(பிரம்மரிஷி ரிசீகரும் அவரின் பத்தினியும்)
“மகாத்மாவும், நரர்களுள் புலியுமான விஷ்வாமித்ரர்
அவர்களையும், ரிஷிகளையும்
தயாராகிவிட்டவர்களாய் பார்த்து,
வனவாசிகளான
அவர்கள் எல்லோரையும் பார்த்து பின்கண்டவாறு சொன்னார், ‘தெற்கு திசையில் வாசம் செய்து
வந்தேன். இந்த பெரிய இடையூறு நேர்ந்தது. வேறு இடத்திற்கு போவோம். அவ்விடத்தில்
தவத்தை அனுஷ்டிப்போம். மகாத்மாக்களே! மேற்கிலுள்ள விஷாலாவில் (உள்ள) புஷ்கரத்தில் (அதாவது
புஷ்கரதீர்த்தக்கரையில்) சுகமாய் தவத்தை அனுஷ்டிப்போம். ஏனென்றால் அந்த
தபோவனமானது உத்தமமானது.’
“மகாதேஜஸ்வியான (அந்த) மகாமுனி
இவ்விதம் சொல்லிவிட்டு, கிழங்குகளையும், பழங்களையும் உணவாக உடையவராய், புஷ்கரத்தில் தவத்தை பிறரால் இடையூறு
உண்டாகாதவண்ணமாய், தீவிரமாய் புரிந்தார்.
இவ்வாறிருக்க இந்த காலத்திலேயே மகானென பெயர்பெற்ற அயோத்யாதிபதி ஆகிய அம்பரீஷன்
என்பவர் யாகம் செய்ய ஆரம்பித்தார். அவர் யாகம் செய்துகொண்டிருக்கையில் (வேள்வி) விலங்கை
இந்திரனே கொண்டு சென்றார். (யாக)விலங்கானது காணாமல் போனவளவில் அந்தணர்
ராஜாவைப் பார்த்து இவ்விதம் மொழிந்தார், ‘ராஜா, உம்முடைய (யாக)விலங்கு இப்பொழுது
அபகரிக்கப்பட்டிருக்கிறது. துர்நடத்தையால் (அதாவது அலட்சியத்தால்) காணாமல்
போயிருக்கிறது. நரர்களுக்கு ஈசா,
பாதுகாக்கத்தவறிய
ராஜாவை தோஷமானது நாசம் செய்யும். புருஷர்களுள் காளையே, எதற்குள் இதற்கு பிராயச்சித்த கர்மம்
செய்யலாமோ, (அதற்குள்) சீக்கிரமாகவே யாகத்திற்கு (யாக)விலங்காக
(ஓர்) நரனையே கொண்டுவர வேண்டும்.’
“புருஷர்களுள் காளையே (அதாவது ஸ்ரீராமா)!
மகாபுத்திமானான அந்த ராஜா உபாத்யாயரின் வார்த்தையை செவியுற்று, ஆயிரக்கணக்கான பசுமாடுகளுக்கு ஈடாய் (யாக)விலங்காகக் (கூடிய
ஓர் மனிதனை) தேடினார். அரசன் அந்த அந்த தேசங்களிலும், நாட்டுப்புறங்களிலும், நகரங்களிலும், காடுகளிலும், புண்ணிய ஆசிரமங்களிலும்
தேடித்திரிந்தார். அப்பா ரகுநந்தனா (அதாவது ஸ்ரீராமா)! அவர் ப்ருகுதுந்தம் (என்ற
மலைப்பிரதேசத்தில்) புத்திரர்களோடும், மனைவியுடனும் வீற்றிருந்த (முனிவர்) ரிசீகரை கண்டார்.
அளவில்லா ஒளியுடையவராய் மகாதேஜஸ்வியான (அந்த) ராஜரிஷி, தவத்தால் ஜோதிமயமாய் விளங்கும் அந்த
பிரம்மரிஷியான ரிசீகரை சிரம்தாழ்த்தி வணங்கி, அனைத்து விஷயங்களிலும் நலம் விசாரித்து, மேலும் உள்ளம்குளிரச்செய்து அவரிடம்
இந்த வார்த்தை சொன்னார், ‘மகாபாக்கியசாலியே, பார்கவரே (அதாவது ப்ருகு முனிவரின் வம்சத்தவரே), நூறாயிரம் (அதாவது லட்சம்) பசுமாடுகளை (வாங்கிக்கொண்டு
ஓர்) புதல்வனை (யாக)விலங்காய் காரியத்திற்காக விற்றுவிடுவீரானால் நான்
எண்ணியகாரியம் நிறைந்தவனாய் ஆவேன். எல்லா தேசங்களும் சுற்றித்திரியப்பட்டன.
யாகத்திற்கு வேண்டியதான விலங்கை நான் அடையவில்லை. ஆதலால் ஓர் பிள்ளையை எனக்கு
விலைக்கு கொடுக்க தாமே தகுதியானவர்.’
“இவ்விதம்
சொல்லப்பட்டவராகிய மகாதேஜஸ்வியான (ரிஷி) ரிசீகர் இவ்விதமாய் பதில் சொன்னார், ‘நரர்களில் சிறந்தவனே, நான் எவ்விதமானாலும் மூத்தவனை
விற்கமாட்டேன்.’
“மகாத்மானர்களான
அவர்களுடைய தாய், ரிசீகருடைய வார்த்தையை
கேட்டு, (அந்த) தபஸ்வினி நரர்களில் புலியான அம்பரீஷனிடம் கூறினாள், ‘அரசே, பகவானான பார்கவர் (அதாவது ரிசீகர்) மூத்த பிள்ளையை
விற்கப்படாதவனாக சொல்லிவிட்டார். அப்படியே எனக்கு கடைசிப்பிள்ளையான ஷுகனை
அன்பிற்குரியவனாக அறிவாயாக. ஆகையால் வேந்தே, கடைசி பிள்ளையை உனக்கு நான் கொடுக்கமாட்டேன். நரர்களுள்
சிறந்தவனே! பொதுவாக தந்தைகளுக்கு மூத்த குமாரர்கள் அன்பிற்குரியவர்கள். அப்படியே
தாய்மார்களுக்கு கடைசி குமாரர்கள். ஆகையால் எப்படித்தான் (கடைசி) புதல்வனை நான்
விடுவேன்?’
“(ஸ்ரீ)ராமா, அந்த முனிவரும் இவ்வாறு சொல்லிவிட, முனிபத்தினியும் அவ்விதமாய் (சொல்லிவிட)
நடுப்பிள்ளையான ஷுனஷ்ஷேபன் தானே (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘ராஜா, தந்தை மூத்தவனை விற்கப்படமுடியாதவனென்று சொல்லிவிட்டார்.
தாய் கடைசிபிள்ளையை அவ்விதமே என்றார். விற்கப்படத்தகுந்தவனான மத்யமனான புத்திரன்
என்னை வழிநடத்திச்செல்ல வேண்டுகிறேன்.’
“ரகுநந்தனா (அதாவது ஸ்ரீராமா), நரர்களுக்கு ஈசன் (அதாவது அம்பரீஷன்)
நூறாயிரம் பசுமாடுகளைக் கொடுத்து ஷுனஷ்ஷேபனை வாங்கிக்கொண்டு மிகவும்
களிப்புற்றவனாய் பிரயாணமானான். மகாபலவானும், மகாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான அம்பரீஷன் ஷுனஷ்ஷேபனை உடனே ரதத்தில் ஏற்றி
வைத்துக்கொண்டு விரைவாய் சென்றார்.”
|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின்
பால காண்டத்தின் அறுபத்தோராவது ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment