Friday, April 3, 2020

ஐம்பத்திநான்காவது ஸர்க்கம் – ஷபலையை அபகரிப்பது


(ஸ்ரீ)ராமா, வசிஷ்ட முனிவர் ஷபலையை (அதாவது காமதேனுவை) கொடுக்கமாட்டேன் என்றதுமே, விஷ்வாமித்ரர் இவரது காமதேனுவையே பலவந்தமாய் பிடித்து இழுத்தார். (ஸ்ரீ)ராமா, மகாத்மாவான ராஜாவாலே இழுத்துக்கொண்டு போடப்பட்ட ஷபலாவோ துக்கித்து, சோகத்தால் உள்ளமுருகி அழுதுகொண்டு சிந்தனை செய்தது, ‘ராஜாவின் படைவீரர்களாலே மிகவும் துன்புறுத்தப்பட்டு பரிதாபகரமான நான் இழுத்துச்செல்லப்படுகிறேன். நான் அந்த நல் மகாத்மாவான வசிஷ்டரால் கைவிடப்பட்டேனா என்ன? புனித ஆத்மாவாகிய அந்த மகரிஷிக்கு என்னால் செய்யப்பட்ட தீங்கு என்ன? ஏனெனில் தார்மிகர் (அதாவது வசிஷ்டர்) இஷ்டையான, குற்றமற்றவளான, பக்தையாகிய என்னை தியாகம் செய்கிறார்.

மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டும், இவ்வாறு சிந்தனை செய்து, அப்பொழுது அது வேகமாய் மிகுந்த தேஜஸ்கொண்ட வசிஷ்டரிடம் சென்றது. எதிரிகளை அழிப்பவரே (அதாவது ஸ்ரீராமா), அப்பொழுது அந்த நூற்றுக்கணக்கான படைவீரர்களை வாயுவேகத்துடன் உதறி தள்ளிவிட்டு, மகாத்மாவினுடைய பாத மூலத்திற்கு வந்துசேர்ந்தது. அந்த ஷபலா (அதாவது காமதேனு) வசிஷ்டருடைய முன்னிலையில் நின்றுகொண்டு, மேகமுழக்கம் (போலும்), துந்துபி சத்தம் (போலும் உள்ள) குரலுடன் (வாய்விட்டு) கதறியும், அழுதுகொண்டும் இவ்வாறு சொல்லியது, ‘ராஜாவின் படைவீரர்கள் என்னை தம்முடைய அருகாமையிலிருந்து இழுத்துச் செல்கிறார்கள், என்கிறபடியால் பகவானே, பிரம்மாவின் புதல்வரே, நான் தம்மால் தியாகம் செய்யப்பட்டேனா என்ன?’

இவ்விதமாய் சொல்லப்பட்ட பிறகு பிரம்மரிஷி (வசிஷ்டர்), உடன்பிறந்தவளை போன்றதும், துக்கித்து சோகம் நிறைந்த இதயத்துடன் இருக்கும் (அதனிடம்) இவ்வாறான வார்த்தையை சொன்னார், ‘இந்த அக்ஷெளஹிணீ (ஓர் அக்ஷெளஹிணீ சேனையில் 21,870 தேர்ப்படையும்; 21,870 யானைப்படையும்; 65,610 குதிரைப்படையும்; 109,350 காலாட்படையும் இருக்கும்) பூரணமானது. குதிரைகளும், ரதங்களும் நிரம்பியது. யானைகளாலும், கொடிகளாலும் நிறைந்தது. அதனால் இவர் அதிபலவானாகிறார். இவரோ மகாபலவானான ராஜா, க்ஷத்ரிய ராஜா, பூமிக்கே பதியாய் பலம்நிறைந்த ராஜாவாய் (இருக்கிறார்). எனக்கு அவருக்கு ஈடான பலம் இல்லை. உன்னால் எனக்கு தீங்கு ஏதும் செய்யப்படவில்லை. ஷபலே (அதாவது காமதேனுவே), உன்னை நான் கொடுக்கவுமில்லை. இப்பொழுது விசேஷமாய் உன்னை என்னிடமிருந்து பலவந்தமாய் ஓட்டிக்கொண்டு போகின்றனர்.

இவ்விதமாய் வசிஷ்டரால் சொல்லப்பட்டதும் சொல்லறிவு உள்ளதான அது, இணையில்லா ஒளியுடைய பிரம்மரிஷியிடம் அடக்கத்துடன் (பின்வரும்) வார்த்தையால் பதிலுரைத்தது, ‘பிராமணரே, க்ஷத்ரியனுடைய பலம் (குறித்து) பேசப்படுவது இல்லை. பிராமணனது பலம் திவ்யமானது. க்ஷத்ரியனது பலத்தை (காட்டிலும்) மேம்பட்டது. பிராமணன்தான் பலமிக்கவர். தம்முடைய பலம் அளவற்றது. தம்முடைய தேஜஸ் நெருங்கமுடியாதது. மகாவீர்யனாகிய அந்த விஷ்வாமித்ரனும் மேம்பட்ட பலமுடையவனல்ல. மகாதேஜஸ்வியே, தம்முடைய பிரம்ம பலத்தால் நிறைந்த என்னை ஏவக்கடவீர். அந்த துராத்மாவினுடைய பெருமையாய் விளங்கும் பலம் எதுவோ அதை நாசம் செய்கிறேன்.

(ஸ்ரீ)ராமா, அப்பொழுது இவ்விஷயத்தில் அதனால் இவ்வாறு வேண்டப்பட்ட பெரும்புகழ்வாய்ந்த வசிஷ்டர், ‘எதிரிகளின் பலத்தை நாசம் செய்யும்படியான (படை)பலத்தை நீ உண்டுசெய்வாய்,’ என்று கூறினார். அந்த ஸுரபி (அதாவது காமதேனு), அவருடைய அந்த வார்த்தையை கேட்டு அவ்வாறே உண்டுசெய்தது. வேந்தே (அதாவது ஸ்ரீராமா), அதன் ஹுங்காரத்தால் சிருஷ்டி செய்யப்பட்ட பப்லவர்கள் (பல்லவர்களாய் இருக்கக்கூடும்) விஷ்வாமித்ரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே (படை)பலம் முழுவதையும் நூறுநூறாய் நாசம் செய்தார்கள். அந்த ராஜா கோபத்தால் துடிக்கும் கண்கள் உற்றவராய், கடும் கோபமடைந்தவராகி பெரிதும், சிறிதுமான சஸ்திரங்களால் (அதாவது ஆயுதங்களால்) பப்லவர்களை நசித்தார். நூற்றுக்கணக்கான பப்லவர்கள் விஷ்வாமித்ரரால் குலையுண்டுவிட்டதை கண்டு, உடனே யவனர்கள் கலந்த ஷகர்களை (யவனர்கள் என்பது கிரேக்கர்களையும், ஷகர்கள் என்பது ஈரானியர்களையும் குறிக்கக்கூடும்) கோபத்தினால் மீண்டும் உண்டுசெய்தது. ஒளியுடையவர்களாய், மஹாவீர்யமுடையவர்களாய், தங்க இதழ்கள் கொண்ட பூ போன்றவர்களான அந்த யவனர்களுடன் கூடிய ஷகர்களால் பூமியானது நிரம்பிவிட்டது. நீண்ட வாட்களையும், ஈட்டிகளையும் உடையவர்களாய், பொன்னிறமான ஆடைகளை உடுத்திய அவர்களால் அவரது (அதாவது விஷ்வாமித்ரரது) பலம் முழுவதும், கொழுந்துவிட்டெரியும் பாவகன் (அதாவது அக்னி) எப்படியோ அப்படியே எரித்துவிடப்பட்டது. அதற்குமேல் மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் அஸ்திரங்களை விடுவித்தார். அவரவர்களுக்குரிய அவைகளால் யவனர்களும், காம்போஜர்களும், பப்லவர்களும் கலைக்கப்பட்டார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment