Tuesday, March 3, 2020

நாற்பத்தெட்டாவது ஸர்க்கம் – அஹல்யாவின் சாபம்



அங்கே பரஸ்பரம் அருகே வந்ததுமே நலம் விசாரித்து, உரையாடலின் முடிவில் (மகாராஜா) சுமதி மகாமுனியிடம் (பின்வரும்) வாக்கியத்தை கூறினார், ‘தேவர்களுக்கு சமமான பராக்கிரம்முடையவர்களும், வேழம் போன்றும்-சிங்கம் போன்றும் நடையழகு உடையவர்களும், புலியைப்போன்ற-காளையைப்போன்ற வீரம் உடையவர்களும், தாமரை இதழ்போன்ற விசாலமான விழிகளையுடையவர்களும், வாள்-அம்பறாத்தூணி-வில் இவைகளை தரித்தவர்களும், ரூபத்தில் அஷ்வினிதேவர்களைப்போல் இளமைப்பருவத்தை அடைந்திருக்கும் குமாரர்கள், தேவலோகத்திலிருந்து தற்செயலாய் பூமிக்கு எழுந்தருளியிருக்கும் அமரர்கள் போன்றவர்களும், ஆகாயத்தில் சந்திர-சூர்யன் எப்படியோ அப்படியே இந்த இடத்தை ஒளிவீசச்செய்கிறவர்களும், உடலமைப்பு-ஜாடை-நடை-உடை-பாவனைகள் இவைகளால் ஒருவருக்கொருவர் இணையாய் இருக்கிறவர்களுமான இவர்கள் எப்படி கால்நடையாய் இங்கு வந்தனர்? முனியே, எதற்காக? யாருக்காகவோ? மனமிசைந்தருள்வீராக. வீரர்களான, நரர்களுள் சிறந்தவர்கள் எதற்காகத்தான் எளிதில் செல்லமுடியாத பாதையில் உயர்ந்த ஆயுதங்களை தரித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்? உள்ளபடி கேட்க இச்சைகொள்கிறேன்.

அவருடைய அந்த வார்த்தையை கேட்டு நடந்தபடி தெரிவித்தார், ‘ராம-லக்ஷ்மணர் (எனும் பெயருடையவர்களாய்) அயோத்யாதிபதியான தசரத ராஜாவினுடைய புத்திரர்களப்பா! என் யாகத்தை முடித்து வைப்பதற்காக வந்தார்கள். தசரதபுதல்வர்களான இவ்வீரர்கள் சித்தாசிரமத்திற்கு வந்துசேர்ந்து, ராட்சசர்களையும் நாசம்செய்துவிட்டு, இந்த தேசத்திற்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள்.

(அந்த) ராஜா விஷ்வாமித்ரர் சொன்னதை கேட்டு, மிகவும் ஆச்சர்யமடைந்து, தசரதரின் புத்திரர்களாய், மகாபலசாலிகளாய், பூஜிக்கப்படத்தகுந்தவர்களாய் கிடைத்திருக்க அவ்விரண்டு உத்தமர்களான அதிதிகளை விதிப்படி பூஜித்தார். (மகாராஜா) சுமதியுடைய உத்தமமான அங்கீகரித்து, ராகவர்கள் (அதாவது ஸ்ரீராம-லக்ஷ்மணர்கள்), பிறகு அங்கு ஓர் இரவு தங்கி, அதன்பின் மிதிலைக்கு புறப்பட்டு போனார்கள். முனிவர்கள் எல்லோரும் ஜனகருடைய அந்த சுபமான நகரைக்கண்டு, ‘அற்புதம், அற்புதம்என்று மிதிலையை புகழ்ந்து கொண்டாடினார்கள். ராகவர் மிதிலையைச் சேர்ந்த சோலையான அங்கு பழமையான, மனிதரொருவருமின்றி (ஆயினும்) ரம்மியமான ஆசிரமத்தை கண்டு முனிபுங்கவரிடம் (அதாவது விஷ்வாமித்ரரிடம்) கேட்டார், ‘பகவானே, ஒளிர்வதாய், ஆசிரமம் போன்றதாய், முனிவர்களின் குடியிருப்பற்றதான இது என்னதோ? இது முன்பு யாருடைய ஆசிரமமாய் (இருந்தது)? கேட்க விரும்புகிறேன்.

மகாதேஜஸுடைய, வாக்கிய வலியுடையவரான மகாமுனி விஷ்வாமித்ரர் ராகவரால் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தை கேட்டு மறுமொழியளித்தார், ‘நல்லது! ராகவா! இந்த ஆசிரமபதம் யாருடையது, எந்த மகாத்மாவாலே கோபத்தால் சாபத்துக்குள்ளானது என்பதை உனக்கு நடந்தபடி சொல்லுகிறேன், கேள். நரர்களுள் சிறந்தவனே! முற்காலத்தில் தேவலோகம் போன்றதாய் சுரர்களாலேயும் (அதாவது தேவர்களாலேயும்) நன்றாய் பூஜிக்கப்பட்டதாய், மகாத்மாவான கௌதமருடைய ஆசிரமமாய் இருந்தது. பெரும் புகழுடைய ராஜபுத்திரா, அவர் அஹல்யையுடன் கூடினவராய் முன் வெகு வருடகாலமாய் இங்கேயே தவம் புரிந்தார். (ஸ்ரீ)ராமா, ஓர் நாள் அங்கிருந்து தூரமாக முனிவர் சென்றிருக்கும், அதன் அவகாசத்தை அறிந்துகொண்டே, சஹஸ்ராக்ஷரான (அதாவது ஆயிரங்கண்கொண்டவரான) ஷசீபதி (அதாவது தேவேந்திரன்), (கௌதம) முனிவேடம் பூண்டவராய், அஹல்யையிடம் இவ்வாறான வார்த்தையை சொன்னார், ‘நன்றாயமைந்தவளே, (காமத்தால் கலவியில்) ஈடுபடுபவர்கள் மாதவிடாய் குளியலான காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். நானோ, நல் இடையாளே, உன்னுடன் சங்கமிக்க இச்சைகொள்கிறேன்.

ரகுநந்தனா, முனிவேடம் பூண்டவர் சஹஸ்ராக்ஷன் என்று அறிந்தே, துர்மதியால் தேவராஜன் (என்கிற) குதூகலத்தால் மனம் இசைந்தாள். பிறகு, நிறைவடைந்த உள்ளத்துடன் சுரர்களில் (அதாவது தேவர்களில்) சிறந்தவரிடம் கூறினார், ‘சுரர்களில் சிறந்தவரே, திருப்திகொண்டவளாய் ஆகிறேன். பிரபு, இங்கிருந்து சீக்கிரமாய் சென்றிடுக. தேவர்க்கு ஈசா, உம்மையும், என்னையும் எப்பொழுதும், மானத்தை காப்பவரே, (உள்ளது வெளிப்படாமல்) ரட்சிப்பீராக.

இந்திரனும் சிரித்துக்கொண்டே அஹல்யையிடம் இவ்வாறான வாக்கியத்தை கூறினார், ‘அழகிய இடையுடையாளே, திருப்தியடைந்தவனாக ஆகிறேன். வந்தவழியே செல்கிறேன்.

(ஸ்ரீ)ராமா, இவ்விதமாகவே அவளுடன் சங்கமித்துவிட்டு அதற்குமேல் கௌதமரிடம் பயமுடையவராய், அவர் பரபரப்புடன் துரிதமானவராய்குடிலிலிருந்து வெளிக்கிளம்பினார். உடனே அவர் தேவர்களாலும், தானவர்களாலும் அணுக இயலாதவரான, தவபலம் உடையவரான மகாமுனி கௌதமர் பிரவேசிப்பதை கண்டார். (ஸ்ரீ)ராமா, நன்னீரால் நனைக்கப்பட்டவராய், அனலனைப்போல் (அதாவது அக்னியைப்போல்) ஜொலிப்பவராய், அனைத்து அங்கங்களும் சாம்பலால் பூசப்பட்டவராய், மற்றொரு உமாபதி (அதாவது சிவபெருமான்) போன்றவராய், சிவபக்தராய், மகாத்மாவாய், அனைத்து தத்துவ அர்த்தங்களையும் அறிந்தவராய், சமித்துக்களை சேகரித்துக்கொண்டு வந்தவராய், தர்ப்பைபுற்களை உடையவராய் (அந்த) முனிபுங்கவரை பார்த்ததுமே, சுரபதி (அதாவது தேவேந்திரன்) பயத்தால் முகம் வீழ்ந்தவராய் ஆனார்.

நன்னடத்தையில் சிறந்தவரான (அந்த) முனிவர், முனிவேடம் தரித்திருக்கும் துர்நடவடிக்கையுடையவரான சஹஸ்ராக்ஷனை பார்த்து, உடனே கோபத்தால் (பின்வரும்) வார்த்தையை மொழிந்தார், ‘துர்மதியோனே, என் ரூபம் எடுத்து, செய்யத்தகாத இதை செய்திருக்கிறாய். ஆகையால், நீ பழங்களற்றவனாய் (அதாவது மலடனாய்) ஆகக்கடவாய்.

கோபமடைந்தவராய் மகாத்மாவான கௌதமராலே இப்படி சொல்லப்பட்டதுமே அக்கணத்திலேயே சஹஸ்ராக்ஷனுடைய (அதாவது தேவேந்திரனுடைய) இரண்டு விரைகளும் பூமியில் விழுந்தன. ஷக்ரனை சபித்ததும், உடனேயே தன் மனைவியையும் கூட (இவ்வாறு) சபித்தார், ‘நீ வெகு ஆயிரவருடங்கள் இங்கே இருப்பாய். கல்லாய் மாறி, வாயுவை புசித்துக்கொண்டு, (மனம்) தவித்துக்கொண்டு புழுதியில் கிடப்பவளாய், அனைத்து உயிரினங்களின் கண்களுக்கும் புலப்படாதவளாய் இந்த ஆசிரமத்திலேயே இருப்பாயாக. எப்பொழுது தாக்கிட முடியாதவரான, தசரதபுத்திரரான (ஸ்ரீ)ராமர், கோரமான இந்த வனத்திற்கு வருவாரோ அப்பொழுதே பரிசுத்தையாய் ஆவாய். நடத்தைகெட்டவளே, அவருக்கு அதிதி பூஜை செய்வதால் லோபமும் (அதாவது துராசையும்), மோகமும் நீங்கினவளாய் என்னருகில் சந்தோஷத்துடன் கூடினவளாய், உன் சொந்த வடிவை வகிப்பாய்.

பெரும்புகழ்பெற்றவரான கௌதமர் துர்நடத்தையுடைய அவளிடம் இவ்விதம் சொல்லிவிட்டு இந்த ஆசிரமத்தை விட்டுவிட்டு, சித்தர்களும், சாரணர்களும் சேவிக்கும் ரம்மியமான இமயமலை சிகரத்தில் (அந்த) மகாதபஸ்வி தவம் செய்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்தெட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment