Tuesday, February 18, 2020

நாற்பத்தோராவது ஸர்க்கம் – ஸகரரின் யாக முடிவு



ரகுநந்தனா, ராஜாவான ஸகரன் புத்திரர்கள் சென்று நெடுங்காலம் ஆனதை அறிந்து, சுய தேஜஸோடு ஒளிருகிற பேரனைப்பார்த்து சொன்னார், ‘எல்லா வித்தைகளிலும் தேர்ச்சியடைந்தவனாய், சூரனாய், தேஜஸில் முன்னோர்களுக்கு சமானனாய் இருக்கிறாய். தந்தைகளுடைய கதியையும், குதிரையை திருடியது எவனோ அவனையும் அறிந்துவா. பூமிக்குள்ளிருக்கிற உயிரினங்கள் வீர்யமுடையவைகள். மகத்தானவைகள். அதனால் அவைகளை எதிர்க்கும்பொருட்டு நீ வாளுடன்கூடின வில்லையும் எடுத்துக்கொள். நீ அபிவாதனம் செய்ய வேண்டியவர்களிடம் அபிவாதனம் செய்து (அதாவது வணங்க வேண்டியவர்களை வணங்கி), இடையூறு செய்பவர்களை கொன்று, காரியத்தை நிறைவேற்றினவனாக என்னுடைய யாகத்தின் முடித்தலை செய்தவனாகவும் திரும்பி வா.

மகாத்மாவான ஸகரரால் இவ்வாறு முழுமையாய் சொல்லப்பட்ட அம்ஷுமான் வில்லையும், வாளையும் எடுத்துக்கொண்டு வேகமான நடையுள்ளவனாய் சென்றார். அந்த ராஜாவால் ஆணையிடப்பட்ட அந்த நரர்களில் சிறந்தவர் (அதாவது அம்ஷுமான்) மகாத்மாக்களான பித்ருக்களால் குடையப்பட்டிருக்கிற, பூமிக்கு உள்ளிருக்கிற வழியை அடைந்தார். மகா தேஜஸ்வி (அதாவது அம்ஷுமான்) தைத்யர்கள், தானவர்கள், ராட்சசர்கள் இவர்களாலும், பிசாசங்கள், பறவைகள், உரகர்கள் இவைகளாலும் பூஜிக்கப்படும் திக்கஜத்தை பார்த்தார். அவர் அதற்கு பிரதக்ஷிணம் செய்து, நலம் விசாரித்து, அவர் பித்ருக்களைப்பற்றியும், குதிரையை திருடினவனைப்பற்றியும் கேட்டார். திக்கஜமும் அம்ஷுமானுடைய அந்த வார்த்தையை கேட்டு, அன்புடன் பதிலுரைத்தது, ‘ஆஸமஞ்ஜா (அதாவது அஸமஞ்ஜனின் புதல்வா), நீ காரியம் நிறைவேறியவனாக, குதிரை அடைந்தவனாக சீக்கிரம் திரும்பிவருவாய்.

அதனுடைய அந்த வார்த்தையை கேட்டு, திக்கஜங்கள் எல்லாவற்றையும் முறைப்படியும், நியாயப்படியும் விசாரிக்க தொடங்கினார். அனைத்து வாக்கியமும் அறிந்த, காலதேசத்திற்க்கேற்ற பேசுவதில் வல்லவர்களான அந்த திக்பாலர்களை பூஜித்தவராய் குதிரையை அடைந்தவனாயே செல்வாய்என்று விடைகொடுக்கப்பட்டார். அவைகளுடைய அந்த வார்த்தையை கேட்டு, வேகமான நடையுடையவராய் எங்கு பித்ருக்களாகிய ஸாகரர்கள் (அதாவது ஸகர புத்திரர்கள்) சாம்பல் குவியலாய்ச் செய்யப்பட்டார்களோ அங்கு சென்றார். அந்த அஸமஞ்ஜ புத்திரனும் அப்போது அவர்களுடைய வதத்தால் துக்கவசத்தை அடைந்தவராய், மிக வருந்தியவராய், பெருந்துன்பத்தால் கதறினார்.

அடங்கா துக்கம் கொண்டவராகிய (அந்த) புருஷர்களுள் புலியானவர் அங்கு அருகில் நகர்ந்து கொண்டிருக்கிற யாக குதிரையையும் கண்டார். மகாதேஜஸ்வியான அவர் அந்த ராஜபுத்திரர்களுக்கு (அதாவது ஸாகரர்களுக்கு) ஜலக்ரியையை (அதாவது தர்ப்பணத்தை) செய்ய விரும்பியவராய் நீரைத் தேடியும் ஜலம் இருக்குமிடத்தை கண்டறிய முடியவில்லை. (ஸ்ரீ)ராமா, நிபுணனான பார்வையை பரவச்செய்து, பிறகு பறவைகளுக்கு அதிபதியான, பித்ருக்களுக்கு மாமனான, அனிலனுக்கு (அதாவது வாயுவிற்கு) சமமான சுபர்ணணை (அதாவது கருடனை) கண்டார்.

அந்த மகாபலசாலியான வைனதேயன் (அதாவது கருடன்) இவரைப்பார்த்து (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘புருஷர்களுள் புலியே, துக்கிக்க வேண்டாம். இந்த வதை உலகத்திற்கு சம்மதம். மகாபலசாலிகளான இவர்கள் அளவிடமுடியாத கபிலரால் தகிக்கப்பட்டார்கள். ஆதலால் புத்திசாலியே, இவர்களுக்கு லௌகிக (அதாவது சாதாரண) ஜலத்தை கொடுக்க உரியவராகிறீர் இல்லை அல்லவா? புருஷர்களுள் காளையே, ஹிமவானுக்கு மூத்த மகள் கங்கா; மகா பாக்கியசாலியே! பித்ருக்களுக்கு ஜலக்ரியையும் (அதாவது தர்பணத்தையும்) அவளிடத்தில் செய். லோகபாவனி (அதாவது உலகத்தை பாவமற்றவளாய் செய்பவள் - கங்கை என்று இங்கு பொருள்) சாம்பல் குவியலாக செய்யப்பட்ட இவர்களை நனைக்கவேண்டும். உலகத்திற்கு பிரியையான அந்த கங்கையால் நனைக்கப்பட்ட இந்த சாம்பல் அறுபதாயிரம் புத்திரர்களை ஸ்வர்கலோகத்திற்கு போகச்செய்யும். கங்கையை தேவலோகத்திலிருந்து மஹீதலத்திற்கு (அதாவது பூலோகத்திற்கு) அழைத்துக்கொண்டுவா; சக்தனாக இருக்கிறாயாகில் கங்கையினுடைய அவதாரணம் (அதாவது கீழ் இறங்குதல்) செய்யப்படட்டும். உனக்கு மங்கலம் உண்டாகட்டும். மகாபாக்கியமுடையவனே, புருஷர்களுள் காளையே, குதிரையை பிடித்துக்கொண்டு செல். வீரனே, பாட்டனுடைய யாகத்தை முடித்துவைக்க உரியவனாகிறாய்.

அதிவீர்யவானான அந்த அம்ஷுமான் சுபர்ணனின் (அதாவது கருடனின்) வார்த்தையை கேட்டு, குதிரையை கைப்பற்றிக்கொண்டு, மிக புகழ்பெற்றவனாய் துரிதமாய் மறுபடி வந்தார். ரகுநந்தனா, தீக்ஷைகொண்டிருக்கிற ராஜாவை (அதாவது ஸகரரை) அடைந்து, பின்னர் சுபர்ணனின் வசனத்தை நடந்தது எப்படியோ அப்படியே தெரிவித்தார். கோரமான அம்ஷுமானுடைய அந்த வாக்கியத்தை கேட்டு, அரசர் யாகத்தை உள்ளபடி, விதிப்படி செய்துமுடித்தார். யாகத்தை முடித்த ஸ்ரீமானான மஹீபதி (அதாவது ராஜா) தனது நகரத்திற்கு சென்றார். ஆகிலும் ராஜா (அதாவது ஸகரன்) கங்கையின் வரவில் ஒரு உபாயத்தையும் காணவில்லை. மகானான ராஜா உபாயத்தை அடையாமல், முப்பதாயிரம் வருடங்கள் ராஜ்யம் செய்து, மகத்தான காலத்திற்கு பிறகு ஸ்வர்கம் சென்றார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பத்தோராவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment