Monday, April 20, 2020

எழுபத்தோராவது ஸர்க்கம் – கன்னிகாதான பிரதிக்ஞை

(ஜனகர்)

ஜனகர், இவ்விதம் சொல்லியவரிடம், கைகூப்பியவராய் மறுமொழியுரைத்தார், ‘எங்களுடைய குளம் விவரிக்கப்படுவதற்கு செவிகொடுப்பது (தங்களுக்கு) தகும். தங்களுக்கு மங்கலம். முனிவர்களுள் சிறந்தவரே, (நற்)குலத்தில் பிறந்தவனால் கன்னிகாதானத்தில் குல (வரலாற்றை) ஒன்றும் மீதமில்லாமல் சொல்லப்படவேண்டியது. என்கிறபடியால், மகாமுனியே! அதற்கு என்னிடம் செவிமிடுப்பீராக. நிமி என்ற ராஜா, தனது கர்மங்களால் அனைத்து சாத்வீகர்களுள் சிறந்தவரெனவும், உன்னத தர்மாத்மாவெனவும் மூவுலகிலும் பிரசித்தி பெற்றிருந்தார். முதலாம் ஜனகர் என்று பெயர்கொண்டவரும், மிதிலா (பட்டணம்) நிர்மாணம் செய்யப்பட்டது எவராலோ (அந்த) மிதி என்கிற பெயர்கொண்டவர் தான் அவருடைய (அதாவது நிமியினுடைய) புத்திரர். ஜனகரிடத்தினின்று உதாவஸு (பிறந்தார்). நந்திவர்தனன் (என்கிற) தர்மாத்மாவான ராஜாதான் உதாவஸுவின் புதல்வர். பெயர்பெற்ற ஸுகேது (என்ற) பெயர் (தாங்கியவர்) தான் நந்திவர்தனனுடைய மைந்தர். மகாபலவானும், தர்மாத்மாவும் ஆன தேவராதன் (என்பவர்) ஸுகேதுவின் பிள்ளை. ப்ருஹத்ரதன் என்று வழங்கப்பட்டவர், ராஜரிஷியாகிய தேவராதரின் புதல்வர். சூரரும், சக்திவாய்ந்தவருமாகிய மஹாவீரன் (என்பவர்) ப்ருஹத்ரதருக்கு பிறந்தார். தைரியவானும், சத்தியமான பராக்கிரமம் உடையவருமான ஸுத்ருதி (என்பவர்) மஹாவீரனுக்கு (பிறந்தார்). தர்மாத்மாவும், நல் தார்மிகருமான த்ருஷ்டகேது (என்பவர்) ஸுத்ருதியின் (மகன்). பிரசித்திபெற்ற ஹர்யஷ்வன் என்பவர்தான் ராஜரிஷியான த்ருஷ்டகேதுவின் (புதல்வர்). மரு (என்பவர்) ஹர்யஷ்வரின் புத்திரர். ப்ரதிந்தகன் (என்பவர்) மருவின் புத்திரர். தர்மாத்மாவான கீர்த்திரதன் (எனும்) ராஜா, ப்ரதிந்தகரின் மைந்தர். அதற்குமேல், தேவமீடன் என்றும் வழங்கப்பட்டவர் கீர்த்திரதரின் புத்திரர். விபுதன் (என்பவர்) தேவமீடரின் (புதல்வர்). மஹீத்ரகன் (என்பவர்) விபுதரின் (புதல்வர்). மகாபலவானான கீர்த்திராதன் (எனும்) ராஜா, மஹீத்ரகரின் பிள்ளை. மஹாரோமா (என்பவர்) ராஜரிஷியான கீர்த்திராதருக்கு பிறந்தார். தர்மாத்மாவான ஸ்வர்ணரோமா மஹாரோமாவிற்கு பிறந்தார். ஹரஸ்வரோமா என்பவர்தான் ராஜரிஷி ஸ்வர்ணரேமாவிற்கு பிறந்தார். அந்த தர்மமறிந்த மகாத்மாவான ராஜாவிற்கு புத்திரர்கள் இரண்டு. மூத்தவன் நான். என் உடன்பிறந்த சகோதரன், வீரனான குஷத்வஜன்.

தந்தையும் நராதிபதியுமான அவர், மூத்தவனான என்னை ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, குஷத்வஜனை பாரமாக என்னிடம் ஒப்புவித்துவிட்டு, வனம் சென்றார். வயதுமுதிர்ந்த தந்தை ஸ்வர்கமடைந்தவளவில், தேவர்களுக்கு ஒப்பான, சகோதரனான குஷத்வஜனை சினேகத்தோடு பார்ப்பவனாய், தர்மத்தோடு (ராஜ்ய)பாரத்தை வகித்தேன். பிறகு ஒரு காலத்தில், சாங்காஷ்ய பட்டணத்திலிருந்து வீர்யவானும், ராஜாவுமான ஸுதன்வா (என்பவன்) மிதிலாவை முற்றுகை செய்பவனாய் வந்து சேர்ந்தான். அவன் மிகவும் உத்தமமான சிவனாரின் வில்லும், தாமரையிதழ் போன்ற கண்களையுடைய கன்னிகை சீதாவும் எனக்கு கொடுக்கப்படட்டும்.என்று எனக்கு (தூது) அனுப்பினான். பிரம்மரிஷியே (அதாவது வசிஷ்டரே), அவளை தரமறுத்ததால் என்னோடு கூட யுத்தம் நடந்தது. அருகே நெருங்கிய அந்த ராஜா ஸுதன்வா என்னால் கொல்லப்பட்டான். முனிவர்களுள் சிறந்தவரே, அந்த ஸுதன்வா என்ற நராதிபதியை கொன்று; வீரனும், சகோதரனுமான குஷத்வஜனை சாங்காஷ்யத்தில் பட்டாபிஷேக செய்துவைத்தேன்.

மகாமுனியே, இவன் என்னுடைய இளைய சகோதரன். நான் மூத்தவன். முனிபுங்கவரே! அந்த கன்னிகைகளான சீதாவை (ஸ்ரீ)ராமருக்கும், ஊர்மிளாவை லக்ஷ்மணருக்கும் மிகுந்த பிரீதியுடன் (கன்னிகாதானம் செய்து) தருகிறேன். தங்களுக்கு மங்கலம். என்னுடைய சுரகன்னிகைகளுக்கு (அதாவது தேவகன்னிகைகளுக்கு) நிகரான பெண்ணும், வீர்யத்தால் அடையப்பட்டவளுமான சீதாவும், இளையவளான ஊர்மிளாவும் த்ரிகரணத்தோடு (அதாவது எண்ணம், உடல், வாக்கு ஆகிய மூன்றோடு) (கன்னிகாதானம் செய்து) தருகிறேன். இதில் சந்தேகமில்லை. ராஜாவே (அதாவது தசரதரே)! (ஸ்ரீ)ராம-லக்ஷ்மணருக்கு கோதானம் மற்றும் பித்ருகாரியம் (இவற்றை) செய்துவைய்யும். அதற்குமேல் விவாகத்தை செய்யும். தங்களுக்கு மங்கலம். பெருங்கரமுடையோரே, இன்று மக நட்சத்திரமன்றோ! பிரபுவே! மூன்றாவது தினத்தில் பங்குனி என்கிற அந்த உத்திர நட்சத்திரத்தில் விவாகத்தை செய்யும். ராஜா! (ஸ்ரீ)ராம-லக்ஷ்மணர்களின் விஷயத்தில் மேன்மேலும் சுகங்களைக்கொடுக்கிற தனமானது செய்யத்தக்கது.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபத்தோராவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment