Friday, February 14, 2020

முப்பத்தொன்பதாவது ஸர்க்கம் – ஸகரபுத்திரர்கள் யாககுதிரையைத் தேடுவது



விஷ்வாமித்ரரின் வார்த்தையை கேட்டு, மிகவும் பிரீதியடைந்த ரகுநந்தனர் கதையின் முடிவில் அனலனைப்போல் (அதாவது அக்னியை போல்) ஜொலிக்கின்ற முனிவரிடம் சொன்னார், ‘பிராமணரே, உமக்கு மங்கலம்; என்னுடைய முன்னவர் யாகத்தை எவ்வாறு நடத்தினார்? இந்த கதையை விரிவாய் கேட்க விரும்புகிறேன்.

அவருடைய அந்த வார்த்தையைக்கேட்டு விஷ்வாமித்ரர் அப்பொழுது புன்முறுவல் கொண்டவராய், குதூகலத்தோடு கூடின காகுத்ஸ்தரைப் (அதாவது ஸ்ரீராமரை) பார்த்து சொன்னார், ‘(ஸ்ரீ)ராமா, மகாத்மாவான ஸகரருடைய (வரலாறு) விரிவாய் கேட்கப்படட்டும். இந்திரன் கொடுத்த வரமுடையதும், மலைகளின் ராஜனாக பட்டாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீமானான ஹிமவான் (என்ற) பெயர்கொண்ட, சங்கரனாருக்கு மாமனாரான மலைகளில் உத்தமர் விந்திய பர்வதத்தை அடைந்து பரஸ்பரம் பார்க்கின்றன. புருஷோத்தமா, அவ்விரண்டின் மத்தியில் அந்த (அஷ்வமேத) யாகம் நடந்ததாக ஆனது. ஏனென்றால், நரர்களுள் புலியே, அந்த தேசம் யாக கர்மத்திற்கு புகழ்பெற்றது. குழந்தாய், காகுத்ஸ்தா, திடமான வில்லுடைய, மகாரதரான அம்ஷுமான்  அந்த ஸகரருடைய அறிவுறுத்தலில் நிலைகொண்டவராய்  குதிரையை ரட்சிக்கும் பொருட்டு பின் செல்லுதலை செய்தார். யாகத்தை புரிகிற அவருடைய அந்த யாக குதிரையை ராட்சச உருவங்கொண்டு பர்வம் (என்கிற) நாளில் வாசவன் (அதாவது தேவேந்திரன்) அபகரித்தான். மகாத்மாவினுடைய அந்த யாகத்தில் குதிரை அப்படி அபகரிக்கப்பட்டவளவில் உடனே உபாத்யாய கணங்கள் எல்லோரும் யஜமானரைப்பார்த்து (அதாவது யாகத்தின் கர்த்தாவை பார்த்து) கூறினார்கள், ‘காகுத்ஸ்தா (அதாவது ஸகரா), இந்த யாகக்குதிரை பர்வ தினத்தில் பலவந்தமாய் அபகரிக்கப்பட்டது. திருடிப்போனவனையும் வெல்லும். குதிரை மீட்டுக்கொண்டுவரப்படட்டும். இந்த யாகத்தின் கெடுதி நம் எல்லோருக்கும் அமங்கலத்தை ஏற்படுத்தும். ராஜா, ஆகையால் யாகம் எவ்வாறு கெடுதியற்றதாக ஆகுமோ அப்படி செய்யப்படட்டும்.

பாராள்பவர் (அதாவது ஸகரர்) உபாத்யாயர்கள் சொன்னதை கேட்டு, அந்த சபையில் அறுபதாயிரம் புத்திரர்களை பார்த்து இந்த வாக்கியத்தை சொன்னார், 'புருஷர்களுள் காளையர்களே, புத்திரர்களே, (நான்) ராட்சசர்களுடைய பிரவேசிப்பை எதிர்நோக்கவில்லை, ஏனென்றால், (இந்த) மகத்தான யாகம் மந்திரங்களால் சுத்திகரிக்கப்பட்ட மகாபாக்கியசாலிகளால் அனுசரிக்கப்பட்டது. புத்திரர்களே, ஆகையால் செல்லுங்கள். தேடுங்கள். உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும். சமுத்திரத்தை மாலையாய் அணிந்த பூமி முழுவதையும் தேடுங்கள். புத்திரர்களே, ஒவ்வொரு யோஜனை விசாலத்தை அடையுங்கள். எதுவரையில் துரகத்தை (அதாவது குதிரையை) தரிசிக்கிறீரோ, அதுவரையில் என்னுடைய ஆணையால் திக்கஜங்களையும், அஹீந்த்ரனையும் (அதாவது பாம்புகளின் இந்திரனையும்), வைனதேயனையும் (அதாவது கருடனையும்), மாதுலனையும் (அதாவது மாதுலமென்ற நாகத்தையும்) போற்றி விடைபெற்று, சுரலோகத்தையும் (அதாவது தேவலோகத்தையும்), பிரம்மாவின் இருப்பிடத்தையும் பார்த்து விடாது தேடுங்கள். நாகலோகத்தை அடைந்து விடாது தேடுங்கள். பூமி முழுவதும் தோண்டுங்கள். (சூர்யன் உதிக்கும்) உதயாச்சலத்தில் ஆரம்பித்து முடிவு அஸ்தமிக்கும் கிரி வரை குதிரையை திருடின அவனையும் தேடுகிறவர்களாய் துரகத்துடன் கூடியவர்களாய் திரும்புங்கள். நான் தீக்ஷைகொண்டவன் அல்லவா! பேரனுடன் கூடினவனாய், உபாத்யாய கணங்களோடு கூடினவனாய் எதுவரையில் துரகத்தை தரிசிக்கிறேனோ (அதுவரை) இங்கு இருக்கிறேன். உங்களுக்கு மங்கலமுண்டாகுக.

(ஸ்ரீ)ராமா, இவ்வாறு சொல்லப்பட்ட மகா பலவான்களான ராஜபுத்திரர்கள் களிப்புற்ற மனமுடையவர்களாய் அவரை பிரதக்ஷிணம் செய்து (அதாவது வலம் வந்து), பின்னர் தலையால் வணங்கி நமஸ்கரித்து, பிதாவினுடைய வார்த்தைக்கு உட்பட்டு நடப்பவர்களாய் பூமியை அடைந்தார்கள். புருஷர்களுள் புலியே (அதாவது ஸ்ரீராமா), ஒவ்வொருவர் ஒரு யோஜனை விரிந்த தரணிதலத்தை (அதாவது பூமி பிரதேசத்தை) வஜ்ர ஸ்பரிசத்திற்கு நிகரான கரங்களால் பிளந்தார்கள். ரகுநந்தனா, இடிக்கு ஒப்பான சூலங்களாலும், மிகப் பயங்கரமான கலப்பைகளாலும் பிளக்கப்பட்ட வசுமதி (அதாவது பூமி) கதறிற்று. ராகவா, வதைக்கப்படும் பிராணிகளுடைய, நாகர்களுடைய, அசுரர்களுடைய, ராட்சசர்களுடைய அலறல் பொறுக்கமாட்டாததாக உண்டாயிற்று. ரகுநந்தனா, (அந்த) வீரர்கள் தரணியையும், உத்தமமான ரஸாதலத்தையும் (இந்து நம்பிக்கைப்படி பூமிக்கு கீழே ஏழு உலகங்கள் உள்ளன. அவை - அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரஸாதலம், பாதாளம்) அறுபதாயிரம் யோஜனைகளுடையதாக பிளந்தார்கள். நரர்களுள் புலியே, அரசகுமாரர்கள் மலைகள் நெருங்கிய ஜம்பூத்வீபத்தை (மானுடர்கள் வாழும் தீவை அதாவது பூமியை ஜம்பூத்வீபம் என்று அழைப்பார்கள்) இவ்வாறு தோண்டுகிறவர்களாய் எங்கும் திரிந்தார்கள்.

கந்தர்வர்களோடு கூடின, அசுரர்களோடு கூடின, பன்னகர்களோடு (அதாவது நாகர்களோடு) கூடின தேவர்கள் எல்லோரும் அதனால் குழம்பிய மனமுடையவர்களாய் பிதாமகரை (அதாவது பிரம்மாவை) அடைந்தார்கள். அவர்கள் மகாத்மாவான பிதாமகரை (ஸ்தோத்திரம் சொல்லி) கருணை கொள்ளச்செய்து, வாடின முகமுடையவர்களாய், வெகு பயந்தவர்களாய் அப்போது இந்த வார்த்தையை சொன்னார்கள், ‘பகவானே, பூமி முழுவதும் ஸகரபுத்திரர்களால் தோண்டப்படுகிறது. அநேக மகாத்மாக்களான தலவாசிககளும் (அதாவது அதலலோகத்திலிருந்து பாதாளலோக வாசிகள் வரை) கொல்லப்படுகிறார்கள். இவன் எங்களுடைய யாகத்தை கெடுத்தவன். இவனால் குதிரை அபகரிக்கப்பட்டதுஎன்று அந்த ஸகரபுத்திரர்கள் எல்லா உயிரினங்களையும் வதைக்கிறார்கள்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்தொன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment