Tuesday, February 25, 2020

நாற்பத்திநான்காவது ஸர்க்கம் – ஸகரபுத்திரர்கள் ஸ்வர்கம் அடைவது



அந்த ராஜா (அதாவது பகீரதன்) கங்கையால் பின்தொடரப்பட்டவராய் சாகரத்தை (அதாவது சமுத்திரத்தை) கடந்து, அப்பொழுது எங்கு அவர்கள் (அதாவது ஸகரபுத்திரர்கள்) சாம்பலாக செய்யப்பட்டார்களோ பூமியினுடைய (அந்த) தளத்தினுள் புகுந்தார். (ஸ்ரீ)ராமா , கங்கையினுடைய நீரால் சாம்பல் நனைக்கப்பட்ட பிறகு அனைத்துலக பிரபுவான பிரம்மா ராஜாவிடம் இவ்வாறு சொன்னார், ‘நரர்களுள் புலியே, மகாத்மாவான ஸகரருடைய அறுபதாயிரம் புத்திரர்கள் கரையேற்றப்பட்டவர்களாய், தேவர்களைப்போல் தேவலோகத்தையும் அடைந்தார்கள். மன்னா (அதாவது பகீரதா), சாகரத்தினுடைய (அதாவது கடலினுடைய) நீர் உலகில் எந்த காலம் வரையில் இருக்குமோ; அதுவரையில் ஸகரருடைய குமாரர்கள் ஸ்வர்கத்தில் தேவர்கள்போல் வாழப்போகிறார்கள். இந்த கங்கையும் உனக்கு மூத்த புதல்வி ஆகப்போகிறாள். பிறகு, உலகத்தில் உன் சம்பந்தமான பெயரினாலும் பிரசித்தியாக விளங்கப்போகிறாள். ராஜா, (கங்கா) மூன்று பாதைகளில் பாய்கிறாள். அதனால் த்ரிபதகா என்றும், மூவழியில் ஓடுகிற திவ்யையான கங்கா பாகீரதி என்றும் வழங்கப்பட்டவளாக ஆவாள். மானுடர்களின் அதிபதி, இதில் நீ பிதாமகர்கள் (அதாவது பாட்டன்மார்கள்) எல்லோருக்கும் நீர் கர்மத்தை (அதாவது தர்பணத்தை) புரி. ராஜா, பிரதிக்ஞையை நிறைவேற்று. மேலும் ராஜா, வெகு புகழ்பெற்ற தார்மிகர்களுள் சிறந்த அந்த உன்னுடைய (குலத்தில்) முன்தோன்றியவர்களாலேயும் இந்த மனோரதம் அப்பொழுது அடையப்படவில்லை. குழந்தாய், அப்படியே உலகத்தில் ஒப்பில்லா தேஜஸுடைய கங்கையை கொண்டுவர பிரார்த்தித்த அம்ஷுமானால் பிரதிக்ஞை முடிக்கப்படவில்லை. மகா பாக்கியமுள்ளவனே, பாவமற்றவனே, ராஜரிஷியான, குணவானான, மகரிஷிகளுக்கு சமமான தேஜஸுடைய, எனக்கு சமமான தவத்தையுடைய, க்ஷத்ரிய தர்மத்தில் நிலைகொண்ட, புகழ்பெற்றவனான, கங்கையை மறுபடியும் கொண்டுவர பிரார்த்தித்த உன்னுடைய பிதாவான திலீபனாலும் முடியவில்லை. புருஷர்களுள் காளையே, அந்த பிரதிக்ஞை  உன்னால் செய்துமுடிக்கப்பட்டது. உலகில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பெரும் புகழை அடைந்தவனாய் ஆகிறாய். எதிரிகளை அழிப்பவனே, கங்கையின் கீழ் இறங்குதல் எதோ அது உன்னால்தான் செய்யப்பட்டது. அதனால் நீதான் தர்மத்திற்கு மகத்தான க்ஷேத்திரத்தை நிர்மித்தவனாகிறாய். நரர்களுள் உத்தமா, புருஷர்களுள் புலியே, நீ எப்பொழுதும் சரியான நீரில் உன் சரீரத்தை அமிழ்த்தி முழுகு. பரிசுத்தனாகவும், புண்ணிய பலனை அடைந்தவனாகவும் ஆகக்கடவாய். பாட்டன்மார்கள் எல்லோருக்கும் நீர் கர்மத்தை செய். உனக்கு மங்கலம் உண்டாகுக. என் உலகத்திற்கு போகிறேன். அரசனே! போகப்படட்டும்.' என்று இவ்விதம் சொல்லி, தேவர்களுக்கெல்லாம் ஈசனான, மகா புகழ்பெற்ற ஸர்வலோகபிதாமகர் (அதாவது பிரம்மா) எப்படி வந்தாரோ அப்படியே தேவலோகத்திற்கு சென்றார்.

நரர்களுள் சிறந்தவனே (அதாவது ஸ்ரீராமா), ராஜரிஷியான பகீரதனும் ஸகரபுத்திரர்களுக்கு முறைப்படி, நியாயப்படி உத்தம நீர் கர்மத்தை (அதாவது தர்பணத்தை) செய்து, நீர் கர்மங்களை முடித்தவராய், பரிசுத்தராய், வெகு புகழ்பெற்றவராய் ராஜா தன் நாட்டினுள் பிரவேசித்தார். கவலையற்றவராய் தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்தார். ராகவா, உலகம் அந்த அரசனை அடைந்து சோகமற்றதாய் களித்தது. செல்வம் நிறைந்ததாகவும், பயமற்றதாகவும் விளங்கினது.

(ஸ்ரீ)ராமா, இந்த கங்கையின் வரலாறு என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஸ்வஸ்தி (நலம்) அடைவாய். உனக்கு மங்கலம். சந்தியாகாலம் சமீபிக்கிறது. காகுத்ஸ்தா, எவன் தனம் தரவல்லதும், ஆயுளைத் தரவல்லதும், புகழைத் தரவல்லதும், புத்திரப்பேறை தரவல்லதும், ஸ்வர்கத்தை தரவல்லதும், சுபமான கங்காவதரணமான இந்த கதையை பிராமணர்களிடத்திலும், க்ஷத்ரியர்களிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கேட்கச் செய்கிறானோ அவனுடைய பித்ருக்கள் (அதாவது முன்னோர்கள்) சந்தோஷமடைகிறார்கள். தேவதைகளும் சந்தோஷமடைகிறார்கள். எவன் சிரத்தையுடையவனாய் கேட்கிறானோ, அவன் அனைத்து விருப்பங்களையும் அடைவான். அனைத்து பாவங்களும் நன்றாய் அழிந்துவிடுகின்றன. ஆயுளும் விருத்தியடைகிறது. கீர்த்தியும் விருத்தியடைகிறது.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment