Sunday, April 5, 2020

ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கம் – விஷ்வாமித்ரர் தவம் புரிவது


மகாபலவானாகும் விஷ்வாமித்ரர் இவ்விதமாக வசிஷ்டரால் சொல்லப்பட்டவராய் உடனே ஆக்னேய அஸ்திரத்தை கையில் உயரத்தூக்கிக்கொண்டு நில் நில்என்று கூறினார். வசிஷ்ட பகவான் மற்றோர் காலதண்டம் போன்றிருக்கும் பிரம்மதண்டத்தை கோபத்தால் உயரத்தூக்கிக்கொண்டு இவ்விதமான வார்த்தையை கூறினார், ‘க்ஷத்ரியனே, இதோ நின்றுகொண்டுதான் இருக்கிறேன். பலம் எதுவோ எதை காட்டு. காதியின் புதல்வா, உன்னுடையதும், உன் அஸ்திரத்தினுடையதுமான கர்வத்தை இப்பொழுதே நாசம் செய்கிறேன். க்ஷத்ரியர்களின் இழுக்கே, உன்னுடைய க்ஷத்ரியபலம் எங்கே? மகத்தான பிரம்மபலம் எங்கே? என்னுடைய மகத்தான பிரம்மபலத்தை பார்.

அந்த காதியின் புத்திரர் அந்த கோரமான ஏவப்பட்ட ஆக்னேய அஸ்திரமானது, நீரினால் அக்னியின் வேகம் எவ்வண்ணமோ, அவ்வண்ணமே பிரம்மதண்டத்தால் அடங்கிவிட்டது. காதியின் புதல்வர் கோபங்கொண்டவராய் வாருணனும் (அதாவது வருண அஸ்திரத்தையும்), ரௌத்திரமும் (அதாவது ரௌத்திர அஸ்திரத்தையும்), ஐந்திரமும் (அதாவது இந்திரசம்பந்தமான ஐந்திரமென்கிற அஸ்திரத்தையும்), பாஷுபதத்தையும் (அதாவது பாஷுபத அஸ்திரத்தையும்), ஐஷீகத்தையும் (அதாவது ஐஷீகத்தையும்) பிரயோகித்தார். மானவ (அஸ்திரத்தையும்), மோஹன (அஸ்திரத்தையும்), காந்தர்வ (அஸ்திரத்தையும்), (தூங்கச்செய்யும்) ஸ்வாபன (அஸ்திரத்தையும்), (கொட்டாவிவிடச் செய்யும்) ஜ்ரும்பணா (அஸ்திரத்தையும்), (மயங்கச்செய்யும்) மாதன (அஸ்திரத்தையும்), (தகிக்கச் செய்யும்) சந்தாபன (அஸ்திரத்தையும்), (அழச்செய்யும்) விலாபன (அஸ்திரத்தையும்), (உலர்த்திவிடும்) சோஷண (அஸ்திரத்தையும்), (கொடுமை செய்யும்) தாருண (அஸ்திரத்தையும்), வெல்வதற்கு அரிதான வஜ்ராஸ்திரத்தையும், பிரம்மபாஷாஸ்திரத்தையும், காலபாஷாஸ்திரத்தையும், வாருணபாஷாஸ்திரத்தையும், எண்ணியபடியே செய்துமுடிக்கும் பினாகாஸ்திரத்தையும், உலர்ந்தும்-ஈரமுமான இரண்டுவிதமான இடிகளையும், தண்டாஸ்திரத்தையும், பைஷாசாஸ்திரத்தையும், கிரௌஞ்ச அஸ்திரத்தையும், தர்மசக்கிரத்தையும், காலச்சக்கிரத்தையும், விஷ்ணுசக்கிரத்தையும், (வாயு சம்பந்தமான) வாயவ்யாஸ்திரத்தையும், மதனாஸ்திரத்தையும், ஹயஷிரம் எனும் அஸ்திரத்தையும், அவ்வண்ணமே இரண்டு வித சக்திகளை கங்காளாஸ்திரத்தையும், முசலாஸ்திரத்தையும், வித்யாதர சம்பந்தமான மஹாஸ்திரத்தையும், கொடுமை செய்யும் காலாஸ்திரத்தையும், கோரமான த்ரிஷூல அஸ்திரத்தையும், காபாலாஸ்திரத்தையும், கங்கணாஸ்திரத்தையும் பிரயோகித்தார்.

இவ்விதமான அஸ்திரங்களை எல்லாம் எய்தார். ரகுநந்தனா (அதாவது ஸ்ரீராமா), ஜபம் செய்பவர்களில் சிறந்தவரான வசிஷ்டரிடம் அது அற்புதமாய் முடிந்தது. பிரம்மாவின் புதல்வர் அவை எல்லாவற்றையும் தண்டத்தின் மூலம் விழுங்கினார். காதியின் நந்தனர் (அதாவது விஷ்வாமித்ரர்) அவைகள் சாந்தம் பெற்றவளவில் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தார். அக்னியை முன்னிட்ட தேவர்கள், மகா உரகர்களோடு கூடின, கந்தர்வர்களும், தேவரிஷிகளும் அந்த அஸ்திரத்தை ஏவப்பட்டதாய் கவனித்து உள்ளம் கலங்கினார்கள். மூன்றுலகமும் பிரம்மாஸ்திரமானது பிரோயகிக்கப்பட்டதுமே நடுக்கமுற்றதாய் விளங்கிற்று. ராகவா, அந்த அனைத்து விதத்திலும் மகா கோரமான பிரம்ம அஸ்திரத்தையும் வசிஷ்டர் பிராமண தேஜஸ்ஸாலே பிரம்மதண்டம் கொண்டே விழுங்கினார். பிரம்மாஸ்திரத்தை உட்கொள்ளும் மகாத்மாவான வசிஷ்டருடைய உருவமானது, மிகவும் பயங்கரமாய், ரௌத்திரமாய் மூவுலகமும் பிரமிக்கச்செய்யும் வண்ணமாய் விளங்கிற்று. மகாத்மாவான வசிஷ்டருக்கு எல்லா மயிர்கால்களிலிருந்து நெருப்புப்பொறிகள், புகை சூழ்ந்த சுடர்களோடு கூடிய அக்னியிலிருந்து எவ்வண்ணமோ அவ்வண்ணமே வெளிவந்தன.

வசிஷ்டருடைய கையில் தூக்கிபிடிக்கப்பட்டிருக்கும் மற்றோர் யமதண்டம் போன்றிருந்த பிரம்மதண்டமானது புகையில்லாத காலாக்னி போல் ஒளிமயமாய் ஜொலித்தது. அச்சமயத்தில், முனிகணங்கள் ஜபம் செய்பவர்கள் உத்தமரான வசிஷ்டரை புகழ்ந்து கொண்டாடினார்கள், ‘பிராமணரே, தம்முடைய பலம் அமோகமானது. (பிரம்ம)தேஜஸில் (சுடர்மயமாய் விளங்கும்) தேஜஸை (தமக்குள்ளேயே) வைத்துக்கொள்வீராக. ஜபம் செய்பவர்களில் சிறந்தவராகிய பிராமணரே, மகாபலவானான விஷ்வாமித்ரர் தம்மால் தடுத்திடப்பட்டார். சாந்தமான மனமுடையவராகிறீர். உலகங்கள் வலியிருந்து விடுபட்டதாய் ஆகட்டும்.

மகாதேஜஸ்வியும், மகாதபஸ்வியான அவர் இவ்விதம் வேண்டப்பட்டவராய் அமைதியை செய்தருளினார். விஷ்வாமித்ரரும் கர்வபங்கமடைந்தவராய், பெருமூச்செறிந்து இவ்வாறு (தனக்குத்தானே) சொல்லிக்கொண்டார், ‘ஒரே ஒரு பிரம்மதண்டத்தாலே எனது எல்லா அஸ்திரங்களும் பாழாய்ப்போயின. க்ஷத்ரியபலம் அற்ப பலமானது. பிரம்மதேஜஸ் கொண்ட பலமே பலம். இதை கண்டுவிட்டபடியால் நான் இந்திரியங்களை அடக்கினவனாயும், மனசாந்தியுடையவனாயும் பிரம்மதத்துவத்தை அடையச்செய்கிறது எதுவோ அந்த மகத்தான தவத்தை இனி புரிவேனாக.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment