Thursday, January 9, 2020

இருபத்தைந்தாவது ஸர்க்கம் – தாடகையை வதைக்க தூண்டுவது



அளவற்ற பிரபாவமுடைய அந்த முனிவருடைய உத்தமமான சொல்லை கேட்டு, அப்பால் புருஷர்களில் புலியானவர் (அதாவது ஸ்ரீராமர்) சுபமான வார்த்தைகளை சொன்னார், ‘முனிவர்களில் சிறந்தவரே, யட்சர்கள் அற்ப வீர்யமுடையவர்கள் (என்று) கேள்வியுறுகிறோம். அப்படியிருக்க பலமற்றவள் ஆயிரம் யானைகளின் பலத்தை எப்படி பெற்றாள்?’

விஷ்வாமித்ரர் சூட்சும ஆத்மாவையுடைய அந்த (ஸ்ரீ)ராமருடைய அச்சொல்லை கேட்டு லட்சணமான வார்த்தையால் மகிழ்விப்பவராய் லக்ஷ்மணருடனிருக்கிற எதிரிகளை அழிப்பவருக்கு (அதாவது ஸ்ரீராமருக்கு) வாக்கியத்தை (பின்வருமாறு) சொன்னார், ‘(அந்த) பெண் பலத்தில் சிறந்தவள். வரதானத்தால் கிடைத்த வீர்யமுள்ள பலத்தை தரிக்கிறாள். (அது) எதனால் என்பதைக் கேள். முற்காலத்தில் வீர்யவானான சுகேது என்ற பெயர்கொண்ட (ஓர்) மகா யட்சன் இருந்தான். அவன் புத்திரர்களில்லாதவனாய், அதனால் சுப ஆச்சாரத்துடன் மகாதவத்தை புரிந்தான். (ஸ்ரீ)ராமா, அப்பொழுது அந்த யட்சபதிக்கு பிரீதி அடைந்த பிதாமகர் (அதாவது பிரம்மா) பெயரினால் தாடகை என்ற பெயர்கொண்ட கன்னியாரத்தினத்தை கொடுத்தார். பிதாமகர் அவளுக்கு ஆயிரம் யானைகளுடைய பலத்தையும் கொடுத்தார். ஆனாலும், பெரும் புகழ்வாய்ந்தவரான பிரம்மா யட்சனுக்கு புத்திரனை மட்டும் கொடுக்கவில்லை. பிறந்த, நன்றாக வளர்ந்து வருகிற, ரூபம் யெளவனப்பருவமடைந்த (அதாவது இளமை பருவமடைந்த), புகழ்பெற்றவளான அவளை ஜர்ஜ்புத்திரனான சுந்தனுக்கு மனைவியாக கொடுத்தான். சில காலத்திற்கு பிறகு மாரீசன் என்ற பெயர்கொண்ட வெல்லமுடியாத புத்திரனை யட்சி பெற்றாள். (பிறந்தவன்) எவனோ (அவன்) சாபத்தால் ராட்சசனாக ஆனான். (ஸ்ரீ)ராமா, சுந்தன் அழிந்தவளவில் அந்த தாடகை புத்திரனோடு கூட ரிஷிகளில் சிறந்தவரான அகஸ்தியரை சூறையாட இச்சைகொண்டாள். யுவதியான, ஆடையற்றவளான அவள் காமபாணத்திரள்களால் பீடிக்கப்பட்டாள். கூடி சுகிப்பதை மனதிற் கொண்டவளாய், பாடுபவளாய் அவள் எதிர்நோக்கி ஓடினாள். அப்பொழுது கிட்டி அணுகும் அவளையும், அவளுடைய அதிதீவிரத்தையும் பலமுறை பார்த்து, அக்னிக்கு நிகரான அகஸ்திய பகவான் சினங்கொண்டவராக ஆனார். அவர் மாரீசனை ராட்சசத்துவத்தை அடைஎன்று சபித்தார். அகஸ்தியர் மிகுந்த கோபங்கொண்டவராய் தாடகையையும் புருஷர்களை உண்ணுகிற, விகாரரூபமுடைய, விகாரமான முகமுடைய மகாயட்சியான நீ, இந்த ரூபத்தை விட்டு, கொடூரமான உருவம் உனக்கு உண்டாகட்டும்(என்று) சபித்தார். அந்த இந்த தாடகை சாபத்தாலுண்டான வேகத்தாலும், குரோதத்தால் மெய்மறந்தவளாய், அகஸ்தியரால் சஞ்சரிக்கப்பட்ட சுபமான இந்த தேசத்தை அழிக்கிறாள். ராகவா, துஷ்டநடத்தையுள்ள, மிக பயங்கரமான, துஷ்ட பராக்கிரமமுடைய இந்த யட்சியை பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் நன்மையுண்டாகும் பொருட்டு வதை செய். ரகுநந்தனா, சாபத்தால் பற்றப்பட்டிருக்கிற இவளை வதைக்க மூவுலகத்தில் உன்னைத் தவிர எந்த மானிடனும் துணியான். நரர்களில் உத்தமா, (இப்)பெண்ணை வதை செய்வதில் உனக்கு தயை செய்யத்தக்கதில்லை, ஏனென்றால் ராஜகுமாரனாலே நான்கு வர்ணத்தினருடைய நன்மையின் பொருட்டு செய்யவேண்டியது. இரக்கமற்றதோ, கருணையானதோ, பாதகமானதோ, தோஷமுள்ளதோ எப்படியானபோதிலும் பிரஜைகளின் ரட்சித்தலின் காரணத்தால் எப்பொழுதும் ரட்சித்தல் (உன்னாலே) செய்யவேண்டியது. ராஜ்ய பாரம் ஒப்படைக்கபட்டவர்களுக்கு இது சனாதன (அதாவது நித்திய) தர்மம். காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), இவளுக்கு தர்மம் இல்லை, ஆகையால் அதர்மமானவளை வதை செய். அரசே (அதாவது ஸ்ரீராமா)! முன்னொரு காலத்தில் ஷக்ரன் (அதாவது இந்திரன்) பூமியை அழிப்பதில் இச்சைகொண்ட விரோசனனுடைய பெண்ணான மந்தரையை கொன்தை கேள்வியுற்றிருக்கிறோம் அன்றோ! (ஸ்ரீ)ராமா, அன்றியும் முன்னொரு காலத்தில் திடமான விரதமுடைய காவ்யருடைய (அதாவது சுக்கிரருடைய) மாதாவான (மகரிஷி) ப்ருகுவின் மனைவி உலகத்தை இந்திரனில்லாததாக இச்சைகொண்டவளாய் விஷ்ணுவால் கொல்லப்பட்டாள். ராஜபுத்திரா, அப்பேர்க்கொத்த அநேக மகாத்மாக்களாலும், இதர புருஷர்களில் சிறந்தவர்களாலும் அதர்மமுள்ள பெண்கள் கொல்லப்பட்டார்கள். அரசே! ஆதலால் எனது சாசனத்தால் இவளை தயையை விட்டு வதை செய்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment