Thursday, April 9, 2020

அறுபதாவது ஸர்க்கம் – த்ரிஷங்கு ஸ்வர்கம் செல்வது



மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், மஹோதயனுடன் சேர்ந்த வாசிஷ்டர்களை (அதாவது வசிஷ்ட புத்திரர்களை) தவத்தின் பலத்தால் நசித்தவர்களாய் செய்துவிட்டு, ரிஷிகளின் மத்தியில் பேச ஆரம்பித்தார், ‘இதோ இருக்கும் த்ரிஷங்கு ஆனவன் இக்ஷ்வாகுகுல பிள்ளை எனவும், தர்மிஷ்டன் எனவும், வெகு கொடையாளி எனவும் பெரும் புகழ்பெற்றவன். தன்னுடைய இந்த சரீரத்துடனேயே தேவலோகம் செல்லவேண்டும் என்ற எண்ணங்கொண்டு என்னையே சரணமாய் அடைந்தான்.  தனது சரீரத்தோடு ஸ்வர்கலோகத்தை எப்படி இவன் அடைவானோ அப்படி என்னோடு கூடவே உங்களால் யாகம் ஆரம்பிக்கப்படட்டும்.

மகரிஷிகள் எல்லோரும் விஷ்வாமித்ரருடைய வார்த்தையை கேட்டு, அருகே உள்ளவர்களாயே ஒன்றுசேர்ந்து தர்ம அர்த்தசகிதமாகிய வார்த்தையை கூறினார்கள், ‘இந்த குஷிக வம்சத்தவரான முனி (அதாவது விஷ்வாமித்ரர்) மகா கோபக்காரர். எந்த வார்த்தையை சொன்னாரோ, அது உடனே செய்துமுடிக்கவேண்டியது. இதில் சந்தேகம் கூடாது. பகவான் அக்னிக்கு ஒப்பானவர் அன்றோ. கோபங்கொண்டவராய் சாபம் கொடுப்பார். ஆகையால் யாகம் செயல்படுத்தப்படட்டும். இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தவன் விஷ்வாமித்ரருடைய தேஜஸால் சரீரத்துடனேயே எப்படி தேவலோகத்தை அடைவானோ அப்படி யாகம் செயல்படுத்தப்படட்டும். எல்லோரும் நடத்த (ஆரம்பியுங்கள்).

இவ்விதமாக பேசிவிட்டு, மகரிஷிகள் உடனே அந்தந்த காரியங்களை ஒருமித்து நடத்தினார்கள். மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரரோ யாகத்தில் யாஜகராக இருந்தார். மந்திரங்களை உள்ளபடி அறிந்தவர்களான ரித்விஜர்களும் எல்லா (யாக)காரியங்களையும் அடிமுதல் வரிசைப்படி கல்ப (சூத்திர) முறைப்படியே, விதிப்படியே மந்திர உச்சரிப்புடன் நடத்தினார்கள். வெகு காலத்திற்கு பிறகு மகாதபஸ்வியான விஷ்வாமித்ரர், அதில் (ஹவிர்)பாகத்தை பெறுவதற்காக எல்லா தேவர்களையும் (அவரவர்க்குரிய மந்திரங்களை சொல்லி) ஆவாஹனம் செய்தார். அப்படியிருந்தும் (ஹவிர்)பாகத்தை (பெற்றுக்கொள்ள) தேவர்கள் எல்லோரும் அங்கு வராது இருந்துவிட்டார்கள்.

அதனால் மகாமுனி கோபாவேசங்கொண்டார். கோபங்கொண்டிருந்த விஷ்வாமித்ரர் ஸ்ருவம் (எனப்படும் ஓமம்செய்யும் யாக அகப்பையை) கையில் உயரத்தூக்கிக்கொண்டு, த்ரிஷங்குவிடம் இவ்விதம் கூறினார், ‘நரர்களுக்கு ஈசா, சுயமாக சம்பாதிக்கப்பட்ட என் தவத்தின் வீர்யத்தை பார். இந்த வீர்யத்தால் உன்னை சரீரத்துடனேயே ஸ்வர்கம் போகச்செய்கிறேன். நராதிபதி, உன் தேகத்துடன் கிடைப்பதற்கரிதான தேவலோகத்து செல். என்னால் சுயமாய் சம்பாதிக்கப்பட்ட தவத்தின் பலன் கொஞ்சமாவது இருந்தால் ராஜா, அதன் தேஜஸால் நீ சரீரத்துடனே தேவலோகத்திற்கு போ.

காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), அந்த முனிவர் சொல்லிமுடித்ததும் (அந்த) நராதிபதி உடனே முனிவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சரீரத்துடன் தேவலோகம் அடைந்தார். தேவலோகத்தை அடைத்துவிட்ட த்ரிஷங்குவை அனைத்து சுரகணங்களுடன் (அதாவது தேவகணங்களுடன்) கூட பாகஷாஸன் (அதாவது தேவேந்திரன்) பார்த்து இந்த வார்த்தையை சொன்னார், ‘த்ரிஷங்குவே, நீ திரும்பிச் செல். மூடனே, குருவின் சாபத்தால் கெட்டுப்போனவன் ஸ்வர்கத்தில் இடமுடையவனாக ஆகமாட்டான். தலைகீழாய் பூமியில் விழு.

மகேந்திரனால் இப்படி சொல்லப்பட்ட த்ரிஷங்கு தபோதனரான விஷ்வாமித்ரரிடம் காப்பாற்றிடுவீர்என்று கதறிக்கொண்டே பூமியை நோக்கி விழுந்துகொண்டிருந்தார். கதறுகிற அவருடைய அந்த சொல்லைக்கேட்டு, கௌஷிகர் (அதாவது விஷ்வாமித்ரர்) தீவிரமான கோபம் கொண்டார். உடனே நில், நில்என்று சொன்னார். ரிஷிகளின் மத்தியில் அந்த தேஜஸ்வி மற்றோர் பிரஜாபதி (அதாவது பிரம்மா) போல் தெற்கு மார்கத்தில் நிலைகொண்டவர்களாய் வேறு சப்தரிஷிகளை புதிதாய் உருவாக்கினார். கோபாவேசம் உடையவராய் ரிஷிகளின் நடுவே இருந்தபடியே (அந்த) மகாதபஸ்வி தெற்கு திசையை நாடி வேறொரு நட்சத்திரவரிசையை உருவாக்கினார். நட்சத்திரவரிசையை உண்டுசெய்துவிட்டு அதற்குமேல் கோபத்தால் கலங்கினவராய் மற்றோர் இந்திரனை உண்டாக்குகிறேன் இல்லையேல் உலகமானது இந்திரன் இல்லாததாய் இருந்துவரட்டும்என்றார். அவர் கோபத்தால் தேவர்களைக்கூட சிருஷ்டி செய்ய முனைந்தார்.

அதனால் சுரர்களில் (அதாவது தேவர்களில்) காளையர்கள், ரிஷிகளின் கூட்டங்களோடும், கின்னரர்களோடும், மகாயட்சர்களோடும், சாரணர்களோடும், சித்தர்களோடும் மிகவும் கவலையடைந்தவர்களாய் மகாத்மாவான விஸ்வமித்ரரிடம் தணிவுடன்கூடின வார்த்தையை சொன்னார்கள், ‘மகாபாக்கியசாலியே, தபோதனரே, குருசாபத்தால் சூழப்பட்டிருக்கும் இந்த ராஜா தன் சரீரத்துடனேயே தேவலோகம் அடைய உரியவனாகான்.

கௌஷிக (அதாவது விஷ்வாமித்ர) முனிபுங்கவர் அந்த தேவர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, தேவர்கள் எல்லோரையும் பார்த்து நல் மகத்தான வாக்கியத்தை கூறினார், ‘உங்களுக்கு மங்கலம். இந்த பூபதியான த்ரிஷங்குவுக்கு அவன் சரீரத்துடனேயே (ஸ்வர்கத்திற்கு) மேலேத்திட வாக்களித்துவிட்டு, பொய்யாக்கிட இடங்கொடுக்க நான் இசையமாட்டேன். சரீரத்துடன் இருக்கும் த்ரிஷங்குவின் ஸ்வர்கமானது நிரந்தமாக இருக்கட்டும். தவிர என்னால் உண்டாக்கப்பட்டவைகளான எல்லா நட்சத்திரங்களும் நிரந்தரமாகட்டும். எதுவரையில் உலகங்கள் இருக்கின்றனவோ அதுவரையிலும் என்னால் உண்டாக்கப்பட்ட இவைகள் எல்லாவிதத்திலும் ஸ்திரமாயிருக்கட்டும். சுரர்கள் (அதாவது தேவர்கள்) எல்லோரும் அதை அனுக்ரகிக்க தகுதியானவர்கள்.

இவ்விதமாக சொல்லப்பட்ட தேவர்கள் எல்லோரும் முனிபுங்கவரிடம் பதிலுரைத்தார்கள், ‘உமக்கு மங்கலம் உண்டாகட்டும். அப்படியே ஆகட்டும். இந்த அவைகள் எல்லாமும் ஆகாயத்தில் ஏராளமனவைகளாய் ஜோதிச்சக்ர பாதையில் நின்றும் வெளியே நிரந்தரமாய் இருக்கட்டும். முனிவர்களில் சிறந்தவரே, நட்சத்திரங்கள் அவைஅவைகளின் ஜோதிர்மார்கங்களில்  பிரகாசிக்கட்டும். த்ரிஷங்கு தலைகீழாகவே அமரன்போல் நிரந்தரமாய் இருக்கட்டும். ஒளிரும் வான் கூட்டங்கள் பிரம்மலோகமடைந்த ஒருவனை எவ்வண்ணமோ அவ்வண்ணமே இவைகளும் கிருதார்த்தனென (அதாவது எண்ணியசெயலை அடைந்தவனென) புகழ்பெற்றவனான ராஜோத்தமனையே அணுகியிருந்து வரட்டும்.

எல்லா தேவர்களாலும், ரிஷிகளாலும் இவ்விதமாய் கொண்டாடப்பட்டவரும், தர்மாத்மாவான, மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் தேவர்கள்! திருவுள்ளம் எப்படியோ அப்படியே ஆகட்டும்என்று சொன்னார். நரர்களுள் உத்தமா (அதாவது ஸ்ரீராமா), அதற்குமேல் மகாத்மாக்களான தேவர்களும், தபோதனர்களான ரிஷிகளும் எல்லோரும் யாகத்தின் முடிவில் வந்தவழியே போய்ச்சேர்ந்தார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment