Tuesday, April 21, 2020

எழுபத்திரண்டாவது ஸர்க்கம் – கோதானம் என்ற மங்கலத்தைச் செய்வது


இவ்வாறு சொல்லிய வீரரான அந்த வைதேஹ மன்னரிடம் வசிஷ்டருடன் இருந்த விஷ்வாமித்ர மகாமுனி (பின்வரும்) வார்த்தையை மொழிந்தார், ‘குலநந்தனா (அதாவது ஜனகரே), இக்ஷ்வாகு மற்றும் விதேஹத்தின் குலங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகள். அளவிடற்கரியதான இவைகளுக்கு நிகரானது வேறெதுவும் கிடையாது. ராஜாவே, (ஸ்ரீ)ராம-லக்ஷ்மணர்களுக்கு ஊர்மிளாவுடனான (தேவி) சீதா தர்மத்தால் (ஆன இல்லற) சம்மந்தமாவது சரியானது. ரூபத்தாலும், சம்மந்தத்தாலும் ஏற்றது. நரர்களில் சிறந்தவரே, சொல்வதற்குரியதான எனது வார்த்தை கேட்கப்படட்டும். ராஜாவே, இந்த தர்மமறிந்தவரான குஷத்வஜ ராஜா, (தமது) இளைய தம்பியார். நரர்களில் சிறந்தவரே, புவனத்தில் ரூபத்தில் ஒப்பற்றவர்களான இந்த தர்மாத்மாவின் குமாரிகள் இருவரையும் கல்யாணம் செய்துகொடுத்தலை கேட்டுக்கொள்கிறோம். ராஜாவே, குமாரரான பரதனுக்கும், புத்திமானான ஷத்ருக்னனுக்கும், இவ்விரண்டு மகாத்மாக்களுடைய வளத்திற்காக குமாரிகளிருவரையும் தரும்படி கேட்கின்றோம். தசரதருடைய குமாரர்களான இவர்கள் எல்லோரும் ரூபமும், இளமையும் பொருந்தியவர்கள். லோகபாலர்களை போன்றவர்கள். தேவர்களுக்கு ஒப்பான பராக்கிரமுடையவர்கள். ராஜேந்திரா! புண்ணிய செயலையுடைய உம்முடையதும், இக்ஷ்வாகு குலமும் இவ்விரண்டின் திடமான சம்மந்தத்தால் பிணைக்கப்படட்டும்.

வசிஷ்டருடைய அனுமதியின்பேரில் விஷ்வாமித்ரர் (சொன்ன) வார்த்தையை கேட்டு, அப்பொழுது ஜனகர் கைகளை கூப்பியவராய் முனிபுங்கவர்களிடம் (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘எதனால் முனிபுங்கவர்களான (நீங்கள்), எந்த எங்களுடைய சரியான குலசம்மந்தத்தை சுயமாய் ஆணையிடுகிறீர்களோ, அதனால் இந்த குலமானது தன்யம் ஆனதென எண்ணுகிறேன். இவ்வாறே நடைபெறட்டும். உங்களுக்கு மங்கலம். இந்த குஷத்வஜனின் குமாரிகளை ஒன்றுசேர்ந்திருக்கிறவர்களான ஷத்ருக்னன் (மற்றும்) பரதன் இவ்விருவர்களும் பத்தினிகளாக அடையட்டும். மகாமுனியே, மகாபலவானாகிய நான்கு ராஜபுத்திரர்கள், நான்கு ராஜபுத்திரிகளுடைய கைகளை ஒரே நாளில் பெறட்டும். பிராமணரே, எதில் பகன் (என்பவர்) பிரஜாபதியோ (அதாவது அதிஷ்டாதாவான தேவதையோ) (அந்த) ஃபல்குனீ என்கிற உத்திர (நட்சத்திர) நாளில் அறிஞர்கள் விவாக முகூர்த்தத்தை கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு அழகான வார்த்தையை சொல்லிவிட்டு, மீண்டுமெழுந்து ஜனக ராஜா, கைகூப்பினவராய் இரண்டு முனிவரர்களிடமும் (அதாவது வசிஷ்டர் மற்றும் விஷ்வாமித்ரர் இருவரிடமும்) (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘எனக்கு பெரும் தர்மம் அருளப்பட்டது. உங்கள் இருவருக்கும் எப்பொழுதும் சிஷ்யனாக ஆகின்றேன். முனிபுங்கவர்களிருவரும் இது தசரதருக்குரியதாயும், அயோத்யா பட்டணம் எனக்குரியதாயும் என்றபடி இந்த முக்கிய ஆசனங்களில் எழுந்தருளட்டும். பிரபுத்வத்தில் (அதாவது அதிகாரத்தில்) ஐயமில்லை. விருப்படி செய்ய உரியவராகிறீர்கள்.

வைதேஹரான (அதாவது விதேஹ நாட்டவரான) ஜனகர், அவ்வாறு சொல்லுகையில் ரகுநந்தனரான தசரத ராஜா மகிழ்ந்தவராய் வேந்தரிடம் (அதாவது ஜனகரிடம்) மறுமொழியுரைத்தார், ‘மிதிலைக்கு ஈசனே, அண்ணன் தம்பிகளான நீங்கள் இருவரும் அளவற்ற (நற்)குணமுடையவர்கள். ரிஷிகளும் அரசர்களின் கூட்டங்களும் உங்களால் நன்றாய் பூஜிக்கப்பட்டதாய் ஆகிறார்கள். ஸ்வஸ்தியை (அதாவது நலத்தை) பெறுவீர்கள். உங்களுக்கு மங்கலம் உண்டாகுக. என் ஆலயத்திற்கு (அதாவது இருப்பிடத்திற்கு) செல்கிறேன். அனைத்து சிரார்த்த கர்மங்களையும் (அதாவது நாந்தி முதலிய மன்றற்குரிய பூர்வ சடங்குகளைச்) செய்கிறேன்,’ என்று மொழிந்தார்.

அப்பொழுது பெரும்புகழ் படைத்த தசரத ராஜா, அந்த நரபதியிடம் விடைபெற்றுக்கொண்டு, அவ்விரண்டு முனிவர்களில் இந்திரர்களை முன்னிட்டுக்கொண்டு, உடனே புறப்பட்டார். அந்த ராஜா (அதாவது தசரதர்) நிலையத்தை அடைந்து, சிரார்த்த கர்மாவை விதிப்படி நடத்தி, சூர்ய உதயத்திலேயே எழுந்து, உத்தமமானதும், ஆரோக்கியமானதுமான கோ தானத்தை செய்தார். நராதிபதியான ராஜா, புத்திரர்களை உத்தேசித்து, பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் நூறாயிரம் பசுக்களை தர்மப்படி கொடுத்தார். புருஷர்களில் காளையரும், புத்திரர்களிடத்தில் பாசமுள்ளவருமான தசரதர், புத்திரர்களுடைய கோ தானத்தை உத்தேசித்து, பொன்குப்பி பூட்டிய கொம்புகளை உடையவைகளும், சிறந்ததாய் இருக்கும், கன்றுகளுடன் இருக்கும் குடம்குடமாய் பால் கறக்கும் நான்கு லட்ச பசுக்களையும், இதர அநேக பொருட்களையும் த்விஜர்களுக்கு தந்தார். கோ தானத்தை செய்துமுடித்த புதல்வர்களால் சூழப்பட்டிருந்த அந்த ராஜா, அப்பொழுது லோகபாலர்களால் (பொதுவாக லோகபாலர்கள் எட்டு பேர் ஆவர் - வட திசைக்கு குபேரனும், தென் திசைக்கு எமனும், கிழக்கு திசைக்கு இந்திரனும், மேற்கு திசைக்கு வருணனும், வடகிழக்கு திசைக்கு ஈசானரும், தென்கிழக்கு திசைக்கு அக்னியும், வடமேற்கு திசைக்கு வாயுவும், தென்மேற்கு திசைக்கு நிருத்தியும் ஆவர்) சூழப்பட்ட இனிமையான பிரஜாபதி (அதாவது பிரம்மதேவர்) போலவே விளங்கினார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்திரண்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment