த்ரர் ராகவரை உத்தம ரதத்தினின்று
(இறங்க) உதவி, தந்தையின்
அருகில் சென்றிடும் அவரின் பின் கைகுவித்தவண்ணமே சென்றார். அந்த ரகுபுங்கவராகிய
ராகவர் (அதாவது ஸ்ரீராமர்) மன்னரை காண கைலாச பர்வதம்
போன்றிருக்கும் அந்த திருமாளிகையில் சாரதியோடு கூடவே ஏறினார். அந்த (ஸ்ரீ)ராமர்
தந்தையின் அருகே பணிவாய், கரங்களை குவித்தவராய் சென்று, தனது பெயர்
சொல்லி (அபிவாதனம் செய்து) தந்தையின் சரணத்தில் வந்தனம்
செய்தார். மன்னர் தன் பக்கம் பணிவாயும், கரங்களை
குவித்தவண்ணமாய் இருந்தவருமான அந்த பிரியமான மைந்தனை கண்டு, குவிந்தகரங்களைப்
பற்றி இழுத்து அணைத்துக்கொண்டார். ராஜா
அந்த (ஸ்ரீ)ராமருக்கு நன்றாய் மணிகளாலும் பொன்னினாலும் அலங்கரிக்கப்பெற்றதாய்
அழகுவாய்ந்ததும், உன்னதமாயிருப்பதுமான சிறந்த ஆசனத்தை
நியமித்தார். களங்கமற்றவரான ராகவர் சிறந்த ஆசனத்தை அடைந்ததும், தனது ஒளியால்
அதை ரவி (அதாவது சூர்யன்) உதயகாலத்தில் மேரு(மலையை) எவ்வண்ணமோ
அவ்வண்ணமே பிரகாசிக்கச்செய்தார். அப்பொழுது அந்த சபையே ஒளிர்ந்து, அவரால்
நிர்மலமான கிரகங்கள் (மற்றும்) நட்சத்திரங்களால்
இலையுதிர் காலத்திய ஆகாயமானது இந்துவால் (அதாவது சந்திரனால்) எவ்வண்ணமோ
அவ்வண்ணமே பிரகாசிக்கலாயிற்று.
“மன்னர் அந்த பிரிய மைந்தனை கண்ணாடியில் அலங்கரித்த தன் உருவத்தை (கண்டு களிப்புறுவது போன்று) கண்டு சந்தோஷித்தார். புத்திரர்களை பெற்றவர்களில் சிறந்தவராகிய அந்த ராஜா புன்னகையுடன் அந்த புத்திரனிடம் பேசினார். காஷ்யபர் தேவேந்திரனுக்கு எவ்வண்ணமோ அவ்வண்ணமே இந்த வார்த்தைகளை கூறினார், ‘(ஸ்ரீ)ராமா, எனது உயர்ந்த, சிறந்த குணங்களைப் (பெற்றவனாய்), பிரியமான புதல்வனாகிய நீ எனது மூத்த முன்மாதிரியான தர்மபத்தினியிடத்தில் புதல்வனாய் பிறந்தாய். இதோயிருக்கும் பிரஜைகள் உனது (நற்)குணங்களால் உன்னால் நேசிக்கப்பட்டார்கள். அதனால் நீ புஷ்ய (நட்சத்திர) யோகத்திலிருந்து இளவரசு (அதிகாரத்தை) பெறுவாயாக. நீ இயல்பிலேயே குணவான். பணிவானவன். புத்திரா! இருந்தபோதிலும் குணவான்கள் (விஷயத்தில்) கூட நலன்தருவதை அன்பினால் விருப்பத்துடனே உனக்கு கூறுகிறேன். இன்னும் அதிகமாய் பணிவுடன் இருக்க முயற்சி செய். எப்பொழுதும் இந்திரியங்களை வென்றவனாய் இரு. காம-குரோதங்களால் உண்டாகும் தீய பழக்கங்களை (அதாவது பிற பெண்களை நாடுதல், சூது, விதிமீறி வேட்டையாடுதல், மத்யபானம், பெரும் பேச்சு, குற்றத்திற்கு அதிக தண்டனை, செல்வங்களை கண்டபடி செலவிடுதல் ஆகியவைகளை) விட்டுவிடு. மறைமுகமாகவும் மற்றும் நேரடியாகவும் ஒழுக்கமான நடவடிக்கைகளால் மந்திரிகள் முதலான மக்கள் எல்லோரையும் களிப்புறச்செய்வாய். தானிய கிடங்குகளை, ஆயுத சாலைகளை பலவித (பொருட்களைக்கொண்டு) நன்கு சேகரித்தலை செய்தும், மகிழ்ச்சிகரமான களிப்புற்ற மக்களை பெற்றவனாயும் மேதினியை (அதாவது பூமியை) எவன் பரிபாலனம் செய்கிறானோ அவனது மித்திரர்கள், அமரர்கள் அமிர்தத்தை பெற்றால் எவ்வண்ணமோ அவ்வண்ணமே ஆனந்தப்படுகிறார்கள். ஆகையால், நீயும் உன்னை இவ்விதம் ஆகும்படி நடப்பாயாக.’
“அதை
கேட்டவர்களும், அந்த (ஸ்ரீ)ராமரது
நண்பர்களும் பிரியத்தின் காரணமாய் சீக்கிரமாய், துரிதமாய் (ஸ்ரீராமரின்
அன்னை) கௌசல்யாவிடம் சென்று (விஷயத்தை) தெரிவித்தார்கள். பெண்மணிகளில்
சிறந்தவராகிய அந்த கௌசல்யா பிரியமான செய்தி சொன்னவர்களுக்கு விதவிதமான
ரத்தினங்களையும், பசுக்களையும், பொன்னையும்
கொடுத்தார். ஜனசமூகத்தால் பூஜிக்கப்பட்டவராகிய ராகவர் (அதாவது
ஸ்ரீராமர்) ராஜாவை அபிவாதனம் செய்து (அதாவது வணங்கி), பின்ன தனது
அற்புதமான வசிப்பிடத்திற்கு ரதத்தின்மீது ஏறிக்கொண்டு சென்றார். மன்னரின் அந்த
வார்த்தையை கேட்டுக்கொண்டிருந்த அந்த பட்டணத்துஜனங்கள் (எல்லோரும்)
(தங்களின்) இஷ்டம் நிறைவேறியதை போன்று, நரேந்திரரிடம்
விடைபெற்றுக்கொண்டு, அப்பொழுது அந்தக்கணமே வீடுகளுக்கு
சென்று, உள்ளங்கள்
பூரித்தவர்களாய் தேவர்களை ஒருங்கே அர்ச்சித்தார்கள்.”
No comments:
Post a Comment