Monday, April 27, 2020

எழுபத்தியேழாவது ஸர்க்கம் – அயோத்யா பிரவேசம்

(அஜ்மீர் ஜைன கோயிலில் இருக்கும் அயோத்யா நகரத்தின் மாதிரி வடிவம்)

(பரசு)ராமர் சென்றபிறகு தாசரதியும் (அதாவது தசரத மைந்தரும்), பெரும் புகழ்படைத்தவருமான (ஸ்ரீ)ராமர் அமைதியானவராய் வில்லை ஒப்பற்ற வருண (பகவானின்) கையில் கொடுத்தார். அந்த பரமாத்மாவான, ரகுநந்தனரான (ஸ்ரீ)ராமர், தந்தையின் மனதின் நிலையை கண்டுகொண்டு, அப்பொழுது வசிஷ்டர் முதலான ரிஷிகளை அபிவாதனம் செய்து (அதாவது வணங்கி), துயரப்பட்டிருந்த தந்தையை பார்த்து, சமாதானம் (செய்யுமாறு) பேசினார், ‘ஜாமதக்ன்ய (அதாவது ஜமதக்னியின் மைந்தராகிய) (பரசு)ராமர் போய்விட்டார். நாதரான தம்மால் ரட்சிக்கப்பட்ட சதுரங்க சேனை (அதாவது ரதங்கள், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை) அயோத்யாவை நோக்கி நடக்கட்டும். மகாராஜா, சேனை நீர்பறவை  நீருக்காக எப்படியோ அப்படி உத்தரவிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. உம்முடைய சாசனத்தில் இருக்கும் சேனைக்கு கட்டளையிடுங்கள்.

தசரத ராஜா (ஸ்ரீ)ராமருடைய வார்த்தையை கேட்டு, குமாரரான ராகவரை கைகளால் கட்டியணைத்து, உச்சியில் முகர்ந்து, மன்னர், ‘(பரசு)ராமர் சென்றுவிட்டார்என்பதை கேட்டு, மகிழ்ந்தவராய், களிப்படைந்தவராய் அப்பொழுது தன்னையும், புத்திரர்களையும் மீண்டும் பிறந்தவர்களாகவே எண்ணினார். ராஜா அந்த சேனையை கிளம்பிட (உத்தரவு கொடுத்தார்). அப்பொழுதே பிரயாணமானார். அதன்மேல் பதாகைகளோடு கூடிய கொடிகளால் ரம்மியமாயிருக்கிறதும், மங்கல வாத்தியங்களின் ஓசைகளால் முழங்குகிறதும், நீர்தெளித்த ராஜபாதைகளை உடையதாய், (மனதிற்கு) ரம்மியமானதாய் இருக்கிறதும், பரப்பப்பட்ட பூக்குவியல்களை உடையதும், ராஜாவினுடைய பிரவேசத்தால் மகிழ்ந்த முகமுடையவர்களாய், மங்கல வார்த்தைகள் சொல்லுகின்ற பட்டணத்து ஜனங்களால் நிறைந்ததும், ஜனக்கூட்டங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான பட்டணத்துள் புகுந்தனர். பட்டணத்து ஜனங்களாலும், பட்டணத்தில் வசிக்கின்ற த்விஜர்களாலும், தூரமாக எதிர்கொண்டு அழைக்கப்பட்டவராயும், செல்வ புத்திரர்களால் பின்தொடரப்பட்டவராயும், பெரும் புகழ்படைத்தவரும், ஸ்ரீமானுமாகிய ராஜா, பிரியமாய் இமயமலை போல் காணப்படும் வீட்டினுள் (அதாவது மாளிகைக்குள்) பிரவேசித்தார். மன்னர் மாளிகையில் விரும்பியவைகளால் நன்கு பூஜிக்கப்பட்டவராய், சந்ததிகளுடன் இருப்பவராய் களித்தார்.

கௌஸல்யாவும், ஸுமித்ராவும், நல்லிடையுடையவளான கைகேயியும், பிற ராஜபெண்டிர்கள் எவர்களோ, அவர்களும் வதூவை (அதாவது மணப்பெண்களை) வரவேற்பதில் ஈடுபட்டவர்களாய், மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாய், குமாரர்களான (ஸ்ரீ)ராமரையும், லக்ஷ்மணரையும், பரதரையும், ஷத்ருக்னரையும் கௌரவித்து, அப்படியே மங்களாசாசனங்களால் அர்ச்சித்தார்கள். மங்கலமான காணிக்கைகளால் கௌரவித்தார்கள். ராஜபத்தினிகள் அதன்மேல் மகாபாக்கியவாதியான (தேவி) சீதாவையும், புகழ்பெற்றவளான ஊர்மிளாவையும், குஷத்வஜரின் மகள்களாகிய இருவரையும் அழைத்துச் சென்றார்கள். பட்டு உடுத்தியவர்களாய், மங்கலச் சின்னங்களாலும் ஒளிர்ந்தவர்களாகவே உடனே கோயில்களில் முறைப்படி பூஜித்தார்கள். அப்பொழுது ராஜகுமாரிகள் எல்லோரும் உத்தம த்விஜர்களை பசுக்களாலும், தனத்தாலும், தானியங்களாலும் திருப்திசெய்துவிட்டு பின்னர், எல்லோருமாய் கணவர்களோடு கூடியிருப்பவர்களாய், வணங்க வேண்டியவர்களை வணங்கி, மகிழ்ச்சி கொண்டவர்களாய், குபேரபவனம் போலிருக்கிற தத்தமது வீட்டை அடைந்து, தனிமையில் களித்தனர்.

புவியில் நரர்களுள் காளையர்களான, மகாத்மாக்களான குமாரர்கள், வீர்யத்தால் நிகரற்றவர்களாயும், மனைவிகளை பெற்றவர்களாயும், அஸ்திரங்களை அடைந்தவர்களாயும், தனத்தை பெற்றவர்களாயும், நற்ஜனங்களை உடையவர்களையும், நீதி அறிந்தவர்களாயும், குருமார்களை (நல்) குணங்களால் காலாகாலத்தில் மகிழ்விப்பவர்களாயும், தந்தைக்கு பணிவிடை செய்பவர்களாயும் வாழ்ந்து வந்தார்கள். பின்னர், சில காலத்திற்கு பிறகு ரகு (குலத்தவர்களில்) உத்தமராகிய தசரத ராஜா, தேகத்தோடு கூட பெறப்பட்ட பணிவை போல் இருக்கிறவரும், அபிவாதனம் (அதாவது நமஸ்காரம்) செய்ய வந்திருக்கிறவரும், கருமையானவரும், தாமரைக்கண் கொண்டவரும், செயல்களில் நிபுணத்துவம் பெற்றவரும், எதிரிகளின் சேனையை அழிக்கும் சூரரும், கைகேயீ புத்திரருமான பரதன் (என்ற) மைந்தனிடம் (இப்படி) கூறினார், ‘புத்திரா! வீரா! உன்னை அழைத்துக்கொண்டு போக வந்திருக்கிற உனது மாமனும், கேகயராஜாவின் புத்திரனுமாகிய இந்த யுதாஜித் (இங்கு) வாசம் செய்கிறான். மிதிலாவில் ரிஷிகளுக்கு மத்தியில் அப்பொழுது அவனால் நான் பிரார்திக்கப்பட்டேன். தர்மமறிந்தவனே! நீ இதில் இப்பொழுது அவனுடைய பிரீதியை செய்வதே தகும்.

கைகேயீ புதல்வராகிய பரதன், தசரதருடைய (வார்த்தையான) இதை கேட்டு, அப்பொழுது குருவையும், (ஸ்ரீ)ராமரையும் அபிவாதனம் (அதாவது நமஸ்காரம்) செய்து, லக்ஷ்மணரை தழுவிக்கொண்டு, ஷத்ருக்னரோடு கூடினவராய் போக தயாரானார். சூரராகிய நரர்களுள் சிறந்தவர் (அதாவது பரதன்), ஷத்ருக்னரோடு கூடினவராய், தந்தையிடமும், செயல்களில் நிபுணத்துவம் பெற்ற (ஸ்ரீ)ராமரிடமும், தாய்மார்களிடமும் விடைபெற்றுக்கொண்டு பிரயாணமானார். யுதாஜித் ஷத்ருக்னருடன் பரதரை அழைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டவராய் தன் பட்டணத்தினுள் பிரவேசித்தார். அவருடைய வீரராகிய தந்தை மிகவும் மகிழ்ந்தார். பரதன் சென்றபிறகு (ஸ்ரீ)ராமரும், மகாராதராகிய லக்ஷ்மணரும் தேவர்களுக்கு ஒப்பான தந்தை அப்பொழுது பூஜித்தார்கள்.

தர்மாத்மாவாகிய (ஸ்ரீ)ராமர், தந்தையின் ஆணையின் பேரில் நகர காரியங்களை எல்லாவிதத்திலும் பிரியமாகவும், இதமாகவும் நடத்தினார். மிகவும் கட்டுண்டவராய் காலாகாலத்தில் தாய்மார்களுக்கு (செய்யவேண்டிய) தாய்க்குரிய காரியங்களையும், குருமார்களுக்கு (செய்யவேண்டிய) குருகாரியங்களையும் புரிந்து கவனமாய் நடந்தார். இப்படிப்பட்ட (ஸ்ரீ)ராமருடைய ஒழுக்கமுள்ள நடத்தையால் தசரதர் பிரீதி அடைந்தார். பிராமணர்கள், நகரவாசிகள், ராஜ்யவாசிகள் எல்லோரும் அப்படியே (மகிழ்ந்தார்கள்). அந்த பிராணிகளுக்கு சுயம்பு (அதாவது பிரம்மதேவர்) எப்படியோ, அப்படியே பெரும்புகழ்பெற்ற, சத்திய பராக்கிரமமுள்ள (ஸ்ரீ)ராமர், உலகில் மிகச் சிறந்தவராய் விளங்கினார். (நல்)மனமுடைய (ஸ்ரீ)ராமர் (தேவி) சீதாவோடு கூட, அவளை நோக்கியவராய், அவளுடைய இதயத்தில் நித்தம் சமர்பிக்கப்பட்டவராய் நிறைய (கால நிலை) பருவங்களை அனுபவித்தார். (தேவி) சீதா (ஸ்ரீ)ராமருக்கு தந்தையால் அளிக்கப்பட்ட மனைவி என்கிறபடியால்  பிரியத்தாலும், குணத்தாலும், ரூபத்தின் தோற்றத்தாலும் அதிக பிரீதி வளர்ந்தது. பிரீதிக்கொண்டிருக்கையில் ஒருவரிடம் ஒருவருக்குள்ள இதயம் கூட (அதாவது எண்ண ஓட்டம் கூட) அறிந்திருந்தனர். அவளுடைய (அதாவது தேவி சீதாவுடைய) உள்ளத்திலும் கணவர் இருமடங்காக நின்றார். இதயம் இதயத்தோடு உள்ள உண்டானதையும் தெளிவாக தெரிந்துகொள்கிறது. அழகிய ஸ்ரீ (அதாவது மகாலட்சுமி) எப்படியோ அப்படியே உருவத்தில் தேவமங்கையரோடு சமமானவளும், மைதிலியான (அதாவது மிதிலை நகரத்தவளான), ஜனகரின் பெண்ணுமாகிய (தேவி) சீதா அவருக்கு (அதாவது ஸ்ரீராமருக்கு) இன்னும் அதிகமாய் விசேஷமாய் விளங்கினாள். ராஜரிஷியின் புதல்வராகிய அந்த (ஸ்ரீ)ராமர், வெகு அழகுள்ளவளும், வெகு அன்புள்ளவளுமாகிய அந்த உத்தம ராஜரின் மகளோடு சேர்ந்தவராய் அமர்களுக்கு ஈசனான எங்குமுள்ள விஷ்ணு (பகவான்) ஸ்ரீயோடு (அதாவது மகாலட்சுமியோடு) எப்படியோ அப்படியே அதிகமாய் ஒளிர்ந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்தியேழாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment