Friday, April 17, 2020

அறுபத்தெட்டாவது ஸர்க்கம் – தசரதர் மிதிலைக்கு புறப்படுவது


ஜனகரால் வழிகாட்டப்பட்ட அந்த தூதர்கள் களைப்படைந்த வாகனங்களை உடையவர்களாகி மார்கத்தில் (அதாவது வழியில்) மூன்றிரவு கழித்தார்கள். அவர்கள் அயோத்யா பட்டணத்துள் பிரவேசித்தார்கள். ராஜாவினுடைய (அதாவது தசரதரினுடைய) பவனத்தை அவர்கள் அடைந்து, வாயிலில் நிற்பவர்களிடம் இவ்விதம் கூறினர், ‘எங்களை ஜனகருடைய தூதர்கள் என ராஜாவிற்கு சீக்கிரமாகவே தெரிவிக்கவேண்டும்.இவ்விதம் சொல்லப்பட்டவர்களான வாயிற்காப்பாளர்கள் ராகவரிடம் (அதாவது தசரதரிடம்) தெரியப்படுத்தினார்கள்.

தூதர்கள் ராஜாவின் வார்த்தையின் பேரில் ராஜவசிப்பிடத்துள் பிரவேசித்தார்கள். அவர்கள் தேவர் போலிருப்பவரும், வயது முதிர்ந்தவருமான தசரத அரசரை கண்டார்கள். தூதர்கள் எல்லோரும், ராஜாவிடம் அடிபணிந்து நமஸ்கரித்து, கைகளை கூப்பிக் கொண்டவர்களாய், படபடப்பு இல்லாதவர்களாய், மதுரமான சொற்களமைந்த (பின்வரும்) வாக்கியத்தை கூறினர், ‘ராஜசிம்மமே, உன்னதமானவரே, எதிரிகளை அழிப்பவரே, ரகு (வம்சத்தவர்களில்) சிறந்தவரே, மிதிலாதேசவாசியாகிய ஜனக ராஜா, பூஜிக்கப்பட்ட அக்னிஹோத்ரங்களுடன் கூடினவரும், உபாத்யாயர்களோடும், புரோகிதர்களோடும் இருக்கும் (தம்மிடம்) குறைவற்ற நலத்தை (விசாரிக்கச் சொன்னார்). ஜனக மகாராஜா, பட்டணத்து ஜனங்களுடனிருக்கும் தம்மை சினேகத்துடன் கூடிய மதுரமான பேச்சினால் மீண்டும் மீண்டும் (நலம்) விசாரித்தார். மிதிலாதிபதியான ஜனகர், நலத்தை கேட்டுவிட்டு, நிலைபெற்றதும், கௌஷிகரின் (அதாவது விஷ்வாமித்ரரின்) அனுமதியின்பேரில் இவ்விதமான வாக்கியத்தை தமக்கு கூறினார், ‘என் பெண் வீர்யத்தால் அடையப்படவேண்டியவள் (என்று) முன்பு பிரதிக்ஞை பண்ணப்பட்டது. ராஜாக்களெல்லாம் வீர்யமற்றவர்களாய், முகம் திரும்பியவர்களாய் வெறுப்பை கொண்டார்கள். ராஜாவே, அந்த இந்த என் பெண் எதேர்ச்சியாய் விஷ்வாமித்ரரை முன்னிட்டுக்கொண்டு வந்த வீரரான தமது புத்திரராலே வெல்லப்பட்டாள். மகாதேஜஸ்வியான ராஜாவே, மகாத்மாவான (ஸ்ரீ)ராமரால் மகத்தான ஜனசமூகத்தின் முன்னிலையில் திவ்யமான அந்த வில்லும் நடுவில் முறித்துவிடப்பட்டது. மகாத்மாவான இவருக்கு என்னால் வீர்யத்தால் அடையப்படவேண்டியவளாய் (வைக்கப்பட்டிருந்த) (தேவி) சீதாவை தந்திட வேண்டியவனாகிறேன். பிரதிக்ஞையை நிறைவேற்ற இச்சைக்கொள்கிறேன். அதனை அங்கீகரிப்பதே தங்களுக்கு தகும். மகாராஜாவே, ராகவர்களை (அதாவது ஸ்ரீராம-லக்ஷ்மணர்களை) (வந்து) காண்பது தங்களுக்கு தகும். உபாத்யாயர்களோடும், புரோகிதர்களோடும் சீக்கிரமாகவே வந்திட வேண்டும். தங்களுக்கு மங்கலம். ராஜேந்திரரே, வீர்யத்தால் வெல்லப்பட்டவளாகிய (தேவி சீதாவை முன்னிட்டு மேற்கொண்ட) பிரதிக்ஞையை நிறைவேற்றிவைப்பதே தங்களுக்கு தகும். என்னுடையதும், (தமது) இரண்டு புத்திரர்களுடையதுமான பிரீதியை பெறுவீர்.விஷ்வாமித்ரரின் நியமனம் பெற்றவரும், ஷதானந்தரின் அறிவுரையில் நிலைத்திருப்பவரான விதேஹாதிபதி (அதாவது ஜனகர்), இவ்விதமான மதுரமான வாக்கியத்தை கூறியுள்ளார். தேவரே, நரர்களுக்கு ஈசனே, ரகுநந்தனரே, ராஜாவே, (இப்பொழுதே தாம்) எழுந்தருள்வீர் என்றாலும் சரி, மறுக்கக்கூடாதென வேண்டிக்கொள்கிறோம். ஜனகருக்கு மறுமொழியை அருளிச்செய்யக்கடவீர்.

தூதர்கள் இவ்விதம் சொல்லிவிட்டு ராஜகெளரவம் எப்படியிருக்குமோ என்று எண்ணியவர்களாகி மௌனமடைந்தார்கள். அந்த ராஜா அந்த தூதர்களின் வாக்கியத்தை செவியுற்று, இதில் மிகவும் சந்தோஷமுடையவராகி வசிஷ்டரையும், வாமதேவரையும் மற்ற மந்திரிகளிடமும் சொன்னார், ‘இந்த கௌசல்யாவின் (ஆனந்தத்தை) அதிகரிப்பவனான (ஸ்ரீ)ராமன், தம்பி லக்ஷ்மணனோடு கூட குஷிகரின் புதல்வரால் (அதாவது விஷ்வாமித்ரரால்) பாதுகாக்கப்பட்டவர்களாய் விதேஹ தேசத்தில் வசிக்கின்றனர். மகாத்மாவான ஜனகர் காகுத்ஸ்தனின் (அதாவது ஸ்ரீராமரின்) வீர்யத்தை கண்டுகொண்டார். அதன்பேரில் (ஸ்ரீ)ராமனிடம் பெண்ணினுடைய சம்பிரதானத்தை (அதாவது கன்னிகாதானத்தை) இப்பொழுதே செய்ய இச்சிக்கிறார். நடந்தது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருக்குமாகில் சீக்கிரமாகவே மகாத்மாவான ஜனகருடைய பட்டணத்திற்கு செல்வோம். காலதாமதம் வேண்டாம்.

மந்திரிமார்கள், மகரிஷிகள் எல்லோருடனும் கலந்து சரிஎன்று கூறினார்கள். அந்த ராஜா மிகவும் மகிழ்வுற்றவராய் அதற்குமேல் மந்திரிகளிடம் நாளை யாத்திரைஎன்று கூறினார். அனைத்து குணங்களும் நிறைந்தவர்களான அந்த (செய்தியை கொண்டுவந்த) மந்திரிகள் எல்லோரும், நரேந்திரராலே (அதாவது தசரதராலே) நன்கு கௌவரவிக்கப்பட்டவர்களாய் மகிழ்ச்சியுற்றவர்களாய் (அன்று) இரவை (அங்கு) கழித்தார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்தெட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment