Friday, April 24, 2020

எழுபத்திநான்காவது ஸர்க்கம் – பரசுராமரை சந்திப்பது


அந்த விஷ்வாமித்ர மகாமுனி இரவு கழிந்ததுமே, ராஜகுமாரர்களான ராகவர்களை ஆசீர்வாதங்களால் வாழ்த்தியும், அந்த ராஜாக்கள் இருவர்களையும் கண்டு விடைபெற்றுக்கொண்டும், வடக்கிலுள்ள மலைக்கு (அதாவது இமயமலைக்கு) சென்றார். அந்த விஷ்வாமித்ரர் சென்ற பின், உடனே ஜகத்பதியான, அயோத்யாபதியான, ராஜாவான, ஸ்ரீமானான தசரத ராஜா, மிதிலாதிபதியான வைதேஹரை (அதாவது ஜனகரை) கண்டு விடைபெற்றுக்கொண்டு நகருக்கு செல்லலானார். நராதிபதி (ஜனகர்) புறப்பட்டுசெல்லுகிற அந்த ராஜாவை பின்தொடர்ந்து சென்றார். அப்பொழுது விதேஹர்களின் ராஜாவாகிய மிதிலாதிபதி, பசுக்களையும், அநேக நூறாயிர சிறந்த கம்பளங்களையும், கோடி பட்டாடைகளையும் கன்யாதனமாக (அதாவது சீதனமாக) ஏராளமாய் கொடுத்தார். கன்னிகைகளின் தந்தை (ஜனகர்) அவர்களுக்கு திவ்யரூபமான நன்றாய் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ரதங்கள், காலாட்படைகள் இவைகளையும், மிகச்சிறந்த பெண் பணியாட்களையும் (அதாவது தாசிகளையும்), வேலையாட்களையும் (அதாவது தாசர்களையும்) கொடுத்தார். வெள்ளியையும், தங்கத்தையும், முத்துக்களையும், பவழங்களையும் (மேலும்) மிகவும் விலையுயர்ந்த கன்யாதனத்தையும் (அதாவது சீதனத்தையும்) பரமானந்தமாக கொடுத்தார்.

மிதிலர்களுக்கு ஈசனான (அந்த) ராஜா, வெகு தனத்தை கொடுத்துவிட்டு, வேந்தரிடம் (அதாவது தசரதரிடம்) விடைபெற்றுக்கொண்டு, குமாரர்களாகிய ரகுநந்தனர்களை மங்கல ஆசீர்வாதங்களால் வாழ்த்தி, தனது வசிப்பிடமான மிதிலைக்கு பிரவேசித்தார். அந்த ஜனகர் நகரத்திற்குள் நுழைந்த பின்னர், சேனைகள்-வேலையாட்கள் இவர்களோடு கூடியவரும், ஜகத்பதியுமான அயோத்யாதிபதி ராஜா, மகாத்மாக்களான புத்திரர்களோடு கூட ரிஷிகள் எல்லோரையும் முன்னிட்டுக்கொண்டு புறப்பட்டார். அப்பொழுது கீர்த்திமானான அவர், பெரும் வாஹினியை (அதாவது படைபலத்தை) நடத்திக்கொண்டு சென்றார்.

ரிஷிக்கூட்டத்துடனும், ராகவர்களுடனும் செல்லுகிற அந்த நரர்களுள் புலியினிடத்தில் (அதாவது தசரதரிடத்தில்) பறவைகள் கோரமான தொனிகளை அங்குமிங்கும் கூவின. பூமியில் நடக்கும் மிருகங்கள் எல்லாமுமே பிரதட்சிணமாகவே சென்றன. ராஜாக்களுள் புலியானவர் அவைகளை கண்டு, வசிஷ்டரிடம் குறிப்பாக வினவினார், ‘பறவைகளும் கர்ணகொடூரமாய் (ஒலிக்கின்றன). மிருகங்களும் கோரமாய் பிரதட்சிணம் (செய்கின்றன). எனது மனமும் பதைவுறுகிறது. இதயத்தை துடிக்கச்செய்கின்ற இது என்ன?’

தசரத ராஜாவின் இந்த வாக்கியத்தை கேட்டு, மகானான ரிஷி மதுரமான மொழியை மொழிந்தார், ‘இதற்கு பலன் எதுவோ, அது கேட்கப்படட்டும். பறவைகளின் முகத்திலிருந்து விழுந்த திவ்யமானதும், சமீபத்தில் ஏற்படப்போகிறதும், கோரமான பயத்தை இந்த மிருகங்கள் அமைதிப்படுத்துகின்றன. இந்த மனதின் தாபம் ஒழியட்டும்.

அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே பர்வதங்கள், வனங்களுள்ளிட்ட மேதினி (அதாவது பூமி) எல்லாவற்றையும் நடுங்கச்செய்துகொண்டு பெரும் வாயு உண்டாயிற்று. சூர்யன் இருளால் மறைக்கப்பட்டான். திசைகள் எல்லாம் அறியமுடியாமல் போயின. அவர் சேனை எல்லாமும் திடுக்கிட்டதாயும், புழுதி படிந்ததாயுமாயிற்று. வசிஷ்டரும் பிற ரிஷிகளும், குமாரர்களுடன் கூடின ராஜாவும், அப்பொழுது அங்கு தெளிவாகவே இருந்தார்கள். மற்றது எல்லாம் உணர்வற்றதாயிற்று. அந்த கோரமான இருளில் புழுதியால் மூடுண்டிருந்த அந்த சேனை, பயங்கர தோற்றமுடையவரும், ஜடாமண்டலத்தை (தலையில்) தரித்தவரும், ராஜவம்சங்களை ஒழித்தவரும், கைலாச (மலையை) போல அணுகமுடியாதவரும், காலாக்னியைப்போல் அணுகக்கூடாதவரும், தேஜஸால் ஜொலிப்பவர் போன்றவரும், சாதாரண மக்களால் (கண்கூசாமல்) பார்க்கமுடியாதவரும், தோளில் கோடாரியையும், மின்னற்கொடிகளின் கூட்டம் போன்ற வில்லையும் வகித்துக்கொண்டு, முக்கியமான அஸ்திரத்தை கையில் பிடித்துக்கொண்டும், முப்புரத்தையும் அழித்த சிவ(பெருமானை) போலிருக்கிற அந்த பார்கவரான (அதாவது ப்ருகு ரிஷியின் வம்சத்தவரான) ஜாமதக்ன்யரை (அதாவது ஜமதக்னியின் மகனை - பரசுராமரை) கண்டது.

பயங்கரமான தோற்றமுடையவரும், பாவகனை (அதாவது அக்னியை) போல் ஜொலித்துக்கொண்டிருக்கிறவருமான அவரைக்கண்டு, ஜபம்-ஹோமம் (இவைகளின்) இருப்பிடமாகிய வசிஷ்டர் முதலிய எல்லோரும், கூடவந்திருந்த முனிவர்கள் எல்லோருமே, அதனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலானார்கள், ‘தந்தையை கொன்றதற்காக கோபங்கொண்டு க்ஷத்ரிய (வம்சத்தை) நிர்மூலமாக்கப்போகிறாரோ? இல்லையா என்ன? முன்னரே க்ஷத்ரியர்களை வதம் செய்து கோபத்தை ஒழித்தவர். துயரத்தை ஒழித்தவர். மறுபடி இவருக்கு க்ஷத்ரியர்களுடைய நிர்மூலமானது விரும்பப்பட்டதாக ஆகவேமாட்டாது.

இவ்வண்ணம் சொல்லிவிட்டு ரிஷிகள் அர்க்யத்தை (கையில்) ஏந்திக்கொண்டு, பார்க்க பயங்கரமாயிருக்கிற பார்கவரிடம் மதுரமான வாக்கியமாகிற ராம! ராம!என்று சொல்லினர். ரிஷிகளால் அளிக்கப்பட்ட அந்த பூஜையை பெற்றுக்கொண்டு, சக்திவாய்ந்த ஜாமதக்ன்யரான (அதாவது ஜமதக்னியின் புதல்வரான) (பரசு)ராமர், தாசரதியான (அதாவது தசரத மைந்தரான) (ஸ்ரீ)ராமரிடம் பேசலானார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment