Friday, February 21, 2020

நாற்பத்திரண்டாவது ஸர்க்கம் – கங்காவதரணத்தில் பகீரத பிரயத்தனம்



(ஸ்ரீ)ராமா, ஸகரர் காலதர்மத்தை அடைந்தவளவில் மந்திரிகள் நல் தார்மிகரான அம்ஷுமானை ராஜாவாக நிச்சயித்தார்கள். ரகுநந்தனா, அந்த அம்ஷுமான் மிகப் பெரிய ராஜாவாக இருந்தார். அவருக்கு திலீபன் என்ற புகழ்பெற்ற மகானான புத்திரன் இருந்தார். ரகுநந்தனா, அந்த திலீபனிடத்தில் ராஜ்யத்தை அளித்து, ரம்மியமான இமயமலை சிகரத்தில் கடும் தவம் புரிந்தார். மிகப்பெரும் புகழ்பெட்ரா தபோதனரான ராஜா (அம்ஷுமான்) முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் தபோவனத்தை அடைந்தவராக ஸ்வர்கம் அடைந்தார். மகாதேஜஸ்வியான திலீபரும் பாட்டனார்களுடைய வதத்தை கேட்டு, துக்கமடைந்த புத்தியால் உபாயத்தை தெரிந்துகொள்ளவில்லை. எப்படி கங்காவதாரணம் (அதாவது கங்கையை இறக்குவது)? எப்படி அவர்களுக்கு ஜலக்ரியை (அதாவது தர்ப்பணம்) செய்வது? இவர்களை எப்படி கரையேற்றிவைப்பேன்?’ என்று சிந்தனையில் மூழ்கியவராய் இருந்தார். தர்மத்தோடு எப்பொழுதும் சிந்தையுற்று இருக்கிற, ஆத்மாவை அறிந்த அவருக்கு பகீரதன் என்று பெயருள்ள பரமதார்மிகனான புத்திரன் பிறந்தார். மகாதேஜஸ்வியான ராஜா திலீபனும் அநேகவித யாகங்களால் ஆராதித்தவனாக முப்பதாயிரம் வருடங்கள் ராஜ்யம் புரிந்தார். நரர்களுள் புலியே (அதாவது ஸ்ரீராமா), அவர்களுடைய கரையேற்றுதலை குறித்து உபாயத்தை பெறாமல் ராஜா (திலீபன்) வியாதியால் காலதர்மத்தை அடைந்தார். ராஜா (திலீபன்) நரர்களுள் காளையரான, புத்திரனான பகீரதனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தார். தன்னால் வெல்லப்பட்ட கர்மத்தினாலே இந்திரலோகம் சென்றார்.

ரகுநந்தனா, தார்மிகரான, மகாதேஜஸ்வியான, ராஜரிஷியான பகீரதனும் புத்திரபாக்யமில்லாதவனாய் புத்திரனை அடைய விருப்பங்கொண்டார். புத்திரபாக்கியமில்லாத அவரும் அந்த ராஜ்யத்தை மந்திரிமார்களிடத்தில் ஒப்புவித்துவிட்டு, கங்காவதரணத்தில் ஈடுபட்டார். ரகுநந்தனா, அவர் கைகளை உயரத்தூக்கியவராய், பஞ்ச அக்னிக்கு மத்தியில் நின்று தவம் புரிபவராய், மாதத்திற்கு ஓர் முறை ஆகாரம் உட்கொள்பவராய், இந்திரியங்களை வென்றவராய், (இமயமலையில் உள்ள) கோகர்ணத்தில் தீர்க்கமான தவம் புரிந்தார்.

மகாபாகு (அதாவது ஸ்ரீராமா), கோரமான தவத்தில் நிலைத்திலிருந்த அவருக்கு ஆயிரம் வருடங்கள் கடந்தன; மகாத்மாவான அந்த ராஜா விஷயத்தில் பிரஜைகளுக்கு பிரபுவான, ஈஸ்வரரான, பகவானான பிரம்மா வெகு சந்தோஷமடைந்தார். அப்பொழுது பிதாமகர் (அதாவது பிரம்மா) சுரகணங்களோடு (அதாவது தேவகணங்களோடு) கூட அருகே வந்து, மகாத்மாவாகிய, தவத்திலிருக்கிற பகீரதனிடம் இவ்வாறு சொன்னார், ‘மகாதேஜஸ்வியே, ஜனங்களுக்கு ஈஸா, பகீரதா, உன்னுடைய நன்றாய் புரியப்பட்ட தவத்தால் நான் பிரீதியடைந்தேன். நல்விரதமுடையோனே, வரத்தை வேண்டிடு.

மகாதேஜஸ்வியான, மகாபாக்கியமுடைய பகீரதன் அஞ்சலிசெய்தவராய், அருகே நெருங்கியவராய், அனைத்துலக பிதாமகரான அவரைப் பார்த்து சொன்னார், ‘பகவானே, என்னுடைய தவத்திற்கு சந்தோஷமடைந்தவராய் ஆனால், பலனானது உண்டாகிறது ஆனால், ஸகர புத்திரர்கள் எல்லோரும் என்னிடமிருந்து (தர்ப்பண) நீரை அடையவேண்டும். மகாத்மாக்களான இவர்களுடைய சாம்பல் கங்கையினுடைய நீரால் நனைக்கப்பட்டவளவில் என்னுடைய முப்பாட்டன்மார்கள் எல்லோரும் அழிவற்ற ஸ்வர்கத்திற்கு செல்லவேண்டும். தேவரே, இக்ஷ்வாகுகளுடைய குலத்தில் எனக்கு சந்ததி கொடுத்திட வேண்டும். எங்களுடைய குலமும் சந்ததியற்றதாக ஆகாமலிருக்கக்கடவது. தேவரே, இது சிறந்த வரமாக ஆகட்டும்.

இவ்வாறு சொல்லிய ராஜாவிடம் அனைத்துலக பிதாமகர் சுபமான, மதுரமான, மதுரமான அட்சரங்கள் அடங்கிய மொழியை பின்வருமாறு சொன்னார், ‘மகாபாக்கியமுடையவனே, தபோதனா, மகாரதா, பகீரதா, இக்ஷ்வாகு குலத்தை விருத்திசெய்ய விரும்பியவனே, இவ்வாறே ஆகட்டும். உமக்கு மங்கலம் உண்டாகட்டும். இந்த கங்கா ஹைமவதி (அதாவது ஹிமவானிடத்தில் பிறந்தவள்). ஹிமவானின் மூத்த குமாரி. ராஜா, அவளை தாங்கிட ஹரனை (அதாவது சிவபெருமானை) அவ்விஷயத்தில்  பிரார்த்திக்கப்படட்டும். ராஜனே, கங்கையினுடைய இறங்குதலை பூமி சகிக்கமாட்டாள். வீரனே, அவளை தாங்க ஷூலினனை (அதாவது சங்கரனை) காட்டிலும் பிறரை காணவில்லை.

அந்த ராஜாவிடம் இவ்விதம் சொல்லி, கங்கையையும் புகழ்ந்து, உலகத்தை சிருஷ்டித்த தேவர் (அதாவது பிரம்மா) மருதகணங்களோடு கூட தேவலோகத்திற்கு சென்றார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்திரண்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment