Saturday, April 25, 2020

எழுபத்தைந்தாவது ஸர்க்கம் – வைஷ்ணவ தனுசில் நாணேற்ற தூண்டுவது


“‘தாசரதியாகிய (அதாவது தசரத மைந்தனாகிய) (ஸ்ரீ)ராமா, வீரா, உனது வீர்யம் அற்புதமாக செவியில்படுகின்றது. தனுசின் (அதாவது சிவனார் வில்லின்) முறித்தலும் சிறிதும் விடாமல் என்னாலேயும் கேட்கப்பட்டது. உன்னால் (சிவ)தனுசின் அந்த முறித்தலை அற்புதமாயும், அதை சிந்திக்கமுடியாததுமாக கேள்வியுற்று, நான் மற்றோர் சுபமான தனுசை (அதாவது வில்லை) எடுத்துக்கொண்டு வந்தேன். கோரமான தோற்றமுடையதும், ஜமதக்னியிடத்திலிருந்து (அதாவது பரசுராமருடைய தந்தையினிடத்திலிருந்து) கிடைத்ததுமாகிய அந்த இந்த மகத்தான தனுசை நாணேற்றி கணைதொடு. உன் பலத்தை காட்டிடு. அப்பொழுது இந்த வில்லின் நாணேற்றுதலில் உன் பலம் நான் கண்டு, துவந்த்வ யுத்தத்தை (அதாவது ஒருவரோடு ஒருவருக்கான யுத்தத்தை) தந்திடுவோம். உனக்கு இது மெச்சதத்தக்கதாகும். இல்லாவிடில் வில்லை துறந்துவிட்டு, ‘பயந்தவனாய், தோல்வியடைந்தவனாய் ஆகிறேன்என்று சொல்லிவிடு. அன்றேல் நீ எனக்கு துவந்த்வ யுத்தத்தை தந்திடு. சந்தேகம் வேண்டாம்.

அப்பொழுது அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, தசரத ராஜா ஒளியிழந்த முகமுடையவராய், பரிதாபகரமானவராய் கைகளை கூப்பிக்கொண்டு (பின்வரும்) வாக்கியத்தை சொல்லினர், ‘தாமோ க்ஷத்ரியர்கள் மீதிருந்த கோபத்தினின்று சாந்தமடைந்தவர். எனது சிறுபுத்திரர்களுக்கு அபயத்தை பிராமணர்களின் சந்நிதியில் தந்திட தகுந்தவராகிறீர். சுய (வேத) அத்தியயனம் மற்றும் விரதங்களை கொண்டிருக்கும் பார்கவர்களின் குலத்தில் தோன்றினவராய், சஹஸ்ராக்ஷனிடத்தில் (அதாவது தேவேந்திரனிடத்தில்) பிரதிக்ஞை செய்துஆயுதங்களை கைவிட்டவராய் இருக்கின்றீர்.  அந்த தாம், தர்மத்தில் நோக்கமுடையவராய் ஆகி, (ரிஷி) கஷ்யபருக்கு வசுந்தராவை (அதாவது பூமியை) தந்துவிட்டு, வனம் சென்று மகேந்திர (மலையை) உறைவிடமாக ஆக்கிக்கொண்டீர் (இங்கு குறிப்பிட்ட மகேந்திர மலை, இன்றைய ஒடிஷா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் இருக்கும் மகேந்திரகிரி ஆகும்). (ஸ்ரீ)ராமன் ஒருவன் மாண்டால் நாங்கள் எல்லோருமே உயிர்வைத்திறோம். மகாமுனியே, தாம் என்னை முழுமையாய் ஒழிக்க வந்திருக்கிறீர்.

தசரதர் இவ்வண்ணம் செல்லுகையில் அந்த வாக்கியத்தை சக்திசாலியாகிய ஜாமதக்ன்யர் (அதாவது பரசுராமர்) பொருட்படுத்தாமல் (ஸ்ரீ)ராமரையே (பார்த்து) பேசினார், ‘இந்த இரண்டு விற்களும், விஷ்வகர்மாவினால் சிறந்தவைகளாயும், உலகங்களில் பெயர் பெற்றவைகளாயும், திடமானவைகளாயும், பலமுள்ளவைகளாயும், முக்கியமானவைகளாயும், நன்றாய் செய்யப்பட்டன. ஒன்று சுரர்களால் (அதாவது தேவர்களால்) போர்செய்ய விருப்பமுற்ற த்ரியம்பருக்காக (அதாவது முக்கண்ணருக்காக) உண்டாக்கப்பட்டது. காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), எதுவோ அந்த இந்த த்ரிபுரக்னமானதும் (அதாவது முப்புரங்களையும் நாசம் பண்ணவல்லதும்), சிறந்ததுமான வில்லானது உன்னால் முறிக்கப்பட்டது. அணுகமுடியாத இரண்டாவதானது உத்தம சுரர்களால் (அதாவது தேவர்களால்) விஷ்ணு (பகவானுக்கு) சமர்ப்பிக்கப்பட்டது. காகுத்ஸ்தா, (ஸ்ரீ)ராமா, அந்த இந்த வைஷ்ணவ வில்லானது எதிரிகளின் பட்டணத்தை வெற்றிகொண்டுள்ளது. இதுவும் ரௌத்திர வில்லோடு (அதாவது சிவதனுசோடு) சமமான சாரம் கொண்டது.  அப்பொழுது தேவர்கள் எல்லோரும் விஷ்ணுவினுடையதும், கருமையான கண்டத்தை (அதாவது சிவபெருமானின்) உடையதுமான பலாபலத்தை கண்டிட பிதாமகரிடம் (அதாவது பிரம்மதேவரிடம்) வினவினார்கள். சத்தியம் உரைப்போரில் சிறந்தவராகிய பிதாமகர் தேவர்களுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து, அவ்விருவர்களுக்குள் விரோதத்தை உண்டாக்கினார். விரோதத்தால் ஒருவரையொருவர் வென்றிட ஷிதிகண்டருக்கும் (அதாவது சிவபெருமானுக்கும்), விஷ்ணுவிற்கும் மயிர்கூச்சரியும் படி மகத்தான யுத்தம் நடந்தது. அப்பொழுது பெரும் பராக்கிரமமுடையதான சைவ தனுசு (ஓர்) ஹுங்காரத்தாலே முறிந்துவிட்டது. அதனால் முக்கண்ணரான மகாதேவரே கம்பம் (போன்று) நின்றுவிட்டார். உத்தம சுரர்களாகிய (அதாவது உத்தம தேவர்களாகிய) அவ்விருவர்களும் அச்சமயத்தில் ரிஷி கூட்டங்களோடு கூடினவர்களும், சாரணர்களோடு கூடிய தேவர்களால் அங்கு ஒன்றாக வந்து யாசித்தவர்களாய் அமைதியை அடைந்தார்கள். அப்பொழுது ரிஷிகணங்களோடு கூடிய தேவர்கள் அந்த சைவ தனுசை விஷ்ணுவின் பராக்கிரமத்தால் முறிக்கப்பட்டிருப்பதை கண்டு, விஷ்ணுவை அதிகர் (அதாவது மிக்கவர்) என்று எண்ணினர். அப்பொழுது விஷ்ணுவை பிரார்த்தித்து, பூஜித்து, அதன்மேல் பினாக்கினரையும் (அதாவது சிவபெருமானையும்), பிரம்மா, இந்திரன் முதலியவர்களையும் முன்னிட்டுக்க்கொண்டு, விண்ணுலகம் போய்ச்சேர்ந்தார்கள். பெரும்புகழுடைய ருத்திரர், தன் பங்கிற்கு உக்கிரமாய் விதேஹத்தின் ராஜரிஷியாகிய தேவராதருடைய கையில் பாணத்துடன் கூட வில்லை தந்தார். (ஸ்ரீ)ராமா, விஷ்ணுவும் எதிரிகளின் பட்டணத்தை வெற்றிகொள்ளதக்க இந்த வைஷ்ணவ தனுசை பார்கவரான (அதாவது ப்ருகு ரிஷியின் வம்சத்தவரான) ரிசீகருக்கு உத்தம வைப்பாக அளித்தார். மகாதேஜஸ்வியான ரிசீகரும், ஈடற்ற கர்மங்களையுடைய புத்திரரான, என் தந்தையான மகாத்மாவான ஜமதக்னிக்கு திவ்ய (தனுசை) தந்தார். அர்ஜுனன் (அதாவது கார்த்தவீர்யார்ஜுனன்) முதிர்ச்சியற்ற புத்தியை பற்றினவனாய், ஆயுதங்களை கைவிட்டவராகிய என் தந்தை தவத்தின் பலத்தில் மூழ்கிக்கிடக்கையில் கொலை புரிந்தான். என் தந்தையின் கொடூரமானதும், ஒப்புமை இல்லாதுமான கொலையை கேள்வியுற்று, இதனால் மகத்தான எல்லாவுலகங்களுக்கும் பயத்தை தருகிறதுமாகிய சினமானது உண்டாயிற்று. கோபத்தால் அப்போதைக்கு உண்டாகிற க்ஷத்ரிய (குலத்தை) அநேக (தடவை) நிர்மூலமாக்கினேன். (ஸ்ரீ)ராமா, யாகத்தினுடைய முடிவில் பூமி எல்லாவற்றையும் அடைந்து, புண்ணிய கர்மங்களும், மகாத்மாவாகிய கஷ்யபருக்கு அப்பொழுது தட்சிணையாய் தந்து, மகேந்திர (மலையை) அடைந்தவனாய், தவத்தின் பலத்தில் மூழ்கியவனாய், நிலையானவனாய், தேவர்களால் சேவிக்கப்பட்ட அவ்விடத்தில் மிகவும் சுகமாய் தவம் புரிந்துவருகிறேன். எனினும், ஆகாய தளத்தில் ஆச்சரியமடைந்த தேவர்கள் கூட்டம் பேசிக்கொண்டிருக்கையில் வில்லின் முறித்தலை கேட்டு, அதன்மேல் நான் விரைவாக (இங்கு) வந்தேன். (ஸ்ரீ)ராமா, (என்) தந்தை, பாட்டனார் இவர்கள் உபயோகித்த, மகத்தான, உத்தமமான அந்த இந்த வைஷ்ணவ தனுசை க்ஷத்ரிய தர்மத்தை கருத்தில் கொண்டு கையிலேந்து. காகுத்ஸ்தா, எதிரிகளின் நகரத்தை நாசம் பண்ணக்கூடிய (இந்த) சிறந்த வில்லில் (ஓர்) அம்பை தொடு. திறமையிருந்தால் பின்னர் துவந்த்வ (யுத்தத்தை) உனக்கு தந்திடுவேன்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment