“ராகவா, அந்த மகாதபஸ்வியான விஷ்வாமித்ரர், மகாத்மாவோடு (அதாவது வசிஷ்டரோடு)
பகைகொண்டவராய், அதனால் தனக்கு நேர்ந்த
தோல்வியையும் நினைத்து, இதயம் தகித்தவராய், அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டு, தென் திசைக்கு பட்டத்தரசியோடு கூட
போய்ச்சேர்ந்து, மிகவும் கோரமாய்
தவமியற்றினார். பழங்களையும், கிழங்குகளையும் உட்கொண்டவராய், (மனதை) கட்டுப்படுத்தியவராய் மகத்தான தவத்தை செய்தார். அதனிடையில் இவருக்கு
ஹவிஷ்யந்தன், மதுஷ்யந்தன், த்ருடநேத்ரன், மஹாரதன் என்ற சத்தியத்திலும், தர்மத்திலும் நிலைகொண்ட புத்திரர்கள்
உண்டானார்கள். ஆயிரம் வருடம் முடிந்த உடனேயே உலக பிதாமகரான பிரம்மா, தபோதனரான விஷ்வாமித்ரரிடம் மதுரமான
வாக்கியத்தை சொன்னார், ‘குஷிகரின் புதல்வா, உன் தவத்தால் ராஜரிஷிகளின் உலகங்கள்
வெல்லப்பட்டன. இந்த தவத்தால் உன்னை ராஜரிஷி என்றே அறிகிறோம்.’
“மகாதேஜஸ்வியான பரமேஷ்வரர்
(அதாவது
பிரம்மா) இவ்விதம் சொல்லிவிட்டு, தேவர்களோடுகூட தேவர்களின் த்ரிவிஷ்டத்தின் (அதாவது ஸ்வர்கலோகத்தின்)
வழியாய் பிரம்மலோகத்திற்கு சென்றார். முகம் கவிழ்ந்தவராய் விஷ்வாமித்ரரும் அதை
கேட்டு, பெரும் வெட்கத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்பட்டவராய்
கொஞ்சம் கோபங்கொண்டவராய் இவ்விதம் சொன்னார், ‘பெரும் மகத்தான தவம் செய்யப்பட்டது. ரிஷிகணங்கள் உள்ளிட்ட
தேவர்கள் எல்லோரும் என்னை ராஜரிஷியாய் தான் ஏற்றுக்கொண்டார்கள். தவத்தின் பலனானது
கிடைக்கவில்லை என்று கண்டுகொண்டேன்.’ காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), மகத்தான ரோஷத்துடன் இருந்த மகாதபஸ்வி இவ்விதம் மனதில்
நிச்சயித்துக்கொண்டு, (அந்த) தர்மாத்மா பிடிவாதம் கொண்ட ஆத்மா போன்றவராய், மூவுலகையும் நடுங்கச் செய்பவராகி
மீண்டும் தவத்தை புரியலானார்.
“இது இப்படியிருக்க இதே
காலத்தில் இக்ஷ்வாகு குல நந்தனராகவும், சத்யவாதியாகவும், இந்திரியங்களை வென்றவராகவும், பிரசித்தி பெற்றவராய் த்ரிஷங்கு
இருந்தார். ராகவா, அவருக்கு ‘தேவர்களுடைய பரம கதியை (அதாவது ஸ்வர்கலோகத்தை)
இந்த சரீரத்துடனேயே (அதாவது மானுட உடலுடனேயே) நான் அடையவேண்டும். யாகமொன்றை
செய்யக்கடவேன்’ என்ற எண்ணம் உண்டாயிற்று.
அவர் வசிஷ்டரை அழைப்பித்து எண்ணத்தை தெரிவித்தார்; மகாத்மாவான வசிஷ்டராலேயும் ‘முடியாது’
என்று
சொல்லப்பட்டார்.
“நெடுங்காலம் தவம்
செய்துகொண்டிருக்கும் வாசிஷ்டர்கள் (அதாவது வசிஷ்ட புதல்வர்கள்) தென் திசையில் தவம்
புரிந்துகொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் கூடாதென்று தடுக்கப்பட்டவராகிய அந்த மன்னர், அப்படியிருந்தாலும் அந்த காரியத்தை
சித்திக்க வைப்பதில் முயற்சியுடையவராய் அவருடைய (அதாவது வசிஷ்டருடைய) புத்திரர்கள்
எங்கிருந்தனரோ அங்கு சென்றுசேர்ந்தார். மிகப்பெரும் தேஜஸ்வியான த்ரிஷங்கு தவம்
புரிந்துகொண்டிருப்பவர்களும்,
வாசிஷ்டர்களும், புகழ்பெற்றவர்களும், மகத்தாய் ஒளிர்பவர்களான (அந்த) நூறுபேர்களை (அதாவது
நூறு வசிஷ்ட புத்திரர்களை) கண்டார். மிகப்பெரும் தேஜஸுடைய அவர் மகாத்மாக்களான
குரு புதல்வர்கள் எல்லோரையும் அணுகி (வசிஷ்டரே இக்ஷ்வாகு வம்சத்தவர்களின் குல
குரு), வரிசைப்படி அபிவாதனம்
செய்து (அதாவது
வணங்கி), கரம் கூப்பியவராகி
வெட்கத்தால் முகம் கவிழ்ந்தவராய் எல்லோரிடமும் (இவ்வாறு) கூறினார், ‘நான் மகாத்மாவான வசிஷ்டரால்
தடுக்கப்பட்டேன். (நான்) சரணாகதன் (அதாவது மனுதாரர்). சரணமடைந்தோரை பாதுகாப்பவர்களான
உங்களை சரணம் அடைகிறேன். தங்களுக்கு மங்கலம் உண்டாகுக. நான் குருபுத்திரர்கள்
எல்லோரையும் வணங்கி வேண்டுகிறேன். (ஓர்) மகா யாகத்தை செய்திட விருப்பம்
கொண்டவனாய் இருக்கிறேன். அதை அனுக்ரகிக்க (தாங்களே) தகுதியானவர்கள்.
தவத்தில் நிலைகொண்ட பிராமணர்களாகிய உங்களை சிரம் தாழ்த்தி பணிந்து யாசிக்கிறேன்.
அப்படியாகிய தாங்கள் நான் இந்த சரீரத்துடனேயே தேவலோகத்தை எவ்விதம் அடைவேனோ
அவ்விதமாகிய (எண்ணத்தை) சித்திபெறும் விஷயத்தில் சிரத்தையுடையவர்களாய்
எனக்கு யாகம் செய்விக்க திருவுள்ளம் கொள்வீர்களாக. தபோதனர்களே, வசிஷ்டரால் அனுமதிக்கப்படாதவனான நான்
அனைவருமான குருபுத்திரர்கள் அன்றி வேறு எவ்விதமான கதியையும் அறிகிலேன்.
வித்துவான்களான புரோகிதர்கள் எக்காலத்திலும் அரசர்களுக்கு வேண்டியவைகளைச்
செய்விக்கின்றார்கள் என்கிறபடியால் இக்ஷ்வாகு குலத்தினர் எல்லோருக்கும் புரோகிதரே
பரமகதி. அவருக்கடுத்தபடி தாங்கள் எல்லோரும் எனக்கு தெய்வம்.’”
|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்தேழாவது ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment