Tuesday, April 14, 2020

அறுபத்தைந்தாவது ஸர்க்கம் – விஷ்வாமித்ரர் பிரம்மரிஷியானது


(ஸ்ரீ)ராமா, மகாமுனி அதற்கு பிறகு இமயமலை திசையை விட்டுவிட்டு, கிழக்கு திசையில் போய் இருந்துகொண்டு மிகக் கடுமையான தவத்தை புரிந்தார். (ஸ்ரீ)ராமா, ஆயிர வருடங்கள் ஒப்புயர்வற்ற மௌன விரதத்தை அனுஷ்டித்துக்கொண்டு, ஒப்பற்றதும் மிகவும் கடினமான தவத்தை செய்தார். ஆயிர வருடங்கள் நிறைவடைகிறவரையிலும் பலவகைப்பட்ட இடையூறுகளால் தொந்தரவு செய்யப்பட்டவரும், உயிரில்லாக்கட்டை போலிருந்து விட்டவருமான மகாமுனிக்கு கோபமென்பது உள்ளே புகவில்லை.

(ஸ்ரீ)ராமா, அவர் நிச்சயித்ததையே கடைபிடித்துக்கொண்டு, தவத்தை சிதைவற்றதாய் செய்துமுடித்தார். ரகூத்தமா (அதாவது ரகு குலத்தவர்களில் உத்தமா), மகாவிரதத்தை (செய்துமுடித்த அவர்) அந்த ஆயிரம் வருடங்களுக்கு (அப்பால்) விரதமானது நிறைவடைந்த பின்னர் அன்னத்தை புசிக்க தொடங்கினார். அந்த காலத்தில் இந்திரன் த்விஜன் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) ரூபம் கொண்டவராய் ஆகி, அவரிடம் இலையில் பரிமாறி இருக்கும் அன்னத்தை யாசித்தார். நிச்சயித்ததை (அனைத்துமாய் கொண்டிருந்த) மகாதபஸ்வியான பகவான் (அதாவது விஷ்வாமித்ரர்), இலையில் பரிமாறியிருக்கும் எல்லாவற்றையும் அந்த அந்தணருக்கு கொடுத்துவிட்டு, அப்பொழுது அன்னம் மீதியில்லாமல் போகவே, உணவு உண்ணாமலே, மௌன விரதத்தை அனுசரிப்பவராகவே அந்தணரிடம் அப்பொழுது கொஞ்சமும் பேசாமலிருந்துவிட்டார்.

அவ்வண்ணமே மீண்டும் (ஓர்) ஆயிர வருடம் மூச்சுவிடாமையும், மௌனத்தையும் அனுசரித்தார். அப்பொழுது முனிபுங்கவர் சங்கல்பத்திற்கு குறையேற்படாத வண்ணமாய் இருந்துவிட்டார். சங்கல்பத்தை குறைவின்றி செய்துமுடித்த அவருடைய தலையில் புகை உண்டாயிற்று. அதனால் மூவுலகும் திகிலுற்றதாய் அக்னிதாபம் அடைந்ததாய் முற்றிலும் தவித்தது. அப்பொழுது தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், பன்னகர்களும், உரகர்களும், ராட்சசர்களும் அவருடைய தவத்தின் தேஜஸால் தடுமாறி ஒளிமங்கியவர்களானார்கள். அப்போது களங்கங்களால் சிதைந்திருந்த எல்லோரும் பிதாமகரிடம் (அதாவது பிரம்மதேவரிடம்) கூறினர், ‘(பிரம்ம)தேவா, விஷ்வாமித்ர மகாமுனி பலவகைப்பட்ட செய்கைகளால் ஆசைகளால் (தூண்டப்பட்டும்), கோபத்தால் (தூண்டப்பட்டும் கூட) தவத்தால் மேன்மைபெற்று விளங்குகின்றார். மேலும் இவருக்கு பொல்லாதது கொஞ்சமும் சூட்சமாய் கூட காணப்படவில்லை. இப்படியிருப்பதால் இவருக்கு மனதால் விரும்புகிறது எதுவோ அது கொடுக்கப்படாவிட்டால், (அண்ட) சராசரங்கள் உள்ளிட்ட மூவுலகையும் தவத்தினால் அழித்துவிடுவார். எல்லா திசைகளும் குழம்பியுள்ளன. கொஞ்சமும் ஒளிரவில்லை. கடல்கள் எல்லாம் கலக்கமுற்றன. பர்வதங்கள் வெடித்துப்பிளந்து சிதறுகின்றன. பூமியும் நடுங்குகிறது. வாயு மிகவும் கடுமையாய் வீசுகிறது. பிரம்மாவே! இதற்கு என்ன செய்வதென்று அறியோம். ஜனங்கள் நாஸ்திகர்களாக ஆகிவிடுகிறது. அந்த மகரிஷியின் தேஜஸால் மூவுலகும் குழம்பிய மனதுடன் மூடத்தன்மை அடைந்தது போல் இருக்கிறது. பாஸ்கரனும் (அதாவது சூர்யனும்) ஒளிமங்கியவனாகவே ஆகிவிட்டான். அக்னிரூபரான, பெரும் ஒளியுடையவரான, பகவானான மகாமுனி எதற்குள்ளாக நாசத்தில் புத்தியை செலுத்தியிருப்பாரோ, அதற்குள்ளாக (பிரம்ம)தேவரே சந்துஷ்டராக்கப்பட வேண்டும். முற்காலத்தில் கால அக்னியால் (அதாவது ஊழித்தீயால்) எவ்வண்ணமோ அவ்வண்ணமே, மூவுலகம் எல்லாமும் தகிக்கப்படும். தேவராஜ்ஜியம் விரும்பக்கூடும். இவரது விருப்பம் எதுவோ அது கொடுக்கப்பட வேண்டும்.

அதன்பேரில் பிதாமகரை (அதாவது பிரம்மாவை) முன்னிட்ட சுரகணங்கள் (அதாவது தேவகணங்கள்) எல்லோரும் மகாத்மாவான விஷ்வாமித்ரரிடம் மதுரமான வாக்கியத்தை சொன்னார்கள், ‘பிரம்மரிஷியே, உமக்கு நலம் உண்டாகட்டும். தவத்தால் மிகவும் சந்தோஷமடைந்தோம். கௌஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே) உக்கிரமான தவத்தால் பிராமணன் நிலையை அடைந்துவிட்டாய். பிராமணரே, நீடித்த ஆயுளையும் மருத கணங்களோடு இருக்கும் நான் தருகிறேன். உமக்கு மங்கலம். நலம் பெறுவாயாக. இனிமையானவரே, உமக்கு சுகம் எப்படியோ அப்படி செல்வீராக.

மகாமுனி (விஷ்வாமித்ரர்) பிதாமகருடைய (திரு)வாக்கை கேட்டு, களிப்புற்றவராகி எல்லா தேவர்களுக்கும் தண்டனிட்டு வணக்கம் செய்து கூறினார், ‘நெடும் ஆயுளும் அவ்வண்ணமே, பிராமணியமும் எனக்கு கிடைத்துவிட்டது என்றால் அதனால் ஓம்காரமும், வஷட்காரமும், வேதங்களும் என்னை வரிக்கட்டும். தேவர்களே, க்ஷத்ரிய வேதத்தை அறிந்தவர்களிலும், பிரம்மவேதத்தை அறிந்தவர்களிலும் சிறந்தவரான, பிரம்மபுத்திரரான வசிஷ்டர் என்னைக்குறித்து இவ்விதமாக சொல்லவேண்டும். இந்த பரம விருப்பம் ஈடேறி முடிந்ததுமே, சுரகாளையர்கள் (அதாவது தேவகாளையர்கள்) திரும்பிச்செல்லலாம்.

ஜபம் செய்பவர்களில் சிறந்தவரும், பிரம்மரிஷியும், தேவர்களால் மகிழ்வுற செய்யப்பட்டவருமாகிய வசிஷ்டர், ‘அப்படியே ஆகட்டும்என்று சொன்னார். அதிலிருந்து நட்பை பாராட்டினார். நீர் பிரம்மரிஷியே, சந்தேகம் இல்லை. உமக்கு எல்லாம் கைகூடினதாகட்டும்.என்று சொல்லிவிட்டு, எல்லா தேவர்களும் வந்தவழியே சென்றார்கள்.

தர்மாத்மாவான விஷ்வாமித்ரரும் உத்தமமான பிராமணியத்தை அடைந்து, பிரம்மரிஷியும், ஜபிப்பவர்களில் சிறந்தவருமான வசிஷ்டரை பூஜித்தார். விருப்பம் நிறைவேறினவராய் தவத்தில் நிலைகொண்டு பூமி முழுவதிலும் சஞ்சரித்து வந்தார். (ஸ்ரீ)ராமா, இந்தவிதமாகவே இந்த மகாத்மாவான பிராமணியம் பெறப்பட்டது. (ஸ்ரீ)ராமா, இவர் (அதாவது விஷ்வாமித்ரர்) முனிவர்களில் சிறந்தவர். இவர் தவத்தின் விக்கிரகம். இவர் நித்தமும் தர்மத்தையே நோக்கமாக கொண்டவர். இவர் வீர்யத்தின் முழுமையான தொகுப்பு.

ஜனகர், ராம-லக்ஷ்மணர்களுடைய முன்னிலையில் ஷதானந்தர் கூறியதை செவியுற்று, குஷிகரின் புதல்வரிடம் கைகூப்பியவராய் (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘கௌஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே), முனிபுங்கவரே, எந்த எனது யாகத்திற்கு காகுத்ஸ்தர்கள் (அதாவது ராம-லக்ஷ்மணர்) சகிதராய் பிராப்தம் பெற்ற நான் தன்யனானேன். அனுக்கிரகிக்கப்பட்டவனாக ஆகிறேன். பிராமணரே, மகாமுனியே, விஷ்வாமித்ரரே, மகா பாக்கியசாலியே, பிரம்மரிஷிகளில் உயர்ந்தவரிலும் உயர்ந்தவரே, தமது தரிசனத்தால் நான் பரிசுத்தனானேன். தம்முடைய சந்திப்பால் என்னால் பலவிதமான குணங்கள் பெறப்பட்டன. மகாதேஜஸுடைய பிராமணரே, தம்முடைய மகத்தானதும், விரிவாக கீர்த்தனம் செய்யப்பட்டதுமான தவ(ப்பெருமை) என்னாலும், மகாத்மாவான (ஸ்ரீ)ராமராலும் செவியுற்று கேட்கப்பட்டது. ஸதஸ்ஸில் (அதாவது யாகசபையில்) வந்துவீற்றிருக்கிற சபையோராலும் தம்முடைய பலவித குணங்கள் கேட்கப்பட்டன. தம்முடைய தவமானது அளவிடமுடியாதது. தம்முடைய பலம் அளவிற்கு மிஞ்சினது. குஷிகரின் புதல்வரே, தம்முடைய குணங்களும் எக்காலத்திலும் எண்ணுதற்கரியவை. பிரபுவே, ஆச்சரியமும்-அற்புதமுமாயிருக்கும் கதைகளுடைய எனக்கு திருப்தி உண்டாகவில்லை. முனிவர்களுள் சிறந்தவரே, (இது) கர்மகாலம் (அதாவது சந்தியாவந்தனம் புரிய வேண்டிய காலம்). ரவிமண்டலம் (அதாவது சூர்யமண்டலமானது) அஸ்தமிக்கும் சமயமாயிருக்கிறது. மகாதேஜஸ்வியே, தவம் புரிபவர்களுள் சிறந்தவரே, நல்வரவு. நாளைய விடியற்காலையில் மறுபடியும் எனக்கு காட்சியளிக்க திருவுள்ளம் கொள்ளவேண்டும். என்னை (இப்போது) விடைகொடுத்தனுப்ப திருவுள்ளம் கொள்ளவேண்டும்.

இவ்விதமாய் சொல்லிற்கு முனிவர்களில் சிறந்தவர், பிரீதியான மனமுடையவராய் புருஷர்களுள் காளையும், அப்பொழுது பிரதீயடைந்தவராய் ஜனகரை புகழ்ந்துகொண்டாடிவிட்டு உடனே (திரும்பிச்செல்ல) விடைதந்தருளினார். வைதேஹனும், மிதிலாதிபதியான ஜனகர் மேற்கண்டவண்ணமாய் சொல்லிவிட்டு, உடனே உபாத்யாயர்களுடனும், பந்துக்களுடனும் முனிவர்களில் சிறந்தவரை பிரதட்சிணம் செய்தார். தர்மாத்மாவான விஷ்வாமித்ரரும் மகரிஷிகளால் பூஜிக்கப்பட்டு, (ஸ்ரீ)ராமருடனும்-லக்ஷ்மணருடனும் தம் விடுதிக்கு புறப்பட்டார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்தைந்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment