“ஜனகருடைய சொல்லுக்கு
கேட்ட விஷ்வாமித்ர மகாமுனி, மன்னரிடம் (அதாவது ஜனகரிடம்)
இவ்விதமே சொன்னார், ‘தனுசை (அதாவது வில்லை) (ஸ்ரீ)ராமருக்கு
காண்பியும்.’ அதன்பேரில் அந்த ஜனக ராஜா, மந்திரிகளிடம் (இவ்வாறு)
கட்டளையிட்டார், ‘திவ்யமான வில்லானது
சந்தனம், மாலை இவைகளால்
அலங்கரிக்கப்பட்டதாகவே (இவ்விடம்) கொண்டு வரப்படட்டும்.’ ஜனகரால் வழிகாட்டப்பட்ட
மந்திரிமார்கள் வெளிபுறப்பட்டார்கள். வேந்தரின் ஆணையால் அரண்மனைக்குள் அந்த வில்லை
கண்முன்பார்த்துக்கொண்டு பிரவேசித்தார்கள்.
“மகத்தான தேகவலிமைகொண்டவர்களும், கடுமையான வேலைகளால்
சோர்வடையாதவர்களுமான மனிதர்களில் ஐம்பதாயிரமானவர்கள் எட்டு சக்கிரங்களுடைய (வண்டியால் வகிக்கப்பட்ட)
அந்த பெட்டியை ஒரு வழியாய் இழுத்தது வந்தனர். அந்த ராஜமந்திரிகள், அந்த வில் எதிலிருந்ததோ, அந்த இரும்பு பெட்டியை கொண்டுவந்த (பின்னர்) சுரரைப்போல்
(அதாவது தேவரைப்போல்) இருக்கும் ஜனகரிடம் கூறினர், ‘மிதிலாதிபதியாய் ராஜேந்திரனாகும்
ராஜாவே, தரிசிக்கப்பட வேண்டியதாக
தாம் இச்சித்தது எதுவோ அது, அனைத்து ராஜாக்களாலும்
பூஜிக்கப்பட்ட உயர்ந்த வில் இதோ!’
“அரசர் அவர்களுடைய
வார்த்தையை செவிக்கொண்டு, அந்த
(ஸ்ரீ)ராம-லக்ஷ்மணர்களாகிய இருவர்களையும் (பார்த்து), அதன்பின்னர் கைகளை குவித்தவராகி மகாத்மாவான விஷ்வாமித்ரரிடம் பேசலானார், ‘பிராமணரே, முன் வளைப்பதற்கு சக்தியில்லாமல் போன, மகாவீர்யமுடைய ராஜாக்களாலும், ஜனக வம்சத்தவர்களாலும் கௌரவிக்கப்பட்ட
உயர்ந்த வில் இதே! இந்த வில்லை வளைப்பதிலோ, நாணேற்றுவதிலோ, அம்புகோர்ப்பதிலோ, நாணிழுப்பதிலோ, தூக்குவதிலோ அனைத்து சுரகணங்களும் (அதாவது தேவகணங்களும்)
(சக்திபடைத்தவர்) இல்லை. அசுரர்கள் (சக்திபடைத்தவர்) இல்லை. ராட்சசர்கள், கின்னரர்கள், மஹாரகர்களுடன் கூடிய கந்தர்வர்களில்
சிறந்தோரும், யட்சர்களில் சிறந்தோரும் (சக்திபடைத்தவர்கள்)
அன்று. இவ்வாறிருக்க மானுடர்களுடைய கதி எவ்வாறானது? மகாபாக்கியசாலியாகிய முனிபுங்கவரே, விற்களில் சிறந்ததான அந்த இது
கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு
ராஜபுத்திரர்களும் இதை தரிசிக்கட்டும்.’
“ஜனகரின் சொல்லை கேட்ட
தர்மாத்மா விஷ்வாமித்ரர், ராகவரிடம் (அதாவது ஸ்ரீராமரிடம்)
இதில் இப்படி கூறினார், ‘குழந்தாய் (ஸ்ரீ)ராமா, வில்லை பார்.’ மகரிஷியின் வார்த்தையின்பேரில் (ஸ்ரீ)ராமர், அந்த வில் எதிலிருந்ததோ அந்த பெட்டியை
திறந்து வில்லை கண்டு, அதற்குமேல் கூறினார், ‘பிராமணரே, இப்போது இந்த உத்தமமான வில்லை
கையினால் பற்றுகிறேன். தூக்கி நிறுத்துவதிலும், வளைப்பதிலும் முயல்பவனாய் ஆவேன்.’ ராஜாவும் (அதாவது ஜனகரும்), முனிவரும் ஒருமிக்க அவரைப்பார்த்து, ‘அப்படியே செய்யலாம்’ என்று கூறினார்கள்.
“அந்த ரகுநந்தனர் முனிவரின் வார்த்தையால் வெகு
ஆயிரக்கணக்கான மனிதர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வில்லின் மத்தியை
விளையாட்டாய் பற்றினார். தர்மாத்மாவான, பெரும் புகழுடையவரான நரர்களில் சிறந்தவர் அந்த
வில்லை விளையாட்டை நாணேற்றி வளைத்தார். அவர் அந்த வில்லின் நடுப்பகுதியை
முறித்துவிட்டார். அந்த ஓசையானது இடிபோன்ற முழக்கமுடையதாய், மகத்தானதாய் இருந்தது.
(ஒரு) மலை (பிளந்து)
வெடிக்கும்போதும், பூகம்பமும் எப்படியோ அப்படியே மிகப் பெரியதாயிருந்தது.
முனிவர்களில் சிறந்தவரையும், ராஜாவையும், அந்த இரண்டு ராகவர்களையும் தவிர்த்து மற்ற
நரர்கள் எல்லோரும் அந்த ஒலியால் மூர்ச்சையடைந்தவர்களாய் உடனே கீழே
விழுந்துவிட்டார்கள். அந்த ஜனம் நினைவுபெற்ற பின், வாக்கில் வல்லவராகிய ராஜா, (மனதிலிருந்த) திகில் ஒழிந்தவராய் முனிபுங்கவரிடம் கைகுவித்தவராகி (பின்வரும்)
வாக்கியத்தை பேசினார், ‘பகவானே, இது சிந்திக்கமுடியாததாய் எனக்கு
அதிஅற்புதமாய் இருக்கிறது. என்னால் எண்ணிப்பார்க்கப்பட்டதுமல்ல. தசரதரின்
புதல்வராகிய (ஸ்ரீ)ராமரின்
வீர்யத்தை கண்டேன். ஜனகர்களுடைய குலத்தில் என் பெண்ணாய் (வளரும்) (தேவி)
சீதா, தசரதரின் மைந்தனாகிய (ஸ்ரீ)ராமரை கணவனாய்
அடைந்து புகழை கொண்டுவரப்போகிறாள். கௌஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே), என் பிரதிக்ஞையும் சத்தியமாயிற்று
என்றபடியால் என் உயிரைக்காட்டிலும் அதிகமாய் மதிக்கப்பட்டிருக்கிற பெண்ணும், வீர்யத்தால் அடையப்படவேண்டியவளுமான (தேவி) சீதாவை (ஸ்ரீ)ராமருக்கு
தரப்பட வேண்டியவளே! கௌஷிகரே, பிராமணரே, தம்முடைய அனுமதியின்பேரில் துரிதமாய் (காரியத்தை முடிக்கவல்ல)
என் மந்திரிகள், ரதங்களில் ஏறி
சீக்கிரமாய் அயோத்யாவிற்கு செல்லட்டும். தமக்கு மங்கலம். வீர்யத்தால்
அடையப்படவேண்டியவளுடைய (கன்னிகா)தானத்தை பற்றிய எல்லாவற்றையும் ராஜாவிடம் (அதாவது
தசரதரிடம்) தெரிவிக்கட்டும். மரியாதைக்குரிய வாக்கியங்களை (கூறி) என்
பட்டணத்திற்கு அழைத்து வரட்டும். அரசருக்கு (அதாவது தசரதருக்கு)
காகுத்ஸ்தர்கள் (அதாவது ஸ்ரீராம-லக்ஷ்மணர்) முனிவரின் (அதாவது
விஷ்வாமித்ரரின்) பாதுகாப்பிலிருக்கின்றனர் என்பதையும் தெரிவிக்கட்டும். ராஜாவை
இது விஷயத்தில் உள்ளம் குளிர்ந்தவராய் வெகு சீக்கிரமாய் அழைத்து வரட்டும்.’
“கௌஷிகரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறினார். தர்மாத்மாவாகிய ராஜா
மந்திரிகளை அழைத்து, சாசனங்களை பெற்றவர்களாய்
அயோத்யாவிற்கு அனுப்பினார்.”
|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்தேழாவது ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment