Tuesday, April 7, 2020

ஐம்பத்தெட்டாவது ஸர்க்கம் – த்ரிஷங்குவின் சாபம்

(த்ரிஷங்குவின் பேச்சை கவனிக்கும் விஷ்வாமித்ரர்)

(ஸ்ரீ)ராமா, த்ரிஷங்குவினுடைய வார்த்தையை கேட்டு, அதனால் கோபங்கொண்ட ரிஷி புத்திரர்கள் நூறுபேறும் ராஜாவிடம் இவ்வாறு கூறினர், ‘துர்புத்தியுடையோனே, சத்தியவாதியான குருவால் தடுக்கப்பட்டவனான நீயே எப்படி அவரை அலட்சியம் செய்து, வேறொரு கிளையை (அதாவது வேறொரு நபரை) அணுகி வேண்டுகிறவனானாய்? இக்ஷ்வாகு வம்சத்தார் எல்லோருக்கும் புரோகிதர் ஒருவரே பரமகதி அல்லவா? சத்தியவாதியினுடைய வார்த்தையை மீறிட முடியாது. ரிஷி வசிஷ்ட பகவான் முடியாது என்றே சொல்லிவிட்டார். அப்படிப்பட்ட யாகத்தை உனக்காக நாங்கள் எவ்விதமாகத்தான் செய்துமுடிக்க சக்தர்களாவோம்? நரர்களில் சிறந்தவனே (அதாவது த்ரிஷங்கு), வேந்தே, நீ சிறுவனாய் விளங்குகின்றாய். திரும்பி உன் பட்டினத்திற்கு சென்றிடுவாய். பகவான் (அதாவது ரிஷி வசிஷ்டர்) மூன்று உலகங்களுக்கும் கூட யாகம் செய்விப்பதில் சமர்த்தர். அப்படிப்பட்டவருக்கு அவமானம் செய்ய நாங்கள் எப்படி திறனுடையவர்களாவோம்?’

அந்த ராஜா அவர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, கோபத்தால் கலங்கின கண்களுடையவராகி மீண்டும் அவர்களிடம் இந்த சொல்லை சொன்னார், ‘வசிஷ்டராலேயும் அவ்விதமாகவே குருபுத்திரர்களாலேயும் தடுக்கப்பட்டுவிட்டேன். தபோதனர்களே, உங்களுக்கு ஸ்வஸ்தி (மங்கலம்) உண்டாகட்டும். மற்றோர் கதியை (தேடிச்)செல்கிறேன்.

ரிஷிபுத்திரர்கள் கோரத்துடன் (அதாவது மூர்க்கத்துடன்) இணைக்கப்பட்ட அந்த வார்த்தையை கேட்டவுடனேயே கடும் கோபமடைந்தவர்களாய் சண்டாத்தன்மையை அடைவாயாக(என்று) சபித்தார்கள். அந்த மகாத்மாக்கள் இவ்விதம் சொல்லிவிட்டு தங்களது ஆசிரமத்திற்குள் புகுந்துவிட்டார்கள். அப்பொழுது இரவு கடந்து விடிந்தவுடன் ராஜா சண்டாளத்தன்மையை அடைந்து கடுமையாயிருக்கும் நீல (உடல்) உடையவராய், நீல ஆடை தரித்தவராய், மொட்டைத்தலை கொண்டவராய், சுடுகாட்டுப்பூமாலைகளையும், சாம்பலையும் அணிந்தவராய், இரும்பு நகைகளை பூண்டவராகவும் விளங்கினார்.

(ஸ்ரீ)ராமா, இவருடன் கூட வந்தவர்களான மந்திரிகளும், பணிவிடையாளர்களாய் கூட வந்திருந்த பட்டணத்துஜனங்கள் எவர்களோ அவர்கள் எல்லோரும் சண்டாள உருவத்தை பார்த்து, அவரை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), பரமாத்மாவான ராஜா தனியொருவராய் பகலும், இரவும் எரியும் மனதுடன் தபோதனரான விஷ்வாமித்ரரிடம் சென்றார். (ஸ்ரீ)ராமா, விஷ்வாமித்ர முனி அந்த ராஜாவை பலனற்றவராய், சண்டாள உருவங்கொண்டவராய் கண்ட உடனேயே மனமுருகினார். பரம தார்மிகரும், மகாதேஜஸ்வியுமாகிய அவர், பார்க்க கோரமாயிருக்கும் ராஜாவிடம் மனமுருக்கத்தால் இவ்விதமான வாக்கியத்தை கூறினார், ‘உனக்கு நலம் உண்டாகட்டும். ராஜபுத்திரா, வீரனென பெரும்புகழுடைய அயோத்யாவின் அதிபதியே, சாபத்தால் நீ சண்டாளத்தன்மையை அடைந்திருக்கின்றாய். உனக்கு ஆகவேண்டிய காரியது யாது?’

வாக்கியங்களை அறிந்தவரும், சண்டாளத்துவத்தை அடைந்தவருமான ராஜா, அந்த வாக்கியத்தை கேட்டு, உடனே வாக்கியத்தின் நுட்பங்களை அறிவதில் நிபுணராகிய அவரிடம் கைகளை கூப்பிக்கொண்டு (பின்வரும்) வாக்கியத்தை மொழிந்தார், ‘குருவாலும் அப்படியே குருபுத்திரர்களாலும் (நான்) தடுக்கப்பட்டேன். அந்த விருப்பத்தை பெறாமல் என்னால் துரதிர்ஷ்டம் மட்டும் அனுபவிக்கப்படுகிறது. இனிமையாய் தரிசனமளிக்கிறவரே, என் சரீரத்துடனேயே (நான்) ஸ்வர்கத்தை அடையவேண்டும் என்று என்னால் நூறு யாகங்கள் செய்யப்பட்டன. அந்த பலன் அடையப்படவில்லை. இனிமையானவரே, தம்மிடம் என் க்ஷத்ரிய தர்மத்தின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். பொய் இதுவரையில் சொல்லியதில்லை. ஆபத்தை அடைகையிலும் ஒருக்காலும் கூட சொல்லமாட்டேன். பலவிதமான யாகங்கள் யஜிக்கப்பட்டன. பிரஜைகள் தர்மத்தின்படி பரிபாலிக்கப்பட்டார்கள். மகாத்மாக்களான குருமார்களும் நற்குணத்தாலும், நன் நடத்தையாலும் திருப்தியடைவிக்கப்பட்டார்கள். முனிபுங்கவரே (அதாவது விஷ்வாமித்ரரே), (ஓர்) யாகத்தை செய்துமுடிக்க தர்மவழியில் சிரத்தையுள்ளவனாய் இச்சிக்கும் என் விஷயத்தில் குருமார்கள் மகிழ்வினை அடையவில்லை. எல்லாமும் (அவரவர்கள் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவண்ணமாய் தெய்வீகமாய் நிர்ணயிக்கப்பட்ட) விதி என்பதால் நடைபெற்றுவருகிறது என்கிறபடியால் விதியே பரமகதி. விதி ஒன்றே எதற்கும் மேம்பட்டது. மானுட முயற்சி மட்டும் பயனற்றது (என்று) நினைக்கிறன். கர்மங்களால் ஏற்பட்ட விதிப்பயனையுடைய கடும் கஷ்டத்தசையிலிருக்கிறவனும், வேண்டி பிரார்திக்கின்றவனுமாகிய அந்த எனக்கு அனுக்கிரகத்தை செய்ய திருவுள்ளம் உவப்பீராக. தமக்கு மங்கலம். மற்றொருவரை சரணம் அடையவில்லை. வேறொரு கதியை அடையப்போவதில்லை. மானுட முயற்சி கொண்டு எனது விதியை நிவர்த்தி செய்வதே தமக்கு பொருத்தமாகும்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்தெட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment