Saturday, April 18, 2020

அறுபத்தொன்பதாவது ஸர்க்கம் – மிதிலைக்கு வருவது

(அயோத்யாவிலிருந்து மிதிலை நகரம் தொலைவு)

இரவு கழிந்ததுமே அப்பொழுது உபாத்யாயருடன் இருந்தவரும், பந்துக்களுடன் இருந்தவரும், மகிழ்வுடனிருந்தவருமாகிய தசரத ராஜா, சுமந்த்ரரிடம் இவ்விதம் கூறினார், ‘இப்பொழுதே தனத்தை (கண்காணிக்கும்) அதிகாரிகள் எல்லோரும், பலவித ரத்தினங்கள் நிறைந்தவர்களாய், ஏராளமான தனத்தை எடுத்துக்கொண்டும், நன்கு ஆயத்தமானவர்களாய் முதலில் பிரயாணமாகட்டும். ஒப்புயர்வற்றதும், (பல்லக்குகள், ரதங்கள் போன்ற) வாகனங்களுடன் இருக்கிறதான சதுரங்கபலம் (அதாவது ரதங்கள், யானைப்படை, குதிரைப்படை மற்றும் காலாட்படை) எல்லாமும் சீக்கிரமாகவே என் ஆணை கிடைத்த காலத்திலேயே புறப்படவேண்டும். இந்த த்விஜர்களாகிய வசிஷ்டரும், வாமதேவரும், ஜாபாலியும், காஷ்யபரும், நீண்ட ஆயுள் கொண்ட மார்க்கண்டேயரும், காத்யாயன ரிஷியும், முதலில் பிரயாணமாகட்டும். தூதர்கள் என்னை துரிதப்படுத்துகிறார்கள் என்கிறபடியால் காலதாமதம் ஆகாதபடி எனது ரதத்தை தயார் செய்துவாரும்.

அந்த பானு பகவான் (அதாவது சூர்ய பகவான்) போன்ற மகாதேஜஸ்வியான, ரகுநந்தனரான, தசரத ராஜா இவ்வாறு சொல்லிவிட்டு ரதத்தில் ஏறினார். ரிஷிகளுடன் கூட போய்க்கொண்டிருக்கும் ராஜாவை, நரேந்திரருடைய (அதாவது தசரதருடைய) வார்த்தையின்படி அந்த சதுரங்க சேனையும் பின் தொடர்ந்தது. வழியை நான்கு நாட்களில் கடந்து விதேஹ (தேசத்திற்கு) வந்துசேர்ந்தார். ஸ்ரீமானான ஜனக ராஜா (விஷயத்தை) கேட்டதுமே, (அதிதி)பூஜையை (புரிந்திட) ஏற்பாடு செய்தார். அப்பொழுது உள்ளம் பூரித்திருந்த ஜனக ராஜா, வயது முதிர்ந்தவரும், ராஜாவுமான தசரத அரசரை போய்க்கண்டு, மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். உடனே நரர்களில் சிறந்தவர் (அதாவது ஜனகர்), மனக்களிப்புடன் விளங்கும் நரர்களில் சிறந்தவரிடம் (அதாவது தசரதரிடம்) பேசினலானார், ‘ராகவ மகாராஜா (அதாவது தசரத மகாராஜா), (தாம்) எழுந்தருளியிருப்பபது (எனது) அதிர்ஷ்டமே! தங்களுக்கு நல்வரவு. வீர்யத்தால் வென்றவர்களான இவ்விரண்டு புத்திரர்களை பார்த்து பிரீதி அடையுங்கள். அனைத்து தேவர்களில் இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே மகாதேஜஸ்வியான ரிஷி வசிஷ்ட பகவான், த்விஜர்களில் சிறந்தவர்களோடு கூட வந்திருப்பது (எனது) அதிர்ஷ்டமே! என்னுடைய இடையூறுகள் வெல்லப்பட்டன. (இதுவும் என்) அதிர்ஷ்டமே. வீர்யத்தால் பெருமைபெற்று விளங்கும் மகாத்மாக்களாகிய ராகவர்களோடு கூட (திருமண) சம்பந்தத்தினால் எனது குலம் பூஜிக்கப்பெற்றதாகிறது. (இதுவும் எங்களின்) அதிர்ஷ்டமே. நரர்களில் சிறந்தவரே (அதாவது தசரதரே), நாளை காலையில் ரிஷிகளில் உத்தமர்களோடு யாகத்தினுடைய முடிவில், நரர்களில் சிறந்தவரே, விவாகத்தை நடத்தி வைப்பதே தங்களுக்கு தகும்.

ரிஷிகளின் மத்தியில் அவருடைய அம்மொழியை கேட்ட சொல்நுட்பங்களில் நிபுணரும், சிறந்தவருமான நராதிபதி (அதாவது தசரதர்), வேந்தரிடம் (அதாவது ஜனகரிடம்) (பின்வரும்) வாக்கியத்தை மறுமொழியுரைத்தார், '(கொடையை) பெறுதல் (கொடையை) தருபவரின் வசத்தில் உள்ளது, என்ற இது என்னால் முன்னரே கேட்கப்பட்டதாகும். தர்மமறிந்தவரே! எப்படி சொல்வீரோ அப்படி நாங்கள் செய்யக்கடவோம்.'

சத்தியவாதியான, தர்மிஷ்டரான, புகழ்வாய்ந்தவரான வார்த்தையை விதேஹாதிபதி செவியுற்று, மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தார். அப்பொழுது முனிகணங்கள் எல்லோரும், ஒருவரையொருவர் சந்தித்ததில் மிகுந்த ஆனந்தத்துடன் கூடினவர்களாய் அவ்விரவில் சுகமாக வசித்தார்கள். புத்திரர்களான ராகவர்களை (அதாவது ஸ்ரீராம-லக்ஷ்மணரை) பார்த்து, மிகவும் மகிழ்ந்தவரான ராஜா (தசரதர்), ஜனகரால் நன்கு பூஜிக்கப்பட்டவராய், மிகுந்த பிரீதியடைந்தவராய் தங்கினார். மகாதேஜஸ்வியான, தத்துவங்களில் நிபுணரான ஜனகர், யாகத்தினுடையவனும், புதல்விகள் இருவற்காகவும், தர்மத்தின்படி (ஆகவேண்டிய) காரியத்தை இரவிலேயே செய்துவிட்டிருந்தார். அதன்மேல் பலசூதனனுக்கு (அதாவது இந்திரனுக்கு) பிரியரான ஜனகர், மகாத்மாக்களான முனிகளுடைய (மற்றும்) நராதிபதிகளுடைய கூட்டத்தை அனுப்பிவிட்டு, அந்த யாகசாலையில் விதிப்படி பிரவேசித்து இரவை கழித்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்தொன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment