Monday, April 13, 2020

அறுபத்திநான்காவது ஸர்க்கம் – ரம்பையின் சாபம்


ரம்பையே, இப்பொழுது கௌஷிகருக்கு (அதாவது விஷ்வாமித்ரருக்கு) காமமோகத்தாலுண்டாகிய மயக்கம் உன்னால் செய்யப்படவேண்டியது. இது சுரகாரியம் (அதாவது தேவகாரியம்). மிகவும் மகத்தானது.

(ஸ்ரீ)ராமா, அறிஞரான சஹஸ்ராக்ஷனால் (அதாவது ஆயிரங்கண்கொண்டவரால்; இங்கு தேவேந்திரனால்) அவ்விதமாக சொல்லப்பட்டவளான அப்சரஸான அவள் கலவரமடைந்து கைகுவித்தவளாய் இருந்துகொண்டு, சுரர்களுக்கு ஈசனிடம் (அதாவது தேவேந்திரனிடம்) மறுமொழியுரைத்தாள், ‘சுரபதியே (அதாவது தேவர்களுக்கு பதியே), தேவராகிய தேவரே, இந்த விஷ்வாமித்ரகோரமான மகாமுனி. என்மீது கோரமான கோபத்தை காட்டிவிடுவார். சந்தேகமில்லை. ஆகையால் எனக்கு பயமாயிருக்கிறது. அப்படியிருப்பதால் அனுக்கிரகம் செய்திட (தாம்) திருவுள்ளம் கொள்ளவேண்டும்.

சஹஸ்ராக்ஷன் உடல்நடுங்கி கைகூப்பிக்கொண்டிருந்த அவளிடம் சொன்னார், ‘ரம்பையே, எனது சாசனத்தை செய்துமுடி. நீ பயப்படாதே. உனக்கு மங்கலம். நான் செழிப்பாயிருக்கும் மரங்களையுடைய வசந்தகாலத்தில் கந்தர்பன் (அதாவது மன்மதன்) சகிதமாய், இதயத்தை கொள்ளை கொள்ளும் கோகிலமாய் (அதாவது குயிலாய்) உனது பக்கத்தில் இருப்பேன். ரம்பையே, நீயோ வெகு குணங்கள் உடையதாய், மிகவும் ஒளிர்வதான ரூபத்தை செய்துகொண்டு, அந்த தபஸ்வியான கௌஷிக ரிஷியின் (சித்தத்தை) குழப்புவாயாக.

அவள் அவருடைய வார்த்தையை கேட்டு, ஒப்புயர்வற்ற ரூபத்தை எடுத்துக்கொண்டு, அழகிய வனப்புடையவளாய், மாசற்ற புன்முறுவலுடன் விஷ்வாமித்ரரை மோகம் செய்ய ஆரம்பித்தாள். கவர்ச்சிகரமாய் கூவுகிற குயிலினுடைய குரலை மகிழ்ச்சியுடனிருக்கும் மனதுடன் செவியுற்றார். மேலும், இவளையும் கண்முன் கண்டார். அதனுடைய குரலினாலும், ரம்பையினுடைய ஒப்பற்ற தரிசனத்தாலும், பாட்டினாலும் முனிவர் அப்பொழுது ஆபத்தை கண்டுகொண்டார். குஷிகரின் மைந்தர் (அதாவது விஷ்வாமித்ரர்), (அந்த) முனிபுங்கவர், சஹஸ்ராக்ஷனுடைய (அதாவது தேவேந்திரனுடைய) காரியமாக அதை (ஞானதிருஷ்டியால்) கண்டுகொண்டு, கோபாவேசங்கொண்டவராய் ரம்பையை சபித்தார், ‘ரம்பையே, காமத்தையும்-குரோதத்தையும் ஜெயிக்க முயற்சிசெய்யும் என்னை மயக்க வந்திருக்கின்றாய். அதனால், துரதிருஷ்டமானவளே, பத்தாயிரம் வருடங்கள் கல்லுருவாய் இருக்கக்கடவாய். ரம்பையே, தவத்தின் பலத்தினால் உண்டாகிய, மிகப்பெரும் தேஜஸ்வியாகிய பிராமணர் என் கோபத்தால் கெடுதி அடைந்த உன்னை ஆபத்தினின்று விடுவிப்பார்.

மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ர மகாமுனி இவ்விதம் சொல்லிவிட்டு, தன்னுடைய கோபத்தால் (விளைந்துவிட்டதை நினைத்து) வருந்துவதை சகிக்க முடியாதிருந்தார். மகரிஷியின் மகத்தான சாபத்தாலே அப்பொழுதே ரம்பா கல்லுருவமுடையவளாய் ஆகிவிட்டாள். அவருடைய வார்த்தையை கேட்ட உடனேயே, கந்தர்பனும் (அதாவது மன்மதனும்), அவரும் (அதாவது தேவேந்திரனும்) மறைந்தனர். (ஸ்ரீ)ராமா, வெல்லமுடியாத இந்திரியங்களால் கோபத்திற்கு இடம் கொடுத்துவிட்டதால் மிகப்பெரும் தேஜஸ்வியான அவர்  தனக்கு தவ இடையூறு ஏற்பட்டதால் சாந்தி அடையவில்லை. இவருக்கு தவத்தின் இடையூறு ஏற்பட்டதில் மனதில் (ஓர்) சிந்தனை உதித்தது. நூற்றுக்கணக்கான வருடங்கள் வரைக்கும்கூட எப்படியானாலும் சரி கோபத்திற்கு நான் இடங்கொடாதிருப்பேனாக. வாய்திறந்து பேசாதிருப்பேனாக. இதுமட்டுமல்ல இன்னும் மூச்சுக்காற்றையுங்கூட வெளிவிடாதிருப்பேனாக. எனக்கு என் தவத்தின் பயனாய் பிராமணியம் எப்பொழுது கிடைக்குமோ, அக்காலம் வரையிலும் நான் இந்திரியங்களை அடக்கினவனாய், என்னை நன்றாய் வாட்டுவேன். நீடித்த காலம் மூச்சுவிடாமல், உண்ணாமல் நிற்கக்கடவேன். தவம் செய்துகொண்டிருக்கும் எனது உடல் அவயவயங்கள் தேய்மானம் அடையாமல் இருக்கக்கடவது.

ரகுநந்தனா, அந்த முனிபுங்கவர் உலகில் நிகரற்றதும், ஆயிர வருடங்கள் இவ்விதமாய் தீக்ஷையுடன் கூடிய பிரதிக்ஞை செய்துகொண்டார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment