Saturday, February 15, 2020

நாற்பதாவது ஸர்க்கம் – ஸகரபுத்திரர்கள் பஸ்பமானது



பகவானான பிதாமகர் (அதாவது பிரம்மா) தேவர்களுடைய வார்த்தையை கேட்டு, நாசம் செய்கிறவர்களின் பலத்தினால் மோகித்தவர்களாய், மிக்க பயந்தவர்களிடம் மறுமொழியுரைத்தார், ‘இந்த வஸுதா (அதாவது பூமி) முழுவதும் மாதவனுடைய மகிஷி (அதாவது மூத்த மனைவி). இவள் எந்த அறிஞரான வாசுதேவருடையவளோ, அந்த பகவானான பிரபுவே பூமியை நிரந்தரமாய் தாங்கிவருகிறார். கபிலமுனியுடையதான ரூபத்தை அடைந்து, அவருடைய கோபாக்னியினாலே (அந்த) அரசகுமாரர்கள் தகிக்கப்பட்டவர்களாய் ஆகிவிடுவார்கள். மேலும், பூமியினுடைய நிரந்தரமான பிளவும், அற்ப ஆயுளுள்ள ஸகரனின் புத்திரர்களுடைய நாசமும் (இவ்வாறு) காணப்படுகிறது.

அரிந்தமா (அதாவது எதிரிகளை அழிப்போனே என்று பொருள்; இங்கு ஸ்ரீராமா என்று புரிந்து கொள்ளலாம்), முப்பத்திமூன்று தேவர்கள் பிதாமகரின் வார்த்தையை கேட்டு வெகு ஆனந்தமடைந்தவர்களாய் வந்தவாறு திரும்பி சென்றார்கள். பூமி பிளக்கப்படுகையில் மகாத்மாக்களான ஸகரருடைய புத்திரர்களுக்கு மட்டும் இடி விழுந்தாற்போல் ஓர் பெரும் சத்தம் வெளிப்பட்டது. அப்போது ஸாகரர்கள் (அதாவது ஸகரகுமாரர்கள் என்று பொருள்) எல்லோரும் பூமியை எல்லாம் பிளந்துவிட்டு, சேர்ந்துதிரும்பி வந்தவர்களாய் தந்தைக்கு பிரதக்ஷிணம் செய்து (அதாவது வலம் வந்து), பின்னர் (கீழ்கண்ட) வாக்கியத்தை சொன்னார்கள், ‘மஹி (அதாவது பூமி) முழுவதும் குடைந்து பார்க்கப்பட்டது. பலசாலிகளான பிசாசர்கள், உரகர்கள், பன்னகர்கள் இவர்களும் அழிக்கப்பட்டார்கள். தேவர்கள், தானவர்கள் (அதாவது அசுரர்கள்), ராட்சசர்கள் இவர்களும் அப்படியே செய்யப்பட்டார்கள். குதிரையையும், குதிரையை திருதியவனையும் காணவில்லை. இதற்குமேல் என்ன செய்வோம்? உமக்கு மங்கலம். இவ்விஷயத்தில் ஆலோசனை செய்யப்படட்டும்.

ரகுநந்தனா, ராஜாக்களில் சிறந்தவரான ஸகரர் புத்திரர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, கடும் கோபம் கொண்டவராய் (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘வஸுதாதலத்தை (அதாவது பூமியை) மீண்டும் பிளந்து தோண்டுங்கள். உங்களுக்கு மங்கலம். குதிரையை திருடியவனை அடைந்து, காரியம் முடிந்தவர்களாகவே திரும்புங்கள்.

மகாத்மாவான தந்தை ஸகரருடைய வார்த்தையை (மனதில்) நிறுத்தி, அறுபதாயிரம் புத்திரர்கள் ரஸாதலத்திற்கு (இந்து நம்பிக்கைப்படி பூமிக்கு கீழே ஏழு உலகங்கள் உள்ளன. அவை - அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரஸாதலம், பாதாளம்) விரைந்தோடினார்கள். அது தோண்டப்படுகையில் அங்கே பூமியை தாங்கிக்கொண்டிருக்கிற மலைக்கு ஒப்பான விரூபாக்ஷம் என்கிற திக்கஜத்தை கண்டார்கள். ரகுநந்தனா, விரூபாக்ஷனென்ற மகா யானையானது மலைகள், வனங்கள் அடங்கிய பூமியை முழுவதையும் சிரஸால் தாங்கிக்கொண்டிருந்தது. காகுத்ஸ்தா, எப்பொழுது பர்வகாலத்தில் மகாகஜமானது சிரமத்தால் இளைப்பாறும் பொருட்டு தலையை அசைக்கிறதோ, அப்பொழுது பூகம்பம் உண்டாகும். (ஸ்ரீ)ராமா, அவர்கள் மகாகஜத்தை பிரதக்ஷிணம் செய்து, அந்த திக்பாலனை அதனால் பூஜித்தவர்களாய் அவர்கள் ரஸாதலத்தை பிளந்து சென்றார்கள். அங்கே அவர்கள் கிழக்கு திசையை பிளந்து, தென் திசையை பிளந்தார்கள். தட்சிண திசையில் மீண்டும் மகாத்மாவான, மிகப் பெரியமலைக்கு ஒப்பான தலையால் தாங்கிக்கொண்டிருக்கிற மஹாபத்மம் என்கிற சிறந்த மகாகஜத்தை கண்டு, அவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். மகாத்மாவான ஸகரருடைய அறுபதாயிரம் புத்திரர்கள் (மஹாபத்மமை) பிரதக்ஷிணம் செய்து, அப்பால் மேற்கு திக்கை பிளந்தார்கள். மகாபலவான்களான அவர்கள் மேற்கு திசைகளிலும் பெரிய மலைக்கொப்பான ஸௌமனஸம் என்கிற திக்கஜத்தை பார்த்தார்கள். அவர்கள் அதற்கும் பிரதக்ஷிணம் செய்து, நலம் விசாரித்து, அப்பால் வடக்கு திசையை தோண்ட துவங்கினார்கள். வட திக்கில் பனிபோல் வெளுத்த மங்கலமான தேகத்தினால் இந்த மஹியை (அதாவது பூமியை) தாங்கிக்கொண்டிருக்கிற பத்ரன் (என்கிற கஜத்தையும்) பார்த்தார்கள். அனைத்து அறுபதாயிரம் புத்திரர்களும் அதையும் நன்றாய் தொட்டு, பிரதக்ஷிணம் செய்து, வஸுதாதலத்தை பிளந்தார்கள். ஸகரரின் புத்திரர்கள் எல்லோரும் வடகிழக்கான பிரசித்தமான திசையை அடைந்து, அங்கே பூமியை ஸாகரர்கள் (அதாவது ஸகர புத்திரர்கள்) கோபத்தால் நன்றாய் தோண்டினார்கள்.

மகாத்மாக்களான, பயங்கரமான வேகமுடையவர்களான, மகாபலவான்களான அவர்கள் எல்லோரும், அங்கு கபில (முனிவர் ரூபங்கொண்ட) சனாதரான வாசுதேவரையும், அந்த தேவருடைய அருகில் நகர்ந்துகொண்டிருக்கிற குதிரையையும் கண்டார்கள். ரகுநந்தனா, அவர்கள் எல்லோரும் அளவிடமுடியாத சந்தோஷத்தை அடைந்தார்கள். அவர்கள் அவரை (அதாவது கபிலரை) குதிரையை திருடினவராக எண்ணி, குரோதத்தால் கலங்கிய கண்களையுடையவர்களாய், மண்வெட்டி, கலப்பை இவைகளையுடையவர்களாய், பலவித மரங்கள், கற்களையேந்தியவர்களாய் கோபம் கொண்டவர்களாய் எதிரோடி வந்தார்கள். நில் நில்என்றும் சொன்னார்கள். நீதான் எங்களுடைய யாக துரகத்தை திருடியவனாய் ஆகிறாய். துர்மதியோனே, நீ வந்திருக்கிற எங்களை ஸகர புத்திரர்கள் என்று தெரிந்துகொள்.

ரகுநந்தனா, அவர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, உடனே கபிலர் மகத்தான கோபத்தால் ஆவேசம் கொண்டவராய் அப்போது ஹூங்காரத்தை செய்தார். காகுத்ஸ்தா, அளவிடமுடியாத மகாத்மாவான அந்த கபிலரால் ஸகர புத்திரர்கள் எல்லோரும் அதனால் பஸ்பமாய் (அதாவது சாம்பல் குவியலாய்) செய்யப்பட்டார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நாற்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment