Friday, February 7, 2020

முப்பத்தேழாவது ஸர்க்கம் – கந்தனின் பிறப்பு



தேவர் (அதாவது சிவபெருமான்) தவம் புரிகையில், ரிஷிகணங்களோடு தேவர்கள் சேனாபதியை விரும்பினவர்களாய் முதலில் பிதாமகரை (அதாவது பிரம்மாவை) அடைந்தார்கள். அப்பொழுது தேவர்கள் எல்லோரும் பகவானான பிதாமகரை நமஸ்கரித்து, இந்திரனோடு கூடின, அக்னியை முன்னிட்டு செல்லுகிற சுரர்கள் (அதாவது தேவர்கள்) எல்லோரும் சொன்னார்கள், ‘தேவரே! பகவானால் முன்னே கொடுக்கப்பட்டவர் எவரோ அவர் எங்கள் சேனாபதி. அவர் சிறந்த தவத்தை அடைந்து உமையோடு கூட தவம் புரிகிறார். செய்யவேண்டியவைகளை அறிந்தவரே! உலகங்களுக்கு நன்மையின் கோரிக்கையால் இனிமேல் இவ்விஷயத்தில் எது காரியமோ (அதை) தயாரியும். எங்களின் பரமகதி தாம் ஒருவரே.

தேவர்களுடைய வார்த்தையை கேட்டு சர்வலோக பிதாமகர் (அதாவது பிரம்மா) த்ரிதஷர்களைப் (அதாவது தேவர்களைப்) பார்த்து மதுரமான வாக்கியத்தால் சாந்தப்படுத்துகிறவராய் இவ்வாறு சொன்னார், ‘தங்கள் பத்தினிகளிடத்தில் பிரஜைகள் உண்டாகாதென்று சைலபுத்திரியாலே (அதாவது பார்வதியாலே) எது சொல்லப்பட்டதோ, அந்த அவளுடைய வார்த்தை அவமதிக்கக்கூடாதது. சத்தியமானது. சந்தேகமற்றது. தேவர்களுடைய எதிரிகளை அழிக்கிற சேனாபதியான புத்திரனை ஹுதாஷனன் (அதாவது அக்னி) எவளிடத்தில் உண்டுபண்ணப்போகிறானோ (அப்பேர்க்கொத்த) இந்த மூத்த சைலேந்திரனின் (அதாவது பர்வதராஜனின்) மகளான, ஆகாயத்தை அடைந்தவளான கங்கை அந்த குமாரனை வெகுமானிக்கப்போகிறாள். அது உமாவிற்கு இஷ்டமாக ஆகப்போகிறது. சந்தேகமில்லை.

ரகுநந்தனா, அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, சுரர்கள் (அதாவது தேவர்கள்) எல்லோரும் குறிக்கோளை அடைந்தவர்களாய் பிதாமகரை நமஸ்கரித்து பூஜித்தார்கள். (ஸ்ரீ)ராமா, அந்த எல்லா தேவர்களும் கனிமங்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாச பர்வதத்திற்கு சென்று, புத்திரநிமித்தம் அக்னியை ஏவினார்கள். ஹுதாஷன (அதாவது அக்னி) தேவா, இந்த தேவகாரியத்தை நன்கு இயற்றவேண்டும். மகா தேஜஸ்வியே, சைலபுத்திரியான கங்கையினிடத்தில் தேஜஸை விட்டுவிடும்.

பாவகன் (அதாவது அக்னி) தேவர்களுக்கு சபதம் செய்து, கங்கைக்கு சென்று, ‘தேவி, கர்ப்பத்தை தரி. இது தேவர்களுக்கு பிரியம்.இது விஷயத்தில் இந்த வார்த்தையை கேட்டு, திவ்யரூபத்தை தரித்தாள். அவள் அவரது மகிமையை கண்டுகொண்டு அனைத்துப்புறத்திலும் சிதறிவிட்டாள். பாவகன் அப்போது தேவியை எங்கும் நனைத்தார். ரகுநந்தனா, கங்கையினுடைய சகல அவயவங்களும் நிரம்பின. கங்கை சகல தேவர்களுக்கும் புரோகமரான அவரைப்பார்த்து (அதாவது அக்னியைப்பார்த்து) அப்போது சொன்னாள், ‘தேவா, உம்முடைய தேஜஸ் விருத்தியடைகிறது. தரிப்பதில் சக்தியற்றவளாய் இருக்கிறேன். அந்த அக்னியால் தகிக்கப்பட்டவளாய் வெகு துக்கமுற்ற மனமுடையவளாய் இருக்கிறேன்.

பாவகன் ஹிமவத்தின் மகளான கங்கையிடம் இதை சொன்னார், ‘அப்படியானால் இந்த கர்ப்பம் தற்காலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் வைக்கப்படட்டும்.

மகாதேஜஸ் பொருந்திய ரகுநந்தனா, கங்கை அக்னியினது வார்த்தையை கேட்டு, மிகவும் பிரகாசிக்கிற அந்த கர்ப்பத்தை அவயவங்களிலிருந்து விட்டுவிட்டாள். அவளிடத்திலிருந்து வெளிப்புறப்பட்ட எது தரணியை அடைந்ததோ; அதனால் உருக்கின தங்கம்போன்ற காந்தியையுடைய காஞ்சனமாகவும் (அதாவது பொன்னாகவும்), ஈடற்ற காந்தியுடைய வெள்ளியாகவும், காரத்தினால் தாமிரம் போலவும், எஃகாகவும் உண்டாயிற்று. அதனுடைய மலம் அதன்காரணமாய் தகரமாகவும், ஈயமாகவும் ஆயிற்று. அந்த இது தரணியை அடைந்து, அநேக கனிமங்களாக விருத்தியடைந்து. கர்ப்பம் வைக்கப்பட்டவளவில் தேஜஸால் நிறையப்பெற்ற பர்வதத்திலுண்டான காடு எல்லாமும் பொன்மயமாய் ஆயிற்று. அதன்மேல் பிரம்மா அந்த தேசத்தை அடைந்து, இவரைப்பார்த்து சொன்னார், ‘இந்நிலையில் உண்டான ரூபம் எதுவோ அது அக்காரணத்தால் ஜாதரூபமாய் ஆகப்போகிறது.

புருஷர்களுள் புலியே, ராகவா, துரும்பு, மரம், கொடி, புதர் இவைகள் எல்லாம் காஞ்சனமாய் ஆயிற்று. அதுமுதல் ஹுதாஷனனுக்கு (அதாவது அக்னிக்கு) ஒப்பான காந்தியுடைய தங்கம் ஜாதரூபம் என்று பெயர்பெற்று விளங்குகிறது. அதிலிருந்து உண்டான அந்த குமாரனை இந்திரனோடுகூடின, அக்னி (மற்றும்) மருதகணங்களோடு கூடியவர்கள் பாலினால் விருத்தியடைவதன் பொருட்டு க்ருத்திகைகளை (அதாவது கார்த்திகை பெண்களை) சேர்த்துவைத்தார்கள். அவர்கள் இவன் எங்கள் எல்லோருக்கும் புத்திரன்என்று உத்தம தீர்மானத்தை செய்து, நிச்சயித்தவர்களாய் பிறந்தபடியே இருக்கிறவருக்கு பாலை கொடுத்தார்கள். தேவர்கள் எல்லோரும் அந்த புத்திரனை அக்காரணத்தால் கார்த்திகேயன் (என்று) மூவுலகங்களிலும் பெயர்பெற்று விளங்கப்போகிறான். சந்தேகமில்லை.என்று சொன்னார்கள்.

அவர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, கர்ப்பத்தின் நழுவதலில் விழுந்தவனான அனலனை (அதாவது அக்னியை) போல சிறந்த காந்தியினால் பிரகாசிக்கிறவனை நீராட்டினார்கள். காகுத்ஸ்தா, தேவர்கள் கர்ப்பத்தின் நழுவதலிலிருந்து விழுந்தவனான ஜ்வலனனுக்கு (அதாவது அக்னிக்கு) ஒப்பான, மகாபாக்கியமுடைய கார்த்திகேயனை ஸ்கந்தன் (அதாவது விழுந்தவன்) என்று கூறினார்கள். அப்போது ஆறு க்ருத்திகைகளுக்கு சிறந்த பால் உண்டானது. காம்பிலிருந்து உண்டான பாலை ஷடனனாய் (அதாவது ஆறுமுகமுடையவராய்) ஆகி பெற்றுக்கொண்டார். ஒரு தினம் பாலை கிரகித்து, மெல்லியதேகமுடைய பிரபு அக்காலத்தில் தன் வீர்யத்தால் தைத்ய (அதாவது அசுர) சேனை கூட்டங்களை ஜயித்தார். அக்னியை முன்னிட்டுச்செல்லுகிற சுரகணங்கள் (அதாவது தேவகணங்கள்) ஒன்றுசேர்ந்து, ஈடற்ற ஒளியுடைய அவரை அதன்மேல் சுரசேனைகளின் (அதாவது தேவ சேனைகளின்) கணபதியாய் (அதாவது கூட்டங்களுக்கு நாயகனாக) பட்டாபிஷேகம் செய்தார்கள். (ஸ்ரீ)ராமா, இந்த கங்கையினுடைய வரலாறும் அப்படியே தனமளிக்க வல்ல புண்ணியமான குமாரசம்பவத்தையும் உமக்கு என்னால் சொல்லப்பட்டது. (ஸ்ரீ)ராமா, கார்த்திகேயருடைய பிறப்பை இதை எவன் அறிகிறானோ அவன் அனைத்து பாவங்களிலிருந்து விடுபட்டவனாய் சனாதனமான பிரம்மத்தை அடைகிறான். காகுத்ஸ்தா, புவனத்தில் கார்த்திகேயருடைய பக்தனான மனிதன் எவனோ அவன் புத்திரன் (மற்றும்) பேரன்களோடும் ஆயுளுடையவனாயும் ஸ்கந்தனுக்கு ஒப்பான உலகத்தில் இருத்தலை அடைவான்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்தேழாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment