Saturday, February 29, 2020

நாற்பத்தேழாவது ஸர்க்கம் – விஷாலா(நகரத்தின்) வரலாற்றைச் சொல்வது

(பாரிஸிலுள்ள மருதகணங்களின் சிலை)

கர்ப்பம் ஏழுதுண்டாக செய்யப்பட்டதுமே, திதி(தேவி) மிகவும் துக்கித்தவளாய், எளிதில் எதிர்க்கப்பட முடியாதவரான சஹஸ்ராக்ஷனிடம் (அதாவது இந்திரனிடம்) சாந்தப்படுத்தும் வாக்கியத்தை கூறினாள், ‘பலசூதனா (அதாவது பலன் என்ற அசுரனைக்கொன்றவனே), தேவர்க்கு ஈசா, இந்த கர்ப்பம் என்னுடைய குற்றத்தாலேயே ஏழுதுண்டமாய் பயனற்றதாகிவிட்டது. இதில் உன்னிடம் அபராதம் இல்லை. என் கர்ப்பத்திற்கு உண்டான இக்கெடுதியிலுமே (ஓர்) நன்மை உன்னால் செய்யப்படுவதை வேண்டுகிறேன். இவைகள் (இக்கர்ப்பத்துண்டுகள்) எழுவர்களும், ஏழு மருதர்களுடைய பதவி பரிபாலகர்களாய் ஆகட்டும். இந்த என் சரீரத்திலிருந்து உண்டான புத்திரர்கள் காற்றுக்கான பகுதிகளாய் சப்த மாருதர்கள் என்று பிரசித்தியடைந்தவர்களாய், திவ்ய ரூபங்கொண்டவர்களாய் தேவலோகத்தில் சஞ்சரிக்கட்டும். ஒருவன் பிரம்மலோகத்தில் சஞ்சரிக்கட்டும். மற்றொருவன் இந்திரலோகத்தில் அப்படியே மூன்றாமவன் ஸ்வர்கத்தில் வாயு என்ற பெயருடன் பெரும்புகழுடன் அப்படியே சஞ்சரிக்கட்டும். சுரர்களில் (அதாவது தேவர்களில்) சிறந்தவனே, உனக்கு மங்கலம் உண்டாகுக. (மீதமிருக்கும்) நால்வர்களான என் புதல்வர்கள் உன் சாசனத்தால் தேவ இனங்களாய், உன்னாலிடப்பட்ட பெயரைக்கொண்டே மாருதர்கள் என்று புகழ்பட்டவர்களாய், திசைகளெல்லாம் சஞ்சரித்துக்கொண்டேயிருப்பார்களாக.

அவளுடைய அந்த வார்த்தையை கேட்டு, சஹஸ்ராக்ஷரான (அதாவது ஆயிரங்கண்கொண்டவரான), பலன் (என்ற அசுரனை) கொன்றவரான புரந்திரன் (அதாவது இந்திரன்) திதியிடம் கைகூப்பிக்கொண்டு (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘தமக்கு மங்கலமே. இதெல்லாம் உம்மால் சொல்லப்பட்ட படியே நடக்கும். சந்தேகம் வேண்டாம். உம்முடைய பிள்ளைகள் தேவ இனங்களாய் சஞ்சரிப்பார்கள்.

(ஸ்ரீ)ராமா, இவ்விதமாய் தாயும்பிள்ளையுமான அவ்விருவரும் (அந்த) தபோவனத்தில் நிச்சயம் செய்துகொண்டு காரியம் நிறைவேறியவர்களாய் ஸ்வர்கலோகத்திற்கு சென்றார்கள் என்று நாம் கேள்வியுறுகிறோம். காகுத்ஸ்தா, இவ்விதமாக அந்த (இந்திரன்) தவத்தில் ஊன்றியிருந்த (தேவி)திதிக்கு எவ்விடத்தில் முன்னால் பணிவிடைசெய்துவந்தாரோ, அந்த மகேந்திரன் வாசம் செய்துவந்த இடம் இதே (அதாவது விஷாலா நகரம்). நரர்களுள் புலியே, இதைத்தவிர இக்ஷ்வாகுவின் புத்திரனாய், மிகவும் தார்மிகனாய், அலம்புஸைநகரில் பிறந்தவராய் விஷாலன் என்று பெயர்பெற்றவருண்டு. அவராலே இவ்விடத்திலே விஷாலா என்ற நகரம் கட்டப்பட்டது. (ஸ்ரீ)ராமா, விஷாலனுக்கு மகாபலவானான ஹேமச்சந்திரன் (என்பவர்) பிள்ளை. சுசந்திரன் என்று பெயர்கொண்டவர் ஹேமச்சந்திரனுக்கு பிள்ளை. (ஸ்ரீ)ராமா, சுசந்திரனின் தனயன் தூம்ராஷ்வன் என்று பிரசித்திபெற்றவர். அதற்குமேல், தூம்ராஷ்வனுக்கு தனயன் ஸ்ருஞ்ஜயன் உண்டானார். ஸ்ருஞ்ஜயனுடைய பிள்ளை ஸ்ரீமானான, புகழுடையவரான சஹதேவன். சஹதேவனுக்கு புத்திரன் பரமதார்மிகனான குஷாஷ்வன். குஷாஷ்வனுக்கு மகாதேஜஸ்வியாய்புகழுடையவரான (பிள்ளையான) சோமதத்தன். சோமதத்தனுடைய புத்திரரோ ககுத்ஸ்தன் என்று பெயர்பெற்றவர். அவருடைய பிள்ளையாகிற சுமதி என்ற பெயர்கொண்டவர், மகாதேஜஸ்வியாய், அமரர்களுக்கு சமானராய், தோல்வியடையாதவராய் இந்த நகரத்தில் இப்பொழுது இங்கே வாசம் செய்கிறார். இக்ஷ்வாகுவின் அனுக்கிரகத்தாலேயே விஷாலா நகரத்திய அரசர்கள் எல்லோரும் தீர்க்க ஆயுள் கொண்டிருந்தார்கள். (அவர்கள்) மகாத்மாக்கள், வீர்யமுடையவர்கள், நல் தார்மிகர்கள். (ஸ்ரீ)ராமா, நாம் இன்றைக்கு இரவு இங்கு சுகமாய் வசிப்போம். நரர்களுள் சிறந்தவனே, நாளை காலையில் (மகாராஜா) ஜனகரை பார்க்கக்கடவாய்.

மகாதேஜஸ்வியாய், நரர்களுள் சிறந்தவராய், பெரும் புகழ்கொண்டவரான (மகாராஜா) சுமதி, விஷ்வாமித்ரர் அருகே வந்திருப்பவராய் கேள்வியுற்று, எதிர்கொள்பவராய் உபாத்யாயர்களுடனும், பந்துக்களுடனும் (சேர்ந்து) உயர்ந்த பூஜையையும் செய்து, விஷ்வாமித்ரரிடம் கைகூப்பிக்கொண்டு நலம் விசாரித்து, அதற்குமேல் (இவ்வாறு) கூறினார், ‘முனிவரே, எந்த என்னுடைய இருப்பிடத்திருக்கும், கண்முன்னிலையும் (தாம்) வரும்படி ஆனதோ (அப்படிப்பட்ட நான்) தன்யவானாக ஆனேன். அனுக்கிரகம் பெற்றவனாய் இருக்கிறேன். என்னைக்காட்டிலும் அதிக பாக்கியசாலி கிடையாது.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்தேழாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment