Friday, March 6, 2020

ஐம்பதாவது ஸர்க்கம் – மிதிலா(நகரத்திற்கு) செல்வது


அங்கிருந்து (ஸ்ரீ)ராமர் சௌமித்ரருடன் (அதாவது லக்ஷ்மணருடன்) கூட விஷ்வாமித்ரரை முன்னிட்டுக்கொண்டு வடகிழக்கு திசையில் சென்று யாகசாலைக்கு வந்துசேர்ந்தார். (ஸ்ரீ)ராமரும் லக்ஷ்மணரோடு கூடியவராய் முனிகளுள் புலியிடம் (அதாவது விஷ்வாமித்ரரிடம்) சொன்னார், ‘மகாத்மா ஜனகருடைய யாக ஏற்பாடு நன்றாய் இருக்கிறது அல்லவா? மகாபாக்கியமுடையவரே, பல்வேறு தேசங்களில் வசிப்பவர்களான, வேத அத்யயனத்தால் நிறைந்தவர்களான பிராமணர்கள் அநேக ஆயிரம் இங்கு (இருக்கிறார்கள்). ரிஷிகளின் குடில்களும், பொருட்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான வண்டிகளால் நிறைந்ததுமாய் காணப்படுகின்றன. பிராமணரே, நாம் எங்கு வசிப்போம்? இடம் விதிக்கப்படட்டும்.

மகாமுனியான விஷ்வாமித்ரர் (ஸ்ரீ)ராமருடைய சொல்லை கேட்டு, ஜனநடமாட்டம் அதிகமில்லாத நீர்வளம் நிறைந்த இடத்தில் தங்குதலை செய்தார். அந்த அரசன் (அதாவது ஜனகர்) விஷ்வாமித்ரர் வந்திருப்பதாக கேள்வியுற்று, அப்பொழுது நிந்தனையற்ற புரோகிதரான ஷதானந்தரை முன்னிட்டுக்கொண்டு, வினயத்தோடு கூடினவராய் விரைவை எதிர்கொண்டு சென்றார். மகாத்மாக்களான ரித்விஜர்களும் விரைவாக விஷ்வாமித்ரருக்கு அர்க்யத்தை எடுத்து, தர்மத்தோடே மந்திரபூர்வமாய் கொடுத்தார்கள். மகாத்மாவான ஜனகருடைய அந்த பூஜையை பெற்றுக்கொண்டு, ராஜாவினுடைய நலத்தையும் யாகத்தினுடைய பாதுகாப்பையும் விசாரித்தார். அவர் உபாத்யாயர்கள், புரோகிதர்கள் இவர்களோடு சேர்ந்த அந்த முனிவர்களையும் நியாயப்படி விசாரித்து, பிறகு எல்லோரோடும் சந்தோஷமுற்று சேர்ந்தார். பிறகு ராஜா கைகுவித்தவராய் முனிவர்களுள் சிறந்தவரிடம் (அதாவது விஷ்வாமித்ரரிடம்) சொன்னார், ‘பகவானே, இந்த முனிவர்களில் சிறந்தவர்களோடு கூட ஆசனத்தில் அமரவேண்டும்.

ஜனகருடைய சொல்லை கேட்டு மகாமுனி (விஷ்வாமித்ரர்) உட்கார்ந்தார். புரோகிதரும், ரித்விஜர்களும், மந்திரிமார்களோடு கூடவே ராஜாவும் அமர்ந்தார். ஆசனங்களில் நியாயப்படி அங்கு நாற்புறத்திலும் உட்கார்ந்திருப்பவர்களை பார்த்து, பிறகு அந்த அரசன் விஷ்வாமித்ரரிடம் சொன்னார், ‘இப்பொழுது என்னுடைய யாக ஏற்பாடு சகலமும் தேவர்களால் செய்யப்பட்டது. பகவானுடைய தரிசனத்தால் என்னால் இப்பொழுது யாகபலன் அடையப்பட்டது. முனிபுங்கவரே, பிராமணரே, எந்த என்னுடைய யாகபூமியை முனிவர்களோடு கூட நாடிவந்தவராக ஆகிறீரோ, அதனால் தன்யனாய் ஆகிறேன். அனுக்கிரகம் பெற்றவனாய் ஆகிறேன். பிரம்மரிஷியே, பண்டிதர்கள் பன்னிரண்டு நாட்கள் மீதமென்று சொல்கிறார்கள். கௌஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே), பிறகு (யாக ஹவிர்)பாகங்களை கோருகிற தேவர்களை பார்க்க உரியவராகிறீர்.

இவ்வாறு முனிவர்களுள் புலியிடம் சொல்லிவிட்டு களிப்புற்ற முகமுடையவராய் அரசன் கைகுவித்தவராய், வணங்கினவராய் அப்பொழுது மறுபடி அவரிடம் வினவினார், ‘தேவர்களுக்கு நிகரான பராக்கிரமமுடையவர்களும், வேழம் போலவும்-சிங்கம் போலவும் நடையழகு உடையவர்களும், புலி (மற்றும்) காளையை போன்ற வீரமுடையவர்களும், தாமரை இதழ் போன்ற கண்களையுடையவர்களும், வாள்-அம்பராத்தூணி-வில் இவைகளை தரித்தவர்களும், ரூபத்தில் அஷ்வினி இரட்டையர்கள் போலவும், இளமை பருவத்தை அடைந்திருக்கும் குமாரர்களும், தேவலோகத்தினின்று தற்செயலாயே பூமியில் எழுந்தருளியிருக்கும் அமரர்கள் போன்றவர்களும், தாமரைமலர்போல் விசாலமான விழிகளையுடையவர்களும், உத்தமமான ஆயுதங்களை தரித்தவர்களும், உடும்புத்தோல் விரலுறைகளை தரித்தவர்களும், வாளுடையவர்களும், மகத்தான ஒளியையுடையவர்களும், பக்கக்குடுமி உடையவர்களும், பாவகனின் குமாரனை (அதாவது அக்னியின் குமாரனை என்று பொருள்; முருகப்பெருமானை குறிக்கிறது) போன்ற வீரமுடையவர்களும், ரூபத்தாலும்-பெருந்தன்மையாலும் மானுடர்களுடைய கண்கைளையும்-சிந்தையையும் அபகரிக்கிறவர்களும், எங்களுடைய குலத்திற்கு புகழையும், என்னையும் உயர்த்துவதற்காகவும் இங்கே வந்திருப்பவர்களான இந்த இருவர்களும் எப்படி கால்நடையாய் இங்கு வந்தனர்? முனியே! எதற்காக? யாருக்காகவோ? மனமிசைந்தருள்வீராக. வீரர்களாகவும், உத்தமமான ஆயுதங்களை தரித்திருப்பவர்களும், திடகாத்திரமுடையவர்களும், சந்திர-சூர்யன் ஆகாயத்தை எப்படியோ (அப்படியே) இந்த இடத்தை ஒளிவீசச் செய்கிறவர்களும், பக்கக்குடுமியை தரித்தவர்களும், உடலமைப்பு-ஜாடை-நடை-பாவனைகள் இவைகளால் ஒருவருக்கு ஒருவர் இணையாய் இருக்கிற இருவர்கள் எந்த மகாத்மாவின் புத்திரர்களோ? உள்ளபடி கேட்டிட இச்சைகொள்கிறேன்.

மகாத்மாவான அந்த ஜனகருடைய அந்த வார்த்தையை கேட்டு, அவ்விரு மகாத்மாக்கள் தசரதருடைய புத்திரர்கள் என்று தெரிவித்தார். அதற்குமேல் சித்தாசிரமத்தில் வசித்ததையும், அப்படியே ராட்சசர்களுடைய வதத்தையும், விஷாலா (நகரத்தினுடைய) தரிசனத்தையும், அஹல்யாவிற்கு தரிசனம் தந்ததையும், (ரிஷி) கௌதமரோடு கூடி வாழ்வதையும், அந்த பாதுகாப்பான பயணத்தையும், அதற்குமேல் மகத்தான வில் விஷயத்தில் (அதாவது சிவதனுசு விஷயத்தில்) அறிந்திடும் ஆவலை தீர்த்துக்கொள்வதற்கு இங்கே வந்திருப்பதையும், இது எல்லாவற்றையும் மகாதேஜஸ்வியான மகாமுனி விஷ்வாமித்ரர் மகாத்மாவான ஜனகருக்கு தெரிவித்துவிட்டு மௌனமானார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment