Sunday, April 26, 2020

எழுபத்தாறாவது ஸர்க்கம் – பரசுராமரின் தோல்வி


தாசரதி (அதாவது ஸ்ரீராமர்) ஜாமதக்ன்யருடைய (அதாவது பரசுராமருடைய) அந்த வாக்கியத்தை கேட்டு, அப்பொழுது தந்தையின் (மீது கொண்ட) மரியாதையால் கட்டுப்பாடுகொண்ட பேச்சினால் (பரசு)ராமரிடம் இப்படி மொழிந்தார், ‘பார்கவ (அதாவது ப்ருகு ரிஷி வம்சத்து) பிராமணரே, தந்தையின் (நீர்)கடனை கைப்பற்றி எந்த செயலை புரிபவராய் ஆனீரோ (அதை) செவியுற்றேன். (தாம் கூறியதை) கடைப்பிடிக்கின்றேன். பார்கவ ராமரே (அதாவது பரசுராமரே), என்னை வீர்யமற்றவனாகவும், சக்தியற்றவன் எனவும் இழிவுபடுத்தினீர். இப்பொழுதே க்ஷத்ரிய தர்மத்தால் எனது பராக்கிரமத்தை பாரும்.

ராகவர் இவ்விதம் சொல்லிவிட்டு வேகமான பராக்கிரமம் உடையவராய், கோபங்கொண்டவராய், பார்கவருடைய (அதாவது பரசுராமரருடைய) கையிலிருந்து சிறந்த ஆயுதத்தையும், பாணத்தையும் (தன்னிடம்) வாங்கிக்கொண்டார். வில்லை நிறுத்தி, அம்பை நாணேற்றினதாக செய்தார். அதன்மேல் (ஸ்ரீ)ராமர், கோபங்கொண்டவராய் ஜாமதக்ன்ய ராமரிடம் (அதாவது ஜமதக்னியின் மைந்தரான பரசுராமரிடம்) (பின்வரும்) வார்த்தை கூறினார், ‘உத்தம த்விஜராகிய (பரசு)ராமரே, விஷ்வாமித்ரரோ பூஜைக்குரியவர். தாம் விஷ்வாமித்ரரின் காரணமான அவராலேயும் (விஷ்வாமித்ரரும்-பரசுராமரும் நெருங்கிய உறவினர்கள்), பிராமணராகவும் இருக்கிறீர்; என்கிறபடியால் என்னால் பூஜிக்கப்படவேண்டியவர். ஆதலால் உம்முடைய உயிரை மாய்க்கத்தக்கதான பாணத்தை விட துணியாதிருக்கிறேன். (பரசு)ராமரே, தவத்தின் பலத்தால் பெற்றிருக்கும் இந்த உமது நகர்வாயினும் (அதாவது கால்நடைகளாயினும்), ஒப்பில்லாத உமது உலகங்களாயினும், இச்சைகொண்டது எதுவோ அதை நீக்குகிறேன். இந்த அம்பு விஷ்ணுவினுடையது. திவ்யமானது. பலம், ஆணவம் இவைகளை அழிக்கிறது. எதிரிகளின் நகரை வெற்றிகொள்ளச் செய்கிறது. இதனால் வீர்யத்தால் பலனற்றதாக கீழே விழாது.

பார்கவரை நோக்கி கோபத்துடன் இருக்கும் காகுத்ஸ்தர் (அதாவது ஸ்ரீராமர்) இவ்விதம் சொல்லுகையில், பிதாமகரை (அதாவது பிரம்மதேவரை) முன்னிட்டுக்கொண்டு, ரிஷிகணங்களோடு கூடின சுரர்களும் (அதாவது தேவர்களும்), கந்தர்வர்களும், அப்சரஸ்களும், சித்தர்களும், சாரணர்களும், கின்னரர்களும், யட்சர்களும், ராட்சசர்களும், நாகர்களும் அந்த மகத்தான, அற்புதத்தை காணவும், அப்படியே ஆயுதத்தில் சிறந்ததை கையிலேந்திக்கொண்டிருக்கிற (ஸ்ரீ)ராமரை காணவும் கூட்டங்கூட்டமாய் அங்கு வந்துசேர்ந்தார்கள். அப்பொழுது (ஸ்ரீ)ராமர் சிறந்த வில்லை (கையில்) தரித்தவளவில் உலகம் திகைத்துப்போய் நின்றவளவில் இந்த ஜாமதக்ன்யராகிய (அதாவது ஜமதக்னியின் மைந்தராகிய) (பரசு)ராமர், வீர்யம் ஒழிந்தவராய் (ஸ்ரீ)ராமரை உற்றுப்பார்த்தார். ஜாமதக்ன்யர் (ஸ்ரீராமரின்) தேஜஸால் வீர்யத்தை இழந்ததால் திகைத்துப்போனவராய், தாமரையிதழ்போன்ற கண்களையுடைய (ஸ்ரீ)ராமரிடம் மெதுமெதுவாய் பேசினார், ‘பெருங்கரமுடையோனே, தசரத மைந்தா, (ஸ்ரீ)ராமா, என் வார்த்தைக்கு செவிசாற்றும். காப்பாற்றும். ரட்சித்திடும். முன்பு ராஜசூய யாகம் நடைபெற்றளவில் என்னால் வசுந்தரா (அதாவது பூமி) கஷ்யபருக்கு கொடுக்கப்பட்டது. முன்பு இது எப்பொழுதோ அப்பொழுது கஷ்யபர் என் ஆளுகையில் வசிக்கக்கூடாதுஎன்று எனக்கு கூறியிருந்தார். காகுத்ஸ்தா, பிரதிக்ஞை செய்யப்பட்டது. பூலோகம் கஷ்யபருக்கு ஒப்புவிக்கப்பட்டது. அந்த நான் குருவின் வார்த்தையை பரிபாலிப்பவனாகவே புவியில் இரவில் வசிக்காமல் இருக்கிறேன். வீரா, ராகவா, ஆதலால் இந்த என் கால்நடையை ஒழிக்க வேண்டாம். உத்தம மலையான மகேந்திர (மலைக்கு) மனோவேகமாய் போய்விடுகிறேன். (ஸ்ரீ)ராமா, எனது தவத்தால் ஒப்பற்ற உலகங்கள் வெல்லப்பட்டன. இப்பொழுது அவைகளை முக்கிய அம்பான (இதன் மூலம்) அடித்திடும் (அதாவது சொந்தமாக்கிக் கொள்ளும்). காலதாமதம் வேண்டாம். எதிரிகளை தகிக்கச்செய்பவனே, இந்த வில்லினுடைய நாணேற்றுதலால் தம்மை உத்தம சுரரான (அதாவது தேவரான), அட்சயமான மதுவை (அதாவது மது என்ற அசுரன்) கொன்றவர் (அதாவது திருமால்) என கண்டுகொண்டேன். தமக்கு நலம் உண்டாகட்டும். இந்த சுரகணங்கள் (அதாவது தேவகணங்கள்) எல்லோரும் ஒன்றுசேர்ந்து போரில் நிகரொருவருமில்லாதவரும், ஒப்பற்ற செய்கையை உடையவருமான தம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காகுத்ஸ்தா, நான் மூவுலகிற்கும் நாதனாகிய தம்மால் தலைக்கவிழ வைக்கப்பட்டேன் (அதாவது வெல்லப்பட்டேன்) என்கிறபடியால் இதுவும் எனக்கு மானக்கேடாக ஆக தகுந்ததில்லை. நல்விரதமுடைய (ஸ்ரீ)ராமா, ஒப்பற்ற பாணத்தை விடுவிப்பதே தகுந்ததாகும். பாணத்தை விடுத்ததுமே உத்தம பர்வதமான மகேந்திரத்திற்கு சென்றுவிடுகிறேன்.

ஜாமதக்ன்ய (அதாவது ஜமதக்னியின் மைந்தராகிய) (பரசு)ராமர், அப்படி சொல்லவே, சக்திசாலியானவரும், ஸ்ரீமானும், தாசரதியுமான (அதாவது தசரத மைந்தருமான) (ஸ்ரீ)ராமர், தன் பங்கிற்கு உத்தம அம்பினை விடுத்தார். அந்த ஜாமதக்ன்யர் தவத்தால் சம்பாதிக்கப்பட்டவைகளும், தனக்கு சொந்தமானவைகளுமான உலகங்கள் (ஸ்ரீ)ராமரால் பறித்துவிடப்பட்டதாக கண்டுகொண்டு, அப்பொழுதே பர்வதங்களில் உத்தமமானதான மகேந்திரத்திற்கு பிரயாணமானார். அச்சமயத்தில் திசைகள் எல்லாமும் அப்படியே உபதிசைகளும் சாந்தமானது. ரிஷிகணங்களோடு கூடின சுரர்கள் (அதாவது தேவர்கள்) ஆயுதத்தை உயரத் தூக்கியபடியிருந்த (ஸ்ரீ)ராமரை புகழ்ந்தார்கள். ஜாமதக்ன்யரும், பிரபுவுமாகிய (பரசு)ராமர், தாசரதி (ஸ்ரீ)ராமரை அப்பொழுது புகழ்ந்து, பிரதட்சிணத்தையும் செய்துவிட்டு, தன்னிருப்பிடத்திற்கு சென்றார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்தாறாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment