Saturday, April 4, 2020

ஐம்பத்தைந்தாவது ஸர்க்கம் – விஷ்வாமித்ரர் தனுர்வேதத்தை பெற்றது


அதன்பிறகு வசிஷ்டர் அவர்களை விஷ்வாமித்ரரது அஸ்திரங்களால் மூர்ச்சை அடைந்தவர்களாய், பீடிக்கப்பட்டிருப்பவர்களாய் கண்டு, ‘காமதேனுவே, யோகத்தால் உண்டுசெய்என்று ஏவினார். அதன் ஹுங்காரத்தாலே ரவியை (அதாவது சூரியனை) போன்றவர்களான காம்போஜர்கள் பிறந்தார்கள். தவிர மடியிலிருந்து ஆயுதங்களை ஏந்தியவர்களான பப்லவர்களும், யோனி தேசத்திலிருந்து யவனர்களும், சாணமிடும் இடத்திலிருந்து ஷகர்களும், மயிர்கால்களிலிருந்து ம்லேச்சர்களும், கிராதகர்களுடன் கூடின ஹாரீதர்களும் உண்டானார்கள். ரகுநந்தனா, விஷ்வாமித்ரரின் சேனையானது காலாட்களுடனும், யானைகளுடனும், குதிரைகளுடனும், ரதங்களுடனும் அந்த கணத்திலேயே அததற்கேற்ற அவர்களாலே நிர்மூலமாக்கப்பட்டது.

நூறு (பேர் அடங்கிய) விஷ்வாமித்ரரின் புதல்வர்கள் மகாத்மாவான வசிஷ்டரால் சேனை அழிக்கப்பட்டதை பார்த்து, அதனால் கடும்கோபங்கொண்டவர்களாகி பலவித ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஜபிப்பவர்களில் உயர்ந்த வசிஷ்டரை வேகமாய் முன்னேறினர். மகரிஷி அவர்கள் அனைவரையும் ஹுங்காரத்தின் (மூலம்) தகித்துவிட்டார். அந்த விஷ்வாமித்ரரின் புதல்வர்கள், குதிரைகள், ரதங்கள், காலாட்படைகளுடன் அப்பொழுது ஒரு முகூர்த்தத்தில் (பொதுவாக ஒரு முகூர்த்தம் 48 நிமிடம் ஆகும்) மகாத்மாவான வசிஷ்டரால் சாம்பலாக்கப்பட்டார்கள்.

மிகப்பெரும் புகழுடையவரான விஷ்வாமித்ரர் அப்பொழுது (படை)பலமும், புத்திரர்களும் அழிந்துவிட்டவர்களாய் பார்த்து, வெட்கமடைந்தவராகி சிந்தையில் மெய்மறந்தவராக ஆனார். அசைவற்ற கடல் போலவும், பல்பிடிங்கின பாம்பு போலவும், (ராகுவினால்) மறைக்கப்பட்ட ஆதித்யன் போலவும், ஒளியிழவை உடனேயே அடைந்தார். புத்திரர்களையும், படைபலத்தையும் இழந்த அவர், சிறகு ஒடிந்த பறவைபோல் கொழுப்படங்கினவராய், மனம்குன்றியவராய், உற்சாகம் குன்றியவராய் வெறுப்படைந்தார். அவர் (அதாவது விஷ்வாமித்ரர்) பூமியை க்ஷத்ரிய தர்மத்தின்படி பரிபாலிப்பாயாகஎன்று சொல்லி ஓர் புத்திரனை ராஜ்யத்திற்காக நியமித்துவிட்டு, தனியாய் உடனே வனத்திற்கு சென்றார்.

அவர் கின்னரர்களும், உரகர்களும் சேவிக்கும் இமயமலைச்சாரலுக்கு சென்று, மகாதேவரது அனுக்கிரகத்தை பெற மகாதவம் பூண்டவராய் தவம் புரிந்தார். அப்படியே சிறிதுகாலத்திற்கு பிறகு, தேவர்களுக்கு ஈசரும், வரதருமாகிய வ்ருஷபத்வஜர் (அதாவது சிவபெருமான், வ்ருஷபத்வஜர் என்ற பெயரின் பொருள் காளையை கொடியாய் உடையோன் என்று ஆகும்), மகாபலவானாகிய விஷ்வாமித்ரருக்கு தரிசனம் கொடுத்தார். ராஜா, எதற்காக தவம் புரிகிறாய்? உன்னுடைய கோரிக்கை எதுவோ அதை சொல். உனக்கு வேண்டப்பட்டதாகிற வரம் எதுவோ; அது சொல்லப்படட்டும். வரமளிக்கிறவனாய் உள்ளேன்.

தேவரால் இவ்விதமாய் சொல்லப்பட்ட மகாதபஸ்வியான மகாதேவரை கீழே விழுந்து வணங்கி, பின்னர் இவ்வாறான வார்த்தையை சொன்னார், ‘மாசற்ற மகாதேவரே, மகிழ்வுற்றவராய் இருக்கிறீரென்றால் எனக்கு தனுர்வேதமானது ரகசியம் (எனப்படும் உபநிஷத்துடன்) அங்கம், உபாங்கம், உபநிஷத்து இவைகளுடனும் அளிக்கப்பட வேண்டும். மாசற்ற தேவதேவா, தேவர்களிடத்திலும், தானவர்களிடத்திலும் (அதாவது அசுரர்களிடத்திலும்), மகரிஷிகளிடத்திலும், கந்தர்வர்களிடத்திலும், யட்சர்களிடத்திலும், ராட்சசர்களிடத்திலும் அஸ்திரங்கள் எவைகளோ அவைகள் எல்லாமும் என் மீது விடிய வேண்டும். தம்முடைய அனுக்கிரகத்தால் என்னுடைய மனோரதம் ஈடேறட்டும்.

தேவர்களுக்கு ஈசரும் அப்படியே ஆகட்டும்என்கிற வாக்கியத்தை சொல்லிவிட்டு, தேவலோகம் சென்றார். மகாபலசாலியும், பெரும் அகங்காரத்தால் விளங்குகிறவருமான ராஜரிஷி விஷ்வாமித்ரர், அஸ்திரங்களை அடைந்து அதனால் கர்வங்கொண்டவராய் விளங்கினார். பர்வகாலத்தில் சமுத்திரம் எவ்வண்ணமோ அவ்வண்ணமே, அப்பொழுது வீர்யமகிமையால் பொங்கிப்பூரித்தவராகிய அவர் ரிஷிகளுள் சிறந்தவரான வசிஷ்டரை கொல்லப்பட்டவராகவே மனதினுள் தீர்மானித்துவிட்டார். அரசன், (வசிஷ்டரின்) ஆசிரமபதத்திற்கு சென்று, அங்கே அஸ்திரங்களை பிரயோகித்தார். அவைகளின் அஸ்திர தேஜஸால் அந்த தபோவனம் முழுவதும் பொசுக்கிவிடப்பட்டது.

அறிஞரான விஷ்வாமித்ரருடைய அந்த அஸ்திரங்கள் எங்கும் ஆக்கிரமித்திருக்கிருப்பதை பார்த்து, ‘பாஸ்கரன் (அதாவது சூர்யன்) பனியை எவ்வண்ணமோ அவ்வண்ணமே காதேயனை (அதாவது விஷ்வாமித்திரரை) இதோ நாசம் செய்கிறேன். பயப்படாதிருங்கள்.என்று மீண்டும் மீண்டும் வசிஷ்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வசிஷ்டருடைய சிஷ்யர்கள் எவர்களோ அவர்களும், அவ்வாறே நூற்றுக்கணக்கான முனிகளும் நடுக்கமடைந்தவர்களாய் (பல)திக்குகளிலும் ஓடிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான மிருகங்களும், பறவைகளும் கூட (உயிர்)பயத்தால் நடுக்கமெடுத்து பலதிசைகள் வழியாய் ஓட்டங்கொண்டன. வசிஷ்டருடைய ஆசிரமபதமானது (ஓர்) முகூர்த்தம் நிசப்தமாய், சூனியமாய் இருந்தது. தரிசுநிலத்திற்கு ஈடாய் விளங்கிற்று. மகாதேஜஸ்வியும், ஜபங்களில் சிறந்தவருமான வசிஷ்டர் இவ்விதம் சொல்லிவிட்டு, உடனேயே விஷ்வாமித்ரரிடம் கோபங்கொண்டவராய் இந்த வாக்கியத்தை சொன்னார், ‘வெகுகாலம் போஷித்துவரப்பட்ட ஆசிரமத்தை நீ அழித்துவிட்டாய் என்கிறபடியாலும், தீயநடத்தையுடையவனாக இருக்கிறாய் என்கிறபடியாலும், மூடா, அதனாலும் நீ பிழைத்திருக்கப்போவதில்லை.

மகாதேஜஸ்வியான வசிஷ்டர் இவ்வண்ணமாய் சொல்லி, புகையற்ற காலாக்னி என கோபாவேசம் கொண்டவராகி, காலதாமதம் செய்யாதவராய், உடனே இரண்டாம் யமதண்டம் போன்றதான ஓர் தண்டத்தை தூக்கிவைத்துக்கொண்டு கௌஷிகருக்கு (அதாவது விஷ்வாமித்ரருக்கு) முன்னிலையில் நின்றார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment