Tuesday, May 26, 2020

இரண்டாவது ஸர்க்கம் – ஸ்ரீராமரது பட்டாபிஷேகத்தைப் பற்றிய மந்திராலோசனை


அப்பொழுது வஸுதாதிபதி (அதாவது பூமிக்கு அதிபதி), இவ்விதமாய் சபையிலுள்ள அழைக்கப்பட்ட எல்லோரிடமும் யாவருமறிந்துள்ள வண்ணமாயே உள்ளங்குளிர்ச் செய்யும் இதமான வார்த்தையை பேசலானார். நரர்களின் பதியான ராஜா, மகத்தான ஸ்வரத்தோடு நாதம் செய்யும் மேகம் எவ்வண்ணமோ அவ்வண்ணம் கம்பீரமான துந்துபி (வாத்திய) சப்தம் போன்றதாய், எதிரொலி உண்டாக்குகின்றதாய், ராஜலட்சணங்களுக்கு ஏற்றதாய், அற்புதமானதாய், ரசம் நிறைந்ததாய், ஒப்பில்லாததுமான குரலுடன் மன்னர்களிடம் கூறினார், ‘என்னுடைய இந்த உத்தமமான ராஜ்யமானது என்னுடைய முன்னோர்களான ராஜேந்திரர்களால் மைந்தனைப்போல பரிபாலிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். அந்த நான் இக்ஷ்வாகுகளுடைய நரேந்திரர்கள் எல்லோராலும் பரிபாலிக்கப்பட்டதும், சுகத்திற்கு தகுதியானதும், முழு ஜகத்திற்கும் நன்மையால் சூழ்ந்துகொண்டிருப்பதற்கு விருப்பங்கொண்டவனாய் இருக்கிறேன். முன்னோர்களால் அனுசரிக்கப்பட்டதும், நித்தியமுமான பாதையை அனுசரித்துவரும் என்னாலும் எச்சரிக்கையுடனும், சக்திக்கு இயன்றமட்டும் பிரஜைகள் ரட்சிக்கப்பட்டார்கள். இந்த சரீரமானது என்னால் அனைத்து உலகத்திற்கும் வெண் குடையின் நிழலில் நன்மையை செய்ததால் திடமற்றதாகிவிட்டது. ஆயுளில் பல ஆயிரமாண்டுகள் ஜீவித்ததும், மூப்பை பெற்றிருக்கிறதுமான இந்த சரீரத்திற்கு ஓய்வளிக்க விரும்புகிறேன். உலகிற்கு வெல்லப்படாத இந்திரியங்களால் ராஜாவாயிருந்து அரசாட்சி செய்வதால் விளைவதும், தாங்கிட கடினமாய் இருப்பதும், கனமான எடை கொண்ட தர்மத்தை வகிக்கின்றவனாய் அதனால் நான் களைப்படைந்து விட்டேன். அந்த நான் இவ்விடம் எழுந்தருளி இருக்கும் இந்த த்விஜர்களில் (த்விஜர் என்றால் இருபிறப்பாளர் என்று பொருள். முதல் பிறப்பு தாயிடம் இருந்து வரும் சாதாரண பிறப்பு, பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது இரண்டாம் பிறப்பு என்றும் கருதப்படுகிறது) காளையர்கள் எல்லோரின் ஒப்புதலில், பிரஜைகளின் நன்மைக்காக புத்திரனை (முடிசூட்டுதலை) செய்துவிட்டு, ஓய்வெடுக்க இச்சிக்கிறேன். (ஸ்ரீ)ராமன் என் மூத்த குமாரன். வீர்யத்தில் புரந்தரனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) சமானன். எதிரிகளின் பட்டணத்தை வெல்பவன். எல்லா குணங்களிலும் என்னை நிகர்த்தவன். பூச (நட்சத்திரத்தோடு) கூடிய சந்திரனைப்போல் இருப்பவனும், தர்மத்தை காப்பவர்களுள் சிறந்தவனும், புருஷர்களில் மிகச்சிறந்தவனுமாகிய அவனை பிரீதியுடன் இளவரசாய் நியமிக்கிறேன். லக்ஷ்மணனுக்கு முன் பிறந்த இவன் லக்ஷ்மிவான், எந்த நாதனால் மூவுலகும் சிறந்த நாதனைப்பெற்றதாய் விளங்குமோ, (அந்த) தகுந்த நாதன் இவன். இவ்விதமாய் இப்பொழுதே இந்த பூமியை அந்த மைந்தனிடத்தில் ஒப்படைத்து, கஷ்டங்களிலிருந்து விடுபெற்றவனாகி, பாவங்களற்ற நன்மைகளில் ஸ்திரமாய் இருக்கப்போகிறேன். இது என்னால் நன்றாய் ஆலோசித்து தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய (இந்த ஆலோசனை) சரியானதாய் இருக்குமாகில் நீங்கள் எனக்கு அனுமதியளிக்க கடவீர்கள். இல்லையாகில் நான் வேறெதை செய்யவேண்டும்? இது என்னுடைய பிரீதியாயிருக்கிறது. வேறு ஏற்ற காரியம் இருக்குமாவென சிந்திக்கப்படட்டும். பிற நடுநிலையாளர்களால் சிந்திக்கப்பெற்றதாய், தனிச்சிறப்புடையோரின் (கருத்து) மோதலால் (நல்லதொரு வழி) உதிக்கட்டும்.

 

மன்னர்கள் மழைபெய்கிற மகாமேகத்தை (கண்டு) சப்தம் செய்யும் மயில்கள் போல் உள்ளம் பூரித்தவர்களாய் இவ்வாறு சொன்ன வேந்தரை (அதாவது தசரதரை) புகழ்ந்தனர். அப்பொழுது சந்தோஷத்தால் உண்டானதும், ஜனக்கூட்டத்தால் (உண்டான) கிளர்ந்த நாதமானதும், (அதன்மூலம் ஏற்பட்ட) இனிமையான எதிரொலியும் (அந்த) விமானத்தையே அசைவுறச் செய்வதாய் உண்டாயிற்று. நகரத்தார்களோடும், நாட்டார்களோடும் கூட பிராமணர்களும், (சேனை)பலத்தின் முக்கியஸ்தர்களும் இதில் அறம் (மற்றும்) பொருள் (ஆகியவற்றை நன்கு) உணர்ந்த அவரது எண்ணத்தை மனதோடு அறிந்தும், சேர்ந்து பலவாறாய் ஆராய்ந்து அறிந்துகொண்டு, ஒருமித்த கருத்துடையவர்களாய் பெரியவராகிய தசரதரிடம் (பின்வரும்) வார்த்தையை உரைத்தனர், ‘வேந்தே, தாம் அந்த அநேகமாயிரம் வருடங்கள் (வாழ்ந்து) மூப்புற்றீர். (ஸ்ரீ)ராமரை அரசாளும் இளவரசாய் அபிஷேகம் செய்வீராக. பெருங்கரமுடையவரும், ரகு (குல) வீரரும், மகாபலவானுமாகிய (ஸ்ரீ)ராமரை மகத்தான யானையின் மீது, குடையால் மறைக்கப்பட்ட முகமண்டலமுடையவராய் ஊர்கோலமாய்ப்போவதை (காண) இச்சைக்கொண்டிருக்கிறோம்.

 

இப்படியாய் அவர்களுடைய மனதிலுள்ள பிரியத்தை (காட்டுகிற) அந்த வார்த்தையை கேட்ட ராஜா, விஷயம் தெரியாதவர் போலவும், விஷயம் தெரிந்து கொள்ளவேண்டியவர் போலவுமாகி இவ்விதமான வார்த்தையை கூறினார், 'ராஜாக்களே, நான் தர்மத்தால் பூமியை ஆண்டுகொண்டிருக்கையில் எனது வார்த்தையை கேட்டவுடனேயே நீங்கள் எனது மைந்தனான ராகவனை அரசாளும் இளவரசாய் காண ஏனோ இச்சைகொள்கிறீர்கள்? எனக்கு (மேலும்) இச்சிக்கிறீர்கள்.  எதுவோ இது ஐயமுள்ளதாயிருக்கிறது. இது ஏன்? உள்ளதை உள்ளபடி சொல்வீர்களாக.

 

நகரத்தாரோடும், நாட்டாரோடும் கூடிய அவர்கள் மகாத்மாவாகிய அவரிடம் கூறினர், ‘மன்னா, தமது புத்திரரிடத்தில் நிறைய கல்யாண குணங்கள் இருக்கின்றன. தேவா, தேவர்களுக்கு சமானராய் குணங்களை பெற்றவரும், அறிஞருமாகிய (அவருடைய) பிரியமானவைகளும், ஆனந்தமானவைகளுமான அந்த குணங்கள் எல்லாவற்றையும் இப்பொழுது உரைக்கின்றோம், கேட்பீராக. மக்களின் பதியே, (ஸ்ரீ)ராமர் ஒருவரே சத்திய பராக்கிரமமுடையவர். திவ்ய குணங்களால் ஷக்ரனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) சமானர். இக்ஷ்வாகு (வம்சத்தில்) பிறந்த (அரசர்கள்) எல்லோரிலும் மேம்பட்டவர். (ஸ்ரீ)ராமர் ஒருவரே சாட்சாத் ஸத்புருஷர் (அதாவது நல்ல மனிதர்). சத்தியம் (மற்றும்) தர்மத்தில் நோக்கம் கொண்டவர். உலகில் தர்மத்துடன் கூடிய செல்வத்தை (ஸ்ரீ)ராமர் மட்டுமே ஏற்பாடு (செய்ய முடியும்). சாட்சாத் பிரஜைகளில் சுகமாய் வைப்பதில் சந்திரனுக்கும், மன்னிக்கும் குணத்தில் வஸுதாவிற்கும் (அதாவது பூமிக்கும்), புத்தியில் ப்ருஹஸ்பதிக்கும் (அதாவது தேவகுருவிற்கும்), வீர்யத்தில் ஷசீபதிக்கும் (அதாவது தேவேந்திரனுக்கும்) நிகரானவர். தர்மம் அறிந்தவர். சத்தியசந்தர். நல்லொழுக்கமுடையவர். பொறாமையில்லாதவர். பொறுமையுடைவர். (கஷ்டத்தில் இருப்போருக்கு) ஆறுதல் அளிப்பவர். மென்மையான (வார்த்தைகளை பேசுபவர்). செய்நன்றி மறவாதவர். இந்திரியங்களை வென்றவர். மென்மையான இயல்புடையவர். ஸ்திரமான சிந்தையுடையவர். எப்பொழுதும் சரியானவர். பொறாமையில்லாதவர். ராகவர் உயிரினங்களிடம் பிரியமாய் பேசுபவராய், சத்தியவாதியாய் இருப்பவர். அநேக ஸ்ருதிகளை (அதாவது வேத நூல்களை) (அறிந்த) மூத்தோரையும், பிராமணர்களையும் உபாசிப்பவர். தேவர்கள், அசுரர்கள், மானுடர்கள் இவர்களுள் எல்லா அஸ்திரங்களிலும் நிபுணர். அதனால் இவ்வுலகில் அவருடைய தேஜஸும், புகழும், கீர்த்தியும் ஒப்பற்றதாய் வளர்கிறது. பரதனுக்குத் தமயனாகிய (அவர்) சரியாய் வித்தைகளை (கற்று) விரதங்களை முடித்தவர். உள்ளபடி ஸாங்கவேதங்களை அறிந்தவர். உலகில் காந்தர்வத்தில் (அதாவது ஸங்கீதசாஸ்திரத்திலும்) சிறந்தவராய் விளங்குபவர். நல்லவர். கல்யாண ஜனங்களுடன் விளங்குகிறவர். பலவீனமற்ற ஆத்மாவை கொண்டவர். மகத்தான ஒளிபொருந்தியவர். அறம் மற்றும் பொருளில் நிபுணர்களான சிறந்த த்விஜர்களால் (த்விஜர் என்றால் இருபிறப்பாளர் என்று பொருள். முதல் பிறப்பு தாயிடம் இருந்து வரும் சாதாரண பிறப்பு, பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது இரண்டாம் பிறப்பு என்றும் கருதப்படுகிறது) நன்கு கற்பிக்கப்பட்டவர். சௌமித்ரர் (அதாவது லக்ஷ்மணர்) சகிதமாய் இருக்குமவர் கிராமவிஷயமாகவோ, நகரவிஷயமாகவோ சென்று, போரை அடைந்த பின்னர் வெற்றிகொள்ளாமல் திரும்புவதில்லை. யுத்தத்தினின்று யானையின் மீதோ அல்லது ரதத்திலோ திரும்பவும் வரும் அவர், நித்தமும் பட்டணத்து ஜனங்களை புத்திரர்கள் விஷயங்களிலும், அக்னி (அதாவது அக்னிஹோத்ர) விஷயங்களிலும், மனைவிகள் விஷயத்திலும், பணியாட்கள் (மற்றும்) சிஷ்ய கணங்கள் விஷயத்திலும் முழுமையாய் தகப்பன் தன் சொந்த புத்திரர்களை எவ்வண்ணமோ அவ்வண்ணமே தனது ஜனங்களைப்போல் வரிசைமுறைப்படி நலத்தை விசாரிக்கிறார். புருஷர்களுள் புலியாகிய (ஸ்ரீ)ராமர் எங்களிடம் இப்படி பேசுகிறார், ‘உங்கள் சிஷ்யர்கள் கர்மங்களில் எப்பொழுதும் ஊக்கமுடையவர்களாய் பணிவிடை செய்கின்றனர்களா?’ மானுடர்களுடைய ஆபத்து காலங்களில் (அவர்களிலும்) அதிகமாய் துக்கம் அடைகிறார். எல்லோருடைய உற்சவங்களில் தந்தை எவ்வண்ணமோ அவ்வண்ணமே மிகவும் களிப்புறுகின்றார். சத்தியத்தையே உரைப்பவர். மகத்தான வில்லாளி. பெரியோர்களுக்கு சேவகம் செய்பவர். இந்திரியங்களை வென்றவர். புன்சிரிப்போடு பேசுபவர். எப்பொழுதும் தர்மத்தை அனுசரிப்பவர். சரியான வழியில் மங்கலங்களைச் சேர்ப்பவர். வார்த்தைப்போர் (புரியும்) பேச்சுகளில் ஆர்வமில்லாதவர். சொல்லிலும், பதிலிலும் சொல்வன்மையராகிய வாசஸ்பதியைப் (அதாவது தேவ குருவை) போன்றவர். அழகிய புருவமுடையவராய், அகண்ட தாமிர (நிற) கண்களையுடையவராய், துணிவிலும்-வீர்ய பராக்கிரமத்திலும், உலகத்தை வசீகரிப்பவராகிய சாட்சாத் (ஸ்ரீ மகா) விஷ்ணுவே இந்த (ஸ்ரீ)ராமர். பிரஜைகளை பரிபாலிக்கும் தத்துவங்களை அறிந்தவர். (உணர்ச்சி)வேட்கையில் ஆட்படாத இந்திரியங்களை கொண்டவர். இவரொருவர்தான் மூவுலகையும் ஆண்டிட சக்தர். இந்த பூமியைப்பற்றி கேட்க வேண்டுமா? இவருடைய கோபமும், கருணையும் ஏதொருசமயத்திலும் அர்த்தமற்றதாக இல்லை. இவர் நியதிப்படியே எவர்களிடம் கோபப்படவேண்டுமோ (அவர்களிடம் கோபப்படுவார்). வதைக்கப்பட வேண்டியவர்களையே வதைப்பார். இவர் யாரிடத்தில் மகிழ்வுறுகின்றனரோ அவரை சந்தோஷித்தவராய் செல்வத்தோடு சேர்த்துவைக்கிறார். (ஸ்ரீ)ராமர் சூர்யன் கிரணங்களால் ஒளிர்வது எவ்வண்ணமோ அவ்வண்ணமே மனிதர்களுக்கு சாந்தமாய், பிரீதியை உண்டுசெய்கிற, அனைத்து ஜனங்களும் விரும்புகிற குணங்களால் ஒளிர்கிறார். இப்படிப்பட்ட குணங்கள் நிறைந்தவராய், சத்தியபராக்கிரமராய், லோகபாலர்களுக்கு சமானராய் அந்த (ஸ்ரீ)ராமரை மேதினிக்கு (அதாவது பூமிக்கு) நாதன் ஆகும்படி (மக்கள் கூட்டம்) விரும்புகிறது. ராகவா (அதாவது தசரதரே), மாரீசரான (அதாவது பிரஜாபதியான ரிஷி மரீசியின் புதல்வரான) காஷ்யபர் எவ்வண்ணமோ அவ்வண்ணமே புத்திர குணங்களை கொண்டிருக்கும் இவர் (அதாவது ஸ்ரீராமர்) (உலகிற்கு ஏற்படவேண்டிய) நலத்தால், தமது அதிர்ஷ்டத்தால், பாக்கிய விசேஷத்தால் தமது குழந்தையாய் பிறந்திருக்கிறார். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் இவர்களிலும் கந்தர்வர்கள் உள்ளிட்ட உரகர்களிலும், நகரத்திலும், தேசத்திலும், அதன் அருகே அனைத்து ஜனங்களும், அந்நிய நகரங்களிலும், நாடுகளிலும் இருக்கிற ஜனங்களும் அறிஞரான ஆத்மா (பெற்றவராகிய) (ஸ்ரீ)ராமருக்கு பலமும், ஆரோக்கியமும், ஆயுளையும் விரும்புகின்றனர். இளம் (மற்றும்) முதிர்ந்த பெண்களும் மாலை மற்றும் காலையில் நிலையான உள்ளத்தோடு, புகழ்பெற்றவராகிய (ஸ்ரீ)ராமரின் நலத்திற்காக அனைத்து தேவர்களையும் வணங்குகிறார்கள். தேவரே (அதாவது தசரதரே), அவர்களுடைய விருப்பமும் தமது கருணையால் நிறைவேற வேண்டும். நீல தாமரை போல் கருமை (நிறத்தவரும்), அனைத்து எதிரிகளையும் வெல்லக்கூடியவரும், தமது ராஜாக்களில் உத்தமராகிய புதல்வருமான (ஸ்ரீ)ராமரை இளவரசாய் காண (விழைகிறோம்). வரங்களை அளிப்பவரே (அதாவது தசரதரே), எல்லா உலகத்திற்கும் நன்மைக்கும், தேவதேவருக்கு சமானராய் (சக்தி) நிறைந்தவராயும், உன்னத (குணங்களை) கொண்டவருமான தமது குமாரரை எங்களது நன்மையின்பொருட்டு விரைவில் தாம் மகிழ்ச்சியுடன் அபிஷேகம் செய்வதே தகும்.’”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் இரண்டாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment