Monday, February 3, 2020

முப்பத்தாறாவது ஸர்க்கம் – உமா மகிமையின் வர்ணனை



அந்த முனிவர் வாக்கியங்களை சொன்னவளவில் வீரர்களான ராகவ-லக்ஷ்மணவிருவர்கள் கதையால் மகிழ்ந்து, முனிபுங்கவரிடம் சொன்னார்கள், ‘பிராமணரே, உம்மால் மிக்க தர்மமான இது கதைக்கப்பட்டது. சைலராஜனுடைய (அதாவது பர்வதராஜனுடைய) மூத்த குமாரியினுடைய தேவ(லோகத்திலும்), மானுட(லோகத்திலும்) உண்டானதை விரிவாய் சொல்ல உரியவராகிறீர். விரிவாய் அறிந்தவராய் இருக்கிறீர். எந்த காரணத்தால் லோகபாவனி (அதாவது கங்கை; லோகபாவனி என்றால் உலகத்தை பரிசுத்தம் செய்பவள் என்று பொருள்) மூன்று பாதையில் பாய்கிறாள்? தர்மமறிந்தவரே, த்ரிபதகையான (அதாவது மூன்று பாதைகளில் செல்பவளான) கங்கை எந்த கர்மங்களால் கூடினவள்? எதனால் மூவுலகங்களில் நதிகளில் உத்தமமானவளாய் பிரசித்திபெற்றாள்?’

காகுத்ஸ்தர் (அதாவது ஸ்ரீராமர்), அவ்வாறு சொல்லுகையில் தபோதனரான விஷ்வாமித்ரர் முழுமையான அனைத்து கதையையும் ரிஷிகளின் மத்தியில் சமர்பித்தார், ‘(ஸ்ரீ)ராமா, முன்னொரு காலத்தில் மகாதபஸ்வியான நீலகண்டர் மணம்முடித்தவராய் தேவியைக்கண்டு காதலாலே மைதுனத்தை தொடங்கினார். எதிரிகளை தகிக்கச் செய்பவனே, (ஸ்ரீ)ராமா, தேவரான நீலகண்டருக்கு நூறு திவ்ய வருடங்கள் சென்றபோதிலும் அவளிடத்தில் குமாரன் உண்டாகவில்லை. அப்போது இவ்விஷயத்தில் எந்த புத்திரன் உண்டாகிறானோ அதை எவன் சகிப்பன் (என்று) பிதாமகரை (அதாவது பிரம்மாவை) முன்னிட்டு செல்லுகிற தேவர்கள் பயந்தார்கள். தேவர்கள் எல்லோரும் (பரமசிவன்) அருகே வந்து, நமஸ்கரித்து இவ்வாறு கூறினர், 'தேவதேவா, மகாதேவா, இந்த உலகத்தினுடைய நன்மையில் ஆவல்கொண்டவரே, சுரர்களுடைய வணங்குதலால் அனுக்கிரகத்தை செய்ய உரியவராகிறீர். சுரோத்தமா (அதாவது தேவர்களில் உத்தமா), உலகங்கள் உம்முடைய தேஜஸை தாங்கமாட்டார்கள். பிரம்மசம்பந்தமான தவத்தோடு கூடினவராய் தேவி சகிதமாய் தவத்தை செய்யும். மூவுலகத்தின் நன்மையின் விருப்பத்தால் (உமது) தேஜஸை தேஜோமயமான சரீரத்தில் தரித்துக்கொள்ளும். இந்த உலகங்கள் எல்லாவற்றையும் ரட்சியும். உலகமில்லாததை செய்தல் தகாது.

தேவதாக்களுடைய வார்த்தையை கேட்டு, அனைத்துலகத்திற்கும் மகேஷ்வரர் எல்லாரையும் பார்த்து, ‘அப்படியே ஆகட்டும்என்று சொன்னார். இன்னும் இனி வரப்போகிறதையும் சொன்னார், ‘நான் உமா சகிதமாய் தேஜஸை தேஜோமயமான சரீரத்திலேயே தரித்துக்கொள்கிறேன். த்ரிதஷர்களே (அதாவது தேவர்களே), உலகம் முழுதும் சுகம் அடையட்டும். எந்த இந்த என்னுடைய சிறந்த தேஜஸ் இடத்திலிருந்து நழுவினதாகிறதோ அதை யார் தரிக்கப்போகிறார்? சுரர்களில் சிறந்தோரே, எனக்கு சொல்லுங்கள்.

இவ்விதம் சொல்லப்பட்ட தேவர்கள் அப்பொழுது ரிஷபத்தை கொடியாக உடையவருக்கு (அதாவது சிவபெருமானுக்கு) மறுமொழியுரைத்தனர், ‘எது நழுவின தேஜஸோ, அந்த இதை தரா (அதாவது பூமி) தரிப்பாள்.இவ்விதம் சொல்லப்பட்ட சுரபதி (அதாவது சிவபெருமான்) பூமியில் விட்டார். அந்த தேஜஸால் மலைகள், வனங்கள் அடங்கிய பூமி வியாபிக்கப்பட்டது. அப்படியிருப்பதினால் அந்த தேவர்கள் ஹுதாஷனனைப் (அதாவது அக்னியைப்) பார்த்து இவ்வாறு கூறினர், ‘தாம் வாயுவுடன் கூடினவராயே ரௌத்திரமான மகாதேஜஸுள் எப்படியாகிலும் பிரவேசியும். அது அக்னியால் மீண்டும் வியாபிக்கப்பட்டதாய் வெண்மலையாய் ஆயிற்று. பாவகனுக்கும் (அதாவது அக்னிக்கும்), ஆதித்யனுக்கும் ஒப்பான திவ்ய ஷரவணம் (அதாவது நாணல்காடு) எங்கோ அங்கு மகா தேஜஸ்வியானவரும், அக்னியில் உண்டானவரும் கார்த்திகேயன் பிறந்தார்.

மேலும் ரிஷிகணங்களோடு கூடின தேவர்கள் அப்பொழுது அதனால் மிக பிரீதியுடைய மனமுடையவர்களாய் உமையையும் அப்படியே சிவனையும் மிகவும் பூஜித்தார்கள். (ஸ்ரீ)ராமா, இந்நிலையில் சைலபுத்திரி (அதாவது பர்வதத்தின் பெண் – அன்னை பார்வதி) த்ரிதஷர்களிடம் (அதாவது தேவர்களிடம்) இவ்விதம் சொன்னாள், ‘சுரர்களே, எனக்கு செய்யப்பட்ட அப்பிரியத்தின் பலனை இப்பொழுது அடையுங்கள்.இவ்வாறு சொல்லி, பாஸ்கரனைப்போன்ற (அதாவது சூர்யனைப்போன்ற) ஒளியுடைய பார்வதி ஜலத்தை எடுத்து, சினமுடையவளாய், குரோதத்தால் ரத்தநிற கண்களையுடையவளாய் எல்லோரையும் சபித்தாள், ‘புத்திரனை விரும்பி சங்கமித்த நான் விலக்கப்பட்டது எதனாலோ, அதனால் தங்கள் மனைவிகளிடத்தில் புத்திரனை நிச்சயமாய் உண்டுபண்ண கடவீர்களில்லை. இதுமுதல் உங்களுடைய பத்தினிகள் பிரஜைகள் (அதாவது பிள்ளைகள்) இல்லாதவர்களாக ஆகட்டும்.மேற்கூறியவிதம் சுரர்கள் (அதாவது தேவர்கள்) எல்லோருக்கும் சொல்லி, இன்னும் பூமியை சபித்தாள், ‘அவனியே (அதாவது பூமியே), நீ அநேக ரூபமுடையவளாய், பலருக்கு மனைவியாக ஆகக்கடவாய். துர்மதியுள்ளவளே, எனக்கு புத்திரனை இச்சிக்காத என் குரோதத்தால் கலங்கச்செய்யப்பட்டவளாய் புத்திரனாலுண்டாகிற பிரீதியையே அடையாய்.

அப்பொழுது சுரபதி (அதாவது சிவபெருமான்) அந்த எல்லா தேவர்களை வெட்கமடைந்தவர்களாய் பார்த்து, வருணனால் பரிபாலிக்கப்படும் திசையை (நோக்கி) போக ஆரம்பித்தார் (வருணனால் பரிபாலிக்கப்படும் திசை - மேற்கு). அந்த மகேஷ்வரன் சென்று, அந்த மலையினுடைய வடக்கு பக்கத்திலிருக்கிற இமயபர்வதத்தை சேர்ந்த சிகரத்தில் தேவியோடு கூட தவத்தை செய்தார். (ஸ்ரீ)ராமா, சைலபுத்திரியினுடைய (அதாவது அன்னை பார்வதியினுடைய) இந்த (வரலாறு) விரிவாய் உனக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்படியே கங்கையினுடைய உற்பத்தியையும் என்னிடத்திலிருந்து லக்ஷ்மணனுடன் கூடினவராய் கேள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment