Wednesday, April 1, 2020

ஐம்பத்திரண்டாவது ஸர்க்கம் – வசிஷ்டர் விஷ்வாமித்ரருக்கு செய்த அதிதி பூஜை


மகாபலவானான, வீரரான அந்த விஷ்வாமித்ரர் (மந்திரங்களை) ஜபிப்பதில் சிறந்தவரான வசிஷ்டரை கண்டு மிகவும் மகிழ்ந்தவராய் வினயத்துடன் தண்டனிட்டு வணங்கினார். மகாத்மாவான வசிஷ்டராலே தமது வரவு நல்வரவாகுகஎன்று கூறினார். வசிஷ்ட பகவான் உடனேயே அவருக்கு ஆசனத்தை ஏற்பாடுசெய்தார். (ஆசனத்தில்) அமர்ந்த அறிஞரான விஷ்வாமித்ரருக்கு, உடனேயே ரிஷிவரர் (அதாவது வசிஷ்டர்) நியாயப்படி பழம் (மற்றும்) கிழங்குகளை அளித்தார். அப்பொழுது ராஜாக்களுள் சிறந்தவராகிய, மகாதேஜஸ்வியாகிய விஷ்வாமித்ரர் வசிஷ்டரிடத்தினின்று அந்த பூஜையை பெற்றுக்கொண்டு, தவம்-அக்னிஹோத்ரம்-சிஷ்யர்கள் (விஷயத்திலும்), தாவரங்கள் விஷயத்திலும் நலத்தை விசாரித்தார். வசிஷ்டர் ராஜாக்களுள் சிறந்தவரைப் பார்த்து எல்லாவற்றிலுமே நலம் (என்று) சொன்னார். சுகமாய் (ஆசனத்தில்) வீற்றிருக்கும் விஷ்வாமித்ர ராஜாவிடம் மகாதபஸ்வியான, (மந்திரம்) ஜபிப்பதில் சிறந்தவரான, பிரம்மாவின் புதல்வரான வசிஷ்டர் (இவ்வாறு) வினவினார், ‘ராஜா, தாம் நலமா? தார்மிகரான ராஜாவே, பிரஜைகளை தர்மவழியில் சந்தோஷித்துக்கொண்டு, ராஜவிருத்தங்களை (அதாவது நியாயவழியில் பொருள் சம்பாதித்தல், அதை பெருக்குதல், அதை காப்பாற்றுதல், அதை நல்வழியில் செலவிடுதல் என்று நான்குவகையான அரசநடையால்) காப்பாற்றுகிறீராஉம்முடைய வேலையாட்கள் நன்றாய் கவனிக்கப்படுகிறார்களா? கட்டளைக்கு (கட்டுப்பட்டு) நிற்கிறார்களா? எதிரிகளை வதைப்பவரே! உம்முடைய எதிரிகள் எல்லோரும் ஜயிக்கப்பட்டார்களா? பெருந்தவமுடைய, பாவங்களற்ற நரப்புலியே, உம்முடைய (சேனை) பலங்களிலும், பொருட்களின் சமூகத்திலும், நண்பர்களின் சமூகத்திலும், பிள்ளைகள்-பேரன்மார்கள் இருப்பிலும் நலம்தானே?’

மகாதேஜஸ்வியான வசிஷ்டரிடத்தில் அடக்கத்துடன் கூடினவரான ராஜா விஷ்வாமித்ரர், எல்லா விஷயத்திலும் நலம் (என்று) வசிஷ்டருக்கு மறுமொழியளித்தார். அந்த இரண்டு தர்மிஷ்டர்களும் பரம சந்தோஷத்துடன் கூடி, நீடித்த காலம் அவ்விதமான சுபமான உரையாடல்களை செய்து பரஸ்பரம் பிரியமடைந்தார்கள். ரகுநந்தனா, அதற்குமேல் அந்த உரையாடலின் முடிவில் வசிஷ்ட பகவான் விஷ்வாமித்ரரிடம் மகிழ்ந்த முகமுடையவராய் இந்த வாக்கியத்தை கூறினார், ‘மகாபலவானே, இந்த (சேனை) பலத்திற்கும், அளவிடமுடியாத (பராக்கிரமமுடைய) உமக்கும் முறைப்படி அதிதிபூஜை செய்ய இச்சைகொள்கிறேன். என்னிடமிருந்து (பெற்றிட) மனமிசைந்தருள்வீராக. தாம் பிரயத்தினத்துடன் பூஜிக்கப்படத்தக்க சிறந்த அதிதியான ராஜா. தாம் என்னால் விரும்பி செய்யப்படும் இந்த நற்கர்மத்தை ஏற்றுக்கொள்வீராக.
இவ்விதம் வசிஷ்டரால் சொல்லப்பட்ட மகாமதி கொண்டவரான ராஜா விஷ்வாமித்ரர் இவ்வாறாய் கூறினார், ‘மகா அறிஞரே, பகவானே, எனக்கு பகவானுடைய தரிசனத்தாலேயும், பிரியமான வாக்கியத்தாலேயும் எண்ணமெல்லாம் கைகூடிவிட்டது. எது தம்முடைய ஆசிரமத்தில் இருக்கிறதோ (அப்படிப்பட்ட) பழங்கள்-கிழங்குகள் முதலியதாலும், பாத்ய (தீர்த்தத்தாலும்), ஆசனம (தீர்த்தத்தாலும்), யாவராலும் பூஜிக்கப்படத்தக்க தம்மால் சகலவிதத்திலும் நன்றாய் பூஜிக்கப்பட்டவனாவேன். நான் போய்வருகிறேன். தமக்கு நமஸ்காரம். கருணையான பார்வையால் கடாக்ஷித்தருள்வீர்.

இப்படி சொல்லும் ராஜாவிடம் தர்மாத்மாவும், மிகுந்த புத்திசாலியான வசிஷ்டர் திரும்பத் திரும்பத் திரும்பவுமே விருந்தழைத்தார். விஷ்வாமித்ரர் வசிஷ்டரைப்பார்த்து பின்கண்டபடி பதிலளித்தார், ‘முனிவர்களுள் சிறந்தவரே, அப்படியே ஆகட்டும். பகவானுடைய பிரியம் எப்படியோ அப்படியே ஆகட்டும்.

மகாதேஜஸ்வியும், (மந்திர) ஜபத்தில் செய்பவர்களில் உத்தமரும், களங்கங்களை உதறினவருமான வசிஷ்டர் இவ்விதம் பதிலளிக்கப்பட்டவராய் அதனால் பிரீதியடைந்தவராகி கல்மாஷியை (அதாவது காமதேனுவை) கூப்பிட்டார், ‘ஷபலே (அதாவது காமதேனுவே), உடனேயே ஓடிவா ஓடிவா. எனது வார்த்தைகளை கேள். இந்த (சேனை) பலத்துடன் கூடிய ராஜரிஷிக்கு மிக உயர்ந்த உணவினால் நற்காரியத்தை செய்ய நான் நிச்சயித்து இருக்கிறேன். எனக்காக வேண்டிய ஏற்பாட்டை செய்வாயாக. காமதேனுவே, ஆறு ரஸங்களில் (அதாவது காரம், புளிப்பு, தித்திப்பு, உப்பு, துவர்ப்பு என்கிறவைகளில்) எவர் எவருக்கு எது எது நிரம்ப இஷ்டமோ அதெல்லாம் வேண்டியபடி எனக்காக விரைவில் பொழிந்துவிடு. ஷபலே, ரஸவகைகளுடனும், அன்ன வகைகளுடனும், குடிக்கத்தக்கவைகளுடனும், நாக்கினால் நக்கி திண்ணுபவைகளுடனும், உதடுகளால் உறிஞ்சப்படுபவைகளுடனும் கூடின அன்னக்குவியலை எல்லாவற்றையும் உண்டுசெய். சீக்கிரம் செய்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்திரண்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment