Tuesday, February 11, 2020

முப்பத்தெட்டாவது ஸர்க்கம் – ஸகரரின் அஷ்வமேதயாக ஆரம்பம்

(ஸகர மகாராஜா)

கௌஷிகர் (அதாவது விஷ்வாமித்ரர்) (ஸ்ரீ)ராமரிடத்தில் மதுரமான அட்சரங்களாலமைக்கப்பெற்ற அந்த கதையை அறிவித்து, அப்படியே காகுத்ஸ்தருக்கு மற்றொரு வாக்கியத்தை இவ்வாறு சொன்னார், ‘முன்னொரு காலத்தில் ஸகரன் என்று பெயருள்ள சூரர் தர்மாத்மாவாய், நராதிபதியாய், அயோத்யாவிற்கு அதிபதியாய் இருந்தார். அவர் பிள்ளை வேண்டுமென்ற விருப்பமுள்ளவராய் இருந்தும் புத்திரரற்றவராய் இருந்தார். (ஸ்ரீ)ராமா, விதர்பதேசத்தரசரின் குமாரியாகிய நாமத்தால் கேஷினி என்று பெயர்பெற்ற தர்மத்தின் இஷ்டையுள்ளவள் ஸகரரின் பத்தினி (ஆவாள்); அவள் சத்தியவாதினி, மூத்த மனைவி. அரிஷ்டநேமியின் புதல்வியான, புவியில் ரூபத்தால் ஒப்பற்றவளான சுமதியென்று பெயருள்ளவள் ஸகரருக்கு இரண்டாவது பத்தினியாக இருந்தாள். மேலும், ராஜா அவ்விரு பத்தினிகளோடு கூட இமயத்தை அடைந்து ப்ருகுப்ரஸ்ரவணம் என்ற மலையில் தவத்தை புரிந்தார். அவ்விதமே நூறு வருடம் பூர்த்தியாகையில் தவத்தால் ஆராதிக்கப்பட்ட சத்தியபராக்கிரமமுள்ள ப்ருகு முனிவர் ஸகரருக்கு வரத்தை அளித்தார். பாவமற்றவனே! உனக்கு அநேக புத்திரலாபம் உண்டாகப்போகிறது. புருஷர்களுள் காளையே! உலகில் ஒப்பற்ற கீர்த்தியையும் அடையப்போகிறாய். குழந்தாய்! உன்னுடைய ஒருவள் வம்சத்தை விளங்க வைக்கிற (ஓர்) புத்திரனை உண்டுபண்ணுவாள். மற்றொருத்தி அறுபதாயிரம் புத்திரர்களை பிறப்பிப்பாள்.

அப்படி சொல்லுகிற அந்த மகாத்மாவை பார்த்து மிக பிரீதியடைந்தவராய் அஞ்சலி செய்தவர்களாய் ராஜகுமாரிகளிருவர் அருளைப்பெற்றவர்களாய் அப்போது சொன்னார்கள், ‘பிராமணரே! எவளுக்கு ஓர் புத்திரன்; எவள் அநேகர்களை பிறப்பிப்பாள்? பிராமணரே! கேட்க விரும்புகிறோம். உம்முடைய சொல் சத்தியமாய் ஆகுக.

வெகு தார்மிகரான ப்ருகு அவர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, சிறந்த வார்த்தையை கூறினார், ‘இவ்விஷயத்தில் தங்கள் இஷ்டம் விதிக்கப்படலாம். ஒருவன் மட்டுமே வம்சத்தை நிலைநிறுத்துபவனாக ஆவான். அநேகர்கள் உள்ளபடி மகாபலவான்கள். கீர்த்தியுள்ளவர்கள். மகத்தான உற்சாகமுடையவர்கள். எவள் எந்த வரத்தை இச்சிக்கிறாள். நான் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

ரகுநந்தனா, (ஸ்ரீ)ராமா, முனிவருடைய அந்த வார்த்தையை கேட்டு கேஷினீ அரசனருகில் வம்சத்தை விருத்தி செய்துவைக்கிற (ஓர்) புத்திரனை வேண்டினாள். ஆகவே, சுபர்ணனுடன் (அதாவது கருடனுடன்) பிறந்த சுமதி மகத்தான உற்சாகமுடைய, கீர்த்தியுள்ள அறுபதாயிரம் பிள்ளைகளை வேண்டிக்கொண்டாள். ரகுநந்தனா, மனைவிகளோடு கூடினவராய் அந்த ராஜா ரிஷியை (அதாவது ப்ருகு ரிஷியை) பிரதட்சிணம் செய்து, தலையால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, தன் பட்டணத்திற்கு சென்றார்.

அந்த காலம் செல்லுகையில் மூத்தவளான கேஷினீ அவ்விதமே ஸகரரின் மகனாய் அஸமஞ்சன் என்ற பெயர்கொண்ட புத்திரனை பெற்றாள். நரர்களுள் புலியே, சுமதியோ கர்பபிண்டத்தை ஈன்றாள். பிண்டம் பேதமாகி அறுபதாயிரம் புத்திரர்களை வெளிவந்தார்கள். செவிலித்தாய்மார்கள் நெய் நிறைந்த கும்பங்களில் அவைகளை காப்பாற்றி வைத்தார்கள். எல்லோரும் வெகு காலத்தில் இளமைப்பருவத்தை அடைந்தார்கள். ஸகரருடைய அறுபதாயிரம் புத்திரர்கள் அப்படியே நெடுங்காலத்தால் அப்பொழுது ரூபம் (மற்றும்) யௌவனம் (அதாவது இளமை) இவைகளோடு விளங்குகிறவர்களாய் ஆனார்கள். ரகுநந்தனா, அவன் ஸகரரின் மூத்த குமாரனாய், நரர்களுள் சிறந்தவனாய் இருந்தும் நித்தம் குழந்தைகளை பிடித்துத்தூக்கி சரயூவின் (அதாவது சரயூநதியின்) ஜலத்தில் போட்டு, முழுகுகிற அவர்களை பார்த்து சிரிப்பவனாயிருந்தான். இவ்வளவு நல்லோருக்கு இடையூறு செய்கிறவனும், நகரவாசிகளுடைய தீமையில் கருத்துள்ளவனுமான பாவ நடத்தை கொண்டவன் தந்தையினால் நகரத்திலிருந்து துரத்திவிடப்பட்டான். ஆயினும், அந்த அஸமஞ்சனுக்கு அம்ஷுமான் என்ற பெயருள்ள வீர்யவானான புத்திரன் இருந்தார். எல்லோருக்கும் பிரியம் உண்டாகும்படி பேசுபவர். அனைத்து லோகத்தினுடைய கொண்டாடப்பட்டவர். நரர்களுள் சிறந்தவனே (அதாவது ஸ்ரீராமா), அப்போதிலிருந்து நெடுங்காலத்திற்கு பிறகு ஸகரருக்கு யாகம் செய்வேனாக என்ற நிச்சயமான எண்ணம் தோன்றிற்று. அந்த வேதமறிந்த ராஜா உபாத்யாய கணங்களோடு கூடினவராய் யாககாரியத்தின் நிச்சயத்தை செய்து, ஆகவே யாகம் செய்ய தொடங்கினார்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்தெட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment