Sunday, May 24, 2020

முதல் ஸர்க்கம் – ஸ்ரீராமரது குணங்களின் வர்ணனை


அப்பொழுது மாமன்வீட்டிற்கு சென்ற பரதரால் பாவமற்றவரும், நித்தியஎதிரிகளை அழித்தவரான (அதாவது புலன்களை வென்றவரான) ஷத்ருக்னன் பிரீதியுடன் கொண்டாடப்பட்டவராய் அழைத்துக்கொண்டு போகப்பட்டார். அவர் அவ்விடத்தில் சகோதரருடன் அஷ்வபதியான (அதாவது குதிரைப்படைக்கு தலைவனான) மாமனால் நல் விருந்தோம்பலுடன் உபசரிக்கப்பட்டவர்களாயும், புத்திரர்களைப்போன்ற அன்போடும் மகிழ்ச்சியாய் வசித்துவந்தனர். வீரர்களும், சகோதரர்களுமாகிய அவ்விருவரும் அங்கு வசிப்பவர்களாய் விரும்பியவாறு திருப்தி செய்யப்பட்டவர்களாய் இருந்த போதிலும் வயது முதிர்ந்த தசரத அரசரை நினைத்திருந்தனர். ராஜாவும் (அதாவது தசரதரும்) மகேந்திரனையும், வருணனையும் ஒத்த மகா பாக்கியசாலிகளும், அயல்நாட்டில் இருக்கும் பரத-ஷத்ருக்னர்களான அந்த இரண்டு குமாரர்களையும் நினைவுகூரியவாறு இருந்தார். ஏனெனில் புருஷர்களுள் காளையர்களும், நால்வர்களுமாகிய எல்லோரும் தமது சரீரத்திலிருந்து தோன்றிய நான்கு கைகள்போல் அவருக்கு இஷ்டர்களாய் இருந்தனர்.

 

அவர்களுக்குள்ளும் (ஸ்ரீ)ராமர், உயிரினங்களுக்குள் சுயம்புவைப்போல் (அதாவது பிரம்மதேவரை போல்) சிறந்த குணவானும், மகாதேஜஸ்வியும், தந்தைக்கு ஆனந்தத்தை விளைவிப்பவராய் விளங்கினார். கர்வங்கொண்ட ராவணனுடைய வதத்தைக்கோரிய தேவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட சனாதனரான (ஸ்ரீ மகா)விஷ்ணுவேயாகும் அவர், மானுட உலகத்தில் தோன்றினார்.

 

ஒப்பற்ற தேஜஸுள்ள அந்த புத்திரராலே (ஸ்ரீராமரது தாயான) கௌசல்யாவும், தேவர்களில் வஜ்ரபாணியினால் (அதாவது தேவேந்திரனினால்) அதிதி தேவிபோல் ஒளிர்ந்தார். பூமியில் குணங்களால் தசரதருக்கு சமானமானவரும், நிகரற்றவருமாகிய குமாரர். அவர் (அதாவது ஸ்ரீராமர்) அழகிய உருவம் கொண்டவர், வீர்யவான், மேலும், பொறாமையற்றவர். அவர் நித்தம் அமைதியான ஆத்மாவுடன், மிருதுவாய் பேசுபவர். கொடும் (வார்த்தைகளை பிறர்) சொல்லியபோதிலும் பதில் பேசாமல் இருப்பவர். எவ்விதத்திலாவது செய்யப்பட்ட ஒரு உபகாரத்தால் திருப்தியடைகிறார். நூற்றுக்கணக்கான அபகாரங்களை விவேகமுள்ள (அவர்) நினைக்காதவர். எப்பொழுதும் அஸ்திரப்பயிற்சி (செய்யும் காலங்களில்) நேர்கிற இடைவெளியில் தர்மங்களில் முதிர்ந்தவர்களாய், ஞானத்தில் முதிர்ந்தவர்களாய், மற்றும் வயது முதிர்ந்தவர்களாய் (இருக்கும்) நன்மக்களோடு மட்டும் கதைத்துக்கொண்டு இருப்பார். புத்திமான், மதுரமாய் பேசக்கூடியவர், முதலில் பேசுபவர், பிரியமாய் பேசுபவர், வீர்யவான், ஆயினும் தனது மகத்தான வீர்யத்தால் கர்வங்கொள்ளாதவர்.  பொய் பேசாதவர், வித்வான், பெரியோர்களுக்கு வணங்கி நடப்பவர். மேலும், பிரஜைகளை திருப்திசெய்பவர். அதனாலேயே, பிரஜைகளின் அபிமானம் பெற்றிருந்தார். எப்பொழுதும் இரக்கம் கொண்டவர். குரோதத்தை வென்றவர். பிராமணர்களை கௌரவிப்பவர். ஏழைகளுக்கு பரிவு காட்டுபவர். தர்மங்களை அறிந்தவர். (சுய) கட்டுப்பாடு கொண்டவர். பரிசுத்தர். உதித்த குலத்திற்கேற்ற மதி (கொண்டவர்). பெரும் புகழால் மகத்தான ஸ்வர்கபலன் (உண்டென்று) உணர்ந்திருந்தார். ஆதலால் தனது க்ஷத்ரிய தர்மத்தை மரியாதையுடன் அனுசரித்துவந்தார். வளமில்லா விஷயத்தில் ஈடுபாடில்லாதவர். தர்மத்திற்கெதிரான பேச்சிற்கு இடம் கொடாதவர். தானாய் முதலில் மொழிதல், செவிசாற்றியதற்கு பதிலுரைத்தல் (இவ்விரண்டுக்கும் வேண்டிய) யுக்தி விஷயத்தில் சொல்வன்மையுடையவராகிய வாச்சஸ்பதி (அதாவது வியாழபகவான்) போன்றவர் எவரோ, அவர் இவர். நோயற்றவரும், இளைஞவரும், இடம்-காலம் இவைகளை அறிந்தவரும், மனிதர்களின் சாரத்தை அறிகிறவரும், நல்லதொரு பேச்சாளரும், நல்ல உடல்வாகு கொண்டவரும், உலகத்தில் கொண்டாடப்படும் நல்லவரும் (ஆவார்).

 

அரசரின் திருமகனாரும், சிறந்த குணங்கள் உடையவரும், இன்னும் மேம்பட்ட குணங்கள் அடங்கியவரான அவர் பிரஜைகளுக்கு உடலைவிட்டு வெளியே உருக்கொண்டு உவுகின்ற உயிரென விளங்கினார். பரதருக்கு தமயனாகிய அவர் நன்றாய் வித்தைகள் (மற்றும்) விரதங்களால் சுத்தீகரிப்பட்டவர். உள்ளபடி அங்கங்களோடு கூடிய வேதங்களை அறிந்தவர். அஸ்திர கல்வியில் தந்தையாரினும் சிறந்தவராய் விளங்கினார்.  நல்லவர், சிறந்த (குலத்தில்) பிறந்தவர், பலவீனமில்லாதவர், நேர்மையாளர், சத்தியத்தை பேசுபவர்தர்மங்களின் அர்த்தங்களை கானுபவர், த்விஜர்கள் (மற்றும்) பெரியோர்களால் நன்கு கற்பிக்கப்பட்டவர். ஞாபகசக்தி உள்ளவர், சமயோசித புத்தியை கொண்டவர், தர்மம்-காமம்-பொருள் (இவற்றின்) தத்துவங்களை அறிந்தவர், லௌகீக (அதாவது உலகசம்மந்தமாயிருக்கும்) சமய (அதாவது கால) வழக்கங்களை செய்வதில் நிபுணர். பணிவானவர், (உணர்வுகளை) வெளிக்காட்டாதவர், எண்ணங்களை தன்னுளேயே வைத்திருப்பவர், (பிறருக்கு) உதவுபவர், வீணாகாத சினமும்-களிப்பும் கொண்டவர், (பொருளை) செலவிடும் (மற்றும்) சேர்த்திடும் காலத்தை அறிந்தவர். திடமான பக்தியுள்ளவர், ஸ்திரமான அறிவுடையவர், பிடிவாதமில்லாதவர், தீய வார்த்தைகளை பேசாதவர், சோம்பலில்லாதவர், விழிப்புடன் இருப்பவர், தனது தோஷங்களையும் பிறரது தோஷங்களையும் அறிந்தவர். சாஸ்திரங்களை அறிந்தவர், (அதன்) செயல்முறையை அறிந்தவர், புருஷர்கள் (மத்தியில் இருக்கும்) வேறுபாடுகளை அறிந்தவர், நியாயப்படி (தண்டனையை) பெறப்படவேண்டியவரையும்-அனுக்கிரகிக்கப்படவேண்டியவரையும் (அறிவதில்) நிபுணர் எவர் ஒருவரோ அவர் இவர். நல்லோரை அறிந்து காப்பவர், தண்டிக்கப்பட வேண்டியோரை அறிந்தவர், பொருள் தேடும் உபாயங்களை அறிந்தவர், ஒப்புக்கொள்ளப்பட்ட செலவிடும் வழிகளை அறிந்தவர்.

 

சாஸ்திர சமூகங்களிலும் அதன் துணை கிரந்தங்களிலும் சிறப்பை பெற்றவர். பொருளையும், தர்மத்தையும் திரட்டி சுகத்தை அனுபவித்து வருபவர், வீண்காலம் போகாதவர். பொழுதுபோக்குகள் (அதாவது உல்லாசமாய் காலம் கழிப்பதற்குரிய வீணை, புல்லாங்குழல் முதலியவைகள்) (மற்றும்) சிற்பங்களுடைய நுட்பங்களையறிந்தவர், செல்வத்தை பகிர்ந்தளிக்க அறிந்தவர், யானை ஏற்றத்திலும்-குதிரை ஏற்றத்திலும் அடக்குவதிலும் ஆற்றலுடையவர். தனுர்வேதத்தை அறிந்தோரில் சிறந்தவர், உலகத்தில் அதிரதர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர், சேனைகளை அணிவகுப்பதில் நிபுணர், எதிரிகளை எதிர்கொண்டு அழிப்பவர். யுத்தத்தில் சினங்கொண்ட சுரர்கள் (அதாவது தேவர்கள்), அசுரர்கள் இவர்களாலும் கூட வெல்லவொண்ணாதவர். பொறாமையற்றவர், அதனால் கர்வமில்லாதவர், உயிரினங்களுக்கு அவமானம் விளைவிக்காதவர், மேலும் குரோதத்தை வென்றவர், சுயநலமற்றவர், மேலும் காலத்திற்கு வசப்பட்டு நடக்காதவர். இவ்வாறான சிறந்த குணங்களோடு விளங்கும் அரசகுமாரர் மூவுலகங்களிலும் பிரஜைகளுக்கு பொறுமை குணங்களால் வஸுதாவிற்கும் (அதாவது பூமாதேவிக்கும்), புத்தியால் ப்ருகஸ்பதிக்கும் (அதாவது தேவகுருவிற்கும்), வீர்யத்தில் ஷசீபதிக்கும் (அதாவது தேவேந்திரனுக்கும்) சமானராய் விளங்கினார்.

 

சூர்யன் கிரணங்களால் ஒளிர்வது எவ்வண்ணமோ அவ்வண்ணமே (ஸ்ரீ)ராமர், தந்தை (மற்றும்) அனைத்து பிரஜைகளை கவர்கின்றவைகளும், பிரீதியை விளைவிக்கின்றவைகளுமான குணங்களால் அப்படியே ஒளிர்ந்தார்.  இப்படிப்பட்ட குணங்களால் நிறைந்தவராய், வென்றிட முடியாத பராக்கிரமசாலியாய், லோகபாலர்களுக்கு சமமாயிருக்கிற அவரை மேதினி (அதாவது பூமி) நாதனாகும்படி விருப்பமுற்றது. எதிரிகளை தகிப்பவரான தசரத ராஜா, மைந்தனை இந்த பல ஒப்பற்ற குணங்களால் தகுந்தவராய் இருப்பதைக்கண்டு இதில் சிந்தனையை நிர்மாணிக்கலானார். நெடுங்காலம் வாழ்ந்தவரும், வயது மூத்தவருமாகிய ராஜாவிற்கு இம்மாதிரியாய் யோசித்தார், ‘நான் உயிருடன் இருக்கும்பொழுதே (ஸ்ரீ)ராமன் ராஜாவாக இருக்கலாமே! இந்த பிரீதியை எப்படி அடைவது?’

 

இவருடைய இதயத்தில் இந்த சிறந்த பிரீதியானது (பின்கண்டவாறு) சுழன்றுகொண்டிருந்தது, ‘நான் எப்பொழுதான் பிரியமான மைந்தனை (பட்டா)பிஷேகனாய் காண்பேன்? மழைசொரியும் பர்ஜன்யன் போலவே அனைத்து உயிர்களிடத்திலும் சமமான தயைக்கொண்டவனாய், உலகத்திற்கே வளர்ச்சி விரும்புபவனாய், உலகில் என்னினும் விரும்பப்பட்டவனாய் (விளங்குகிறான்)? வீர்யத்தில் யமனுக்கும் ஷக்ரனுக்கும் (அதாவது தேவேந்திரனுக்கும்) நிகரானவனாய், மதியில் ப்ருஹஸ்பதிக்கு (அதாவது தேவகுருவிற்கு) நிகரானவனாய், துணிவில் மஹிதரருக்கு (அதாவது மகாவிஷ்ணுவிற்கு) நிகரானவனாய், என்னினும் சிறந்த குணங்களை (பெற்றவனாய் விளங்குகிறான்). நான் இந்த வயதில் மைந்தனை இந்த பூமி முழுவதையும் ஆள்வதை கண்டுவிட்டுதான் ஸ்வர்கம் போகவேண்டும்.

 

மகாராஜா இவ்வாறு அவரை (அதாவது ஸ்ரீராமரை) அந்த இந்த விதவிதமான சுப (குணங்களோடும்), உலகில் பிற மன்னர்களிடம் இல்லாதவைகளும், உலகத்தில் சிறந்தவைகளும், ஒழுக்கம் (அனைத்தும்), அளவிடமுடியாதவைகளும் ஒருங்கே சேர்ந்த அந்த குணங்களோடு நிறைந்தவராய் கண்டு, மந்திரிமார்களோடு கலந்து, நிச்சயித்து, யுவராஜாவாக்க எண்ணினார். மேதாவி (ஆன அவர்), விண்ணுலகிலும், அண்டத்திலும், பூமியிலும் (கண்ட) அபசகுனங்களால் விளையும் கோரமான பயத்தையும், தனது சரீரத்தில் (ஏற்பட்டுள்ள) மூப்பையும் (மந்திரிகளிடன்) தெரிவித்தார். அந்த தர்மாத்மாவான அரசர், உலகில் பிரஜைகளின் நன்மையின் பொருட்டும், தனது சோகத்தை தீர்க்கிறதாயிருக்கிறதும், பூரண சந்திரன் போன்ற முகமுடைய மகாத்மாவாகிய (ஸ்ரீ)ராமருக்கு மிகுந்த அன்பினால் தனது ஆர்வத்தால், பிரியத்தால் புரிய விரும்பியவராய், மேற்கொண்டு துரிதமாக (செயல்பட வேண்டுமென்று) இப்பொழுது அறிந்தார். மேதினியில் (அதாவது பூமியில்) அநேக நகரங்களில் வசித்திருக்கும், கிராமங்களில் வசித்திருக்கும் தலைமையானவர்களையும், மன்னர்களையும் அழைப்பித்தார். துரிதகதியால் கேகயராஜாவையும், ஜனக மன்னரையும் அழைத்துவரச் சொல்லவில்லை. அவ்விருவர்களுக்கும் (காரியம் முடிந்த) பின்னர் பிரியமான (செய்தியை) கேட்டிடட்டும் (என்று எண்ணினார்). ராஜா, பல ஆபரணங்களால் அவருக்கேற்றவண்ணமாய் அலங்கரிக்கப்பெற்றவராய் அரண்மனைக்கு (வந்தோரை) பூஜித்து அவர்களை பிரஜைகளை பிரஜாபதி (அதாவது பிரம்மதேவர்) எவ்வண்ணமோ அவ்வண்ணமே பார்த்துக்கொண்டார். அதன்மேல் அந்த எதிரிகளின் பலத்தை அடக்கவல்ல மன்னர் (அதாவது தசரதர்) அமர்ந்த உடனே பூவுலகில் புகழ்பெற்ற பிற ராஜாக்கள் (சபையினுள்) பிரவேசித்தார்கள். நியதிப்படி அரசர்கள் ராஜாவிற்கு எதிர்முகமாயிருக்கும் வண்ணமாயே அப்பொழுது ராஜாவாலே (அதாவது தசரதராலே) ஒதுக்கப்பட்ட பல ஆசனங்களில் உட்கார்ந்தார்கள். (நன்கு) மரியாதை செய்யப்பட்டு, ஆசனங்களில் வீற்றிருந்தவர்களும், பணிவானவர்களுமான மன்னர்களாலும், நகரவாசிகளும், கிராமவாசிகளுமான மனிதர்களாலும் சூழப்பட்டிருந்த அந்த வேந்தர் (அதாவது தசரதர்), சஹஸ்ரசக்ஷு பகவான் (அதாவது இந்திர பகவான்) அமரர்களால் (சூழப்பட்டிருக்க) எவ்வண்ணமோ அவ்வண்ணமே விளங்கினார்.


|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் முதலாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment