Wednesday, April 15, 2020

அறுபத்தாறாவது ஸர்க்கம் – (ஸ்ரீ)ராமர் தனுசை தரிசிப்பது


(மறுநாள்) காலைப்பொழுது நன்றாக விடிந்தபின் (காலை) கர்மங்களை செய்துமுடித்த நராதிபதி (அதாவது ஜனகர்) ராகவர்களுடன் கூடியிருந்த மகாத்மாவான விஷவாமித்ரரிடம் (போய்) அழைத்தார். தர்மாத்மாவான அவரையும், மகாத்மாக்களான ராகவர்களையும் சாஸ்திரத்தில் கண்ட முறைப்படி அர்ச்சித்து, அதன்மேல் (பின்வரும்) வாக்கியத்தை மொழிந்தார், ‘பாவங்களற்ற பகவானே, தம்மால் நன்மை விளையட்டும். நான் தம்மால் ஆணையிடப்பட வேண்டியவன் என்கிறபடியால் தாம் என்னை ஆணையிட்டருள வேண்டும். தமக்கு (நான்) செய்வேண்டியது யாது?’

மகாத்மாவான ஜனகரால் இவ்விதம் சொல்லப்பட்டதும், தர்மாத்மாவும், சொல்வன்மையருமான முனிவர்களில் சிறந்தவர் (பின்வரும்) வாக்கியத்தை மறுமொழியுரைத்தார், ‘இவ்விரு க்ஷத்ரியர்களும் தசரத புத்திரர்கள். (ஸ்ரீ)ராம-லக்ஷ்மணர். தனுர்வேதத்தில் விசேஷ அறிவுள்ளவர்கள். தர்மசீலர்கள். உலகெல்லாம் அறியப்பட்டவர்கள். உம்மிடம் எந்த உத்தமான தனுசு (அதாவது) இருக்கிறதோ, இதை பார்க்கவிரும்புகிறார்கள். இந்த வில்லின் தரிசனத்தால் தமக்கு மங்கலம் (உண்டாகப்போகிறது). இதை (கொண்டு வந்து) காண்பியும். அரசரின் குமாரர்களும் விருப்பம் நிறைவேறியவர்களாய் இஷ்டம் எப்படியோ அப்படியே செய்யட்டும்.


இவ்விதம் சொல்லப்பட்ட ஜனகர் இதில் மகாமுனியிடம் மறுமொழியளித்தார், ‘இங்கே எக்காரணமாய் இருக்கிறதோ, இந்த வில்லைப்பற்றி செவிகொடுக்கப்படட்டும். (சக்கிரவர்த்தி) நிமிக்கு (பின் வந்த) ஆறாவதான வேந்தரானவர், தேவராதர் என்று பெயர்பெற்றவர் (நிமி சக்கரவர்த்தியே விதேஹ ராஜ்யத்தை நிறுவியவர்). பகவானே (அதாவது விஷ்வாமித்ரரே), அவருடைய கையில் அடைக்கலமாக இது மகாத்மாவாலே கொடுக்கப்பட்டது. வீர்யவானான ருத்திரர் முற்காலத்தில் கோபாவேசத்தால் தட்சருடைய யாகத்தை வதம் செய்யும் பொழுது வில்லை தூக்கிக்கொண்டு த்ரிதஷர்களிடம் (அதாவது தேவர்களிடம்) பரிகாசமாய் இவ்விதம் சொன்னார், ‘சுரர்களே (அதாவது தேவர்களே), (யாகத்தின் ஹவிர்)பாகத்தை விரும்பின எனக்கு (உரியதான ஹவிர்)பாகம் தரப்படவில்லை. ஆனபடியால் உங்களுடைய மிகவும் விலைமதிப்பற்ற தலைகளை வில்லால் சிதைக்கிறேன்.முனிபுங்கவரே அப்பொழுது தேவர்கள் எல்லோரும் திகைத்தவர்களாய் தேவர்களுக்கு ஈசனை போற்றிப்புகழந்தார்கள். பவனும் (அதாவது சிவபெருமானும்) அவர்களுக்கு பிரீதி (செய்பவராய்) ஆனார். அந்த மகாத்மாக்கள் எல்லோருக்கும் பிரீதி செய்ய உடன்பட்ட அவர், அடைக்கலமாய் தந்தருளினார். பிரபுவே, மகாத்மாவான தேவதேவருடைய அந்த ரத்தினமான வில் இது. எங்களுடைய முன்னோரிடம் அப்பொழுது அடைக்கலமாக ஒப்புவிக்கப்பட்டது. முன்னொரு சமயம், க்ஷேத்திரத்தை (அதாவது யாகபூமியை) நான் கலப்பையால் உழும்பொழுது கலப்பைக்கோட்டினின்று கிளம்பி வந்தாள் (ஓர் பெண்). க்ஷேத்திரத்தை நிர்மலமாக்கிய என்னால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். அப்போதிலிருந்து சீதா என்ற பெயரால் பெயர்பெற்றாள். கர்ப்பவாசமில்லாதவளாய் பூமியிலிருந்து எனக்கு கிடைத்தாள். ஆனால், இந்த கன்னிகையும் என்னுடைய பெண்ணாக வளர்ந்துவருகிறாள். இதனால் வீர்யத்தால் அடையவேண்டியவளாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். முனிபுங்கவரே, பூமியிலிருந்து உதித்தவளும், என் புதல்வியாய் வளர்ந்துவருகிறவளுமான அவளை ராஜாக்கள் வந்து வேண்டுகின்றனர். பகவானே, கன்னிகையை வேண்டும் அந்த பூமியை ஆள்பவர்கள் எல்லோருக்கும் வீர்யத்தால் அடையப்படவேண்டியவள்என்பதால் புதல்வியை நான் கொடுக்கவில்லை. முனிபுங்கவரே, அப்பொழுது அதனால் அரசர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, மிதிலைக்கு வந்துசேர்ந்து வீர்யம் இன்னதென்று அறியவேண்டினார்கள். வீர்யத்தை தெரிந்துகொள்ளவேண்டிய அவர்களுக்காக வில்லானது கொண்டுவந்து வைக்கப்பட்டது. அந்த வில்லை தூக்கிநிறுத்தும் விஷயம் தானாகட்டும், பிடிப்பதிலும் கூட முடியாதிருந்தார்கள். தபோதனரே, மகாமுனியே, செவியுறுங்கள். வீர்யவான்களான அவர்களுடைய வீர்யம் அற்பமானதென அறிந்துகொண்டு, மன்னர்கள் அதனால் நிராகரிக்கப்பட்டார்கள். முனிபுங்கவரே, அதனால் ராஜாக்கள் எல்லோரும் வீர்ய சந்தேகத்தை (மனதில்) வந்தவர்களாய் கடுங்கோபத்துடன் மிதிலையை முற்றுகையிட்டார்கள். அந்த ராஜோத்தமர்கள் தங்களுக்கு (நேர்ந்த) நிராகரிப்பை (பெரிதாய்) அங்கீகரித்து, மகத்தான கோபாவேசங்கொண்டவர்களாய் மிதிலா பட்டணத்தை பீடித்தினர். முனிவர்களில் சிறந்தவரே, அப்பொழுது ஒரு வருடம் நிறைவடைவதற்குள் உடமைகள் எல்லாமும் சரிவை அடைந்தன. அதனால் நான் மிகவும் துக்கித்தேன். அப்பொழுது நான் தேவகணங்கள் எல்லோரையும் தவத்தால் மகிழ்வித்தேன். சுரர்கள் (அதாவது தேவர்கள்) மிகவும் பிரீதியடைந்தவர்களாய் அதனால் சதுரங்கபலத்தை (அதாவது ரதங்கள், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படைகளை) அளித்தார்கள். பாவகாரியம் செய்துகொண்டிருந்த அரசர்கள், அதிலிருந்து அழிக்கப்பட்டவர்களாய் வீர்யத்தில் தெளிவற்றவர்களாகி, வீர்யமற்றவர்களாய், நிலைகுலைந்தவர்களாய், மந்திரிமார்களுடன் கூடினவர்களாய் (அனைத்து) திசைகளிலும் ஓடிவிட்டார்கள். நல்விரதமுடையவரே, முனிவர்களில் புலியே, மிகவும் ஒளிமயமான அந்த இந்த வில்லை (ஸ்ரீ)ராம-லக்ஷ்மணர்களுடைய பார்வைக்கு வைக்கிறேன். முனிவரே, (ஸ்ரீ)ராமர் இந்த வில்லுக்கு நாணேற்றுதலை செய்துவிடுகிறார் என்கிறதாகில்; கர்ப்பவாசமற்ற புதல்வியான சீதாவை நான் தாசரதருக்கு (அதாவது தசரத மைந்தருக்கு) தந்திடுவேன்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்தாறாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment