Thursday, March 5, 2020

நாற்பத்தொன்பதாவது ஸர்க்கம் – அஹல்யா சாப மோக்ஷம்


பழங்களற்றவரான (அதாவது விரைகளற்றவரான) ஷக்ரன் உடனேயே ரிஷிகளின் சங்கத்துடன் கூடினவராயும், சாரணர்களுடன் கூடினவராயும், அக்னியை முன்னிட்டவர்களான தேவர்களிடம் நடுக்கமடைந்த முகத்துடன் கூறினார், ‘மகாத்மாவான கௌதமருக்கு குரோதத்தை விளைவித்து, தவத்திற்கு இடையூறு உண்டாக்க, என்னால் செய்யப்பட்ட இது சுரர்களின் (அதாவது தேவர்களின்) காரியமே. அவரின் குரோதத்தால் பழங்களற்றவனாய் செய்யப்பட்டேன். அவளும் சபிக்கப்பட்டாள். மகத்தான சாபத்தை இடச்செய்ததால் என்னால் இவருடைய தவமானது அபகரிக்கப்பட்டது. ஆகையால் ரிஷிகளின் சங்கத்துடன் கூடிய, சாரணர்களுடன் கூடிய, சுரர்களுடன் (தேவர்களுடன்) சிறந்தவரான நீங்கள் எல்லோரும், சுரர்களுக்காக காரியம் புரிந்த என்னை பழங்களுடையவனாக செய்ய கடவீர்கள்.

ஷதக்ரதனுடைய (அதாவது நூறு யாகங்களை செய்தவனுடைய; இங்கு இந்திரனுடைய என்று பொருள்) வார்த்தையை கேட்டு, அக்னி முதலிய தேவர்கள், அனைத்து மருத கணங்களுடன் ஒன்றுசேர்ந்து, பித்ருதேவர்களை அணுகி கூறினார்கள், ‘ஷதக்ரது (அதாவது இந்திரன்) முன்னதாக ஆலோசனை செய்யாமல் மோகத்தாலே ரிஷிபத்தினியை புணர்ந்துவிட்டு, முனிவரின் சாபத்தாலே அங்கேயே பழங்களற்றவராய் செய்யப்பட்டார். இந்த மேஷம் (அதாவது ஆட்டுக்கடா) விரைகள் உடையதாயிருக்கிறது. ஷக்ரனோ (அதாவது இந்திரனோ) விரைகளற்றவராய் செய்யப்பட்டார். மேஷத்தினுடைய விரைகளிரண்டையும் எடுத்து, ஷக்ரனுக்கு விரைவாய் கொடுக்கக்கடவீர்கள். பழங்களற்றதாய் செய்யப்படும் மேஷமோ, மகத்தான திருப்தியை கொடுக்கப்போகிறது. உங்களுடைய (அதாவது பித்ருக்களுடைய) சந்தோஷத்திற்காக எந்த மனிதர்கள் தானமளிப்பார்களோ அவர்களும் அப்படியே.

இப்படி அக்னியின் வார்த்தையை செவியுற்று பித்ருதேவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, மேஷத்தினுடைய இரண்டு விரைகளையும் பிடுங்கி சஹஸ்ராக்ஷனிடத்தில் (அதாவது இந்திரனிடத்தில்) சமர்பித்தார்கள். காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), அதுமுதல் பித்ருதேவர்கள் ஒன்றுகூடி பழங்களற்ற மேஷத்தை (அதாவது ஆட்டுக்கடாவை) புசித்துவருகிறார்கள். அவைகளுடைய பலனை ஒருசேரவே (அனுபவிக்கிறார்கள்). ராகவா, இந்திரனும் அதுமுதல்தான் மகாத்மாவான கௌதமருடைய தவத்தின் மகிமையாலே மேஷவ்ருஷ்ணன் (அதாவது ஆட்டுக்கடா விரைகளுடையோன்) ஆனார். ஆகையால் மகாதேஜஸுடையவனே, புண்ணியசாலியான (ரிஷியின்) ஆசிரமத்திற்கு வா. மகாபாக்கியசாலியான தேவரூபம் போன்ற (வடிவழகுள்ள) இந்த அஹல்யாவை (சாபத்தினின்று) விடுதலை செய்.

விஷ்வாமித்ரரின் வார்த்தையை கேட்டு ராகவர் லக்ஷ்மணருடன் கூட விஷ்வாமித்ரரை முன்னிட்டுக்கொண்டே உடனே அந்த ஆசிரமத்தில் நுழைந்தார். மகாபாக்கியவதியாய், தவத்தாலே வீசும் ஒளியுடையவளாய், உலகத்தாராலும், சுரர்களாலும் (அதாவது தேவர்களாலும்), அசுரர்களாலும் ஒன்று சேர்ந்தும் கூட பார்வைக்கு தென்படாதவளாய், தாத்ராவால் (அதாவது பிரம்மாவால்) பிரயத்தனம் செய்து நிர்மிக்கப்பட்டவளாய், மாயை நிறைந்தவள் போன்றவளாய், திவ்யையாய், பனியால் மூட்டமடைந்து மேகங்களாலும் மறைவடைந்த பூர்ணச்சந்திரனின் ஒளி போன்றவளாய், புகையால் சூழப்பட்டதனாலும் ஜொலித்துக்கொண்டிருக்கும் அக்னிஜ்வாலை போன்றவளாய், நீரின் மத்தியில் கண்டிடமுடியாத ஜொலிக்கும் சூர்ய ஒளியைப்போன்றவளை கண்டார். அவளோ, கௌதமரின் வாக்கியத்தால் (ஸ்ரீ)ராமருடைய தரிசனம் வரை மூன்று உலகத்தாராலும் காணமுடியாதவளாய் இருந்தாள். சாபத்தின் முடிவை அடைந்ததும், அவர்களுடைய பார்வைக்கு அகப்பட்டாள். பிறகு ராகவர்கள் இருவரும், அப்பொழுது அவளுடைய பாதங்களை பிடித்துக்கொண்டு (வணங்கினார்கள்). அவளும் கௌதமர் சொல்லியிருந்ததை நினைவுகூறியவளாய் அவ்விருவர்களையும் அங்கீகரித்தாள். வெகு ஜாக்கிரதையுடன் பாத்யத்தையும், அர்க்யத்தையும் அப்படியே அதிதி பூஜையையும் செய்தளித்தாள். காகுத்ஸ்தர் (அதாவது ஸ்ரீராமர்) விதிகளில் காணப்படும் கர்மத்தின் படி (அதனை) அங்கீகரித்தார். மகத்தான பூமாரி உண்டாயிற்று. தேவ துந்துபிகளின் முழக்கமும், கந்தர்வர்கள், அப்சரஸ்களின் கூட்டமும் மகத்தானதாய் ஆயிற்று. தேவர்கள், தவத்தின் வலிமையால் சுத்தியடைந்த சரீரத்தையுடையவளாய், கௌதமரின் வசம் இணங்கிச் சேர்ந்தவளான அந்த அஹல்யையை நன்று, நன்றுஎன்று ஒன்றுசேர்ந்து பூஜித்தார்கள். மகாதேஜஸ்வியான கௌதமரும் அஹல்யா சகிதராய், சுகமடைந்தவராய் (ஸ்ரீ)ராமரை விதிப்படி நன்றாய் பூஜித்து, மகாதவத்தை (நாடியவராய்) தவம் புரிந்துவந்தார். (ஸ்ரீ)ராமரும் மகாமுனி கௌதமருடைய முன்னிலையில் விதிப்படி உயர்ந்த பூஜையை பெற்று, உடனே மிதிலா (நகரத்திற்கு) சென்றார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்தொன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment