Sunday, April 19, 2020

எழுபதாவது ஸர்க்கம் – தசரத வம்ச வர்ணனை

(ஜானகி கோயில், ஜனக்பூர், நேபாளம்)

அதற்குமேல் பொழுதுவிடிந்தவுடன் மகரிஷிகளோடு (யாக) கர்மங்களை முடித்துக்கொண்டு, சொல்நுட்பமறிந்தவரான ஜனகர், புரோகிதரான ஷதானந்தரிடம் (பின்வரும்) வாக்கியத்தை கூறினார், ‘மகாதேஜஸ்வியான, வீர்யவானான, அதிதார்மிகனான குஷத்வஜன் என்று பெயர் பெற்ற என் சகோதரன் நீர்நெல்லித் தோட்டங்களால் சூழப்பட்டதும், புண்ணியத்தைப் போன்றதும், புஷ்பக விமானத்தை போன்றதும், சுபமானதுமான சாங்காஷ்யா பட்டணத்தில், இக்ஷுமதியாற்றின் நீரை பருகி வசித்துவருகிறான். மகாதேஜஸ்வியான அவன் யாகத்தை காக்க வேண்டியவன். எனது இந்த பிரீதியை என்னுடன் சேர்ந்து அவனும் அனுபவிப்பான். அவனை நான் பார்க்க இச்சைகொள்கிறேன்.

ஷதானந்தருடைய முன்னிலையில் இப்படியான சொல் சொன்னவுடனேயே, (வேறு வேலையால்) ஆக்கிரமிக்கப்படாத சிலர் வந்தார்கள். ஜனகர் அவர்களை கட்டளையிட்டனுப்பினார். இந்திரன் ஆணையினால் விஷ்ணு எவ்வண்ணமோ, அவ்வண்ணமே இவ்விஷயத்தில் நரேந்திரருடைய சாசனத்தால் சீக்கிரமாக (செல்லும்) குதிரைகள் மீதேறி நரர்களுள் புலியை (அதாவது குஷத்வஜனை) அழைத்துவர புறப்பட்டுப்போனார்கள் (அதிதியின் புதல்வர்களான 12 ஆதித்யர்களில் விஷ்ணு இந்திரனுக்கு இளையவர் ஆவார்).

அவர்கள் சாங்காஷ்யத்திற்குள் வந்துசேர்ந்து, குஷத்வஜனை பார்த்தார்கள். ஜனகருடைய சித்தத்தை உள்ளபடி சமர்பித்தார்கள். மகாதேஜஸ்வியான மன்னர் குஷத்வஜன், மகாபலவான்களான, தூதர்களில் சிறந்தோரால் அந்த விஷயத்தை கேட்டு, நரேந்திரருடைய (அதாவது அரசர் ஜனகருடைய) ஆணையென்பதால் உடனேயே வந்துசேர்ந்தார். அவர் உடனே தர்மத்தில் பக்தியுள்ள ஜனகரை சந்தித்தார். அவர் (அதாவது குஷத்வஜன்) ஷதானந்தரையும், தார்மிகரான ராஜாவையும் அபிவாதனம் செய்து விட்டு (அதாவது வணங்கி விட்டு), அந்த பின்னர், ராஜாக்களுக்கு தகுந்ததான மிகவும் திவ்யமான ஆசனத்தில் அமர்ந்தார். அளவற்ற தேஜஸ் உடையவர்களும், வீரர்களுமான அந்த சகோதரர்கள் இவ்விஷயத்தில் கலந்து (பேசினவர்களாய்), மந்திரிகளில் சிறந்தவரான சுதாமனிடம் (உத்தரவை) கொடுத்தனுப்பினார்கள், ‘பிரதம மந்திரியே, சீக்கிரமாய் செல்லும். நிகரற்ற, அளவற்ற தேஜஸ்வியான ஐகாக்ஷரை (அதாவது தசரதரை) மந்திரிமார்களோடு கூடினாராகவும், புதல்வர்களோடு கூடினாராகவும் அழைத்துவாரும்.

அவர் (அதாவது சுதாமன்) (தசரதர்) தங்கியிருந்த வசிப்பிடத்திற்கு போய், ரகுக்களுடைய குலத்தை தழைக்கச்செய்பவரை கண்டார். உடனே இவரை (அதாவது தசரதரை) சிரம் தாழ்த்தி அபிவாதனம் செய்து (அதாவது நமஸ்காரம் செய்து), பின்னர் இவ்விதம் கூறினார், ‘அயோத்யாதிபதியே, வீரரே, மிதிலாதிபதியான அந்த வைதேஹர் (அதாவது ஜனகர்), தம்மை உபாத்யாயர்கள், புரோகிதர்கள் சகிதமாய் காண உத்தேசம் கொண்டு (காத்திருக்கிறார்).

மந்திரிகளில் சிறந்தவரின் வார்த்தை கேட்டு, அப்பொழுதே ராஜா, ரிஷிகணங்களோடும், பந்துக்களுடனும், ஜனகர் எங்கிருந்தாரோ அங்கு சென்றார். ஸ்ரீமானான ஜனக ராஜா, உள்ளம் பூரித்தவராய் ராஜராஜரை (அதாவது தசரதரை) தம்பியுடன் கூடவே எதிர்கொண்டு அழைத்து, இல்லத்திற்குள் பிரவேசித்து கொண்டாடினர். மந்திரிகளோடு இருந்தவரும், உபாத்யாயர்களோடு இருந்தவரும், பந்துக்களோடு இருந்தவரும், சொற்களின் அறிவில் சிறந்தவருமான அந்த ராஜா (அதாவது தசரதர்) வைதேஹரிடம் (அதாவது ஜனகரிடம்) இவ்விதமான வாக்கியத்தை சொன்னார், ‘மகாராஜா, ரிஷி வசிஷ்ட பகவான், இக்ஷ்வாகு குலத்தின் தெய்வமென்றும், எல்லா காரியங்களிலும் (முன்னின்று) பேசுபவர் என்றும் தமக்கு தெரிந்ததே! மகரிஷிகள் எல்லோருடன் கூட இந்த தர்மாத்மாவான வசிஷ்டர், விஷ்வாமித்ரருடைய அனுமதிபெற்றவராகி என் வம்சவரிசை கிரமத்தை விவரிப்பார்.

ராஜாக்கள் (மற்றும்) மகாத்மாக்கள் மத்தியில் நரர்களில் சிறந்தவரான தசரதர் இவ்விதம் சொல்லிவிட்டு மௌனமடைந்தவுடனேயே சொற்களில் வித்தகரும், ரிஷியுமான வசிஷ்ட பகவான், புரோகிதருடனும் வைதேஹரிடம் (அதாவது ஜனகரிடம்) (பின்வரும்) வாக்கியத்தை கூறினார், ‘பிரம்மா நிரந்தரமானவர், நித்தியமானவர், புலன்களுக்கு எட்டாததிலிருந்து உண்டானவர். அவரிடத்தினின்று மரீசி உண்டானார். மரீசியின் மைந்தர் காஷ்யபர். காஷ்யபரிடத்தினின்று விவஸ்வான் (அதாவது சூர்யன்) பிறந்தார். வைவஸ்வதன் (அதாவது விவஸ்வானின் மகன்) என அழைக்கப்படுபவர் மனு. மனு தான் முதல் பிரஜாபதி. மனுவின் பிள்ளை இக்ஷ்வாகு. அயோத்யாவில் அந்த இக்ஷ்வாகுவை முதல் ராஜாவாக அறியும். ஸ்ரீமானென பிரசித்திபெற்றவராகிய குக்ஷி என்பவர்தான் இக்ஷ்வாகுவின் புதல்வர். அதற்குமேல் குக்ஷியின் பிள்ளையாய் ஸ்ரீமானான விகுக்ஷி உண்டானார். மகாதேஜஸ்வியான, தைரியமான பாணன் தான் விகுக்ஷியின் புத்திரர். மகாதேஜஸ்வியான, கம்பீரமான அனரண்யன் தான் பாணரின் (புதல்வர்). அனரண்யரிடத்திலிருந்து ப்ருது உண்டானார். த்ரிஷங்கு தான் ப்ருதுவின் மைந்தர். த்ரிஷங்குவிற்கு பெரும் புகழுடையவரான துந்துமாரன் (எனும்) புத்திரர் உண்டானார். துந்துமாரனிடத்தினின்று மகாதேஜஸ்வியும், மகாரதருமாகிய யுவனாஷ்வன் (பிறந்தார்). யுவனாஷ்வரின் பிள்ளை பூமியின் பதியான, ஸ்ரீமானான மாந்தாதா. மாந்தாதாவிற்கு ஸ்ரீமானான ஸுஸந்தி தான் பிள்ளையாய் பிறந்தார். த்ருவஸந்தி மற்றும் ப்ரஸேனஜித் இருவரும் ஸுஸந்தியின் புத்திரர்கள். பெயர்பெற்ற, புகழுடையவரான பரதன் என்ற பெயர்கொண்டவர் தான் த்ருவஸந்தியின் (மைந்தர்). மகாதேஜஸ்வியான அஸிதன் என்ற பெயர்கொண்டவர்தான் பரதனிடத்தினின்று பிறந்தார். இந்த சூரர்களான ஹைஹயர்களும், தாலஜங்கர்களும், ஷஷிபிந்தவர்களும், சத்ருவாய் ஏற்பட்ட இதர ராஜாக்கள் எவர்களோ அவர்களை அந்த இந்த ராஜாதான் நேரில் எதிர்த்து போர் செய்தார். அப்பொழுது (அஸிதன் தேசத்தினின்று) அகற்றப்பட்டனர். அற்பலவானாகிய அஸித ராஜா, இருமனைவிகளோடு கூடினவராய், இமய(மலைக்கு) வந்து வசித்தார். காலதர்மத்தை (அதாவது மரணத்தை) அடைந்தார். அப்போது இவருடைய மனைவிகள் இருவரும், கர்ப்பிணிகளாக இருந்தார்கள். இது செவிவழியாய் (தெரியவந்தது). ஒருத்தி மற்றோர் மனைவிக்கு கரு அழியும் பொருட்டு விஷத்தை கொடுத்தாள். அதே சமயத்தில் ச்யவனர் என்ற பெயர்கொண்ட முனிவர், இமயமலையை அடைந்தவராய்ரம்மியமான (ஓர்) உத்தம மலைக்குன்றில் மகிழ்ச்சியாய் இருந்தார். மகாபாக்கியவதியும், தாமரை இதழ் போன்ற கண்களை உடையவளுமான  ஒருத்தி உத்தமனான பிள்ளையை பெறக்கோரினவளாய், தேவர்களைப் போன்ற ஒளியுடையவரான பார்கவரை (அதாவது ச்யவனரை) அவரிருந்த இடத்திற்கு சென்று வந்தனம் செய்தாள். காளிந்தி (என்று பெயருடைய) அவள், அந்த ரிஷிக்கு அருகில் சென்று, (திருவடிகளில் முடிதாழ்த்தி) வணங்கினாள். அந்த அந்தணர், புத்திரனை விரும்பிய அவளிடம் புத்திர பிறப்பில் (பின்வருமாறு) கூறினார், ‘தாமரை கண் கொண்டவளே, மகாபாக்கியவதியே, விஷத்தால் உருக்கொண்டவனாயும், மிகப்பெரும் பலசாலியாயும், மஹாவீர்யவானாயும், மகாதேஜஸ்வியாயும், ஸ்ரீமானுமாகிய நற்புத்திரனை உன் வயற்றில் சீக்கிரமாகவே பிறக்கப்போகிறான். ஏக்கத்தை விட்டொழி.

மின்னற்கொடி போன்ற மகா ஒளியுடையவளும், கணவனையிழந்த சோகத்தால் மனம் நொந்தவளும், அப்பொழுதும் அஸிதர் ஸ்வர்கத்திலிருக்கையிலும், மன்னரிடத்தில் மனத்தை நிலைநிறுத்தியவளும், பதிவிரதையும், ராஜபுத்திரியும், தேவியும், ச்யவனரை நமஸ்கரித்து மேற்கண்ட வண்ணமாய் சொல்லப்பெற்றவளும், மகாபாக்கியவாதியுமான அவள் அதனால் புத்திரனை பெற்றாள். கருவழிக்க வேண்டுமென்று சகபத்தினியாலே அவளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. அவர் அதே விஷத்தோடேயே பிறந்தார். அதனால் சகரன் என வழங்கலானார் (கர என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் விஷம் என்று பொருள்). அஸமஞ்ஜன் தான் ஸகரரின் (புதல்வன்). அதற்குமேல் அஸமஞ்ஜனிடத்தினின்று அம்ஷுமான் (பிறந்தார்). திலீபன் அம்ஷுமானின் புத்திரர். பகீரதன் திலீபனுடைய (புதல்வர்). பகீரதரிடமிருந்து ககுத்ஸ்தனும், அவரிடத்தினின்று ரகுவும் பிறந்தனர். ரகுவிற்கு தேஜஸ்வியாய் இருந்தும் ஒரு (சாபத்தால்) நரமாமிசத்தை புசிப்பவரும், களங்கமான பாதங்களை உடையவருமான ப்ரவ்ருத்தன் என்ற புத்திரர் உண்டானார். அவரிடத்தினின்று ஷங்கன் (என்பவர்) பிறந்தார். ஷங்கரிடத்தினின்று சுதர்ஷனரும், சுதர்ஷனரிடத்தினின்று அக்னிவர்ணரும், அக்னிவர்ணரிடத்தினின்று ஷீக்ரகரும், ஷீக்ரகரிடத்தினின்று மருவும், மருவிடத்தினின்று ப்ரஷுஸ்ருகரும் உண்டானார்கள். ப்ரஷுஸ்ருகரிடத்தினின்று அம்பரீஷன் (உண்டானார்). அம்பரீஷனின் புத்திரரான நஹுஷன் என்பவர்தான் பூபதியாய் விளங்கினார். யயாதி என்பவர் நஹுஷனின் (புதல்வர்). நாபாகன் (என்பவர்) யயாதியின் புதல்வர். நாபாகருக்கு அஜன் (என்பவர்) உண்டானார். அஜரிடத்திலிருந்து தசரதர் உண்டானார். இந்த தசரதரிடத்தினின்று சகோதரர்களாகிய (ஸ்ரீ)ராமரும் லக்ஷ்மணரும் பிறந்தார்கள்.

ராஜாக்களாய், ஆதி வம்சத்தின் சுத்தியுடையவர்களாய், பரமதர்மவான்களாய், வீரர்களாய், சத்தியவாதிகளாய், இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவர்களுக்குள் சேர்ந்திருக்கும் காரணத்தால் (ஸ்ரீ)ராம-லக்ஷ்மணருக்கு, அரசே, தம்முடைய பெண்களை கொடுக்க வேண்டுகிறேன். நரர்களுள் சிறந்தவரே, ஒப்பான பிள்ளைகளிருவருக்கும் ஒப்பான பெண்களிருவரையும் தருவதே தங்களுக்கு தகுந்ததாகும்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எழுபதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment