“ரகுநந்தனா (அதாவது ஸ்ரீராமா), நரர்களில் சிறந்தவனான ஷுனஷ்ஷேபனை
பெற்றுக்கொண்டு மகாபலவானான ராஜா அப்பொழுது மத்தியான வேளையில் புஷ்கரத்தில் (அதாவது
புஷ்கரதீர்த்தகரையில்) இளைப்பாறினார். புஷ்கரக்ஷேத்திரத்திற்கு வந்து அவன்
இளைப்பாறிக்கொண்டிருக்கையில் பெரும் புகழ்வாய்ந்த ஷுனஷ்ஷேபன் அதிக மனவேதனைப்படுபவனாகி
ரிஷிகளுடன் கூட தவம் புரிந்துகொண்டிருக்கும் தாய்மாமனான விஷ்வாமித்ரரை கண்டான். (ஸ்ரீ)ராமா, வாடியமுகத்தனாய் தாகத்தாலும், சிரமத்தாலும் துயர்மிகுந்தவனாய்
முனிவருடைய மடியில் விழுந்து இந்த வாக்கியத்தையும் மெய்யாக கூறினான், ‘எனக்கு தாய் இல்லை. தந்தை இல்லை.
அறிந்தவர்களும், சொந்தமும் இல்லை.
இனிமையான முனிபுங்கவரே, (தஞ்சமடைந்தோரை காப்பாற்றியே தீர வேண்டும் என்கிற) தர்மத்தின்படி
என்னை ரட்சிக்க (தாமே) தகுதியானவர். கௌஷிகரே (அதாவது குஷிக வம்சத்தவரே), நரர்களுள் சிறந்தவரே, தாம் ஒருவரே எல்லோருக்கும் பாதுகாப்பளிப்பவர்.
ராஜாவும் எடுத்த காரியம் கைகூடியவராக ஆகவேண்டும். நானும் சிதைவற்றவனாய், நீண்ட ஆயுளுடன் ஒப்புயர்வில்லா தவத்தை
புரிந்து ஸ்வர்கலோகத்தை அனுபவிக்க வேண்டும். தாமே நல் எண்ணத்தால் அனாதையான எனக்கு
நாதனாக ஆகக்கடவீர். தர்மாத்மாவே,
தந்தை
புத்திரனை துரதிர்ஷ்டத்திலிருந்து எவ்வண்ணமோ அவ்வண்ணமே ரட்சிக்க தகுதியானவர்.’
“அவனுடைய அந்த வார்த்தையை
கேட்டதும், மகாதபஸ்வியான
விஷ்வாமித்ரர் பலவிதமாய் சமாதானம் செய்து புத்திரர்களிடம் இவ்விதம் சொன்னார், ‘எதைப் பெறுவதற்கு தந்தைமார்கள்
சுபத்தில் பற்றுள்ள புத்திரர்களை பெறுகிறார்களோ அது மேலுலக நன்மையைப்
பெரும்பொருட்டே; அதற்கு (தகுந்த)காலம் இதோ
வந்திருக்கிறது. இந்த முனிவரின் மகனாகிய சிறுவன் என்னிடமிருந்து சரணத்தை
இச்சிக்கிறான். புத்திரர்களே,
இவனை
உயிருக்கும்படி செய்வதன் மூலம் (எனக்கு) பிரியத்தை செய்யுங்கள். ஷுனஷ்ஷேபனும் நாதனைப்பெற்ற
பயனுடையவனாவான். யாகமும் இடையூறில்லாததாய் முடியும். தேவர்களும் திருப்தி
அடைந்தவர்களாய் ஆவார்கள். என் வார்த்தையும் நிறைவேறியதாய் ஆகும்.’
“நரர்களுள் சிறந்தவரே (அதாவது ஸ்ரீராமா), மதுஷ்யந்தன் முதலான குமாரர்கள்
முனிவருடைய வார்த்தையை கேட்டதும்,
சுயநலமாய்
இவ்விதம் பரிகாசமாய் மொழிந்தார்கள், ‘பிரபுவே,
தன்
பிள்ளையை பறிகொடுத்து, அயலான் பிள்ளையை ஏன் தான்
ரட்சிக்கப்பார்க்கிறீர்? சாப்பாட்டில் நாய்
இறைச்சியானது எவ்வண்ணமோ அவ்வண்ணமே செய்துமுடிக்க வேண்டாததாக நாங்கள்
அபிப்பிராயப்படுகிறோம்.’
“புத்திரர்களான அவர்களுடைய
அந்த சொல்லை கேட்டு, முனிபுங்கவர் (அதாவது விஷ்வாமித்ரர்)
கோபத்தால் ரத்தநிற கண்கள் உற்றவராகி (பின்கண்டவாறு) சொல்லிட ஆரம்பித்தார், ‘இதில் என் வாக்கியத்தை
அலட்சியம்செய்து பதிலாய் சொல்லப்பட்டதாகிய இது ஆணவத்தை காட்டுகிறது.
தர்மத்திலிருந்து விலகினதாயிருக்கிறது. மேலும், மயிர்க்கூச்செறியச் செய்யும்வண்ணமாய் வெறுக்கத்தக்கது.
நீங்கள் எல்லாம் பிறப்புகளில் வாசிஷ்டர்கள் (அதாவது வசிஷ்ட புத்திரர்கள்)
எவ்வண்ணமோ அவ்வண்ணமே நாய் இறைச்சியை உண்பவர்களாய் ஆயிரம் வருடங்கள் நிறைவடையும்
வரை பூமியில் வாசியுங்கள்.’
“முனிவர்களில் சிறந்தவர் (அதாவது விஷ்வாமித்ரர்), புத்திரர்களை சாபத்தை
அனுபவிக்கிறவர்களாக செய்துவிட்டு,
மனவேதனைப்பட்டுக்
கொண்டிருந்த ஷுனஷ்ஷேபனை ஆபத்திலிருந்து விடுவிக்கத்தக்கதாகிய ரக்ஷா (மந்திர பிரயோகத்தை)
செய்தருளி பின் இப்படி சொன்னார்,
‘தங்கத்தால்
செய்யப்பட்டதும், வைஷ்ணவமானதுமான (அதாவது விஷ்ணுவை
அதிஷ்டான தேவதையாய் ஆவாஹனம் செய்துள்ளதுமான) யூபத்தை (அதாவது யூப கம்பத்தை)
அடைந்து, ரத்தநிற மாலைகளையும், சந்தனப்பூச்சை உடையவனாய் பவித்திர
கயிற்றால் (அதாவது
தர்பைக்கயிற்றால்) கட்டுண்ட நீ (நான் உபதேசிக்கப்போகும்) வாக்குகளை ஜபி.
முனிவரின் புத்திரனே, அம்பரீஷனுடைய இந்த
யாகத்தில் இந்த இரண்டு திவ்ய பாடல்களை பாடுவாயாக. அதனால் சித்தியை அடைவாய்.’
“ஷுனஷ்ஷேபன் மிகுந்த
சிரத்தையுடன் அந்த இரண்டு பாடல்களையும் பெற்றுக்கொண்டு, அந்த ராஜசிங்கமான அம்பரீஷனை
காலதாமதமின்றியே (அணுகி) கூறினான், ‘மகத்தான போர்வீரரே, ராஜசிங்கமாகிய ராஜேந்திரா, சீக்கிரமாக ஸதஸிற்கு (அதாவது யாகசபைக்கு)
போவோம். உடனே (யாக)தீக்ஷையை அடையும். (தாம் பூர்த்தி செய்து)
முடித்துக்கொள்ளும்.’
“மன்னன், ரிஷிபுத்திரனது அந்த வாக்கியத்தை
கேட்டு, மகிழ்வுடன் கூடினவராய், ஜாக்கிரதையாய், விரைவாய் யாகசாலைக்கு
போய்ச்சேர்ந்தார். ராஜா, ஸதஸ்ஸின் (அதாவது யாகசபையினரின்)
அனுமதியின்பேரில் (யாக)விலங்காய் வந்திருக்கிற அவனை பவித்திரத்தால்
செய்யப்பட்ட லட்சணங்களை உடையவனாயும், ரத்தநிற ஆடையை உடுத்தியவனாயும் செய்து, யூபத்தில் (அதாவது யூபகம்பத்தில்) சேர்த்து
கட்டிவைத்தார். கட்டுண்டவனான அந்த முனிவரின் புத்திரன், இரு தேவர்களாகிய இந்திரனையும், இந்திரனின் தம்பியையும் (அதாவது விஷ்ணுவையும்)
உபதேசிக்கப்பட்டபடியே சிறந்ததான வாக்குகளை துதித்து ஜபித்தான். அப்பொழுது ரகசிய
துதியால் திருப்திகொண்டவரான சஹஸ்ராக்ஷனான (அதாவது ஆயிரங்கண்களை கொண்டவனான)
வாசவன் (அதாவது இந்திரன்) பிரீதி அடைந்தவனாகி அதனால் ஷுனஷ்ஷேபனுக்கு
நீடித்த ஆயுளை அளித்தார். நரர்களுள் சிறந்தவரே, (ஸ்ரீ)ராமா, அந்த ராஜாவும் யாகத்தின் பலனையும், சஹஸ்ராக்ஷனின் அனுக்கிரகத்தையும்
பன்மடங்காய் பெற்றார். நரர்களுள் சிறந்தவரே, அந்த தர்மாத்மாவும் மகாதபஸ்வியான விஷ்வாமித்ரரும், புஷ்கரத்தில் ஆயிரம் வருடகாலம் தவத்தை
புரிந்தார்.”
|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் அறுபத்திரண்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment