(கங்கையும்; உமை-உமையொருபாகனும்)
“ஷோணா நதிக்கரையிலேயே இரவின் மிச்சத்தை கழித்து, உறுதியானவரான
விஷ்வாமித்ரர் இரவு விடிந்தவளவில் பின்வருமாறு சொன்னார், ‘(ஸ்ரீ)ராமா,
இரவு நல்விடிவானது. காலை
சந்தி நெருங்குகிறது. எழுந்திரும். எழுந்திரும். உமக்கு மங்கலம். செல்வதின்
பொருட்டு திருவுள்ளம் பற்றும்.’
“அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, காலைவேளையில்
செய்யவேண்டிய கிரியையை செய்து,
செல்வதில்
ஆர்வங்கொண்டார். இந்த வாக்கியத்தையும் சொன்னார், ‘இந்த
சுபஜலமான ஷோணை (நதி) ஆழமற்றது. மணல்திட்டுகளோடு விளங்குகிறது. பிராமணரே! எந்த
பாதையில் நாம் தாண்டுவோம்?’
“(ஸ்ரீ)ராமரால் இவ்வாறு சொல்லப்பட்ட விஷ்வாமித்ரர், இப்பொழுது இவ்வாறு கூறினார், ‘மகரிஷிகள் எவ்வழியாக செல்கிறார்களோ, அந்த இந்த பாதை என்னால் உத்தேசிக்கப்பட்டது.’
“தூரமான வழியை கடந்து, அப்பொழுது மத்தியானம்
சென்றவளவில் அவர்கள் முனிவர்களால் சேவிக்கப்பட்ட நதிகளுள் சிறந்த ஜாஹ்னவீயை (அதாவது கங்கையை) கண்டார்கள். புண்ணியதீர்த்தமுடைய
அன்னப்பறவைகளாலும், நாரைகளினாலும் நிறைந்திருந்த அதை பார்த்து ராகவரோடுகூடின
முனிவர்கள் எல்லோரும் மனம் களித்தவர்களாய் ஆனார்கள். அப்பொழுது அவ்விடத்தில்
அதனுடைய கரையில் தங்குமிடத்தை உருவாக்கும் செயலை செய்தார்கள். அங்கு ஸ்நானம்
செய்து பித்ருக்களையும் (அதாவது
முன்னோர்களையும்), தேவதாகளையும் நியாயப்படி தர்ப்பணங்களால் திருப்தி பண்ணி
வைத்தும், அக்னிஹோத்ரங்களை ஹோமம் செய்தும், அமிர்தத்திற்கு
சமமான ஹவிஸை (ஹவிர்பாகம் என்றால்
யாகத்திலிடும் பொருளாகும்) புசித்தும், பரிசுத்த
ஜாஹ்னவீ கரையில் மகாத்மாவான விஷ்வாமித்ரரை எல்லாபுறத்திலும் சூழுந்து களிப்புற்ற
மனமுடையவர்களாய் உட்கார்ந்தார்கள். (ஸ்ரீ)ராமர் மிகவும் மகிழ்ந்த மனமுடையவராய் விஷ்வாமித்ரரைப் பார்த்து
கூறினார், ‘பகவானே,
மூன்று பாதைகளில் (அதாவது மேலுலகம்,
பூவுலகம், கீழுலகம்) செல்லுகிற நதியான கங்கையின் (வரலாற்றை)
கேட்க இச்சைகொள்கிறேன். எவ்வாறு மூவுலகத்தை ஆக்கிரமித்து கடலை அடைந்தது?’
“(ஸ்ரீ)ராமருடைய
வாக்கியத்தால் உந்தப்பட்டவரான மகாமுனி விஷ்வாமித்ரர் கங்கையினுடைய பிறப்பையும், விருத்தியையும்
சொல்ல தொடங்கினார். ‘(ஸ்ரீ)ராமா, ஹிமவான்
என்று பெயர்கொண்ட கனிமங்களுக்கு இருப்பிடமான, மகானான மலைகளின் இந்திரன்
(ஆவார்). அவருக்கு புவியில் ரூபத்தால் ஒப்பற்ற கன்னிகைகள் இரண்டு. (ஸ்ரீ)ராமா,
மேருவின் மகள், ஹிமவானின்
பிரியமுள்ள பத்தினி, பெயரால் மேனகா (என்று) பெயர்பெற்ற நல்லிடையாள் எவளோ அவள்தான் அவ்விருவர்களுடைய தாய். ராகவா, அவளிடத்தில்
கங்கை ஹிமவானுக்கு மூத்த பெண்ணாக இருந்தாள். அவருக்கு பெயரால் உமா (அதாவது அன்னை பார்வதி) என்றவளும் பெயர்பெற்ற
இரண்டாவதவளாய் இருந்தாள். அப்படியிருக்கையில் சுரர்கள் (அதாவது தேவர்கள்)
எல்லோரும் தேவகாரியத்திற்கு ஆகவேண்டியிருப்பதால் மூத்தவளான மூன்று பாதையில்
செல்லுகிற நதியான கங்கையை சைலேந்திரனிடம் (அதாவது பர்வதராஜனிடம்)
வேண்டிக்கொண்டார்கள். ஹிமவான் தர்மத்தால் மூவுலகத்திற்கும் நன்மைசெய்யும்
விருப்பத்தாலே புதல்வியான உலகத்தை பரிசுத்தம் செய்கிற தன் இஷ்டமான மார்கங்களில்
செல்லுகிற கங்கையை கொடுத்தார். மூவுலகத்திற்கும் நன்மையைச் செய்கிற அவர்கள் (அதாவது
தேவர்கள்) மூவுலகத்தின் பொருட்டு கங்கையை வாங்கி வைத்துக்கொண்டு, கருத்து
நிறைவேறின மனதோடு சென்றார்கள். ரகுநந்தனா, மற்றொரு பர்வதத்தின்
பெண்ணான எவள் கன்னிகையாய் இருந்தாளோ,
அவளும் தவத்தையே
தனமாயுள்ளவளாய் உக்கிரமான விரதத்தை அடைந்து தவம் புரிந்தாள். மலைகளில் சிறந்தவர்
உக்கிரமான தவத்தோடு கூடின பெண்ணான உமாவை உலகத்தாரால் வணங்கப்பட்டவளாய் ஒப்பற்ற
ரூபமுடைய ருத்திரருக்கு (கைபிடித்து)
தந்தார். ராகவா, இவ்விருவர்கள் (கங்கை மற்றும் உமா) உலகத்தால் வணங்கப்பட்டவர்கள். அவ்விருவர்களான நதிகளுள்
சிறந்த கங்கையும், உமா தேவியும் சைலராஜனுடைய பெண்கள். நடையழகு உடையவர்களில்
சிறந்த குழந்தாய் (அதாவது ஸ்ரீராமா), எது
நிமித்தமாய் த்ரிபதகா நதி (அதாவது
மூன்று பாதைகளில் செல்லும் நதி) முதலில் ஆகாயத்தில் சென்று அடைந்தாளோ; இது எல்லாம்
உனக்கு சொல்லப்பட்டது. அந்த இந்த அழகான சைலேந்திரனுடைய பெண், பாவமற்றவளாய், நீர்
பெருக்குயுடையவளாய், சுரநதியாய் (அதாவது தேவநதியாய்) அக்காலத்தில் சுரலோகம் ஏறினாள்.’”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்திஐந்தாவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment