(அயோத்யாவிலிருந்து அன்றைய விஷாலா நகரம் என்றறியப்பட்ட இன்றைய ஹாஜிபூருக்கான பாதை)
“விஷ்வாமித்ரரின்
வார்த்தையை கேட்ட லக்ஷ்மணருடன் கூடியிருந்த ராகவர், மிக்க
ஆச்சர்யத்தை அடைந்து,
விஷ்வாமித்ரரிடம் இவ்வாறு
கூறினார், ‘பிராமணரே, கங்காவதரணம் பற்றியதும், சமுத்திரத்திற்கு பூரணமாய் போய்ச்சேருகிறதைப் பற்றியதுமான, தம்மால் சொல்லப்பட்டதான இது அதிஅற்புதமாய் மிக்க
புண்ணியமானது. மகாமுனியே,
தாம் சொல்லிய இந்த கதை
முழுவதும் ஒன்றும் விடாமல் சிந்தனை பண்ணிக்கொண்டிருந்த எங்களிருவர்களுக்கும் இந்த
இரவு ஓர் கணம் போன்று கழிந்துவிட்டது.’
“அப்பொழுது சௌமித்ரரோடு (அதாவது லக்ஷ்மணரோடு) கூட சுபமாகிய விஷ்வாமித்ரரின்
கதையை சிந்தித்துக்கொண்டிருந்த அவருக்கு (அதாவது ஸ்ரீராமருக்கு) அந்த இரவு
முழுதும் கழிந்தது. அப்பொழுது மிகத்தெளிவாய் பொழுதுவிடிந்ததும் எதிரிகளை
வெற்றிகொள்பவரான ராகவர்,
காலை கர்மங்களை
முடித்திருந்த விஷ்வாமித்ர மகாமுனியிடம் (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘இரவானது விசேஷமாய் கொண்டாடப்படும் வண்ணமாய் கழிந்தது.
கேட்கவேண்டியதான உயர்வானது கேட்கப்பட்டது. பகவான் இங்கு எழுந்தருளியிருப்பவராய்
அறிந்து, துரிதமாய், புண்ணியசீலர்களான
ரிஷிகளுடைய சுகமான ஆசனங்களுடன் அமைக்கப்பட்டதாகிய ஓடமானது இதோ
கொண்டுவரப்பட்டிருக்கிறது. நதிகளுள் சிறந்த, புண்ணியமான, த்ரிபதகா (அதாவது கங்கா) நதியை தாண்டுவோம்.’
“அந்த மகாத்மாவான ராகவருடைய அந்த வார்த்தையை கேட்டு, ரிஷிகளின் சங்கத்தினராயும், ராகவருடன்
கூடினவராயும், அக்கரை போய்ச்சேருவதை செய்வித்தார். அவர்கள், வட கரையை அடைந்து, அவ்விடத்தில்
ரிஷிகணங்களை பூஜித்துவிட்டு,
கங்கைக்கரையில்
உட்கார்ந்தவர்களாய் விஷாலா (என்கிற)
நகரை கண்முன்கண்டார்கள். அப்பொழுது ஸ்வர்கத்திற்கு சமானமாய் ரம்மியமாயிருக்கிற
விஷாலா நகரத்தை கண்டு அவ்விடத்திற்கு உடனேயே முனிவரர் ராகவர்களுடன் சென்றார்.
அதிமேதாவியாகிய (ஸ்ரீ)ராமர், விஷ்வாமித்ர
மகாமுனியிடம் கைகூப்பியவராய் ஆகி, உத்தமமான விஷாலா பட்டணத்தைப்பற்றி
இப்படி வினவினார்,
‘மகாமுனியே, விஷாலையில் இப்போதிருக்கிறது எந்த ராஜவம்சம்? விஷயங்களை கேட்டறிய வேண்டுமெனும் அவா எனக்கு
அதிகமாயிருக்கிறபடியால் கேட்க இச்சைக்கொள்கிறேன். தமக்கு மங்கலம்.’
“முனிபுங்கவர் அந்த (ஸ்ரீ)ராமரது அந்த வார்த்தையை கேட்டு, விஷாலாவின் அந்த புராதனத்தை சொல்ல ஆரம்பித்தார். ‘ராகவா, (ஸ்ரீ)ராமா, கேள். இந்த
தேசத்தில் எது முன் நடந்ததோ அதையும், ஷக்ரனுடைய
சுபமான கதையையும் உள்ளது உள்ளபடி கதைக்கும் (எனக்கு) திருச்செவி சாற்றுக. மகாபாக்கியவானே, (ஸ்ரீ)ராமா, முன்பு கிருதயுகத்தில் திதி (தேவியினுடைய) புத்திரர்கள் (அதாவது அசுரர்கள்)
மகாபலவான்கள். (தேவி) அதிதியினுடையவர்களோ (அதாவது தேவர்கள்)
வீர்யவான்கள், நல் தார்மிகர்கள். நரர்களுள் புலியே, அக்காலத்தில் மகாத்மாக்களாகிய அவர்களுக்கு அமரர்களாயும், ரோகமற்றவர்களாயும், மனக்கவலையற்றவர்களாகவும்
என்ன செய்தால் (நாம்) ஆகுவோம் (என்கிற)
எண்ணம் உண்டாயிற்று. (ஸ்ரீ)ராமா, சிந்தித்துக்கொண்டிருக்கும்
அறிஞர்களாகிய அவர்களுக்கு ‘பாற்கடல் கடைவதை செய்து, அதிலிருந்து (உண்டாகும்) ரஸத்தை நாம் பருகுவோம்’ என்கிற புத்தி உண்டாயிற்று.
(பாற்கடலை கடைதல்)
“அளவற்ற தேஜஸ் கொண்டவர்கள்
கடைதலை அக்காலத்தில் நிச்சயித்து, மந்தரமலையை மத்தாக
செய்துகொண்டும்,
வாசுகி (எனும் நாகராஜனை) கடைகயிறாகவும் செய்துகொண்டு
கடைந்தார்கள். நரர்களுள் சிறந்தவனே, அப்படியாய்
நெடுங்காலம் சென்றபின் காலாக்னிக்கு ஒப்பான ஹாலாஹலம் என்ற பெயர்கொண்டு விளங்குவதான
விஷமானது உதயமானது. தேவர்களும், அசுரர்களும் அந்த
விஷத்தின் அக்னியால் தகிக்கப்பட்டவர்களாய், அச்சமுற்றவர்களாய், சரணம் புகுந்தோரை காத்தருளும் பகவானான மகேஷ்வரரை சரணம்
அடைந்தார்கள். அப்பொழுது மகாதேவரை சரணமடைந்து யாசிக்கவந்த தேவர்கள் சங்கரராகிய, ருத்திரருமாகிய பஷுபதியை வணங்கி ‘ரட்சித்தருளும், ரட்சித்தருளும்’ என்று வேண்டிக்கொண்டார்கள். தேவர்கள் இவ்விதம்
பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில் அச்சமயத்தில் அவ்விடத்திலே தேவதேவர்களுக்கு
ஈசனாகிய, பிரபுவான ஹரி சங்குசக்கிரதாரியாய் காட்சிதந்தருளினார்.
(நீலகண்டரான ஈசன்)
“ஹரி இந்த சூலதாரியான
ருத்திரரைப்பார்த்து புன்னகை செய்து கூறினார், ‘முதலில்
உண்டானது எதுவோ அதுவிஷயமாய் தேவதைகளாலே தாம் யாசிக்கப்படுகிறீர். பிரபோ, சுரர்களுள் (அதாவது தேவர்களுள்) சிறந்தவரே, (தாம்) சுரர்களில் முதலில் உண்டானவர். ஆனபடியால் அது (அதாவது
ஹாலாஹல விஷம்) தம்மைச்சேர்ந்தது. ஆகையால் இந்த விஷத்தை அக்ரபூஜையாக (அதாவது
முதல்மரியாதையாக) அங்கீகரித்து பெற்றுக்கொள்ளும்.’ சுரர்களில் சிறந்தவர் (அதாவது மகாவிஷ்ணு) அந்த விஷத்தைப்பற்றி
மேற்கண்டவண்ணமாய் சொல்லிவிட்டு அப்பொழுதே மறைந்தார். அதன்மேல் ஹரனாகிய, பகவானாகிய மகேஷ்வரர், தேவர்களுடைய
பயத்தை கண்டு, ஹாலாஹலமென்ற விஷம் எல்லாவற்றையும் உள்ளங்கையில்
அடங்கக்கூடிய அற்ப அளவுடையதாயும் அமிர்தம் போலிருப்பதாயும் செய்து உறிஞ்சி
அடக்கிவிட்டார். அமரர்களால் பூஜிக்கப்படும் பகவானாகும் பரமேஷ்வரர், அனைத்து உலகத்திற்கும் நன்மை செய்வதற்காக லீலையாய் உட்கொண்டு, கழுத்திலேயே தங்கியிருக்கிறதாய் செய்தருளினார்.
(கூர்மாவதாரம்)
“அளவற்ற தேஜஸ்
கொண்டவர்களாகிய தேவர்கள்,
அசுரர்கள் எல்லோரும்
ரிஷபக்கொடியோனை பணிந்துவிட்டு, அதன்மேல் முன்போலவே மந்தர
மலையை கொண்டு கடைந்தார்கள். அப்பொழுது மத்தாய் விளங்கிய உத்தமமான மந்தர மலையும், பாதாளமிருந்த இடத்திற்கு போய் சேர்ந்துவிட்டது. மலையின்
அடியும் பாதாளத்திலேயே அழுந்துபோய்விட்டது. சுரர்களும், அசுரர்களும் மனம் நொந்தவர்களாய் இன்னசெய்கிறதென்று
தெரியாதவர்களாய் ஆனார்கள். அப்பொழுது தேவர்கள், கந்தர்வர்களுடன்
கூடினவர்களாகி மதுசூதனனை துதித்தார்கள், ‘மகாயோகியே, அனைத்து உயிரினங்களுக்கும், விசேஷமாய் தேவர்களுக்கும் தாமே கதி. எங்களை
காத்தருளும். மலையை மேலெடுத்துவிட தகுந்தவர்.’
त्वं गतिस्सर्वभूतानां विशेषेण दिवौकसाम् |
पालयस्मान् महायोगिन् गिरिमुद्धर्तुमर्हसि ||
|
த்வம் கதிஸ்ஸர்வபூதானாம் விஷேஷேண திவெளகசாயம் |
பாலயாஸ்மான் மஹாயோகின் கிரிமுத்தர்துமர்ஹசி ||
|
“ஹ்ருஷீகேஷர் (அதாவது மாதவர்) இதை கேட்டு ஆமை ரூபத்தை
எடுத்துக்கொண்டார். மலையை முதுகின்மேல் (தங்கும்படி) செய்துகொண்டு, கூர்மரூபத்தை வகித்தவராய் மேல் கிளம்பினார். சுரர்களாலும், அசுரர்களாலும் அசைக்கமுடியாதிருந்த உத்தம மலையானது மேல்
கிளம்பிற்று. அப்பொழுது மாதவர் மலையின் சிகரத்தை இடதுகையால் அமுக்கி
அழுத்திக்கொண்டார். நாராயணரெனப்படும் ஹரியும் தேவர்களின் மத்தியிலிருந்து கொண்டு
கடைந்தார். இப்படியாய் ஆயிரம் வருடங்களுக்குப்பின் முதலில் உற்பத்தியானவைகளுடனேயே
உண்டானவளாய், நல்இடையாளாய், அழகிய
மங்கையாய், (பெண்
உருவங்கொண்டவர்களில் மூத்தவளான) ஜ்யேஷ்டை எனப்பெயர்பூண்டவள் கிளம்பிவந்தாள்.
இந்திரனுக்கென்றே நாலு தந்தங்களையுடைய மஹாகஜம் (ஐராவதமெனும் யானை)
வெளிவந்தது; பாரிஜாதமென்ற விருக்ஷமும் உண்டாயிற்று; விரும்பியவைகளெல்லாம் அளிக்கக்கூடியதாகிய சுரபி (எனும் காமதேனு பசுவும்) உண்டாயிற்று. அப்பொழுது ஆயிரம்
வருடங்களுக்குபின் பிரசித்திபெற்ற தன்வந்தரி என்ற பெயர்கொண்ட ஆண், ஆயுர்வேதமே உருவமெடுத்து வந்தவராய், தண்டத்துடனான, கமண்டலத்துடனான
தர்மாத்மா மேல் கிளம்பிவந்தார். அதற்குமேல் உண்டானவர்கள்தான் ஒளிரும் அப்சரஸ்கள்.
மானுடர்களில் சிறந்தவனே,
நீரில் கடைவதால் உண்டான
அந்த ரஸத்திலிருந்தே அழகிய பெண்களில் சிறந்தவர்கள் உண்டானார்கள்; ஆகையால் அப்சரஸ்கள் என விளங்குகிறார்கள். காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), அந்த ஒளிரும்
அப்சரஸ்கள் அறுபது கோடியர் உண்டானார்கள். அவர்களுக்கு பரிசாரிகைகளாய் (அதாவது வேலைக்கார பெண்களாய்) உண்டானவர்கள் எவர்களோ
அவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அந்த தேவர்கள், தானவர்கள் எல்லோரும் அவர்கள் (கரம்) பிடிக்கவில்லை. (கரம்) பிடிக்காமையினாலேயே
அவர்கள் பொதுமகளிராக வழங்கப்பட்டார்கள். ரகுநந்தனா, அதற்குமேல்
வருணனுடைய கன்னிகையான வாருணி கணவனை யாசிப்பவளாகி, மகாபாக்கியசாலியாய்
கிளம்பிவந்தாள்.
(தன்வந்தரி பெருமான்)
“(ஸ்ரீ)ராமா, (தேவி) திதியின் புத்திரர்கள் (அதாவது அசுரர்கள்)
அந்த வருணனின் மகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் வீரனே, (தேவி) அதிதியினுடைய புதல்வர்கள் நிந்திக்கத்தகாதவளான
அவளை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் தான் தைத்யர்கள் (அதாவது திதியின்
புத்திரர்கள்) அசுரர்கள் ஆனார்கள். அதே காரணத்தினாலேயே அதிதியின் புதல்வர்கள்
சுரர்களென்று விளங்கினார்கள். சுரர்கள் வாருணியை ஏற்றுக்கொண்டமையால் மனசந்தோஷம்
கொண்டவர்களாய், களிப்புற்றவர்களாய்
ஆனார்கள். நரர்களில் சிறந்தவனே, குதிரைகளில் சிறந்ததான உச்சைஸ்ரவஸ்ஸும், கௌஸ்துபம் என்ற மணிரத்தினமும், அப்படியே சோமதேவரும் (அதாவது சந்திரனும்) உண்டாயினர். ஈஸ்வரர்கள் (அதாவது
தேவதைகள்) குதிரையை தேவராஜனுக்கும், கௌஸ்துபத்தை கேசவனுக்கும், சோமனை மஹாதேவருக்குமாக சொந்தமென்று ஏற்பாடு செய்தார்கள். (ஸ்ரீ)ராமா, அப்படியிருக்க மகாதேஜஸ்வியான, உலக ரட்சகத்தில் நோக்கமுடையவராய், ஆயுர்வேதரூபியான தன்வந்தரி பொதுவானவராய் மதிக்கப்பட்டார்.
(ஸ்ரீ எனும் மகாலக்ஷ்மி)
“சுரர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும்
கடலை (திரும்பவும்)
கடைந்தார்கள். அதற்குமேல்,
வெகு காலத்திற்குபின், மிகவும் அழகுவாய்ந்தவளாய், இளமை
பருவத்திலேயே நிலைகொண்ட,
தாமரைமலர்மேல்
மங்கையாரும் தோன்றினாள். அனைத்து ஆபரணங்களால் நிறைந்த அங்கமுடையவள். அனைத்து
லட்சணங்களால் சோபிக்கப்பெற்றவள். மகுடம், தோள்வளைகளால்
வியப்படையச்செய்யும் அங்க சோபையுடையவள். நீல சுருள்சுருளான தலைமுடியுடையவள்.
மகாதேவி. உருக்கின தங்கம் போன்ற மேனியாள். முத்துமாலைகளை அணிந்தவள். நான்கு
புஜங்களையுடையவள். தாமரைமலரை ஏந்தின கையையுடையவள். அதிசோபையுள்ள முகமுடையவள்.
அப்படி தோன்றின அந்த தேவி,
உலகத்தாரால்
பூஜிக்கப்பட்ட தாமரையாளான ஸ்ரீயே (அதாவது
லக்ஷ்மியே). அந்த தாமரையாள், பத்மநாபரான ஹரியினுடைய
திருமார்பை அடைந்தாள்.
(தேவாசுர யுத்தம்)
(மோகினி அவதாரம்)
“நரர்களுள் சிறந்தவனே, அதற்கு பின்பே உத்தமமான அமிர்தம் கிளம்பிவந்தது. (ஸ்ரீ)ராமா, அதன்பேரில்
அதற்காக மகத்தான குலநாசம் உண்டாயிற்று. அதனாலேயே அதிதியின் புத்திரர்கள் (அதாவது தேவர்கள்) திதியின் புத்திரர்களை (அதாவது
அசுரர்களை) கொன்றார்கள். வீரனே, அனைத்து
அசுரர்களும் ராட்சசர்களுடன் கூட ஓர் பக்கத்தில் வந்து எதிர்த்தார்கள்.
மகாகோரமானதும், மூவுலகங்களும் தடுமாறுச்செய்வதான யுத்தம் நடந்தது.
எப்பொழுது எல்லாம் நாசத்தை அடைந்ததோ, அப்பொழுது
மகாபலவானான விஷ்ணு விரைவாக மோகிக்கும்படியான மாயா(ரூபத்தை) எடுத்துக்கொண்டு, அவர் அமிர்தத்தை கைப்பற்றிக்கொண்டார். அப்பொழுது
அழிவற்றவரான, புருஷர்களில் உத்தமரான விஷ்ணுவை எதிர்த்துநிற்போர் எவரோ, அவர்கள் அப்பொழுதே முழுமையான சக்திவாய்ந்தவரான விஷ்ணுவினாலே
யுத்தத்தில் நொறுக்கப்பட்டார்கள். தைத்யர்களுக்கும் (அதாவது திதி புத்திரர்களுக்கும்), ஆதித்யர்களுக்கும் (அதாவது அதிதியின் புதல்வர்களுக்கும்) நடந்த கோரமான அந்த
மகாயுத்தத்தில்,
வீரர்களான அதிதியின்
புத்திரர்கள் திதியின் புத்திரர்களை பெரிதாய் கொன்றார்கள். புரந்தரன் (அதாவது தேவேந்திரன்) திதியின் புத்திரர்களை (அதாவது
அசுரர்களை) அழித்து,
ராஜ்யத்தையும் அடைந்து, சந்துஷ்டனாய் ரிஷிசங்கத்துடன் கூடியதான, சாரணர்களுடன் கூடியதான உலகங்களை ஆண்டுவந்தான்.’”
(தேவேந்திரன்)
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்தைந்தாவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment