“ஆயிர வருடகாலம்
நிறைவடைந்ததுமே தவவிரதம் முடிந்தவரான மகாமுனியிடம் சுரர்கள் (அதாவது தேவர்கள்)
எல்லோரும் தவத்தின் பயனளிக்க எண்ணங்கொண்டவர்களாகி வந்துசேர்ந்தார்கள். மிகப்பெரும் தேஜஸுடைய பிரம்மா
நியமங்களில் சிகரமான சொல்லை சொன்னார், ‘சுயமாய் சம்பாதிக்கப்பட்ட சுப கர்மங்களினாலே நீ ரிஷியாக ஆகி
இருக்கிறாய். உனக்கு மங்கலம்.’
“இப்படி அவரிடம்
சொல்லிவிட்டு, தேவர்களுக்கு ஈசர் (அதாவது பிரம்மா) திரும்பி
த்ரிதிவத்திற்கு (அதாவது தேவலோகத்திற்கு) போய்ச்சேர்ந்தார். மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரரும்
மறுபடியும் மகா தவத்தை அனுஷ்டித்தார். நரர்களுள் சிறந்தவரே (அதாவது ஸ்ரீராமா), அதற்குமேல் வெகு காலத்திற்குப்பின், சிறந்த அப்சரஸ் ஆன மேனகா புஷ்கரத்தில்
ஸ்நானம் செய்ய ஆரம்பித்தாள். மகாதேஜஸ்வியாகிய குஷிகரின் புத்திரர் (அதாவது விஷ்வாமித்ரர்), அவ்விடத்தில் மேகத்தில் மின்னற்கொடியை
போன்றவளாய் ரூபத்தால் ஒப்பற்றவளாய் இருக்கும், அந்த மேனகாவை (ஒரு சமயம்) கண்டார். கண்டதுமே முனிவர் கந்தர்ப்பனின் (அதாவது
மன்மதனின்) வசமாகி அவளிடம் இவ்விதம் பேசினார், ‘அப்சரஸே,
உனக்கு
இவ்விடத்தில் நல்வரவே உண்டாகட்டும். உனக்கு மங்கலம். எனது ஆசிரமத்திலேயே
வசித்திருப்பாயாக. மதனனால் (அதாவது மன்மதனால்) மிகவும் மோகித்திருக்கும் என்னை
ஏற்றுக் கொள்வாயாக.’
“இவ்விதமாய்
சொல்லப்பட்டவளான, நேர்த்தியான பெண்ணான அவள், அப்பொழுது அவ்விடத்தில் வசித்தலை
ஏற்றுக்கொண்டாள். உண்மையில், விஷ்வாமித்ரரின்
தவத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. ராகவா, அந்த விஷ்வாமித்ரரின் ஆசிரமத்தில் அவள்
வசித்துக்கொண்டிருக்கும் போது ஐந்தோடு ஐந்து சேர்ந்த (பத்து) வருடங்கள் சுகமாய்
கழிந்துவிட்டன. அந்த காலம் சென்றபின் மகாமுனி விஷ்வாமித்ரர் வெட்கமடைந்து
முற்றிலும் சோகமான சிந்தனையில் ஆழ்ந்தவராய் ஆகிவிட்டார். ரகுநந்தனா, இதெல்லாம் தவத்தை அபகரிக்க
சுரர்களுடைய (அதாவது
தேவர்களுடைய) மகத்தான கர்மம் (என்று) கோபத்துடனான புத்தி முனிவருக்கு
உண்டாயிற்று. காமமோகத்தில் முழுகிவிட்ட அவருக்கு பத்து வருடங்கள் ஓர்
பகலிரவுக்குச் சமமாக கழிந்துவிட்டன. இந்த இடையூறும் விளைந்தது. (ஸ்ரீ)ராமா, குஷிகரின் புதல்வரும், முனிவர்களில் சிறந்தவரும், வருத்தத்தாலே துக்கித்து பெருமூச்சு
விட்டுக்கொண்டிருந்தவரான விஷ்வாமித்ரர், நின்றுகொண்டிருந்த அப்சரஸாகிய மேனகாவை கைகூப்பிக்கொண்டு, உடல் நடுங்க பயந்தவளாய் கண்டு, மதுரமான வாக்கியத்தால்
விடைகொடுத்தனுப்பிவிட்டு, வடக்கு
மலைப்பிரதேசத்திற்கு சென்றார்.
“மகாதபஸ்வியான அவர், கௌஷிகி நதிக்கரையை (இன்றைய கோசி நதிக்கரையை)
அடைந்து, நிலையான புத்தியை
செய்துகொண்டு, தவத்திலேயே விருப்பம்
உடையவராகி மிகக்கடுமையான தவத்தை புரிந்தார். (ஸ்ரீ)ராமா, வடக்கு பர்வத்தில் ஆயிரம் வருடங்கள்
அவர் கோரமான தவத்தில் நிலைகொண்டிருக்கவே தேவர்களுக்கு பயம் உண்டாகிவிட்டது.
ரிஷிகணங்களோடு கூடிய சுரர்கள் (அதாவது தேவர்கள்) எல்லோரும் (பிரம்மதேவரின்)
அருகே வந்து ‘இந்த குஷிகரின் புதல்வர் (அதாவது விஷ்வாமித்ரர்)
முறையே மகரிஷி பட்டத்தை அடையட்டும்’ (என்று)
பிரார்த்தித்தார்கள். அனைத்துலக பிதாமகர் (அதாவது பிரம்மதேவர்) தேவர்களின்
வார்த்தைக்கு இணங்கி, தபோதனரான
விஷ்வாமித்ரரிடம் மதுரமான வாக்கியத்தை கூறினார், ‘கௌஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே), உக்கிரமான தவத்தால் நான் சந்தோஷமடைந்தேன். ரிஷிகளில்
முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹத்வம்’ (எனும் பட்டப்பெயரையும்) தருகிறோம். மகரிஷியே, உமக்கு நலம் உண்டாகட்டும்.’
“தபோதனரான பெரும்புகழ்
கொண்ட விஷ்வாமித்ரர் பிரம்மாவின் வார்த்தையை கேட்ட உடனேயே, சிரம்தாழ்த்தி பணிந்தவராய் கரங்களை
கூப்பியவராய் ஆகி மறுமொழியுரைத்தார், ‘பகவானே,
என்னால்
சம்பாதிக்கப்பட்ட சுப கர்மங்களால் எனக்கு ஒப்பற்றதாகிய பிரம்மரிஷி பட்டத்தை
உரைக்கிறீர் என்கிறதாய் இருந்தால்தான் அதிலிருந்து நான் இந்திரியங்களை
வென்றவனாவேன்.’
“பிரம்மா அவருக்கு அதற்கு
சொன்னார், ‘முனிகளுள் புலியே, நீ இன்னும் இந்திரியங்களை
வென்றவனாகவில்லை. நீ விடாமுயற்சி (செய்து பார்).’ இவ்விதம் சொல்லிவிட்டு த்ரிதிவத்திற்கு (அதாவது தேவலோகத்திற்கு)
சென்றார்.
“தபோதனரான மகாமுனி
விஷ்வாமித்ரர், தேவர்கள் மறைந்தவளவில்
கைகளை உயரத்தூக்கிக்கொண்டு, பிடிப்பொன்றும்
இல்லாதவராய், காற்றையே புசிப்பவராய், தவத்தை புரிபவராய், கோடையில் ஐந்து நெருப்புடன்
இருப்பவராய் (அதாவது
நாற்புறமும் அக்னி சுடர்கள் தகிக்க, தலைமீது சூர்யன் தகிக்க
இருப்பவராய்), மழைக்காலங்களில்
ஆகாயவெளியில் நிற்கின்றவராய்,
குளிர்காலத்தில்
நீரினுள் நிற்பவராகி, இவ்விதம் இரவும் பகலும்
இடைவிடாமல் இருந்துகொண்டு, கோரமான தவத்தை
ஆயிரவருடகாலம் செய்தார். அந்த மகாமுனி விஷ்வாமித்ரர் தவம்புரிந்து
கொண்டிருக்குமளவில் சுரர்களுக்கும் (அதாவது தேவர்களுக்கும்), வாசவனுக்கும் (அதாவது தேவேந்திரனுக்கும்) மிகப்பெரியதான குழப்பம்
ஏற்பட்டது. மருதகணங்கள் எல்லோருடனும் கூட ஷக்ரன் (அதாவது தேவேந்திரன்)
ரம்பா (எனும்) அப்சரஸிடம் தங்களுக்கு அனுகூலமும், கௌஷிகருக்கு (அதாவது
விஷ்வாமித்ரருக்கு) பிரதிகூலமுமான வாக்கியத்தை மொழிந்தார்.”
|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்திமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment