Thursday, April 23, 2020

எழுபத்திமூன்றாவது ஸர்க்கம் – சீதா முதலியவர்களின் விவாகம்


எந்த தினத்தில் ராஜா உத்தமமான கோ தானத்தை செய்தாரோ, அந்த தினத்திலேயே சூரராகிய (பரதரின் மாமனான) யுதாஜித் வந்து சேர்ந்தார். சாட்சாத் பரதருக்கு (தாய்) மாமனாகிய கேகயராஜருடைய புத்திரர், ராஜாவை (அதாவது தசரதரை) கண்டு, நலம் விசாரித்து, இவ்விதம் பேசினார், ‘எவர்களுடைய நலத்தை விரும்புகிறீரோ, அவர்களுக்கு இப்பொழுது ஆரோக்கியமாய் இருக்கின்றனர். கேகயாதிபதியான ராஜா சிநேகமாய் நலம் விசாரித்தார். ரகுநந்தனரே (அதாவது தசரதரே), ராஜேந்திரா, வேந்தர் எனது உடன்பிறந்தவளின் குமாரனை பார்க்க விரும்புகிறார். அதற்காக நான் அயோத்யாவிற்கு வந்தேன். ராஜாக்களில் புலியே, வேந்தர்களின் பதியே, நான் அயோத்யாவில் உம்முடைய புத்திரர்கள் விவாக விஷயமாய் உம்முடன் கூடவே மிதிலைக்கு போயிருப்பவர்களாய் கேள்விப்பட்டதுமே, உடனே உடன்பிறந்தவளின் புதல்வனை காண விரும்பியவனாய் நான் இங்கு வந்தேன். தாம் இதில் அவருக்கு (அதாவது யுதாஜித்-தின் தந்தைக்கு, தசரதரின் மாமனாருக்கு) பிரீதி செய்ய வேண்டும்.

தசரத ராஜா அவருடைய மதுரமானதும், இனிய சொற்களோடு அமைந்த அந்த வார்த்தையை கேட்டு, பூஜைக்குரிய பிரியமான அதிதியாய் வந்துசேர்ந்தவரை பார்த்து, பின்னர் மிகுந்த மரியாதைகளால் பூஜித்தார். அதற்குமேல் மகாத்மாக்களான புத்திரர்களோடு கூட அந்த இரவை கழித்து, மறுபடி விடியற்காலையில் எழுந்து, (நித்திய)கர்மங்களை செய்துவிட்டு, தத்துவஞானியாகிய (அவர்) ரிஷிகளை முன்னிட்டுக்கொண்டு, அப்பொழுது யாகசாலைக்கு வந்துசேர்ந்தார்.

அனைத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகிய (ஸ்ரீ)ராமர், வெற்றியை அளிக்கிற உரிய முகூர்த்தத்தில் சகோதரர்களோடு கூடினவராய் மங்கல கங்கணத்தை தரித்துக்கொண்டார். சகோதரர்களால் சூழப்பட்டவராய், வசிஷ்டரையும் பிற மகரிஷிகளையும் முன்னிருக்கச் செய்துகொண்டு, தந்தையின் சமீபத்தை கிட்டி நின்றார். வசிஷ்ட பகவான் வைதேஹரை (அதாவது ஜனகரை) அடைந்து, இவ்விதம் அறிவித்தார், ‘சிறப்புற்ற நரர்களில் சிறந்த ராஜா, தசரத ராஜா மங்கல கங்கணங்களை தரித்த புதல்வர்களோடு கொடுப்பவரை (காண) விரும்புகின்றனர். கொடுக்கிறவருக்கும், பெற்றுக்கொள்பவருக்கும் அனைத்து வளங்களும் பெறுகின்றன என்பதால உத்தமமான விவாகத்தை செய்து உமது தர்மத்தை செய்துமுடித்திடும்.

மகாத்மாவான வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும் மகாதேஜஸ்வியானவரும், வெகு தாராள(குணம் பொருந்தியவரும்), பரம தர்மவித்தான (ஜனக ராஜா பின்வரும்) வாக்கியத்தை மறுமொழியாய் உரைத்தார், ‘எனது வாயிற் காப்பவனாய் இருப்பது யார்? இது உம்முடைய ராஜ்யமாகிறபடியால் சொந்த வீட்டில் என்ன யோசனை இருக்கிறது? யாருடைய ஆணை எதிர்பார்க்கப்படுகிறதுமுனிவர்களில் சிறந்தவரே, என்னுடைய கன்னிகைகள் அனைத்து (கல்யாண)கங்கணங்களையும் தரித்தவர்களாய் அக்னியின் பிரகாசத்திற்கு நிகராய் ஜொலிக்கின்றவர்களாய் (யாக)பீடத்தின் மூல(மேடைக்கு) வந்திருக்கிறார்கள். ராஜா, நான் உமக்காக காத்திருப்பவனாய், தயாராய் இருப்பவனாய் இந்த (யாக)பீடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஏன் தாமதிக்கிறீர்? தடங்களில்லாதபடி செய்யப்படட்டும்.

தசரதர், ஜனகரால் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தை கேட்டு, அப்பொழுது புதல்வர்கள், ரிஷிகணங்கள் எல்லோருடனும் பிரவேசித்தார். உடனே விதேஹர்களின் ராஜா, வசிஷ்டரிடம் இவ்விதம் மொழிந்தார், ‘ரிஷியே, பிரபுவே, தார்மிகர்களான ரிஷிகளோடு கூட உலகங்களைக் களிப்பிக்கிற (ஸ்ரீ)ராமருக்கு விவாக சம்மந்தமான கிரியையை சரியாய் செய்தருளவேண்டும். பிரம்ம தத்துவங்களில் சிறந்த பிரம்மரிஷியே, உம்மால் அறியப்படாதது எதுவுமில்லை. ஆதலால், தாமே குறைவின்றி செய்துமுடிக்க தகுந்தவராகிறீர்.

மகாதபஸ்வியான ரிஷி வசிஷ்ட பகவான் ஜனகரிடம் அப்படியேஎன்று சொல்லிவிட்டு, அப்பொழுது விஷ்வாமித்ரரையும், தார்மிகரான ஷதானந்தரையும் முன்னிட்டுக்கொண்டு, கூரைவேய்ந்த பந்தலின் மத்தியில் விதிப்படி வேதியை (அதாவது யாகபீடத்தை) அமைத்து, அந்த வேதியை நாற்புறங்களிலும் வாசனைப்பூக்களாலும், தங்க பாலிகைகளாலும், முளைகளோடு கூடின சித்திர கும்பங்களாலும், முளைநிறைந்த மண்பாண்டங்களாலும், தூபங்களோடு கூடிய தூப பாத்திரங்களாலும், சங்கு பாத்திரங்களாலும், சிறிய மர அகப்பைகளாலும் (அதாவது ஹோமத்திற்குரிய சட்டுவங்களாலும்), நீளமான மர அகப்பைகளாலும் (அதாவது ஆஜ்யஹோமத்திற்கு உரிய மரக்கரண்டிகளாலும்), அர்க்ய நீரினால் பூரணமான பாத்திரங்களாலும், பொரிநிறைந்த பாத்திரங்களாலும், புனிதமாக்கப்பட்ட அட்சதைகளாலும் அலங்கரித்தார். மகாதேஜஸ்வியான ரிஷி வசிஷ்ட பகவான் விதிப்படியும், மந்திரபூர்வகமாயும் சம(அளவுகளையுடைய) தர்ப்பைகளால் பரப்பி, வேதியில் (அதாவது யாகபீடத்தில்) விதிப்படியான மந்திரங்களை முன்னிட்டு, அக்னியை வளர்த்தி, அக்னியில் ஹோமம் செய்தார்.

அப்பொழுது ஜனக ராஜா, அனைத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், கொஞ்சம் மஞ்சள் நிறமானதும், அன்ன(ப்பறவைகள்) வரையப்பட்டதுமான பட்டு(த்துணியை) உடுத்தப்பட்டவளாயும், நன்றாய்ச் சிவந்ததும், வாசனை திரவியங்கள் போடப்பட்டதுமான மேலாக்கோடு நன்கு போர்த்தப்பட்டவளாயும், மின்னற்கொடி பிரபையை கொண்டவளும், கறுத்து வளைந்த தலைமுடியை உடையவளும், விசாலமான கண்களையுடைவளும், ஸ்ரீயை (அதாவது மகாலக்ஷ்மியை) போன்றவளும், தாமரை மலரிலிருந்து தனிப்பட்டுவந்தவளும், கேசவனது அங்கத்தினில் நிரந்தமானவளுமான (தேவி) சீதாவை அக்னிக்கு முன்பாக அழைத்துக்கொண்டு வந்து, ராகவருக்கு எதிரில் வைத்து, பின்னர் கௌசல்யாவின் ஆனந்தத்தை பெருக்கச்செய்பவரிடம் (அதாவது ஸ்ரீராமரிடம்) கூறினார், ‘இந்த (தேவி) சீதா என் பெண். உம்முடன் சேர்ந்து தர்மத்தை அனுசரிப்பவள். ஆதலால் இவளை பெற்றுக்கொள். உமக்கு மங்கலமுண்டாகட்டும். கையால் கையினை பற்றும். பதிவிரதை. மகா பாக்கியவதி. உமது நிழல் போல் பின்தொடர்பவள்என்று ராஜா கூறி, அப்பொழுது மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட நீரை வார்த்தார்.

பூமியில் தீர்த்தம் வார்க்கப்படவே மகத்தான ஆகாயத்தில் சப்தங்கள் உற்பத்தியாயின. அப்பொழுது தேவர்கள், ரிஷிகள் நல்லது, நல்லதுஎன்று சொல்லுகையில் தேவர்களின் துந்துபி (வாத்திய) முழக்கத்தோடு கூடிய பூமாரி பொழிந்தது. ஜனக ராஜா ஆனந்தம் பொங்கி வழிந்தவராய் இவ்விதம் மந்திர தீர்த்ததோடு ஒப்புவிக்கப்பட்ட (தேவி) சீதாவை (தானம்) கொடுத்துவிட்டு அப்பொழுது கூறினார், ‘லக்ஷ்மணா வா. உமக்கு மங்கலம் உண்டாகுக. என்னால் வளர்க்கப்பட்ட ஊர்மிளாவை ஒப்புக்கொள். கையை (கைகளால்) பற்று. காலதாமதம் வேண்டாம்.

இவ்விதம் அவருக்கு சொல்லிய ஜனகர் பரதரிடம் ரகுநந்தனா, மாண்டவ்யாவின் கையை கைகளால் பற்றுஎன்று வாய் மலர்ந்தருளினார். இன்னும் தர்மாத்மா ஜனகேஷ்வரர் ஷத்ருக்னனிடம் பெரும் கரமுடையோனே, ஸ்ருதகீர்த்தியின் கரத்தை கைகளால் பற்றுஎன்று கூறினார்.

“‘காலதாமதம் வேண்டாம். காகுத்ஸ்தர்களான நீங்கள் எல்லோரும் இனியவர்கள். எல்லோரும் பத்தினிகளோடு நற்செய்கை, நல் விரதம் (இவைகளை உடையவர்களாய்) ஆகுங்கள்.

அந்த நால்வர், ஜனகருடைய வார்த்தையை கேட்டு, வசிஷ்டருடைய அனுமதியின்மேல் நிற்பவர்களாய் நால்வருடைய கரங்களை கைகளால் பற்றினார்கள். மகாத்மாக்களான ரகு(குலத்தவர்களில்) சிறந்தவர்கள், மனைவிகளோடு கூடினவர்களாய் அக்னியையும், வேதியையும், ராஜாவையும், ரிஷிகளையும் பிரதட்சிணம் செய்து, அப்பொழுது விதிபூர்வமாயும், (சாஸ்திரத்தில்) சொன்னபடியும் விவாகம் செய்தார்கள். காகுத்ஸ்தர்களால் அழகியவர்களுடைய கரங்கள் பற்றப்பட்டவளவில் விண்ணிலிருந்து பாட்டு, வாத்தியம் இவைகளின் ஒளியோடும், திவ்ய துந்துபியின் முழக்கத்தோடும், அதிஒளிகொண்ட மகத்தான பூமாரி பொழிந்தது. அப்சரஸ் கூட்டங்களும் நடனம் ஆடினார்கள். கந்தர்வர்கள் மென்மையாக பாடினார்கள். இப்படிப்பட்ட இந்த அற்புதங்கள் ரகு(குலத்தவர்களில்) முக்கியமானவர்களின் விவாகத்தில் நேர்ந்தது. இவ்வண்ணம் நடனம், பாட்டு, தாளம் இவைகளின் முழக்கம் இருக்கும்பொழுதே மகாதேஜஸுடைய அவர்கள் அக்னியை மும்முறை வலம்வந்து, மனைவிகளை கைக்கொண்டார்கள்.

பின், அவர்கள் உபகாரியத்திற்கு புறப்பட்டார்கள். அப்பொழுது ரகுநந்தனர்கள் தாரங்களுடன் கூடினவர்களாய் தத்தமது வாகனங்களில் ஏறிக்கொண்டே அந்த பட்டணத்துள் சென்றார்கள். புத்திரப்பேறு உள்ளவர்களில் சிறந்தவராகிய தசரத ராஜா, ரிஷிக்கூட்டங்களோடு கூடினவராயும், பந்துக்களோடு கூடினவராயும் புத்திரர்களை பார்த்துக்கொண்டே சந்தோஷம் கொண்டவராய் பின் சென்றார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்திமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment